மனிதரில் எத்தனை நிறங்கள்! (34)

Though I am not naturally honest, I am so sometimes by chance.
-William Shakespeare

ஆகாஷிற்குத் தாயிடம் ஆர்த்தியின் தாய் மரணம் பற்றிப் பேசாவிட்டால் தூக்கம் வராதென்று தோன்றியது. சிவகாமி இரவு சாப்பாட்டுக்குப் பின் தனது கணவனுடன் தோட்டத்தில் உட்கார்ந்து விட்டால் பின் இது போல் சீரியசான விஷயங்களைப் பற்றிப் பேச முடியாது. தங்களுடன் பேச்சை பகிர்ந்து கொள்ள சிவகாமி குடும்பத்தினரை அனுமதிப்பாளே ஒழிய மற்றபடி வியாபாரம், பிரச்சினைகள் போன்றவை அங்கு அவளிடம் பேசப்படுவதை அவள் அனுமதிப்பதில்லை. இதை சந்திரசேகர் உட்பட அனைவரும் உணர்ந்து நடந்து கொண்டார்கள்.

இன்றும் சாப்பிட்டுக் கை கழுவி சிவகாமி தோட்டத்திற்கு சால்வையைப் போர்த்திக் கொண்டு போக சங்கரன் நீலகண்டனிடம் பேசிக் கொண்டு நின்றிருந்தார். "நானும் தேவனோட ரசிகன். அவர் எழுதின எல்லா கதைகளையும் எத்தனை தடவை படிச்சிருக்கேன்னு சொல்ல முடியாது. ஆனந்த விகடன்ல வாரா வாரம் அவர் எழுதினதை எடுத்து எல்லாம் பைண்டு செய்து வச்சிருக்கேன். அவர் கதைக்கு கோபுலு வரைஞ்ச படங்கள் எல்லாமே பிரமாதம்……"

நீலகண்டனும் தன்னைப் போலவே அவரும் தேவன் கதைகளை விரும்பிப் படிப்பார் என்று தெரிந்த பின் உற்சாகமாகச் சொன்னார். "எனக்கும் அவர் கதைகள்னா ரொம்பப் பிடிக்கும். மிஸ்டர் வேதாந்தமும், ஜஸ்டிஸ் ஜகன்னாதனும் அவரோட மாஸ்டர் பீஸ்னு நினைக்கிறேன்……"

பார்வதி பேத்தியிடம் சொன்னாள். "இனி உங்க தாத்தா இப்போதைக்கு வர மாட்டார். அவர் தேவன், கல்கி எழுதின கதைகள் பத்தி பேச ஆரம்பிச்சிட்டார்… நான் தூங்கப் போறேன். நீயும் போம்மா"

சங்கரனுக்கும் அந்த எழுத்தாளர்கள் மீதுள்ள ஈடுபாட்டை அறிந்த ஆகாஷும் பார்வதி சொன்னது போல பேச்சு இனியும் நீளும் என்பதை உணர்ந்து தந்தை வருவதற்குள் தாயிடம் இது பற்றிக் கேட்டு விட முடிவு செய்து தோட்டத்திற்கு விரைந்தான்.

தாயின் அருகில் தானும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தபடி ஆகாஷ் சொன்னான். "அப்பாவும் ஆர்த்தியோட தாத்தாவும் தேவன் கதைகளைப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. இனி வர நேரமாகும்….."

சிவகாமி புன்னகைத்தாள். மகன் ஏதோ முக்கியமாய் பேச வந்திருக்கிறான் என்று அனுமானித்தவள் மகன் என்ன பேசப் போகிறான் என்ற கேள்வியுடன் காத்திருந்தாள்.

"அம்மா… நான் உன் கிட்ட சில நாளாவே ஒண்ணு கேட்கணும்னு நினைச்சுகிட்டிருந்தேன். ஆர்த்தியோட அம்மா எப்படி செத்தாங்க?"

சிவகாமி ஒரு நிமிடம் அமைதியாகத் தன் மகனைப் பார்த்தாள். பின் ஊட்டியில் அந்த சமயத்தில் மூன்று நாட்களாகப் பெய்த பெருமழையைப் பற்றியும் அந்த சமயத்தில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச் சரிவைப் பற்றியும் சொன்னாள். "…. நம்ம பங்களாவில் இருந்து ஒரு பர்லாங்க் தூரத்துல கூட நிலச்சரிவாயிடுச்சு. அங்க நிறைய வீடுகள் தரைமட்டமாயிடுச்சு. பலபேர் மண்ணோட மண்ணாய் சமாதியாயிட்டாங்க. அங்க ஆனந்தி ஏன் போனாள்னு தெரியலை. அவளும் அதில் சிக்கி இறந்துட்டா….."

ஆகாஷ் அடுத்த கேள்வியை மிகவும் கவனமாகக் கேட்டான். "நீங்க எல்லாம் இருந்தும் ஏம்மா போக விட்டீங்க?"

"நான் எங்கே இருந்தேன். நான் அந்த சமயத்துல சிங்கப்பூர்ல ஒரு முக்கிய வியாபார விஷயமா போய் ரெண்டு மாசமா அங்கயே இருந்தேன். நான் இந்தியா வந்து சேர்ந்தவுடனேயே ஊட்டி நிலச்சரிவு பத்தி கேள்விப்பட்டு வந்தேன். அங்கங்கே ரோடு பிளாக் ஆயிருந்துது. டைவர்ஷன் டைவர்ஷன்னு அங்க சுத்தி இங்க சுத்தி எப்படியோ இங்கே வந்து சேர்ந்தா ஆனந்தியைக் காணோம்னு இங்க ஒரே பரபரப்பு. உன் மாமாவும் அப்ப கோயமுத்தூர்ல இருந்தான். அவன் வரவும் நேரமாயிடுச்சு. உன் சித்தி அப்ப இங்கே இல்லை. அவள் புருஷனோட சேலத்துல இருந்தாள். அப்படி நாங்க யாருமே இருக்கலை. அப்ப ஒரு வேலைக்காரி இங்கயே இருந்தாள். அவள் வீடும் அந்த நிலச்சரிவான பகுதியில் தான் இருந்துச்சு. அவள் அங்கே போய் அவளைத் தேடிகிட்டு இவள் போனாளா, இல்லை ரெண்டு பேரும் சேர்ந்து அவ வீடு என்னாச்சுன்னு பார்க்கப் போனாங்களான்னு ஒண்ணுமே புரியலை……."

"…கடைசில அவ உடம்பைத் தேடிக் கண்டுபிடிச்சோம். அதுக்கே ரெண்டு நாளாயிடுச்சு. அதுக்குள்ள அவ முகத்துல ஒரு பாகமும் உடம்புல சில இடங்களும் அழுகிப் போயிடுச்சு… அவங்க அப்பா அம்மாவுக்கு நான் முகத்தைக் கூட காமிக்கல. பார்த்திருந்தா அவங்க தாங்கி இருக்க மாட்டாங்க….."

சொல்லச் சொல்ல சிவகாமி தன்னையும் மீறி உணர்ச்சிவசப்பட்டது போல் இருந்தது. அவள் குரல் லேசாக கரகரத்தது. அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அவள் தூரத்தில் சிறிய பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த பூனையைப் பார்க்க ஆரம்பித்தாள். சங்கரன் அந்த சமயத்தில் வந்து சேர அந்தப் பேச்சு அத்துடன் முடிவுக்கு வந்தது. பெற்றோருடன் சில நிமிடங்கள் அமர்ந்திருந்து விட்டு ஆகாஷ் கிளம்பினான்.

அம்மா எதையும் மறைப்பதாக ஆகாஷிற்குத் தெரியவில்லை. அந்த சமயத்தில் அம்மா இரண்டு மாதமாக இந்தியாவிலேயே இருக்கவில்லை, ஆனந்தி காணாமல் போன பிறகு தான் வந்து சேர்ந்தாள் என்ற தகவல் கேட்ட பின் மனம் நிம்மதியடைந்தது. இவளைப் போய் முட்டாள்தனமாக தப்பாக நினைத்தார்களே என்று எண்ணிய போது மனம் கொதித்தது.

ஆர்த்தியின் அறையை நெருங்கிய போது தன் தாய் அந்த சமயத்தில் இந்தியாவிலேயே இருக்கவில்லை என்பதைச் சொல்லி நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நான்கு வார்த்தை கேட்க வேண்டும் என்று ஒரு கணம் ஆகாஷிற்குத் தோன்றியது. ஆனால் அதைச் சொல்லக் கூட அவளிடம் பேச அவனுக்கு மனமில்லை. நாளை இந்தத் தகவலை பார்வதியிடம் சொல்லலாம் என்று நினைத்தான்.

ஆர்த்தி அறையில் மூர்த்தியின் குரல் கேட்டது. "ஆர்த்தி, உனக்கு என்ன உதவி வேணும்னாலும்-அது எவ்வளவு சின்னதாயிருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி- என் கிட்ட தயங்காம கேளு….."

ஆகாஷ் மனதில் ஒரு எரிமலையே வெடித்தது. ‘இவனை மாதிரி ஒழுக்கங் கெட்டவன் இந்த மாதிரி ஒரு பொண்ணு தனியாய் இருக்கிறப்ப அவளோட அறைக்கு வராமல் இருக்கிறதே பெரிய உதவி…."

அவள் அறைப்பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் தனதறைக்குள் நுழைந்தான். அவனிடம் மிகவும் ஜாக்கிரதையாக அவள் இருக்க வேண்டும் என்று அவளிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. பிறகு நினைத்துக் கொண்டான். ‘அவன் சொன்னதை நம்பித் தானே என் அம்மாவை அவள் சந்தேகப்பட்டாள். அப்படிப்பட்டவள் அவனை நம்பி எக்கேடு கெட்டால் நமக்கென்ன?’. ஆனாலும் மனம் கேட்கவில்லை. ‘அவள் வெகுளி, சூதுவாது தெரியாதவள்….’ என்று மனதின் ஒரு பகுதி இன்னும் அவளுக்காகப் பரிந்துரை செய்தது.

இப்படி மனம் இரண்டாகப் பிளந்து ஒன்றுக்கொன்று எதிர்மறையாக வாதம் செய்ய ஆரம்பித்து கடைசியில் அது எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை. அவனுக்கு உறக்கமும் வரவில்லை.

(தொடரும்)

About The Author