மனிதரில் எத்தனை நிறங்கள்! (92)

"Somehow, that was the most frightening thing of all…"
Agatha Christie, And Then There Were None, Ch. 5

"ஆமாம் பார்த்தேன்." சிவகாமி கண்ணிமைக்காமல் சொன்னாள்.

ஆகாஷிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. "என்ன பார்த்தாயா? பிறகு ஏன் அப்பவே கூட்டிகிட்டு வரலை"

"அவள் தான்னு உறுதியா தெரிஞ்சா தானே கூட்டிகிட்டு வர முடியும். சந்தேகம் வந்துச்சு அவ்வளவு தான். நாலு வருஷத்துக்கு முன்னால் கும்பகோணம் கோயில்ல ஆனந்தி மாதிரி அசப்பில் தெரிஞ்சவளை பிடிச்சுக் கேட்டால் அவள் வேற யாரோன்னு அப்புறம் தான் தெரிஞ்சுது. மூணு வருஷத்துக்கு முன்னால் ரேணிகுண்டா ரயில்வே ஸ்டேஷன்ல ஒருத்தியும் அப்படியே தெரிஞ்சா. அவளைக் கூப்பிட்டு கேட்டால் அவளும் ஆர்த்தியில்லைன்னு ஆயிடுச்சு. அதனால பாண்டிச்சேரியில் அவசரப்படப் போகலை. அதுவும் ஆர்த்தி அந்த காலேஜ் டேயில குஜராத்தி காரங்க மாதிரி டிரஸ் செய்திருந்தா. ஹேர் ஸ்டைலும் என்னவோ வித்தியாசமா செய்திருந்தா. ஏதோ சேட்டுப் பொண்ணுன்னு நினைச்சு விட்டுட்டேன். அப்புறம் அவள் தாத்தா விஷயமா போன் செய்து பாண்டிச்சேரில இருந்து பேசறேன்னு சொன்னப்ப தான் அப்ப பார்த்தது அவளைத் தான்னு தெரிஞ்சுது"

ஆகாஷிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சிவகாமி வேறெதோ அவனிடம் பேச ஆரம்பித்தாள். பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தவனுக்கு என்ன நினைப்பது என்றே தெரியவில்லை.

சிவகாமி சொன்னதில் குறை கூற முடியா விட்டாலும் அவன் மனதில் ஏதோ நெருடியது. சிவகாமி அவனை ஒன்றுமே கேட்கவில்லை. "நான் ஆர்த்தியைப் பாண்டிச்சேரியில் பார்த்தேன் என்று யார் சொன்னது?" என்று கூடக் கேட்கவில்லை. இப்படியொரு கேள்வி ஒரு நாள் வரும் என்று முன்கூட்டியே யோசித்து அனாயாசமாக அவள் சொன்னது போல் தோன்றியது. இப்போதும் அவன் தாய் அந்த கொடும்பாதகம் செய்திருப்பாள் என்று அவனுக்கு ஒரு சதவீத நம்பிக்கை கூட இல்லை. ஆனால் அவளுடைய தம்பி ஒருவேளை செய்திருந்தால், லிஸா சொன்னது போல், அவள் காட்டிக் கொடுக்கும் ரகம் அல்ல.

தாயைச் சிறுவயதிலேயே இழந்து அக்காவின் நிழலிலேயே வளர்ந்த சந்திரசேகர் அவளுக்கு ஒரு மகனைப் போல் தான். எத்தனையோ சந்தர்ப்பங்களில் தன்னை விட அதிகமாய் மாமா அம்மாவை நேசிக்கிறார் என்பதை ஆகாஷ் உணர்ந்திருக்கிறான். வேலையில் அவள் சற்று கடுமையாகப் பேசினால் ஆகாஷ் கூட ஓரிரு நாட்கள் பேசாமல் இருந்ததுண்டு. ஆனால் சந்திரசேகர் தமக்கையிடம் எத்தனையோ கேவலமாய் திட்டு வாங்கினாலும் ஒரு நிமிடம் கூட தமக்கையிடம் கோபமாய் இருந்து அவன் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட தம்பியை கண்டிப்பாய் சிவகாமி காட்டிக் கொடுக்க மாட்டாள்……

உடனே அவன் நேராக ஆர்த்தியின் அறைக்குப் போனான். அவனைப் பார்த்தவள் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அவள் மகிழ்ச்சி அவன் இதயத்தை என்னவோ செய்தாலும், அதைக் காட்டிக் கொள்ளவில்லை. தான் முக்கியமான ஒரு விஷயத்தைப் பேச வந்திருக்கிறேன் என்ற முகபாவனையுடன் அவளிடம் பழைய நெருக்கத்தைச் சிறிதும் காண்பிக்காமல் சொன்னான்.

"நான் அம்மா கிட்ட பேசிகிட்டு இருந்தப்ப அம்மா போன வருஷம் பாண்டிச்சேரில உன் காலேஜ் டேயில் பார்த்ததாய் சொன்னாங்க. உண்மையா?"

ஆர்த்தி அவனைத் திகைப்புடன் பார்த்தாள். இதை சிவகாமியாகவே வாய் விட்டுச் சொல்வாள் என அவள் எதிர்பார்க்கவில்லை. "ஆமாம்" என்றவள் பின் ஏன் அத்தை தன்னை அழைத்துச் செல்லாமல் விட்டாள் என்பதையும் சொல்லியிருப்பாளோ என்று நினைத்தாள்.

"அந்த நாள் நீ குஜராத்தி ஸ்டைல்ல சேலை கட்டி வித்தியாசமான ஹேர்ஸ்டைல்ல இருந்தாயா?" அவன் அவசரமாகக் கேட்டான். அவள் இல்லை என்று சொல்லி விடுவாளோ என்ற பயம் அவனுக்கு இருந்தது.

ஆர்த்தி ஒரு நிமிடம் யோசித்து விட்டு சொன்னாள். "ஆமா! என் •ப்ரண்ட்ஸ் எல்லாருமா சேர்ந்து காலேஜ் டேல வித்தியாசமா வரலாம்னு முடிவு செஞ்சோம். அதனால அப்படி வந்தோம்…"

அவனுக்குப் போன உயிர் வந்தது. "அதுக்கும் முன்னால் உன்னை மாதிரி ஒரு பொண்ணை கும்பகோணத்திலேயும், ரேணிகுண்டாலயும் பார்த்து ஏமாந்துட்டாங்களாம். அந்த டிரஸ்ல பார்த்தவுடனே கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் ஏதோ சேட்டு பொண்ணுன்னு நினைச்சுட்டு விட்டுட்டதா சொன்னாங்க….."

ஆர்த்திக்கு ஒரு மாதிரியாகி விட்டது. இயல்பாகவே மிக நல்லவளான அவளுக்கு அதைக் கேட்டவுடன் சிவகாமி அப்படி நினைத்திருக்கப் போதுமான காரணங்கள் இருப்பதாகவே பட்டது.

"சாரி" என்று குற்றவுணர்ச்சியுடன் சொன்னாள். ஒரு கணம் அவனுக்கு அவளைக் கட்டியணைத்துக் கொள்ளத் தோன்றியது. ஆனால் மறு கணம் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினான்.

அவனுக்கேனோ ஆர்த்தியைப் போல சிவகாமியின் பதிலை இன்னமும் முழுமையாக நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் அம்மா ஆர்த்தியைப் பார்த்த பிறகும் கூட்டிக் கொண்டு வராததற்கு காரணங்களையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி காரணங்கள் இருந்திருந்தால் ஆர்த்தியாக போன் செய்த போது அவள் ஆர்த்தியை அங்கீகரித்திருக்கத் தேவையில்லை.

தோட்டத்தில் தேவனின் ‘மிஸ்டர் வேதாந்த’த்தில் மூழ்கியிருந்த தந்தையைப் பார்த்ததும் அவரிடம் போனான். "வாடா. உட்கார். அர்ஜுனைப் பார்த்தியாடா. ப்ளாஸ்டிக் சர்ஜரி நிஜமாவே ஒரு பெரிய வரப்பிரசாதம்டா. இல்லையா"

ஆகாஷ் தலையசைத்தான்.

"உங்கம்மாவுக்கு ஒரு வருத்தம். இதை பத்து வருஷம் முன்னாடியே செஞ்சிருந்தா அவன் இந்த பத்து வருஷம் நல்லா வாழ்ந்திருப்பானேன்னு சொல்றா. கடவுள் இவளுக்குன்னு இப்படி ஒரு தங்கமான மனசைக் கொடுத்திருக்கிறார் பார்"

ஆகாஷிற்கு அம்மாவின் வருத்தம் அவள் நல்ல மனதைக் கோடிட்டுக் காட்டியது. ஆனால் இதை அம்மா வேறு யாரிடமும் சொன்னதாகத் தெரியவில்லை. அம்மா அப்பாவிடம் மட்டும் சொல்லி இருக்கிறாள். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் ஆழமானது. பல நேரங்களில் அந்த பந்தத்தில் வேறு யாருக்கும் இடம் இல்லை என்று தோன்றும். அவர்கள் உலகம் தனியானது. அவர்களுக்குள் ஒளிவு மறைவு இருக்க வாய்ப்பேயில்லை.

ஆகாஷ் மூளையில் மின்னல் அடித்தது. "அப்பா. அம்மா உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்வாங்களா? உங்களுக்குள்ளே ஒளிவு மறைவே கிடையாதா?."

சங்கரன் அந்த திடீர் கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்று தோன்றியது. தூரத்தில் பறந்து கொண்டிருந்த பறவையைப் பார்த்தபடி சொன்னார். "எனக்கு எது முக்கியமாய் தெரியணுமோ அதைச் சொல்வாள். சில சமயங்கள்ல மத்தவங்க கிட்ட சொல்ல முடியாததையும் சொல்வாள். அதுக்குன்னு எல்லாத்தையும் என் கிட்ட சொல்வாள்னு சொல்ல முடியாது"

ஆகாஷிற்கு அந்த பதில் சற்று நெருடலாய் இருந்தது. தாய் தந்தை இருவருக்கிடையே இப்போதும் ஒரு ஆழமான காதல் இருப்பதாய் எண்ணி வந்தவனுக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. "அப்பா எனக்குத் தெரிஞ்சு உங்க ரெண்டு பேர் அளவுக்கு நேசிக்கிற ஒரு தம்பதியை நான் பார்த்ததில்லை. அவ்வளவு தூரம் ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கிறப்ப இடையில் ஒளிவு மறைவே இருக்கக் கூடாது இல்லையா?"

சங்கரன் மகனைப் பார்த்து புன்னகைத்தார். "எங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எங்களுக்குள் ஒளிவு மறைவே இல்லை ஆகாஷ். ஆனால் சிவகாமி மனசுல எத்தனையோ பேர் சம்பந்தப்பட்ட விஷயம் இருக்கு. அதை அவள் சொல்றதும் இல்லை. அவள் சொல்லணும்னு நான் எதிர்பார்க்கிறதும் இல்லை. அவளுடைய பிசினஸ் பத்தியோ, அவள் தம்பி, தங்கை பத்தியோ எத்தனையோ விஷயங்கள் இருக்கலாம். நானாய் கேட்டால் அவள் கண்டிப்பாய் என் கிட்ட சொல்வாள். ஆனா நான் கேட்கறதில்லை….."

ஆகாஷிற்கு தந்தையின் பதில் யதார்த்தமாய் இருந்தது. அம்மா அவரிடம் பொய் சொல்வதில்லை. காரணம் அவர் அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே இல்லை.

(((((((()))))))

"ஹலோ"

"அண்ணே நான் விஜயா பேசறேன்ணே"

வீரையன் சுற்றிலும் முற்றிலும் பார்த்து விட்டு தான் தங்கையுடன் பேசினான். "சொல்லு"

"அப்புறமா என்னைத் தேடிகிட்டு யாராவது வந்தாங்களாண்ணே"

"ஒரே ஒருத்தன் மட்டும் தான் நீ போன அன்னைக்கு வந்துட்டு போனான். அதுவே என்னை ஒரு கலக்கு கலக்கிடுச்சு"

"வந்தது யாருண்ணே. அந்த அசிங்கமான மூஞ்சிக்காரனா?"

"அவனில்லை"

"அப்புறம் அந்தப் பெரியம்மா பையனா. சின்னம்மா பையனா?"

"ஆமா உறவுக்காரங்களைக் கேட்கறமாதிரி கேளு. அந்த ரெண்டு பேருமே இல்லை. அந்த ஐயா பொண்டாட்டியோட அண்ணன் பையன் ஒருத்தன் இருக்கானே, அந்த பொம்பள பொறுக்கி, அவன் தான் வந்தான்"

"அவன் தானா?" விஜயாவின் குரலில் பெரும் நிம்மதி தெரிந்தது.

"ஏன் சனியனே போன் செஞ்சு கேட்கறே?"

"இங்க வேலை பாக்கற இடத்துல அவங்களுக்கு ஹைதராபாதுக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சு. நீயும் வர்றியான்னு கேக்கறாங்க. போலாம்னு இருக்கேன். போனா சீக்கிரம் வர முடியாது. போறதுக்கு முன்னாடி ஒரு எட்டு உன்னையும் அண்ணியையும் பார்த்துட்டு போலாம்னு பார்க்கறேன்"

"இங்க வந்துட்டு யார் கண்லயாவது பட்டுடப் போறே"

"அந்த அசிங்கமான மூஞ்சிக்காரன் பார்வையில மட்டும் படாம இருந்தா போதும்னே. அவன் பார்த்தா வெறும் கையாலயே என் குறவளையை நசுக்கி விட்டுடுவான்…." சொல்லும் போதே அவள் குரலில் பீதி தெரிந்தது.

"அப்ப இங்க வந்து ஏன் சாகறே. அந்த பொம்பள பொறுக்கிய அந்த பெரியம்மா கூட அனுப்பிச்சு இருக்கலாம். பார்த்துட்டு போக இவன், கொல்றதுக்கு அவன்னு கூட இருக்கலாம்"

"அதெல்லாம் இருக்காதுண்ணே. அந்த பெரியம்மா கூட்டமும், வந்துட்டு போனானே அவன் கூட்டமும் எண்ணெயும் தண்ணியும் மாதிரி. என்னைக்குமே சேராது. அதனால நான் யாருக்கும் தெரியாம வந்து ஒரு நாள் இருந்துட்டு போறேன்ணே. அந்த பெரியம்மா என்னைத் தேடறதா இருந்தா அன்னைக்கே வேற ஆள் வந்துருக்கும்….."

"சனியனே எனக்கு என்னமோ பயமா இருக்கு…."

"பயப்படாதீங்கண்ணே. அந்தக் குடும்பத்துக்காரங்க கண் படற எந்த இடத்துலயும் நான் இல்லாம பார்த்துக்கறேன். எனக்கு உன்னை விட்டா யாருன்னே இருக்காங்க. இன்னும் ஹைதராபாத் போனா எத்தனை வருஷமோ…."

வீரையனுக்கு மனது இளகினாலும் அவள் மேல் கோபமும் வந்தது. "ஒழுங்கா இருக்கற மாதிரி இருந்துருந்தா இத்தனை பிரச்சன இருக்கா புள்ள. இப்படி ஒளிஞ்சு வாழ்றதெல்லாம் ஒரு பொழப்பா?"

"அதையே எத்தனை தடவண்ணே சொல்வே. நடந்தது நடந்து போச்சு. நான் ரெண்டு நாள்ல வர்றேன். யார் கண்ணுலயும் படாம ராத்திரி நேரமா வர்றேன். சரியா?"

அவள் போனை வைத்து விட்டாள். அவள் என்ன சொன்னாலும் வீரையனுக்கு ஏனோ பயம் நீங்கவில்லை. "அந்தம்மாள் அந்த அசிங்கமான ஆளை விட்டு விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. அந்தம்மாளிடம் உள்ள பணத்துக்கு எத்தனையோ ஆட்களைக் கண்காணிக்க விட்டிருக்கலாமே"

((((((((((((()))))))))))))
டாக்டர் ப்ரசன்னாவிடன் அடுத்த செஷனிற்காக காரில் கோயமுத்தூர் நோக்கிப் போகையில் ஆகாஷ் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆர்த்தி கூட, பேசி அவனை எரிச்சலடையச் செய்ய வேண்டாமென்று பேசவில்லை.

போய்க் கொண்டிருக்கும் போது பின்னால் ஏதாவது கார் தொடர்கிறதா என்று ஆகாஷ் கவனித்தான். சந்தேகப்படும்படியாக ஒரு வாகனமும் பின் தொடரவில்லை. கோயமுத்தூர் போய் சேர்ந்து ப்ரசன்னாவின் க்ளினிக் அருகே காரை நிறுத்திய பின் ஆர்த்தியைப் பார்த்தான். அவன் சொல்லாமலேயே அவளால் அவன் கேள்வியைப் புரிந்து கொள்ள முடிந்தது. "இன்னைக்கு என்னை யாரும் தொடர்கிற மாதிரியோ, கவனிக்கிற மாதிரியோ எனக்குத் தோணலை. முதல் தடவை இங்க வந்தப்ப தோணினதோட சரி. அப்புறமா எப்பவும் அப்படித் தோணலை" என்றாள்.

வார்த்தைகளே தேவையில்லாமல் புரிந்து கொள்கிற அளவு நெருக்கமாகி விட்டோமா என்று நினைத்த போது அவனுக்கு ஒரு கணம் சந்தோஷம் தோன்றி மறைந்தது.

உள்ளே நுழைந்தவுடன் ப்ரசன்னாவின் செகரட்டரி ஆர்த்தியை உள்ளே போகலாம் என்று சைகை காட்டி விட்டு ஆகாஷைப் பார்த்து ஒய்யாரமாய் சிரித்தாள். ஆர்த்தி ப்ரசன்னாவைப் பார்க்கப் போக ஆகாஷ் நாகரிகம் பொருட்டு அந்த செகரட்டரியைப் பார்த்து புன்முறுவல் செய்து விட்டு அங்கிருந்த பத்திரிக்கை ஒன்றைக் கையில் எடுத்து அதில் மூழ்கினான்.

ஆனாலும் அவன் மனம் முன்பு ஆர்த்தியைப் பின் தொடர்ந்து கவனித்த மர்ம நபர் மேலேயே நின்றது. உண்மையில் அப்படி ஒரு நபர் உண்டா இல்லை அது ஆர்த்தியின் கற்பனை தானா? ஒரு வேளை ப்ரசன்னாவிடம் சிகிச்சை ஆரம்பித்தவுடன் அந்த பிரமை போய் விட்டதா? ஆனால் பாண்டிச்சேரியில் அவர்கள் கண்ணில் படாமல் இருக்க ஒரு சிவப்பு சேலைப் பெண்மணி ஓடிய ஓட்டம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. அப்படி உண்மை என்றால் ஏன் இப்போது பின் தொடர்வதில்லை.

அவன் மூளையில் திடீர் என்று ஒரு மின்னல் அடித்தது. ஆர்த்தியின் இந்தத் தொடரல் தோணலைப் பற்றி அவன் தாயிடம் சொன்னதற்குப் பிறகு தான் தொடரல் இல்லை. அவனுக்கு நன்றாக அது நினைவு இருக்கிறது. சிவகாமியிடம் சொன்னதற்கும் இப்போது பின் தொடரல் இல்லாமல் இருப்பதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?…..

(தொடரும்)

About The Author

3 Comments

  1. anisha

    HI kathai nantraga pogirathu….but niraya suspense…seekiram padichu mudikkanum enru irukku…Kathai aasiriyar romba nantraga ezhuthukiraar.Aakash ippadi pesamaa yen aarthiyai paduthukiraan????paarpom next week enna nadakkuthu enru!!

  2. Mini

    Ganesan sir
    As you said story is moving fast now. Really nice. Thanks for a giving a little big chapter.

  3. Madhumitha

    கதை மிகவும் சுவாரச்யமாக செல்கிரது மிகவும் அருமை.

Comments are closed.