மது-3

"மெட்ராஸ்ல நீ இப்ப என்னதான் பண்ணிட்டிருக்க ஹசீன்?"

"இந்த லௌகீக டிகிரிகளுக்கு மரியாதையில்லாத ஒரு ஒலகத்துல சவுக்யமா இருக்கேன்."

"கொழப்பாத."

"ரூமுக்கு வா, வெவரமா சொல்றேன்."

ரூம் வந்தது.

பல குடித்தனங்கள் ஒண்டிக் கொண்டிருக்கிற நெருக்கடியான இடமாகையால் இந்த ஜோடியைப் பார்த்துப் பல ஜோடிக் கண்கள் அகலமாய்த் திறந்தன.

சில வாய்களும்.

"பையன் சினிமாவுல இருகானாம்ல, அதான் எவளோ ஒரு நடிகையத் தள்ளிட்டு வந்திருக்கான்."

"குடித்தனங்க இருக்கற எடம். இதெல்லாம் நல்லவா இருக்கு?"

"ரெண்டு நாளக்கி முந்தி இந்த நடிகையோட படம் பேப்பர்ல வந்தது, நா பாத்தேன்."
 
இந்த வசனங்கள் இவனுடைய காதில் விழுந்தபோது, இதையெல்லாம் யோசிக்காமல் மதுவைக் கூட்டிக் கொண்டு வந்து அவளை அசிங்கப்படுத்தி விட்டோமே என்று சங்கடமாயிருந்தது.

ஆனால் மதுபாலாவோ முதல் கூற்றின் முற்பகுதியைத் தவிர வேறு எதையுமே உள் வாங்கிக் கொள்டதாய்த் தெரியவில்லை.

இவனைத் தொடர்ந்து அறைக்குள் பிரவேசித்ததுமே, ‘என்ன ஹசீன், நீ சினிமால இருக்கியா, சொல்லவேயில்ல? நடிக்கிறியா? என்ன படம் பண்ற?’ என்று குதூகலித்தாள்.

துர்விமர்சனங்களை அவள் நிராகரித்து விட்டது இவனுக்குப் பெரிய ஆறுதலாயிருந்தது. அவளுடைய குதூகலத்தில் பங்கு கொண்டு சிரித்தான்.

"நடிக்கவெல்லாம் இல்ல மது. ஒரு மீடியம் சைஸ் டைரக்டரப் போய்ப் பாத்தேன். அவர் அஸிஸ்ட்டன்ட் டைரக்டரா சேத்துக்கிட்டார். அப்சர்வ் பண்றேன், வேலைய அக்கறயாக் கத்துக்கறேன். எனக்குப் புடிச்சிருக்கு."

"வெரிகுட் ஹசீன். சீக்கிரத்ல நீ பெரிய டைரக்டரா வந்துருவ!"

"மூணு வருஷத்துல. மூணே வருஷத்துல மது. எனக்கு நம்பிக்கையிருக்கு மது. மவுன்ட் ரோட்ல ஸெவன்ட்டி எம்எம் ஹோர்டிங் மது. அட்டகாசமா, அசத்தலா. அதுல டைரக்ஷன்னு எம்ப்பேர் போட்டிருக்கும் மது."

"ஒண்டர்ஃபுல் ஹசீன். நீ நம்பிக்கையோட பேசறதக் கேக்க எவ்வளவு சந்தோஷமாயிருக்கு தெரியுமா!"

"தாங்க் யூ மது, நீ வேணா பார், நடக்கத்தான் போகுது இது, என் படத்துக்குக் கதை இப்பவே ரெடி, மது!"

"அதுக்குள்ளேயா, கிரேட், ஒங்க முஸ்லிம் கதையா?"

"நோ. ஒன்னோட கதை, மது. ஒன்னோட புரட்சிக் கதை, மது. ஒன்னோட கதை தான் என்னோட முதல் படம், மது."

"வாவ்! மூலக்கதைன்னு எம்ப்பேர் ஹோர்டிங்கல இருக்கும்ல? இல்லாட்டி ஒம் மேல கேஸ் போட்ருவேன்."

உற்சாகம் அங்கே கரையை உடைத்துக் கொண்டு பெருக்கெடுத்தது.

பெரிசாய்ச் சிரித்தபடி இவன் ‘போட்ரலாம் போட்ரலாம்’ என்றதற்கு, ‘என்ன போட்ரலாம்? கேஸ் போட்ரலாம்ங்கறியா’ என்றாள் மது இவனுக்குச் சளைக்காமல் சிரித்தபடி.

சிரிப்புகள் தணிந்ததும் கண்களில் கனவும் கண்ணீரும் மின்ன இவன் பேசினான்.

"யெஸ், மது. அந்த ஹோர்டிங்ல ஒம்ப்பேரும் இருக்கும் எம்ப்பேரும் இருக்கும். மவுன்ட் ரோட்ல ஹோர்டிங், மெட்ராஸ் பூரா ஹோர்டிங், தமிழ்நாடு பூரா ஹோர்டிங் மது! ஒம்ப்பேர் மேல மது. ஒம் பேருக்கு கீழே எம்ப்பேர் மது. ஓ, கற்பனையே எவ்வளவு பரவசமா இருக்கு மது!"

அவனுடைய பரவச நிலையைப் பார்த்து மதுபாலா புளகாங்கிதமடைந்திருக்க, இவன் திடீரென்று பூமிக்கு இறங்கி வந்தான்.
வந்து, மதுவை ஆழமாயும் ஆர்வமாயும் பார்த்தான்.

"மது?"

"சொல்லு ஹசீன்."

"மது?"

"ம். சொல்லு."

"ஒரு மூணு வருஷம், மது."

"ஒரு மூணு வருஷம்?"

"எனக்கு வெற்றி கெடக்கிற வரக்யும், மது."

"ஒனக்கு வெற்றி கெடக்கிற வரக்யும்?"

"நா பெரிய டைரக்டராகிற வரக்யும், மது."

"நீ பெரிய டைரக்டராகிற வரக்யும்?"

"நா ஒரு மனுஷனாகிற வரக்யும், மது."

"நீ மனுஷனாகிற வரக்யும்?"

"எனக்காக, மது."

"ஒனக்காக?"

"நீ, மது."

"நான்?"

"கல்யாணம் பண்ணிக்காம இருப்பியா மது?"

(வடக்கு வாசல், ஏப்ரல் 2008)

About The Author