பேரழகி கிளியோபாட்ரா – 14

முந்தைய நாள் எகிப்து பிரமிடுகளை காணப்போய் தான் சந்தித்த திகில் அனுபவத்தை நினைத்து நினைத்துத் தூக்கத்தைத் தொலைத்த ஜூலியஸ் சீஸர் தாமதமாகவே படுக்கையில் இருந்து எழுந்தார். கண் விழித்ததும், முதல் ஆளாக அவரது பார்வையில் பட்டாள் கிளியோபாட்ரா.

"உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே. பல தடவை உங்களை எழுப்ப முயன்றும் என்னால் முடியவில்லை. அதனால் பயந்தே போய்விட்டேன். இப்போதுதான் தைரியம் வந்திருக்கிறது" என்றாள் கிளியோபாட்ரா.

"ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறாய்? நான் ஒன்றும் பயப்படவில்லை. நேற்று நடந்த சம்பவங்களுக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்ததால் உறக்கம் வர தாமதமாகிவிட்டது. அவ்வளவுதான். எனக்கெல்லாம் பேய், பிசாசுகள் மீது நம்பிக்கை இல்லை. நேற்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் அந்த கல்லறைகளைக் காணத் தயாராகிவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளேன்." என்று சீஸர் சொல்லி முடித்தபோது மிரண்டே போய்விட்டாள் கிளியோபாட்ரா.

"என்னது மீண்டும் மெர்களை காணப் போகிறீர்களா? உங்கள் அசாத்திய தைரியத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அதை நான் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். ஆனால், மெர்கள் விஷயத்தில் பிரச்சினைகளை சந்திக்க வேண்டாம் என்றுதான் எண்ணுகிறேன்."

"கண்ணே கிளியோபாட்ரா! கவலைகளை எல்லாம் மறந்துவிடு. உங்கள் நாட்டு மெர்களால் இந்த ரோமாபுரி வேந்தனுக்கு ஒன்றும் ஆகிவிடாது. வேண்டும் என்றால், உங்கள் மெர்கள் வேண்டுமானால் என் தைரியத்தைப் பார்த்து பயப்படலாம்." என்ற சீஸர் சற்றே சிரித்து வைத்தார்.

"உங்கள் பேச்சுக்கு மட்டும் குறைவில்லை. மெர்கள் விஷயத்தில் நான் என்ன சொன்னாலும் நீங்கள் கேட்பதுபோல் தெரியவில்லை. அதனால், நீங்கள் அங்கே செல்லும்போதெல்லாம் என்னையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். இதுதான் இந்த மகாராணியின் கண்டிப்பான உத்தரவு."

"அப்படியே ஆகட்டும் மகாராணி! " என்ற சீஸர், படுக்கையில் இருந்து எழுந்து, கிளியோபாட்ரா முன்பு தலை குனிந்தார்.

உடனே –

"நீங்கள் மாவீரர் மட்டுமல்ல; அழகாகவே நடிக்கவும் செய்கிறீர்கள்!" என்று கூறினாள் கிளியோபாட்ரா.

அன்று களைப்பு காரணமாக சீஸர் எங்கும் வெளியில் செல்லவில்லை. கிளியோபாட்ராவுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ந்தார்.

மறுநாள் விடியற்காலை –

மீண்டும் பிரமிடுகளை காண்பதற்காக கிளியோபாட்ராவுடன் புறப்பட்டுச் சென்றார் சீஸர். பாதுகாப்பு வீரர்களும் வழக்கம்போல் உடன் சென்றனர்.

சீஸரும் கிளியோபாட்ராவும் பிரமிடுகள் இருந்த பகுதியை அடையவும், சூரியன் உதயம் ஆகவும் சரியாக இருந்தது. தூக்கம் கலைந்து சோம்பல் முறித்து மெதுவாக எழுந்து வந்தான் ஆதவன். அவனது மேனி பொன்னிறத்தில் தகதகத்தது.

"ஆஹா இந்த பாலைவனப் பகுதியில் சூரியனின் உதயத்தை பார்ப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று கூறி வியந்தார் சீஸர்.

தொடர்ந்து, அந்த சகாரா பாலைவன மண்ணை தொட்டுப் பார்த்தார். ஜில்லென இருந்தது. ‘அதிகாலையில் குளிர் போர்த்திய இந்த மண்ணா மதியமும், மாலையிலும் அனலாய் தகிக்கிறது. என்னே இயற்கையின் விந்தை?’ என்று மனதிற்குள் வியந்த சீஸர், கிளியோபாட்ராவை கேள்விக் கணையோடு பார்த்தார்.

"அன்றே உன்னிடம் கேட்க வேண்டும் என்று எண்ணினேன். இன்னொரு ஜென்மம் உண்டு என்று கூறினாய். அதற்கும், இந்த கல்லறைகளில் இறந்தவரது உடலை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைப்பதற்கும் என்ன சம்பந்தம்?"

"சம்பந்தம் இருக்கிறது. அதுபற்றி மேலும் விளக்கும் முன்பு உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்."

"சரி கேள்! “

“நீங்களும் மறுமை உலகத்திற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கும் அதேபோன்று ரோமானிய சக்கரவர்த்தியாக – மாபெரும் வேந்தராக இருக்க வேண்டும் என்றுதானே ஆசைப்படுவீர்கள்?"

"ஆமாம்! ஆனால் ஒன்று… உன்னைப் பார்த்த பிறகு அடுத்த ஜென்மத்தில் நான் நீயாகவே பிறக்க வேண்டும் என்கிற விபரீத ஆசைகூட ஏற்படுகிறது." என்று கூறிவிட்டு லேசாகச் சிரித்தார் சீஸர்.

"சரி சரி இந்த கொஞ்சல்களை எல்லாம் தனிமையில் வைத்துக்கொள்வோம். இங்கே நமது வீரர்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்."

"சரி சொல்ல வந்த விஷயத்தை சொல்"

"மறுமை உலகிற்கு சென்றவர் அதே உடலுடன் அங்கும் வாழவே நாங்கள் இறந்தவர்கள் உடலை பதப்படுத்திப் பாதுகாக்கிறோம். அப்படிச் செய்தால்தான் இங்கே கிடைத்த சுகபோக வாழ்க்கை அங்கேயும் கிடைக்கும்."

"நீ சொல்வதைப் பார்த்தால் இன்னும் என்னவெல்லாமோ செய்வீர்கள் போல் தெரிகிறதே."

"உங்கள் கணிப்பு சரிதான்! இறந்தவர் உடலுடன் அவர் மறுமை வாழ்வு வாழ தேவையான பொருட்களையும் சேர்த்து புதைப்போம். இறந்தவர் பயன்படுத்திய படுக்கை, ஆபரணங்கள் முதற்கொண்டு சாப்பிடும் பாத்திரம் வரை இருக்கும்."

"இறந்தவருடன் இவற்றை எல்லாம் புதைத்தால் மண்ணோடு மண்ணாக மட்கிப்போய்விடுமே."

"நீங்கள் அவசரப்பட வேண்டாம். இங்கே புதைத்தல் என்பதற்கு மண்ணோடு மண்ணாக புதைத்தல் என்று அர்த்தம் கிடையாது. விசேஷமாக காற்று புகாத வகையில் தயாரிக்கப்பட்ட நீண்ட பெட்டியில் இறந்தவர் உடலை வைத்து விடுவார்கள். அதற்கு முன்னதாக, இறந்தவர் உடல் கெட்டுப்போகாமல் இருக்க எளிதில் அழுகும் குடல், கண் போன்ற உடல் பகுதிகளை தனியாக எடுத்து நீக்கி விடுவார்கள். மேலும், மூலிகைகளில் இருந்து பெறப்பட்ட தைலத்தை உடல் முழுவதும் பூசி, இன்னும் என்னவெல்லாமோ செய்து பதப்படுத்தி பெட்டியை மூடி விடுவார்கள்.

பூமிக்குள் பெரிய பள்ளம் தோண்டி ரகசிய அறை ஏற்படுத்தி அதற்குள் பெட்டியை வைத்து விடுவார்கள். அந்த அறையிலேயே இறந்தவர் மறு உலகத்தில் பயன்படுத்த தேவையான பொருட்களையும் வைத்து விடுவார்கள். விலை மதிப்பற்ற தங்கம், வெள்ளி, வைரம் போன்ற ஆபரணங்களும் அங்கே வைக்கப்படும். தொடர்ந்து, அந்த அறையை யாரும் திறக்காமல் இருக்க மந்திரித்து மூடி விடுவார்கள்." என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள் கிளியோபாட்ரா.

"நீ இவ்வளவு சொன்னபிறகும் உங்கள் மக்களின் நம்பிக்கையை பொய்யாக்க நான் விரும்பவில்லை. உங்களது மறுஜென்ம நம்பிக்கையை உங்களுடனேயே விட்டுவிடுகிறேன்." என்ற சீஸர், பிரமிடுகளுக்குள் என்னதான் இருக்கிறது என்பதை அறிய போட்ட திட்டத்தைக் கைவிட்டார்.

தொடர்ந்து பிரமிடுகள் இருந்த பகுதியை சுற்றிப் பார்த்தார் சீஸர். முன்பு வந்தபோது ஏற்பட்ட திடீர் இயற்கை மாற்றங்கள் இப்போது ஏற்படவில்லை.

"ஆமாம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே புதைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றனர். சாதாரண மக்களும் இதை வழிமுறையைத்தான் பின்பற்றுகிறார்களா?"

"ஆமாம்! நாங்கள் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இறந்தவர் உடலை விமரிசையாக பத்திரப்படுத்தி பிரம்மாண்டமாக மெர்களை எழுப்புகிறோம். ஆனால், சாதாரண மக்கள், இறந்தவர்கள் உடலை சாதாரணமாகவே பதப்படுத்தி புதைத்து விடுகிறார்கள்."

"இன்னொன்று கேட்பேன். தவறாக நினைக்க மாட்டாயே…?"

"என்னுடைய வேந்தரான உங்களை நான் எப்படி தவறாக நினைப்பேன்?"

"நீ இறந்த பிறகும் இப்படித்தான் செய்வார்களா?"

"நிச்சயமாக! ஆமாம் இதைக் கேட்கத்தான் சுற்றி வளைத்து வந்தீர்களா? எப்படி இருந்தாலும், யாராக இருந்தாலும் ஒருநாள் இறந்துதானே ஆகவேண்டும்?"

"ஆமாம் ஆமாம்!" என்று கூறி, அந்தப் பேச்சை அதோடு நிறுத்திக் கொண்டார் சீஸர்.

இவ்வளவு பேசி முடிக்கவும் மணி 8 கடந்திருந்தது. இதற்குமேல் இங்கு நின்றிருந்தால் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் அந்த இடத்தை வேகமாகக் காலி செய்துவிட்டு அகன்றனர்.

(இன்னும் வருவாள்…)

About The Author

1 Comment

  1. உமா ஆனந்தி

    ஓ… இப்படித்தான் மம்மிகள் தயார் செய்தார்களா?

Comments are closed.