போன்சாய் – ஓர் அறிமுகம் – 2

தொட்டியில் ஒரு மரத்தை வளர்த்து விட்டால் மட்டும் அது போன்சாயாகி விடாது என்று சென்ற வாரம் சொல்லியிருந்தேன் இல்லையா? போன்சாய்க்கெனப் பல பாணிகள் (Styles) உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றைத் தெரிந்து கொள்வோம் :-

போன்சாயின் வகைகள்:-

1.CHOKKAN (Formal Upright style) ஒழுங்கான நேர்ப்போக்கு – வேரிலிருந்து, தண்டுப்பகுதியில் வளைவு ஏதுமின்றி விண்ணை நோக்கி நேராக வளரும் மரமென்பதால் அடியிலிருந்து நுனி வரை ஒரே நேர்க்கோட்டிலிருக்கும். தண்டின் கீழ்ப்பகுதி தடித்து, மேலே செல்லச் செல்லக் குறுகலாயிருக்கும். கீழே வளரும் கிளைகள் நீண்டு அடர்த்தியாக இருக்க, மேற்கிளைகள் நீளம் குறைந்தும், எதிர் எதிராக வளர்ந்தும், ஒரு பிரமிடு போன்று தோற்றமளிக்கும். போன்சாய்க் கலையின் மிகப் பழமையான வடிவம் இது. இதிலிருந்தே மற்ற வடிவங்கள் தோன்றின.

இந்தப் பாணியில் வளர்க்கக் கூடிய சில மரங்கள்:- கிறிஸ்துமஸ் மரம் (Araucaria excelsa), அடினம் (Adenium obesum), அரச மரம் (Ficus religiosa), ஆலமரம் (Ficus benghalensis), சப்போட்டா (Manilkara zapota), சீத்தா மரம் (Anona squamosa), தூங்குமூஞ்சி மரம் (Samanea saman), நாகலிங்க மரம் (Couropita guinensi), வேம்பு (Azadirachta indica).

2.MOYOHGI (Informal upright style) ஒழுங்கற்ற நேர்ப்போக்கு – மரம் நேராக நிமிர்ந்து இருந்தாலும், முதல் வகையைப் போல அடியிலிருந்து நுனி வரை ஒரே நேர்க்கோட்டில் இல்லாமல், தண்டுப்பகுதி வளைந்து இருக்கும். அடிப்பாகத்தில் வளைவுகள் அதிகமாகவும் மேலே போகப் போகக் குறைந்துமிருக்கும்.

அத்தி (Ficus benjamina), ஆத்தி (Bauhinia rece mosa), ஆரஞ்சு (Citrus mitis), எலுமிச்சை, ஆலமரம் (Ficus benghalensis), செர்ரி (Malpighia glabra), நாகலிங்க மரம் (Couropita guinensi), புளிய மரம் (Tamarind), மாமரம் (Mangifera indica), விளா மரம் (Feronia limonia), போகன்வில்லா – இவற்றை இந்தப் பாணிக்குத் தேர்ந்தெடுக்கலாம்.

3.SHAKAN (Slanting form) சாய்வான போக்கு – இதில் மரத்தின் நடுப்பகுதி நேராக இல்லாமல் வேரிலிருந்து இடப்புறமோ வலப்புறமோ சாய்ந்து காணப்படும். இயற்கையில் வளரும் மரங்கள், சூரிய ஒளியை நாடியோ, காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்கவோ இது போல் சாய்வான போக்கைப் பெறும். 

போன்சாயில், கம்பி மூலம் அடிமரத்தைச் சாய்த்துச் சில காலம் வைத்திருந்து இந்தப் பாணியை உருவாக்குவார்கள். இந்த வகையில், அடிமரம் வேரிலிருந்து நேராக மேல் நோக்கி வளராமல் 45 முதல் 60 டிகிரிக்குள் வலப்பக்கமாகவோ இடப்பக்கமாகவோ சாய்ந்திருக்கும். கிளைகள் சிறிது கீழ் நோக்கி இருந்தால் நல்ல தோற்றம் கிடைக்கும். எல்லா மரங்களையும் இந்தப் போக்கில் வளர்க்கலாமென்றாலும் அடினம் (Adenium obesum), விளா மரம் (Feronia limonia), வேம்பு (Azadirachta indica), போகன்வில்லா ஆகியவை இம்முறைக்கு ஏற்றவை.

4.KENGAI (Cascade) அருவிப்போக்கு – மலைப்பாங்கான இடங்களில் பாறையிலிருந்து கீழ் நோக்கி வளர்ந்து தொங்கும் மரங்களைப் பார்த்திருக்கிறோம். அது போல், இந்த வகைப் போன்சாய் தொட்டியிலிருந்து கீழ் நோக்கி வளர்ந்து அருவி போல் தோற்றமளிக்கும். தொட்டியை உயரத்தில் வைத்து, செடியைக் கீழ் நோக்கி வளைத்துச் சில காலம் பழக்கி இந்தப் போக்கைப் பெறலாம்.

5.SHARIKAN (Weaving of life and death) வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட நிலை – நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய்ப் புயல், மழை, மின்னல் போன்ற இயற்கைச் சீறறங்களால் தாக்குண்ட மரத்தின் தண்டுப்பகுதி சேதமுற்று உரித்த கோழி போலிருக்க, ஒரு சில கிளைகளில் மட்டும் பச்சையாய்த் தளிரிருக்கும் மரங்களைப் பார்த்திருப்பீர்கள். ("வரும்; ஆனா வராது" என்பது போல, "உயிர் இருக்கும்; ஆனா இருக்காது") .

தண்டின் வெளிப்பகுதி பாதிக்கப்பட்டுப் பட்டைகள் உரிந்து காய்ந்திருந்தாலும், அதன் நடுவே செல்லும் வேரிலிருந்து நீர் உறிஞ்சும் பாதை சேதமுறாவிட்டால் மரம் இது போல் வாழ்வுக்கும் சாவுக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும். போன்சாயிலும் இது போல், நீர் உறிஞ்சும் பாதை சேதமுறா வண்ணம் மரப்பட்டைகளைக் கவனமாகச் சீவி இந்தப் பாணியை உருவாக்குவர்.

6.BUNJINGI (Literati form) அறிஞர்கள் பயன்படுத்திய பாணி – மணற்பாங்கான இடத்திலும், தரிசு நிலத்திலும் வளரும் மரம் போன்று அடி முதல் நுனி வரை மிகவும் மெலிந்து காணப்படும். கிளைகளும் மெலிந்திருப்பதுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். சிலவற்றில் ஒரே ஒரு கிளை இருக்கும். எளிமைதான் இதன் அழகு. (BUNJIN எனும் சீனச் சொல் கலை, இலக்கியம், தத்துவம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களைக் குறிக்குமாம்.)

12, 13 ஆம் நூற்றாண்டுகளில் சீனாவின் சுமி இங்க் பெயிண்டிங்கில் (sumi ink paintings) தம் மனதைப் பறிகொடுத்த ஜப்பானியர், அவ்வோவியங்களில் வரையப்பட்ட மரங்களின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு போன்சாயில் இந்தப் பாணியை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

(இந்தச் சுமி இங்க் பெயிண்டிங்கில், ஒரு பொருளை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக வரைய வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, ஒரு மலரோவியத்தில் இதழோ தோற்றமோ பூவை அப்படியே ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஓவியத்தைப் பார்த்த மாத்திரத்தில் பூவின் மணத்தை நாம் நுகர்வது போல் உயிரோட்டம் இருக்க வேண்டுமாம்.)

இன்னுஞ் சில வகைகளை அடுத்த வாரம் பார்ப்போம்.

-வளரும்…

About The Author

1 Comment

Comments are closed.