போன்சாய் – ஓர் அறிமுகம் – 1

Bonsai"போன்சாய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காண்பவர் கண்ணையும் மனதையும் கொள்ளையடிக்கும் வகையில் கவின்மிகு குறுமரங்களைத் தொட்டியில் வளர்க்கும் இக்கலையின் தாயகம் சீனா.

கி.பி.706-இல் மரணமடைந்த தங் (Tang Dynasty- 618-907) வம்சத்தைச் சேர்ந்த இளவரசர் சாங் ஹுவாயின் (Zhang Huai) கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் ஓவியமே, போன்சாயின் முதல் ஆதாரமாகக் கருதப்படுகிறது. அவ்வோவியத்தில் வேலைக்காரன் ஒருவன், குறுமரமுள்ள தொட்டியொன்றைத் தன் கைகளில் ஏந்தி நிற்கிறான். 

சீனாவிலிருந்து சென்ற புத்தத் துறவிகள் மூலம் இக்கலை ஜப்பானுக்குப் பரவியது. தொடக்கத்தில் செல்வந்தர், பிரபுக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த இது, 14-ஆம் நூற்றாண்டில் சீனப் படையெடுப்புக்குப் பின்னர், நாடு முழுவதும் பரவிப் பொது மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

போன்சாயில் பல நுட்பங்களைப் புகுத்தி இக்கலையை மேன்மைப்படுத்திய பெருமை, ஜப்பானியரையே சாரும். ஜப்பானிய மொழியில் "போன்" என்றால் "ஆழமற்ற தட்டு" எனவும் "சாய்" என்றால் "செடி" எனவும் பொருள்படும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இது மேலை நாடுகளிலும் பிரசித்தி பெற்றது. இன்று உலகமுழுதிலும் போன்சாய்க் கிளப்புகள் உள்ளன. ஆண்டு முழுதும் ஆங்காங்கே கண்காட்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.

இக்கலை மூலம் 100 முதல் 200 வயதான மரங்களையோ, செடிகளையோ கூடத் தொட்டிகளில் வளர்க்க முடியும். பொதுவாக, போன்சாய்ச் செடிகளின் வயது கூடும்போதுதான் அவற்றின் மதிப்பும் கூடும். ஜப்பானில் ஐந்நூறு வயதுடைய மரங்கள் கூட இருக்கின்றனவாம். இவை குடும்பச் சொத்தாகத் தலைமுறை தலைமுறையாக அழியாது காக்கப்படுகின்றன.

1993-இல் போன்சாய் மீது எனக்கு ஆர்வம் வந்தது. தோழியிடம் என் ஆர்வத்தைத் தெரிவித்தபோது,

"மனிதனின், அழகுணர்ச்சி எனும் அகம்பாவத்தினால் ஊனமான குழந்தைகள்தாம் போன்சாய் மரங்கள்; மரத்தை வளரவிடாமல் ஊனமாக்குவது கொடூரம்!" என்று அவள் கருத்துத் தெரிவித்தாள்.

அவள் கூறியது சரிதான் என்று எனக்கும் தோன்றியது. எனவே, போன்சாய் வளர்க்கும் ஆசையைக் கைவிட்டேன். ஆனால், அது பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்து கொண்டேயிருந்தது. அப்போது கணினியோ, இணையமோ பரிச்சயம் ஆகாத காலம். (இன்று போன்சாய் என்றவுடன் இணையத்தில் எத்தனை தகவல்கள்! எவ்வளவு அழகான புகைப்படங்கள்!). 

தமிழில் இது பற்றிப் புத்தகம் ஏதும் கிடைக்குமா என்று தேடினேன். என்ன ஆச்சரியம்! "தரையைத் தொடாத தருக்கள்" எனும் பெயரில் 1987ஆம் ஆண்டிலேயே திரு.சோனா என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். தமிழில் போன்சாய் பற்றிய முதல் புத்தகம் இதுதான். 

இதில் அவர் வளர்த்த போன்சாயின் புகைப்படங்களோடு வளர்ப்பு பற்றிய விவரங்களையும் அருமையாகக் கொடுத்திருந்தார். அதோடு, போன்சாயை எதிர்ப்பவர்களுக்கும் அப்புத்தகத்தில் பதிலிருந்தது.

ரோஜா, மல்லிகை போன்ற பூச்செடிகளாகட்டும், காய், கனிகள் கொடுக்கும் மரங்களாகட்டும், நல்ல விளைச்சல் வேண்டுமென்றால், சீசனில் பூத்து முடிந்தவுடன், காய்ப்பு முடிந்தவுடன் கிளைகள் முழுவதையும் வெட்டி விடுகிறோம். இதற்குக் கவாத்து எனப் பெயர். அப்போதுதான் புதுத்துளிர் தோன்றி மறுபடி பூக்கும், காய்க்கும். நல்ல விளைச்சலுக்காகக் கிளைகளை வெட்டுவது தவறில்லையென்றால், அழகுக்காக வெட்டுவதும் தவறில்லை என்பது அவர் கருத்து.

மேலும், இயற்கையில் வளரும் மரங்களுக்கு உரம் போட்டுக் கவனிப்பார் யாருமில்லை. ஆனால், போன்சாய் மரங்களுக்கு அவ்வப்போது உரமிட்டு, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துக் கண்ணுங் கருத்துமாகக் கவனிக்க வேண்டும் என்று ஆசிரியர் சோனா, அப்புத்தகத்தில் விளக்கமளித்திருந்தார்.

"போன்சாய் மரங்களைச் சிலர் இயற்கைக்கு எதிரானதுன்னு நினைக்கிறாங்க, அப்படியில்ல. போன்சாய் மரங்கள் மூலமா ஒளிச்சேர்க்கை செய்ய முடியும், சுத்தமான ஆக்ஸிஜனை உண்டாக்க முடியும், மழை தர முடியும். மற்ற சாதாரண மரங்களைப் போலவே காய், கனி, பூவும் தரமுடியும். அதனால இவற்றை வியாபாரம் செய்து பணமும் பார்க்க முடியும்" என்கிறார், பெங்களூர் "விரிஷா" கிளப்பின் தலைவி சுலா ஜவேரி.

இவரது கணவரும் மகனும் ஒரு விபத்தில் மரணமடைய, மனநலம் பாதிக்கப்பட்டு நடைப்பிணமாகத் திரிந்த இவரது வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய பெருமை, இந்தப் போன்சாய் மரங்களையே சாரும்.

"என்னை மாற்றிய போன்சாய் மரங்கள் மீது எனக்குப் பெரிய மரியாதையே வந்திடுச்சு. அதனால 1990-இல் ஆறு பெண்கள் சேர்ந்து "விரிக்ஷா" என்கிற பெயரில் போன்சாய்க் கிளப் ஆரம்பித்தோம். ஆறே மாதங்களில் இருபது பெண்கள் சேர்ந்தாங்க. போகப் போகப் போன்சாய் மரங்களைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் கண்காட்சியும் நடத்த ஆரம்பிச்சோம்" என்கிறார் இவர்.

சுவர்களில், பாறையிடுக்குகளில் ஆல், அரசு போன்ற மரக்கன்றுகள் வளர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவை இயற்கைப் போன்சாய்கள். என்றோ ஒருநாள், வீட்டு உரிமையாளர், சுவரில் விரிசல் விழுந்து விடும் என இவற்றைப் பிடுங்கி எறியத்தான் போகிறார். எனவே, இது போல் சுவரிடுக்குகளில் வளரும் மரக்கன்றுகளை எடுத்து வந்து தொட்டியில் வளர்ப்பதில் தவறில்லை என்று என் மனம் சொன்னது. இயற்கையாக மண்ணில் வளரும் மரக்கன்றைத் தோண்டியெடுத்துத் தொட்டியில் வளர்த்து அதன் இயல்பான வளர்ச்சியைக் கெடுப்பதில்லை என்று முடிவெடுத்தேன். 

உடனே அதைச் செயலாக்கி விடவும் துணிந்தேன்.

ஆல் எனக்கு மிகவும் பிடித்த மரம். எனவே, ஒரு பாழடைந்த கட்டடத்தில் சில ஆண்டுகளாக முளைத்திருந்த ஆலங்கன்றை எடுத்து வந்து சிறிய தொட்டியொன்றில் நட்டுப் பராமரித்தேன். சில ஆண்டுகள் கழித்து அதில் விழுதுகள் வரத் தொடங்கியதும் எனக்கேற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை! மரம் முழுக்க விழுதுகள் இறங்கிய குட்டி ஆலமரம் என் மனக்கண்ணில் தோன்றி இன்பமளித்தது. ஆனால் என் துரதிர்ஷ்டம், தவிர்க்கவியலாக் காரணங்களால் சில நாட்கள் நான் வெளியூரில் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தினமும் தண்ணீர் விடாததால் என் ஆலமரம் காய்ந்து செத்து விட்டது. 

போன்சாய்க்கு அதிகப்படியான ஆர்வமும், முழுமையான ஈடுபாடும், தொடர்ச்சியான உழைப்பும், அழகுணர்ச்சியுடன் கூடிய படைப்புத் திறனும் மிக முக்கியம்! ஒருவரது கற்பனைத் திறனுக்கேற்பப் போன்சாய் வடிவம் பெறுகிறது.

தொட்டியில் ஒரு மரக்கன்றை வளர்த்து விட்டால் மட்டும் அது போன்சாயாகிவிடாது. அதற்கெனச் சில பாணிகள் (Style) உள்ளன. இயற்கையில் தன்னிச்சையாக வளரும் மரங்களில் எத்தனை வடிவம் உண்டோ, அத்தனையும் இதிலும் உண்டு.

(வளரும்)

About The Author