மடை திறந்து… (3)

என்னப்பா, எல்லாரும் நலமா?
இங்கேயும் எல்லாம் நலம். போன வாரம் கேட்டிருந்த கேள்விக்கு நாலே நாலு பெண்கள் பதில் சொல்லிருந்தாங்க. பரவாயில்லை. அதில என்னைக் கவர்ந்தது மைத்ரேயியோட பதில். காரணம் என்னன்னா அது அப்படியே அவங்க மனசோட நேரடி வெளிப்பாடா இருந்ததுதான்.

மைத்ரேயி,

உங்களது பதில் மனசைத் தொட்டது. ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய புரிதல் நீங்க சரியான பாதையில இருக்கீங்கன்னு காட்டுது. உங்களுடைய வாழ்க்கையின் நோக்கம் என்னன்னு தெரிஞ்சுக்கறதுக்கு சில உத்திகள் இருக்கு. அது உங்களுக்குப் பயன்படலாம். நிலாச்சாரல்ல நான் இது பற்றி ஒரு கட்டுரை எழுதிருக்கேன். தேவைப்பட்டா படிச்சுப்பாருங்க. நோக்கம் தெரிஞ்சதுன்னா பாதையைத் தேர்ந்தெடுக்கறது எளிதாகுது. தவிர, வாழ்க்கை உற்சாகமா ஒரு உல்லாசப்பயணம் மாதிரி தெரியுது. ஆல் த பெஸ்ட்!

என்னோட நாவல் பிரதியை அனுப்ப உங்கள் முகவரியை மின்னஞ்சல் செய்யுங்க : நிலா டாட் பி ஆர் அட் ஜிமெயில் டாட் காம்.

அன்புடன்,
நிலா

பதில் எழுதியிருந்த மற்ற பெண்களுக்கு ஒரு ‘ஓ’. ஏன்னா நீங்க நீங்களா வாழறதுக்கான ஆர்வம் உங்களுக்கு இருக்கே! வெல் டன்!

சித்ரா, விஜயவேணி – அந்த அன்னிய தேசத்தில உங்களுடைய சேவை தேவையே இல்லைன்னா என்ன செய்வீங்கன்னு யோசிங்க. அப்போதான் உங்களது ஆன்மாவுக்கு என்ன தேவைன்னு புரிய ஆரம்பிக்கும்.

ஹேமா, அது ஏன் ஒரு அருமையான நாளை வாழ்ந்துட்டு அதுவே கடைசி நாளா இருக்கணும்னு ஒரு கோரிக்கை? விருப்பமான வாழ்வை வாழறதுல பயம் இருக்கான்னு உங்களைக் கேட்டுப்பாருங்க… அந்தக் கேள்விக்கு உங்களை உங்கள் கனவு வாழ்க்கைக்கே அழைச்சுட்டுப் போகக்கூடிய வல்லமை இருக்கு….

இன்றைக்கு ஒரு தோழி "நான் அடிக்கடி 1111 நம்பரைப் பார்க்கிறேன். அதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா"ன்னு கேட்டாங்க. இதுக்கு அர்த்தம் இருக்கு… இறை சக்தி நம்முடன் தொடர்பு கொள்வதைத்தான் இந்த எண் அல்லது இது போன்ற வரிசை எண்கள் (999, 888,….) குறிக்கின்றன. கூகிள்ல ‘ஏஞ்சல் நம்பர்ஸ்’னு தேடினீங்கன்னா ஒவ்வொரு வரிசைக்குமான பொருள் கிடைக்கும். சமீபத்தில நிறையப் பேருக்கு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படறதை என்னால பார்க்க முடியுது. நாம் ஒவ்வொருவரும் இறையின் ஒரு துளிங்கற புரிதல் வர்றதைத்தான் நான் விழிப்புணர்வுன்னு நினைக்கிறேன்.

தன்னிலை அறிதல்தான் ஞானத்தின் முதல்படி. அதனாலதான் நம்முடைய விருப்பு வெறுப்புகளை, பலம், பலகீனங்களை தெரிஞ்சுக்கறது முக்கியம். அதைவிட முக்கியம் அத்தனை பலகீனங்களுடன் நம்மை நாமே ஏற்றுக் கொள்வது. ஒரு சின்ன உத்தி: கண்ணாடி முன்னால நின்னு உங்கள் கண்ணுக்குள்ள பார்த்து "நான் உன்னை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்" அப்படின்னு சொல்லிப்பாருங்க. என்ன மாதிரி உணர்ச்சிகள் வருதுன்னு கவனிங்க.

நமக்குள்ள இருக்கற உலகம்தான் வெளி உலகமா நமக்குத் தெரியுதுங்கறதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். எனக்குள்ள எல்லாம் நல்லா இருந்ததுன்னா வெளிலயும் எல்லாம் நல்லா இருக்கறமாதிரி இருக்கு. இல்லைன்னா இல்லை. அதனால மேலே சொன்ன பயிற்சி உங்களுக்கு ஒரு முக்கியமான திருப்பத்தைக் கொடுக்க வாய்ப்பிருக்கு. தயங்காம செஞ்சு பாருங்க.

சஞ்சுவுக்கு (ஒரிஜினல் பேர் இல்லைங்கோ) தன் மகள் சரியா படிக்கறதில்லைன்னு கோபமான கோபம். நான் தொ(ல்)லை பேசினப்போ ரொம்பவும் கொதிச்சுக்கிட்டிருந்தா. நான் பொறுமையா எல்லாம் கேட்டுட்டு, "அவ ஏன் நல்லா படிக்கணும்?"னு கேட்டேன். "அப்பத்தான் வாழ்க்கை நல்லா இருக்கும்"னா. "அப்ப ரஜினிகாந்துக்கு, சச்சினுக்கெல்லாம் நல்ல வாழ்க்கை இல்லையா"ன்னு கேட்டேன். அவள் அதை எதிர்பார்க்கலை. என்னுடைய இந்தக் கேள்வி உங்க சிலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கூட ஏற்படுத்தலாம். கல்வி அவசியம்தான். ஆனா பள்ளி மதிப்பெண்கள்தான் ஒருத்தரோட வாழ்க்கையை நிர்ணயிக்கிறதுங்கறது எனக்கு சரியாப் படலை. அது நம்ம சமூகத்திலிருக்கற ஒரு பொதுவான நம்பிக்கை. அவ்வளவே.

அதுக்காக சஞ்சுவோட தாய் மனசை நான் குறை சொல்லலை. சஞ்சு தன் மகளோட கல்விக்காக நிறைய கஷ்டப்பட்டுட்டா. ஆனா அதுக்கு மேல அவளால எதுவும் செய்ய முடியலைங்கறப்ப, தனது மகளுக்கு கல்வில நாட்டமில்லைங்கற நிதர்சனத்தை அவ முழுமையா ஏத்துக்கிட்டா, அவளோட டென்ஷன் குறையும். மற்ற தீர்வுகளையும் பார்க்கற தெளிவு வரும்னு மென்மையா சொன்னேன். அவ கொஞ்சம் சமாதானமான மாதிரிதான் தெரிஞ்சது. நீங்க என்ன நினைக்கறீங்க, மக்களே?

என்னோட சிறுகதைத் தொகுப்பான கருவறைக்கடனுக்கு ரொம்ப நல்ல விமரிசனங்கள் கிடைச்சது. ஆழமாகவும் மனதைத் தொடற கதைகளாகவும் இருந்ததா பலர் சொன்னாங்க. சில நண்பர்கள் என் கதைகளைப் படிச்சா மனசு கனமாயிடறதா சொன்னாங்க. அந்த சந்தர்ப்பத்திலதான் நான் ‘கண்ணில் தெரியுதொரு தோற்றம்’ நாவல் எழுத ஆரம்பிச்சேன். என்னவோ ரொம்ப ஜாலியா எழுதணும்னு தோணுச்சு. முன்குறிப்பு எதுவுமே எழுதி வச்சுக்கல. ஆனா எழுத்து கடகடன்னு வந்தது… முன்ன பின்ன பெரிசா மாற்ற வேண்டிய அவசியம் வரலை. அது ராணிமுத்துல வந்தப்போ இலக்கிய நண்பர்கள்லாம் நான் ரொம்ப ஜனரஞ்சகமா எழுதிருக்கேன்னு விமரிசிச்சாங்க… ஆனா எழுதின அனுபவம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’ எழுதி முடிச்சப்போ இனி ரொமாண்டிக் கதைகள் எழுதக் கூடாதுன்னு தோணுச்சு. ஆனா வாசகர்களிடையே அதுக்குப் பெரிய வரவேற்பு! இப்போ கொஞ்சம் இடைவெளி விழுந்திட்டதுல எனக்கு எது தோணுதோ அது எழுதலாம்னு ஒரு தெளிவு வந்திருக்கு… நிறைய காதல் கதைகள்தான் தலைக்குள்ள சுத்திக்கிட்டிருக்கு. ஏனோ, காதல் கதைகள்னாலே ‘ரமணி சந்திரன்’ சாயல் இருக்குன்னு சொல்லிடறாங்க. அவங்க அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காங்கனுறது பெரிய விஷயம்! ஆனா எல்லா காதல் கதைகளுக்கும் அப்படி ஒரு சாயம் பூசறது மற்ற எழுத்தாளர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டென்பதை நாம் பார்த்து அவர்களை ஊக்குவிப்பது நலமல்லவா?

Nilaஇந்த வாரம் நேரமில்லாததால அதிகம் எழுத முடியலை. இந்த ஃபோட்டோல கட்டிருக்கற புடவை என்னவோ ஒரு காட்டன். கலர் காம்பினேஷன் ரொம்பப் பிடிச்சு வாங்கினேன். மொத்தமா என்னோட செலக்ஷன் – நானே எனக்காக வாங்கினது (அப்பாடா… ஒரு தடவையாவது!)

உங்ககிட்ட இருக்கற, உங்களுக்குப் பிடிச்ச ஆடைகளைப் பற்றிய சுவாரஸ்யமான குறிப்பினை புகைப்படத்தோட அனுப்புங்களேன்! என்னோட குறிப்பையும் இணைச்சு இங்கே பிரசுரிக்கிறேன்… நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, மடை திறந்து பேசப்போறது நான் மட்டுமில்லை… உங்களையும் அந்த உற்சாகத்துக்குள்ள இழுக்கறதுதான் திட்டம்….

அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் நிறைய எழுத முயற்சி செய்யறேன்… சரியா?

அபரிமிதமான அன்புடன்,
நிலா…

About The Author

4 Comments

  1. Shanthi

    Hi Nila
    Good Morning to you, Every Monday morning statrts for me with reading the nilacharal first, then to carry on with the work. These days, I am really enjoying your Madai Thiranthu”, very causual talk, thanks. I would like to meet you once, do you have get togethers for your readers?… let me know if there is any…. coming up.
    will liked to be in touch.
    withlove
    shanthi”

  2. Suresh

    nila,
    u no, reading your articles make me more comfortable and wanna to read / wanna to listen more and more.. Thanks for your knowledge-sharing with us in understandable way.. I LOVE all. (I read almost all your things excluded story)

    Suresh
    Brisbane (Australia)

  3. Mini

    Nila, I like your writings very much, not only this article. all your novels and other stuff. I missed that last update and missed your question. It is making me think so much. what will I do If I get a chance? No need to run behind money and totally strangers. Nice question. I am going to find an answer for this. Keep asking questions like this. and Nila, Your saree is very pretty. color combination is very nice.
    அபரிமிதமான அன்புடன் I like this quote. Without any expectations if we can love everyone not only our relatives,friends all the people.. that can be the final achievement.just my thought.

Comments are closed.