போன்சாய் – ஓர் அறிமுகம் (3)

சென்ற வாரம் போன்சாயின் சில பாணிகளைப் (Styles) பார்த்தோம். இந்த வாரம் இன்னுஞ் சில:-

7.SOKAN (Twin trunk) இரட்டை அடிமரம்

வேரிலிருந்து ஓர் அடிமரம் தோன்றினால் அதன் பெயர் தன்கன் (TANKAN). இரண்டிருந்தால் சொக்கன் (SOKAN). இந்த வகையில் பெரிய மரம் தாயைப் போலவும், சிறிய மரம் குழந்தை போலவும் இருக்கும். பெரியதும் சிறியதுமாக இரண்டு போன்சாய்கள் கை கோத்துக் கொண்டு நிற்கும் காட்சி, தாயும் சேயும் அரவணைத்து நிற்பது போல் அற்புதமாயிருக்கும்!

8.KABUDACHI (Multi trunk) பல்வேறு அடிமரங்கள்

ஒரே வேரிலிருந்து ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அடிமரங்கள் தோன்றும் மரம், இப்பெயரால் சுட்டப்படும். (மாதுளை (Punica grametum), மருதாணி (Lawsonia alba) போன்றவை இவ்வகைக்கு ஏற்புடையவை.

9.HOKIDACHI ( Broom form) துடைப்ப வகை

இலையுதிர்காலத்தில் இலைகளை முழுவதுமாக உதிர்த்துவிட்டுக் கூரான கிளைகளை விண்ணை நோக்கி உயர்த்தி நிற்கும் மரத்தின் தோற்றம், செங்குத்தாக நிற்கும் துடைப்பத்தை ஒத்திருக்கும். எனவேதான் இப்பெயர்! (பீச், எல்ம், மேப்பிள் மரங்களை இவ்வகையில் வளர்க்கலாம்).

10.WINDSWEPT STYLE – காற்றுவழிப் போக்கு

கடற்கரைப் பகுதிகளிலும் மலைமுகடுகளிலும் வளரும் மரங்களின் கிளைகள், பலத்த காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்று வீசும் திசையில் ஒட்டுமொத்தமாகத் திரும்பியிருக்கும். அது போலவே செயற்கையாகக் கிளைகளை ஒரே பக்கம் திருப்பிச் சில காலம் வைத்திருந்து இந்த வகை உருவாக்கப்படும்.

11.FOREST STYLE OR GROUP STYLE – காட்டுப் பாணி

ஒரே தொட்டியில் ஐந்துக்கு மேற்பட்ட மரங்களை வளர்க்கும் பாணி இது. இப்படிச் செய்யும்போது அவற்றின் வேர்கள் ஒன்றோடொன்று இணைந்துவிடும் என்றாலும், ஒரு மரம் நெட்டை, ஒன்று குட்டை என மரத்துக்கு மரம் வளர்ச்சி வேறுபடுவதால் இந்த வகைப் போன்சாய்த் தொட்டியைப் பார்க்கும்போது வனத்தின் ஒட்டுமொத்த வனப்பைக் காண்பது போன்ற அழகிய தோற்றம் கிடைக்கும். (கிறிஸ்துமஸ் மரம் (Araucaria excelsa), கறிவேப்பிலைச் செடி (Murrayakoenigi) போன்றவற்றைச் சேர்த்து இப்படி வளர்க்கலாம்).

12.NEAGARI (Exposed root form) வெளிவேர்ப் பாங்கு

மழை, வெள்ளம் போன்றவற்றால் மண் அரிப்புக்கு ஆளான மரங்களின் வேர்கள், கொத்தாக வெளியே தெரியத் தொடங்கும். நாளாவட்டத்தில் வேர்களும் தடிமனாகி, அடிமரத்தோடு சேர்ந்து அதன் நீட்சி போலாகிவிடும். அத்தகைய மரங்களைச் செயற்கையான முறையில் நாமே உருவாக்கினால் கிடைப்பது இந்தப் பாணி.

13.SHITZUKI (Clinging to rock – Planted on rock) மலைமரம்

மலைப் பிரதேசங்களில் பாறைகளுக்கு நடுவே வளர்ந்திருக்கும் மரம் போன்று கல்லையோ, சிறு பாறையையோ பக்கத்தில் வைத்து அதனைப் பற்றிக் கொண்டு வளரச் செய்யும் பாணி.

14.Raft Style – கட்டுமரப்போக்கு

மழை, வெள்ளம், புயல் போன்றவற்றால் மரம் தரை மட்டமாக விழுந்து மண்ணில் புதையுண்டு போவதுண்டு.ஆனால், மரம் வேரிலிருந்து அறுபடாததால், தரைக்கு வெளியே நீண்டிருக்கும் அதன் கிளைகளுக்குத் தொடர்ந்து உணவு கிடைத்துக் கொண்டிருக்கும். காலப்போக்கில் கிளைகள் ஒவ்வொன்றும் வேர் விட்டுத் தனி மரங்களாகிவிடும். தண்டின் மேல் வரிசையாக நிற்கும் மரங்கள் கட்டுமரம்போன்றிருக்கும். இதன் செயற்கை, போன்சாய் வடிவமே இந்தப் பாணி.

புதிதாகப் போன்சாய் வளர்க்கத் தொடங்குபவர்களுக்கு இவை போதும். விரிவஞ்சி, பாணிகளை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

Bonsai

Bonsai

சிட்னியிலுள்ள சைனீஸ் கார்டன்

போன்சாயின் உயரம்:-

20 அல்லது 20 செ.மீட்டருக்குக் கீழ் உயரமுள்ளவை மிகச் சிறியவை என்றும் 60 முதல் 80 செ.மீ. வரை இருப்பவை பெரியவை என்றும் கருதப்படும். இடைப்பட்டவற்றை நடுத்தரப் போன்சாய் எனலாம்.

மரக்கன்றுகள் பெறும் வழிகள்:-

போன்சாய்க்கு வேண்டிய மரக்கன்றுகளை விதை, போத்து, பதியன் போடுவது போன்ற பல்வழிகளில் பெறலாம்.

தோட்டக்கலையில் ஏற்கெனவே அனுபவம் உள்ளவர்கள் சுற்றுச்சுவர் ஓரங்களில், பாறையிடுக்குகளில் வளர்ந்திருக்கும் ஆல், அரசு. வேம்பு போன்ற இயற்கைப் போன்சாய்களை வேருடன் பெயர்த்து வந்து முயற்சி செய்யலாம். அனுபவம் இல்லாதவர்கள், நர்சரியில் மரக்கன்றைத் தொட்டியுடனே வாங்கி வந்து அதைப் போன்சாயாக்கலாம்.

மண்:-

களிமண், மணல், மக்கிய இலைதழை இவை மூன்றையும் சமமாகக் கலந்த கலவையைப் போன்சாய்க்குப் பயன்படுத்த வேண்டும்.

தொட்டி:-

மண், பீங்கான், பிளாஸ்டிக் ஆகியவற்றுள் மண்தொட்டிதான் நல்லது எனப் பலரும் பரிந்துரைக்கின்றனர். எந்தத் தொட்டியாயிருந்தாலும் அதிகப்படியான நீர் அடியில் தேங்காதவாறு, அடிப்பகுதியில் ஓட்டை (drainage hole) இருப்பது மிகவும் அவசியம்! அந்த ஓட்டையின் மேல் செங்கல் சில்லை வைத்து மூடி, அதன் பிறகே மண்ணை நிரப்ப வேண்டும். மண் அந்தத் துவாரத்தை அடைத்து விடாமலிருக்கவே இந்த ஏற்பாடு. அடியில் நீர் தேங்கினால், வேர் அழுகி செடி செத்துவிடும்.

மரம் வளர்ப்போரின் விருப்பத்தைப் பொறுத்துத் தொட்டியை எந்த வண்ணத்திலும் தேர்வு செய்யலாம். ஆனால், தொட்டியின் கண்கவர் வண்ணம், போன்சாயின் எழிலை மழுங்கடித்துப் பார்வையாளரின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கக்கூடியதாய் இருக்கக் கூடாது! ஏனெனில், தொட்டியின் கடன் போன்சாய்க்குப் பணி செய்து கிடப்பதே!

தொட்டியின் மிகச் சரியான அளவாகச் சொல்லப்படுவது யாதெனில், இருபக்கமும் பரவியிருக்கும் மரக்கிளைகளின் அகலத்துக்குச் சமமாகத் தொட்டியின் அகலம் இருக்க வேண்டும். அதே போல் அதன் ஆழம் (உயரம்), வேருக்கு மேலுள்ள மரத்தண்டின் அகலத்துக்கு (Trunk width) இருத்தல் நல்லது. இதிலிருந்து, உயரமும் தடிமனுமான போன்சாய்க்குச் சற்று ஆழமான தொட்டி வேண்டும் என்பது தெரிகிறது.

போன்சாய் உயரம் = தொட்டி உயரம் + அகலம்
என்பதைக் கொண்டும், தொட்டியின் ஆழத்தைக் கணக்கிடலாம்.

ஒழுங்கான நேர்ப்போக்கு, ஒழுங்கற்ற நேர்ப்போக்கு, சாய்வுப்போக்கு ஆகியவற்றுக்குச் சதுர, செவ்வக வடிவத் தொட்டிகளும் அருவிப் போக்குக்கு வட்ட, சதுர வடிவங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.

செவ்வக வடிவத் தொட்டியில் மரத்தை நடுவிலிருந்து வலப்புறமோ, இடப்புறமோ சற்றுத் தள்ளி நடவேண்டும். வட்டம், சதுரம் ஆகியவற்றில் நடுவில் நட வேண்டும்.

இவையெல்லாம் போன்சாய் விதிகளாகச் சொல்லப்பட்டாலும் தொட்டி வடிவம், வண்ணம் ஆகியவற்றைப் பொறுத்த வரை, வளர்ப்போர் தம் விருப்பத்துக்கேற்ப மாற்றிக் கொள்வதில் தவறேதுமில்லை.

–வளரும்

About The Author