மடை திறந்து… (23)

என்னப்பா, சமத்தா இருக்கீங்கதானே எல்லாரும்?

இந்த வாரம் ரெண்டு வாசகிகள் வாழ்க்கை மாறி இருக்குன்னு எழுதி இருந்தாங்க. ரொம்ப சந்தோஷம். வாழ்க்கையை வளமாக்கிக்கிட்ட விஜிக்கும் கார்த்திகாவுக்கும் வாழ்த்துக்கள் சொல்வோம். விஜி அவங்களோட தோழிகளுக்கும் நம்ம கூட்டத்தை பரிந்துரை செய்திருக்கறதா எழுதிருந்தாங்க. நன்றி. அந்தத் தோழிக்ளும் தங்களோட வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வாழ்த்துக்கள். மகிழ்ச்சியான மனிதர்கள்தான் மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்கமுடியும். அதனால எப்படி உங்களோட வாழ்க்கையை மாத்திக்கிட்டீங்கங்கறதை மற்றவங்ககிட்டே பகிர்ந்துக்குங்க… உலகத்தை மகிழ்ச்சியாக்கற புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.

ஒரு வாசகர் ‘நான் கடவுளுக்கு பதில் பிரபஞ்சத்தைத்தான் நம்பறேன்’னு எழுதிருந்தார். கடவுளும் பிரபஞ்சமும் வேற வேற இல்லை. எல்லை இல்லாத இந்தப் பிரபஞ்சத்தை இயக்கற சக்தியை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள கொண்டுவர்றதிலதான் எனக்கு உடன்பாடில்லை. உதாரணத்துக்கு கடவுளை பயங்கர கோபக்காரராவோ அல்லது அவரை நம்பாதவங்களைத் தண்டிக்கறவராவோ சித்தரிக்கறதுதான் சரியில்லைன்னு நான் சொல்றேன். இந்த குணமெல்லாம் ஒரு மனுஷனுக்கு இருந்தா அந்த மனிதனை நமக்குப் பிடிக்குமா சொல்லுங்க. அப்படின்னா எப்படி இந்த குணமெல்லாம் இருக்கற ஒருத்தரை நாம உயரமான இடத்தில வச்சு கும்பிட முடியும்? இப்படி கேள்வி கேக்கறதுனால நான் கடவுளை மறுக்கிறேன்னு அர்த்தமில்லை. நாம கடவுளை சரியா புரிஞ்சுக்கலைன்னுதான் சொல்லவர்றேன்.

நீங்க நம்பற கடவுளை விட்டுட்டு, புதுசா பிரபஞ்சம்ங்கற கடவுளை நம்பச் சொல்ல்றதா அர்த்தம் பண்ணிக்கக் கூடாது. நீங்க எந்தக் கடவுளைக் கும்பிட்டாலும் அது எல்லாமே நிபந்தனையற்ற அன்புங்கற நோக்கத்தோட உருவாக்கப்பட்ட ஒரு கான்செப்ட் என்கிறதைப் புரிஞ்சுக்கிட்டு, அந்த கான்செப்ட் குறுகியதா இருந்ததுன்னா அது மனுஷங்க கிழிச்ச வட்டம்கறதை உணர்ந்து எல்லைகளைக் கடந்து விரிடையுங்கங்கறதுதான் நான் சொல்ல வர்றது.

இந்த வாரம் ஒரு மேலாண்மை பயிற்சியாளர் உட்பட மூணு பேருக்கு சுதந்திர உத்தியை அறிமுகப்படுத்தி வச்சேன் அலுவலகத்தில… உலகம் மாறிக்கிட்டே வருது. நீங்க எத்தனை பேருக்கு நீங்க கத்துக்கற உத்திகளையும் கருத்துக்களையும் அறிமுகப் படுத்தி வைக்கிறீங்க? சுவாரஸ்யமான மாற்றங்கள் எதாவது பார்க்கறீங்களா?

போனவாரம் ராசிங்கற பொண்ணோட படிப்பு விஷயமா சில முயற்சிகள் செய்தோம். நல்ல நல்ல தீர்வுகள் கிடைச்சுது. ஆனா அவங்க குடும்பத்தில அந்தத் தீர்வுகளை ஏத்துக்காம அவங்க சொன்ன தீர்வுதான் வேணும்னு ஒரே பிடியா பிடிச்சுட்டாங்க. . பசிக்குதுன்னு வந்து நிக்கறவங்களுக்கு ஒரு கடை வச்சுத் தரோம்ன்னு சொன்னா, எஙளுக்கு பக்கத்து ரெஸ்டாரண்ட்ல இலவச பாஸ்தான் வேணும்.. அதுக்கு நீங்க ஏற்பாடு செய்யுங்கன்னு கேக்கற மாதிரி ஆகிப்போச்சு. ஒரு நல்ல தொலைநோக்குத் தீர்வைத் தவற விடறாங்களேங்கற ஆதங்கம் ஒரு புறம்… உதவி செய்ய முன்வந்தவங்களை எதிர் கொள்ள முடியாத நிலை மறுபுறம். அதனால இதில இறங்கி வேலை செஞ்ச நிறைய பேருக்கு மன வருத்தம்.

"என்ன செய்யறது…. பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா… நல்ல வேலை செஞ்சுட்டு நாமே நம்மைப் போட்டு வருத்திக்கக் கூடாது"ன்னு நம்ம குழுவைத் தேத்தினேன். முன்னால நானும் இப்படித்தான் வருத்தப் படுவேன். இப்போ ஒண்ணு எனக்குத் தெளிவாயிடுச்சு – அடுத்தவங்க வாழ்க்கையை நாம வாழ முடியாது. ‘இந்தப் பாதையில நான் போயிருக்கேன். வசதியா இருந்தது’ன்னு பகிர்ந்துக்கலாம். ஆனா அந்தப் பாதையில மத்தவங்க போகலைன்னா அது அவங்க விருப்பம், இல்லையா? அதனால நான் அப்பப்போ உங்களை ‘அது செஞ்சீங்களா, இது செஞ்சீங்களா?’ன்னு கேட்டாலும் நீங்க செய்யலைன்னா அதுக்காக கோவிச்சுக்க மாட்டேன்… உங்க வாழ்க்கையின் தலைவர் நீங்களே நீங்கள்தான்.

‘ஒரு வேலையைச் சரியாகச் செய்வது மேலாண்மை. சரியான வேலைகளைச் செய்வது தலைமை’ அப்படிங்கறார் ஸ்டீவன் கோவி. இது எனக்கு ரொம்பப் பிடிச்ச கருத்து.

மேசைகள் செய்யற ஒரு நிறுவனம் இருக்குன்னு வச்சுக்குவோம். அதனோட லாபம் குறைஞ்சுக்கிட்டே வருது. மேலாளரோட கவனம் மேசைகளை அப்பழுக்கில்லாம செய்யறதுல இருக்கும். அவர் எவ்வளவு நேர்த்தியா மேசைகள் செய்தாலும் லாபம் அதிகரிக்கலைன்னா நிறுவனம் மூடப்பட்டுடும் இல்லையா? தலைவரா இருக்கறவங்க என்ன செய்வாங்கன்னா, ஏன் லாபம் குறையுதுன்னு ஆராய்ஞ்சு அதுக்கான தீர்வை செயல்படுத்துவாங்க. தலைமைங்கறது தலைவரா இருந்தா மட்டும்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது ஒரு பண்பு. இப்படிப்பட்ட பண்புகள் இருக்கற மேலாளார்கள்தான் தலைமைப் பதவிக்கு வர்றாங்க.

நல்லா யோசிச்சுப் பாருங்க… உங்களோட வாழ்க்கையோட தலைவரா நீங்க இருக்கீங்களா அல்லது மேலாளராவா?
கஷ்டப்பட்டு ஒரு செங்குத்தான மலைல ஏறிட்டு கடைசில நீங்க ஏறவேண்டிய மலை இது இல்லைன்னு தெரிஞ்சா எப்படி இருக்கும்? அதனால அன்றாடப் பணிகளை அயராம செய்யறது ஒரு பக்கம் இருக்க, இந்தப் பணிகள் உங்களை நீங்க விரும்பும் இடத்துக்கு அழைச்சிட்டுப் போகுமான்னு அப்பப்ப கேட்டுக்கறது நல்லது.

******

தாமரைப் பெண்களுக்காக ஒலி நூல்கள் தயார் செய்ய முன் வந்திருக்கும் நம்ம நண்பர்களுக்குக் கைகொடுக்க நேயம்ல இணைஞ்சீங்கன்னா வசதியா இருக்கும்:

http://groups.google.com/group/neyam?lnk=srg

பார்வை குறையுடைய சுபைதா பி.எட் படிக்க உதவி கேட்டிருந்தார் Hari. சுபைதாகிட்டே நானே பேசினேன். நல்ல பொறுப்பான பொண்ணு. இந்திரா ஃபௌண்டேஷன்ல சீட் வாங்கிருக்காங்க. விவசாயம் செய்யற அப்பா பத்தாயிரம் கட்டிட்டார். மீதி இருபத்தையாயிரம் ஜூலை 20ம்தேதிக்குள்ள கட்டணும். தவணை முறையில கட்டவோ அல்லது வங்கிக் கடனோ அல்லது கொஞ்சம் கால அவகாசமோ கிடைச்சாக் கூட போதும்னு கேட்டுக்கிட்டாங்க சுபைதா. ஏதாவது ஏற்பாடு செய்வோம். இலவசமா இவங்களுக்கு சீட் வாங்கவும் முயற்சிகள் செய்துக்கிட்டிருக்கேன். சுபைதாவுக்கு உதவி செய்ய விரும்பறவங்க Hariயைத் தொடர்பு கொள்ளுங்க: 9840341973.

படிச்சு முடிச்சப்பறம் என்ன செய்யப்போறீங்கன்னு கேட்டேன். அரசு அல்லது தனியார் நிறுவனங்கள்ல வேலை தேடணும்னு சொன்னாங்க. தனியார் நிறுவனத்தில வேலை வாங்கின யாரையாவது தெரியுமான்னு கேட்டேன், இல்லைன்னு சொன்னாங்க. காரணம் என்னன்னு கேட்டேன். தனியார் நிறுவனங்கள் வேலை தர யோசிக்கிறாங்கன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. பாஸ் என்கிற பாஸ்கரன் யாராவது இருக்கீங்களாப்பா? கொஞ்சம் வித்தியாசமா யாராவது யோசிக்கப்படாதா?

தாமரை இல்லத்தில 12 பெண்கள் பி.எட் முடிச்சிட்டு சும்மா இருக்காங்க. எப்படியாவது இவங்களுக்கு ஏதாவது ஒரு வேலை வாங்க தலை கீழா முயற்சி செய்துக்கிட்டிருக்கோம். யஷ் நிறைய தகவல்கள் சேகரிச்சிருக்காங்க. நடைமுறைப்படுத்தறதுல இருக்கற சிக்கல்களைகளையும் வேலை நடக்கிறது… நேரம் இருக்கறவங்க கொஞ்சம் பொறுப்பெடுத்துக்க முன் வாங்க.
யஷ் தனியா இணையம் வழியாவே நிறைய தகவல்கள் சேகரிச்சு, சம்பந்தப்பட்டவங்ககிட்டே தொடர்பு கொண்டு விபரங்கள் திரட்டறாங்க. கூட இன்னும் கொஞ்சம் கரங்கள் இருந்தால் உதவியா இருக்கும். முயற்சி செய்யுங்க. நேரமில்லைன்னா வாய்வழியா வார்த்தைகளைப் பரப்புங்க.

நீங்க அயல்நாட்டுத் தமிழர்களா இருந்தா ஏன் தாமரைப் பெண்கள்கிட்டே இணையம் வழியா உங்க வாண்டுகளுக்குத் தமிழ் கத்துக்கொடுக்கக் கூடாது? வஞ்சியோட கணவர் நம்பி, சுகந்தி, மற்றும் தமிழ் அமைப்புகள்ல ஈடுபட்டிருக்கும் வாசகர்கள் கவனிச்சு ஏதாவது செய்ங்கப்பா…

பாட நூல்கள் ப்ரைய்ல்ல வந்தா வசதியா இருக்கும்னு சுபைதா கருத்துத் தெரிவிச்சாங்க. யாராவது இதை எப்படி நடைமுறைப்படுத்தறதுன்னு ஆராய்ச்சி செய்து தெரிவிக்க முடியுமாப்பா?

******

கடந்த ரெண்டு வாரமா என் உடைகள் பற்றி ஏன் எழுதலைன்னு கேட்டிருந்தீங்க இல்லையா? ஒரு காரணமும் இல்லை. சொல்லத் தோணலை அவ்வளவுதான். ரெண்டு வாரம் முன்னால போட்டிருந்த மஞ்சள் ஸ்கர்ட் நிறையப் பேருக்குப் பிடிச்சது. பாண்டி பஜார் சாலையோரக் கடைல வாங்கினதுதான்.

இந்தப் படத்தில நான் கட்டிருக்கற புடவை ஆஸ்தான தெய்வம் சில்க்ஸ்ல வாங்கினது. பளிச்சுன்னு இருந்த மஞ்சள் பூக்கள் கண்ணைக் கவர்ந்ததால வாங்கினேன்.

இந்தப் படத்தில கூட இருக்கற அம்மா பேரும் நிர்மலாதான். ஃபிரண்டோட அம்மா. (எனக்கென்னவோ ஆன்டி, அங்கிள்னு கூப்பிடறதை விட அம்மா, அப்பான்னு கூப்பிடறதுதான் பிடிக்கும். அதனால நண்பர்களோட பெற்றோர்கள் எல்லாம் எனக்கு அம்மா, அப்பாதான்) ரொம்ப அழகா பாடுவாங்க; ஆடுவாங்க; சமைப்பாங்க… எந்த சூழல்லயும் சட்டுன்னு பொருந்திருவாங்க. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ல பங்கெடுக்கணும்னு அம்மாவை நான் வற்புறுத்திக்கிட்டே இருக்கேன். சரியான வாய்ப்புகள் அமைஞ்சிருந்ததுன்னா எங்கேயோ போயிருப்பாங்க வாழ்க்கைல. இதே போல, ஜம்புவோட மனைவி சுசீலாம்மாவும் அற்புதமா பாடுவாங்க. ‘சிந்தனை செய் மனமே’ பாடலை அவங்களை அடிக்கடி பாடச் சொல்லி நான் கேட்பேன். பதிவு செய்து வைங்கன்னு சொல்லிட்டே இருக்கேன் அவங்ககிட்டே.

இந்த மாதிரி எவ்வளவோ திறமைகள் வீணாயிருக்கு நம்மோட சமூகம் பெண்களுக்கு விதிச்சிருந்த கட்டுப்பாடுகள்னால. ஆனா இப்போ எவ்வ்வ்வளவோ மாறிடுச்சு இல்லையா… இல்லைன்னா… நான், கலை, கீதா, யஷ், தேவி, சித்ரா, கவிதா…. இப்படி சுதந்திரமா எழுதிட்டிருக்க முடியுமா?

******

கோ படம் பார்த்தேங்க… ஒரு நல்ல கதையை சுமாரான திரைக்கதை எப்படி வீணாக்க முடியும்கறதுக்கு ஒரு உதாரணம் இந்தப் படம். சுமாரான ஒரு கதையை நல்ல திரைக்கதையினால எப்படி சுவாரஸ்யமான பட மா மாத்த முடியும்கறதுக்கு உதாரணம் ‘ஓய்’ங்கற தெலுங்குப் படம். சப்டைட்டிலோட பார்த்தேன். சித்தார்த் – ஷாமிலி நடிச்சது. அழகழகான சின்னச் சின்ன காட்சிகள் படத்தை கடகடன்னு ஓட்டிட்டுப் போயிடுச்சு.

வேறென்ன…? உங்களை நல்லா பார்த்துக்கறீங்கதானே?

அபரிமிதமான அன்புடன்,
நிலா”

About The Author

2 Comments

  1. கீதா

    நிலா, தலைமைப் பண்புக்கும் மேலாண்மை குணத்துக்கும் உள்ள வேறுபாடு பத்தி அழகாச் சொல்லியிருக்கீங்க. ஸ்டீவன் கோவியின் கருத்து முழுவதும் ஏற்கக் கூடிய ஒன்று. உங்க கேள்விகள் நிறைய யோசிக்கவைக்குது. அருமையானக் கருத்துக்களுடன் தொடர்ந்து மடை திறந்து பாயட்டும் புதுவெள்ளம் உங்களிடமிருந்து எங்களுக்கும். முன்பு போட்ட பின்னுட்டம் காணாமற்போய் மறு பின்னூட்டம் இது.

  2. kapi

    Hai Nirmala,

    Good is extension of God..

    Your last 3 articles i could read tooodaaaaay……. This is my Kodai”

    Good work being done , keep moving..

    Kapi”

Comments are closed.