மனிதரில் எத்தனை நிறங்கள்! (40)

Your friends will know you better in the first minute you meet than your acquaintances will know you in a thousand years.
-Richard Bach

டேவிட் தன் அதிர்ச்சியை ஒரு நிமிடத்தில் சுதாரித்துக் கொண்டார். மறுபடி காரைக் கிளப்பிய போது அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

"என்ன அங்கிள் சிரிக்கிறீங்க?"

"நான் மேரி கிட்ட நேத்து சொன்னேன். பார்க்க ஆர்த்தி ஆனந்தி மாதிரியே இருந்தாலும் ஆர்த்தி ரொம்ப சைலண்ட் டைப்பா தெரியறாள்னேன். ஆனா நீ இப்படி திடீர்னு இந்தக் கேள்வியை எதிர்பார்க்காதப்ப கேட்டப்ப ஒரு நிமிஷம் உன் அம்மாவாவே மாறிட்ட மாதிரி தோணுச்சு. அவங்களும் இப்படித் தான் எதையும் நேரடியா படார்னு கேட்டுடுவாங்க. அதை நினைச்சு தான்….."

"ஆனா நான் முதல்ல கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலையே….."

டேவிட் முகத்தில் புன்னகை காணாமல் போனது. ஒரு நிமிடம் அவர் ஒன்றும் பேசவில்லை. பின் பேசிய போது அவர் குரல் சற்று தாழ்ந்து இருந்தது. "ஆனந்தி அந்த இடத்துக்கு ஏன் போனாங்கன்னு யாராலயும் அனுமானிக்க முடியலை. அதுவும் அந்த மாதிரி மழை இருந்தப்ப அங்கங்க நிலச்சரிவு ஆயிட்டு இருக்குன்னு தெரிஞ்ச பிறகு போக என்ன காரணம்னு நானும் மேரியும் பல தடவை எங்களுக்குள்ள கேட்டுகிட்டு இருக்கோம். ஆனா பதில் கிடைக்கலை……"

பேசிக் கொண்டிருக்கையிலேயே டேவிடின் வீடு வந்து விட டேவிட் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை விட்டு வீட்டைப் பற்றிச் சொன்னார். "உங்க பங்களாவைப் பார்த்துட்டு இதென்ன இவ்வளவு சின்னதாய் வீடு இருக்குன்னு நினைச்சுடாதே ஆர்த்தி"

அவர் சொன்ன அளவுக்கு அந்த வீடு சின்னதாய் இருக்கவில்லை. பாண்டிச்சேரியில் மிகச்சிறிய வீட்டில் வளர்ந்த ஆர்த்திக்கு இந்த வீடு பெரியதாய் தான் தோன்றியது. முன்னால் பூச்செடிகள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்க வீடும் அழகாகத் தெரிந்தது. ஆர்த்தி அதைச் சொல்ல வாய் திறக்கும் முன் மேரி கார் கதவைத் திறந்து வரவேற்றாள். "வா ஆர்த்தி"

அவளைப் பாசத்துடன் அழைத்த மேரியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி ஆர்த்தியை நெகிழ்வித்தது. அவளது தந்தையைத் தவிர வேறு யாரும் ஊட்டி வந்த பின்பு இவ்வளவு பாச பழை பொழிந்ததில்லை.

உள்ளே அழைத்துக் கொண்டு போய் அவளிடம் அவள் படிப்பு பற்றியும், பாண்டிச்சேரி வாழ்க்கை பற்றியும், எப்படி ஊட்டி வந்தார்கள் என்பது பற்றியும் டேவிடும், மேரியும் ஆவலுடன் விசாரித்தார்கள். சுருக்கமாக எல்லாவற்றையும் ஆர்த்தி சொன்னாள். தன் கனவு பற்றியோ, தாத்தாவிற்கு ஆனந்தி மரணத்தில் இருக்கும் சந்தேகம் பற்றியோ சொல்லப் போகாமல் தாத்தாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் அதன் பிறகு தான் பாட்டி மூலம் தந்தை பற்றி அறிய நேர்ந்ததாகவும், ஆபரேஷனுக்கு ஆகும் செலவை செய்ய முடியாத சூழ்நிலையில் தானாக போன் செய்ததாகவும் ஆர்த்தி சொன்ன போது அவர்கள் பரபரப்போடு அதையெல்லாம் கேட்டார்கள்.

டேவிட் கேட்டார். "சிவகாமி அக்கா கிட்டேயும் உன்னால் பேச முடிஞ்சிருக்காட்டி நீ என்ன செஞ்சிருப்பாய்?"

ஆர்த்திக்கு என்ன செய்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. யோசித்து விட்டு சொன்னாள். "தெரியலை. போன் மேல போன் போட்டு அழுது புலம்பி இருப்பேன்னு நினைக்கிறேன்.."

மேரி கண்கள் பனிக்க சொன்னாள். "நீ பின் வாங்கி இருக்க மாட்டாய். உங்கம்மா கூட அப்படித் தான் இருந்தா. ஒரு முடிவு எடுத்துட்டா கடவுளே வந்து மாத்தச் சொன்னாலும் மாத்திக்க மாட்டாள். பின் வாங்கவும் மாட்டாள்….."

டேவிட் சற்று கோபத்தோடு சொன்னார். "நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே ஆர்த்தி. உன் தாத்தா ஒரு லூசுப் பேர்வழி…இல்லாட்டி உன்னையும் தூக்கிட்டு ஊரை விட்டுட்டே சொல்லிக்காம ஓடி இருப்பாரா?"

தாத்தாவை லூசுப் பேர்வழி என்றது பேத்திக்குக் கஷ்டமாக இருந்தது. அவள் முக வாட்டத்தைக் கண்ட மேரி சமாளிக்கும் விதமாகச் சொன்னாள். "அவருக்கு ஆனந்தின்னா உயிரு. மகள் போன துக்கத்துல அப்படி நடந்துகிட்டார்…"

"அவர் மகள் போயிட்டான்னு இன்னொருத்தர் மகளையா தூக்கிகிட்டு போவாங்க. சந்துரு மகளை நினைச்சு நினைச்சு எப்படியெல்லாம் துடிச்சுப் போனான் தெரியுமா?"

துடிச்சுப் போன தந்தை நினைத்திருந்தால் தன்னைத் தேடிக் கண்டுபிடிக்க பெரிதாக சிரமப்பட்டிருக்கத் தேவை இருந்திருக்காது என்று ஆர்த்தி தனக்குள் சொல்லிக் கொண்டாள். பணமும் செல்வாக்கும் இருக்கும் அவருக்கு இது ஒரு பெரிய விஷயமே அல்ல. அப்படி இருந்தும் அவர் பெரிய முயற்சி எடுக்காததும், தன்னைப் பாண்டிச்சேரி கல்லூரியில் பார்த்த பின்னும் சிவகாமி தன்னை இங்கு வரவழைக்க முயற்சி செய்யாததும் பெரிய கேள்விக்குறிகளாய் ஆர்த்தி மனதைக் குத்தியபடியே இருந்தன.

மேரி மெள்ளப் பேச்சை மாற்றினாள். "ஆர்த்தி இன்னைக்கு மத்தியானத்துக்கு என்ன சமைக்கறதுன்னு தெரியலை. உனக்கு என்ன பிடிக்கும்னு என்னாலே அனுமானிக்க முடியலை. அதனால உங்கம்மாவுக்கு பிடிச்ச அயிட்டமா செஞ்சேன். பார்க்க மட்டுமல்ல வாய் ருசியும் அவளை மாதிரியே இருக்கும்னு தோணிச்சு" என்று சொல்லியவள் தான் செய்த சமையல் வகைகளைச் சொன்னாள்.

அவள் சொன்னதில் பாதிக்கு மேல் அவளுக்கும் பிடித்தவை தான். ஆனால் அவளுடைய பட்டியல் நீண்டு கொண்டே போன போது ஆர்த்தி சொன்னாள். "ஆண்ட்டி இது என்ன இவ்வளவு ஐட்டம் செஞ்சுருக்கீங்க. ஒவ்வொரு ருசி பார்த்தாலே வயிறு நிறைஞ்சுடும் போல இருக்கு"

"நீ சும்மா இரு. ஒரு காலத்துல உங்கம்மா வர்றதுக்கு முன்னால் உரிமையா பெரிய லிஸ்ட் குடுத்துடுவா. வந்தா சாப்பிட்டுட்டு மணிக்கணக்குல பேசிகிட்டு இருப்போம். நீ வர்றேன்னவுடனே எனக்கு எல்லாத்தையும் செஞ்சு உன்னை சாப்பிட வைக்கணும்னு தோணுச்சு……"

ஆர்த்தி மேரியின் அன்பில் மனம் நெகிழ்ந்தாள். பிறகு அவர்களைப் பற்றி விசாரித்தாள். டேவிட்-மேரி தம்பதியருக்கு அவளை விட இரண்டு வயது மூத்த மகள் ஒருத்தி இருக்கிறாள் என்றும் அவள் கல்யாணமாகி ஈரோடில் இருக்கிறாள் என்றும் சொன்னார்கள். மருமகன் ஐசிஐசிஐ பேங்கில் இருப்பதாகச் சொன்னார்கள்…..

திடீரென்று டேவிட் மனைவியிடம் சொன்னார். "இப்ப கார்ல வர்றப்ப ஆர்த்தி திடீர்னு அவங்கம்மா இறந்த விதம் யதார்த்தமாய் தோணலைன்னா. ஆனந்தி ஏன் அந்த நிலச்சரிவு ஆன இடத்துக்குப் போனாங்கன்னு நமக்கும் தெரியலைன்னு நானும் அவ கிட்ட சொன்னேன்….". தொடர்ந்து டேவிட் ஆர்த்தியிடம் சொன்னார். "இன்னொரு விஷயம் என்னான்னா அந்த சமயத்துல நாங்களும் ஊட்டில இல்லை. வேளாங்கன்னி போயிருந்தோம். நாங்களும் அவங்க முகத்தை கடைசில பார்க்க முடியாமல் போயிடுச்சு……"

மேரியும் சோகமாகத் தலையசைத்தாள். திடீர் என்று ஏதோ நினைவுக்கு வந்தவளாய் மேரி ஆர்த்தியைக் கேட்டாள். "ஆர்த்தி நீ யதார்த்தமாய் இல்லைன்னு சொன்னதுக்கு வேற எதாவது காரணம் இருக்கா. வேறெதாவது அர்த்தத்துல சொன்னாயா?"

ஆர்த்திக்கு எவ்வளவு தூரம் தன் சந்தேகத்தை இவர்களிடம் சொல்லலாம் என்று இன்னும் அனுமானிக்க முடியவில்லை. அதுவும் சிவகாமியால் ஒரு நல்ல வாழ்க்கை பெற்ற மனிதனிடம் என்ன சொல்வது எப்படி சொல்வது குழம்பினாள்.

அப்போது தான் புரிந்தது போல டேவிட் கேட்டார். "நீ கேட்டது மரணம் இயற்கையானதில்லைங்கற அர்த்தத்திலா ஆர்த்தி"

ஆர்த்திக்குத் தலையசைக்கக் கூடத் தயக்கமாய் இருந்தது.

ஆனால் அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் டேவிட் சொன்னார். "ஆர்த்தி ஆனந்தி ஏன் அங்கே போனாங்கன்னு தெரியலையே ஒழிய வேறெதாவது தப்பாய் நடந்திருக்க சான்ஸே இல்லை. ஏன்னா உங்கம்மா சாதாரணமான ஆள் இல்லை. இங்க உங்க குடும்பத்துக்கு நல்ல செல்வாக்கு இருக்கு. அதுவும் உன் பெரியத்தை மேல் இங்க எல்லாருக்குமே பயபக்தி உண்டு. சிவகாமியம்மாவோட தம்பி மனைவிக்கு ஆபத்தை ஏற்படுத்திட்டு தப்பிச்சுக்க முடியும்கிற தைரியம் யாருக்கும் கிடையாது….."

அவர் சொல்லச் சொல்ல மேரிக்கு ஏதோ நினைவு வர அவள் முகம் வெளிறியது.

(தொடரும்)

About The Author

2 Comments

  1. Alarmelu Rishi

    ஒவ்வொரு வாரமும் எப்போதுகொடர்ந்து அடுத்து என்னனிகழப் போகிறது என்று ஆவலைத் தூன்டும் விதத்தில் ள்ளது.உ.

  2. yamuna

    மிகச்சிறப்பாக உள்ளது. இன்னும் சிற்ப்பாக எழுத வாழ்த்துக்கள்

Comments are closed.