மனிதரில் எத்தனை நிறங்கள்! (30)

A person knowing the power of the word, becomes very careful of his conversation. He has only to watch the reaction of his words to know that they do "not return void." Through his spoken word, man is continually making laws for himself.
– Florence Scovel Shinn

கண்களில் நீர் மல்க வந்து நின்ற பேத்தியைப் பார்த்த பார்வதி பதறிப் போனாள். "என்ன ஆர்த்தி. என்ன ஆச்சு"

ஆர்த்திக்கு வார்த்தைகளுக்குப் பதிலாக மீண்டும் அழுகை தான் வந்தது. ஆகாஷ் அவள் அறையை விட்டுப் போன போது அவளது சந்தோஷம், உற்சாகம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய் விட்டது போல் உணர்ந்து அழ ஆரம்பித்தவள் அரை மணி நேரம் கழித்து ஓரளவு தன் துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு விட்டோம் என்று தோன்றிய பிறகு தான் பாட்டியிடம் நடந்ததைச் சொல்லக் கிளம்பினாள். ஆனால் இந்த துக்கம் அவ்வளவு சீக்கிரம் அடங்கக்கூடியதல்ல என்று மறுபடி அழ ஆரம்பித்த போது தான் அவளுக்கு உறைத்தது.

பதில் பேசாமல் அழும் பேத்தியை அணைத்து ஆசுவாசப்படுத்தி என்ன நடந்தது என்பதைப் பார்வதி நிதானமாகச் சொல்ல வைத்தாள். கேட்டவுடன் தலையில் இடி விழுந்தது போல் அவள் உணர்ந்தாள். யோசிக்க யோசிக்க அவளுக்குத் தலை சுற்றியது.

பஞ்சவர்ணத்திடம் பேசி விட்டு வந்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் செய்தி ஆகாஷை எட்டி இருக்கிறது என்பதை நினைக்கையில் இது பஞ்சவர்ணத்தின் திட்டமிட்ட சதி என்று பார்வதிக்குத் தெளிவாக விளங்கியது. அவசரமாக வரவழைத்தவள் தானாகவே ஆனந்தி மரணம் பற்றிய பேச்சு எடுத்து நீலகண்டனைப் பேச வைத்து அவர்களை அனுப்பியவுடன் முதல் வேலையாக அதை ஆகாஷிற்குத் தெரிவித்திருக்கிறாள் என்றால் இதற்குப் பின்னால் ஏதோ பெரிய திட்டத்தை அவள் வைத்திருக்கிறாள் என்பதும் புரிந்தது. இதன் விளைவாக ஆகாஷ் தன் தாயிடம் தெரிவித்து அவர்கள் சந்தேகத்தைத் தீர்க்க வைக்கிறேன் என்று சொன்னது பிரச்சினையின் உச்சகட்டமாக அவளுக்குப் பட்டது.

சிவகாமி காதில் இந்தத் தகவல் எட்டுவதை பார்வதியால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. யாரால் தான் இன்று சுமங்கலியாக இருக்கிறோமோ அவள் மீது இந்தப் புகார் தாங்கள் சொன்னதாக அவள் காதில் எட்டுவது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அவள் அதைக் கேட்டு தங்களைப் பற்றி என்ன நினைப்பாள் என்பது ஒரு புறமிருக்க அதன் பின் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

சிவகாமி பிணம் எரிப்பதில் அவசரம் காட்டினாள் என்பதைத் தவிர வேறெந்த ஆதாரமும் இல்லை. சிவகாமி இப்போதும் அன்று சொன்னதையே திரும்பவும் சொல்லலாம். "முகம் சிதிலமாகி விட்டது அதனால் தான் உங்களுக்கு பிணத்தைக் கண்ணில் காட்டாமல் சீக்கிரம் எரித்து விட ஏற்பாடு செய்தேன்" என்று சொன்னால் அது பொருத்தமாகத் தான் இருக்கும். ஆனால் இப்படி குற்றம் சாட்டியது சந்திரசேகர் காதில் விழுந்தால் அந்த மனிதர் எந்த அளவு மோசமாக எடுத்துக் கொள்வார், அவர்களிடம் எப்படி நடந்து கொள்வார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

ஒரு தீர்மானத்துடன் எழுந்தாள். "நீ இங்கேயே இரு. நான் ஆகாஷ் கிட்ட போய் பேசறேன். இது சிவகாமி காதில் விழாமல் இருக்க நான் முயற்சி செய்யறேன்"

ஆர்த்தி தடுத்தாள். "வேண்டாம் பாட்டி. அவர் பழைய ஆகாஷாய் இனி நம்ம கிட்ட பழக மாட்டார். என்னை ஒரு புழுவைப் பார்க்கிற மாதிரி பார்த்தார். உங்க கிட்ட எப்படி நடந்துக்குவார்னு தெரியலை…."

"பரவாயில்லை. அந்த பஞ்சவர்ணத்து கிட்ட ஏமாந்ததுக்கு என் மேல அவன் காறித் துப்புனாலும் தப்பில்லை. நீ இரு நான் பேசிட்டு வந்துடறேன்"

பார்வதி ஆகாஷ் அறையினுள் நுழைந்த போது அவன் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு இருந்தான்.

இன்னும் அவனால் நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை. ஆர்த்தி அவன் தாய் மீது சந்தேகப்பட்டதை ஒத்துக் கொண்ட போது ஏற்பட்ட ரணம் இனி குணமடையாது என்று அவனுக்குத் தோன்றியது. அம்மாவிடம் சொல்லும் போது கூட அவள் சந்தேகப்படுகிறாள் என்பதை தன்னால் ஒத்துக் கொள்ள முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அவளுடைய தாத்தா பாட்டியைத் தான் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அப்போது தான் பார்வதி தயக்கத்துடன் அவன் அறை வாசலில் நின்றாள்.

அவன் அவளைப் பார்த்த பார்வையில் பழைய சினேகம் இல்லை. அவன் கண்களில் கோபம் கொப்பளித்தது. "கொஞ்சம் பொறுங்க. இன்னைக்கு சாயங்காலம் அம்மா கிட்ட பேசி உங்க சந்தேகத்தை தீர்க்கச் சொல்கிறேன்னு உங்க பேத்தி கிட்ட சொல்லி அனுப்பி இருந்தேனே. இன்னும் என்ன?"

"அப்படி செஞ்சீங்கன்னா அந்த பஞ்சவர்ணம் போட்ட திட்டப்படி நீங்க நடந்துகிட்ட மாதிரி ஆயிடும்"

பஞ்சவர்ணத்தின் பெயரைக் கேட்ட ஆகாஷ் திடுக்கிட்டான். "என்ன சொல்றீங்க?"

"இன்னைக்குக் காலைல அவசர அவசரமா அந்தம்மா எங்க மூணு பேரையும் கூப்பிட்டு அனுப்பிச்சா. போனோம். அவளே ஆர்த்தியோட அம்மா சாவைப் பத்தி பேச்சை ஆரம்பிச்சா. ஆனந்தியை உங்கம்மா தான் கொன்னாங்கன்னு பல பேர் சொன்னதாய் சொல்லி எங்க வாயைக் கிளறுனா. என் வீட்டுக்காரருக்கு முதல்லயே மகள் சாவுல சந்தேகம்… அவரும் ஏதோ பேசுனார். நாங்க வெளியே வந்து அஞ்சாவது நிமிஷம் உன் காதுல இது விழற மாதிரி பார்த்துகிட்டா. என்ன திட்டம் போட்டு இப்படி நடந்துக்கறான்னு தெரியலை. ஆனா நாங்க பலிகடா ஆயிருக்கோம்கிறது தான் உண்மை"

ஆகாஷ் ஆழ்ந்த யோசனையுடன் பார்வதியைப் பார்த்தான். மூர்த்தி உடனடியாக அவனிடம் வந்து அதைச் சொன்னதைப் பார்த்தால் அவள் சொன்னது நிஜம் என்றே தோன்றியது. ஆனால் அவன் பேசிய போது முகம் இறுகியே இருந்தது. "ஆனா நீங்க சந்தேகப்பட்டது நிஜம்"

"எனக்கு சந்தேகமே இல்லை. என் மகள் சாகற வரை உங்கம்மாவைப் பத்தி தப்பாய் ஒரு வார்த்தை சொன்னதில்லை. என் புருஷனுக்கு மகள் சாவுல சந்தேகம். ஆனா அது உங்கம்மா மேலன்னு இல்லை. பொதுவாய் சந்தேகம். ஆர்த்தி….."

அவன் அமைதியாக இடைமறித்தான். "ஆர்த்திக்கு எங்கம்மா மேல சந்தேகம் இருக்குன்னு எனக்குத் தெரியும். அதை க்ளியர் செய்ய வேண்டியது என் கடமை".

பார்வதி இயலாமையுடன் பெருமூச்சு விட்டாள். ஆர்த்திக்குப் பொய் பேசவோ, உண்மையை சாய்த்துச் சொல்லவோ, திரித்துச் சொல்லவோ தெரியாதது தான் அவளுக்கு எதிராக செயல்படுகிறது என்று தோன்றியது. இப்போது தற்காப்புக்காக தன் கணவனுக்குப் பொதுவான சந்தேகம், சிவகாமி மேல் இல்லை என்று பச்சையாகப் பொய் பேச முடிந்தது போல் அவன் கேட்கையில் ‘பஞ்சவர்ணம் சொன்னதை நான் நம்பவில்லை’ என்று ஆர்த்தி சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பார்வதி நினைத்தாள். "ஆகாஷ் அந்தப் பஞ்சவர்ணம் பேசினதைக் கேட்டு அவ குழப்பம் அடைஞ்சுட்டா…"

"பரவாயில்லை….யாரோ ஒருத்தர் எங்கம்மாவைப் பத்தி உயர்வாய் நினைக்கணும், சந்தேகமே படக் கூடாதுன்னு நினைக்க எனக்கு உரிமையில்லை"

ஆர்த்தியை அவன் யாரோ ஒருத்தர் என்றது பார்வதி காதில் காய்ச்சிய ஈயமாய் விழுந்தது.

"அந்த பஞ்சவர்ணம் இப்படி ஒரு புரளியைக் கிளப்பி எங்க மேல் உங்கம்மா, ஆர்த்தியோட அப்பா மனசுல அதிருப்தியைக் கிளப்பத் திட்டம் போட்டிருக்கற மாதிரி தெரியுது. தயவு செஞ்சு உங்கம்மா காதுல இது எட்டாமல் பார்த்துக்கன்னு சொல்ல வந்தேன்."

"ஆனா சந்தேகம்னு வந்ததுக்கப்புறம் அதை நிவர்த்தி செய்துக்கறது நல்லது தானே. இப்ப உங்களுக்காக இல்லாட்டியும் எனக்காகவாவது நான் கேட்டுத் தெளிவடையணும்னு தோணுது"

"கேளு. நீயா அவளோட மரணத்தைப் பத்தி சும்மா கேட்கிற மாதிரி கேட்டு தெளிவடைஞ்சுக்கோ. ஆனா ஆகாஷ் தயவு செஞ்சு எங்க பேரைச் சொல்லிடாதே. இன்னைக்கு நான் சுமங்கலியாய் இருக்கேன்னா அது உங்கம்மா தயவுல தான். நன்றி கெட்டத் தனமாய் வாய்க்கு வந்ததைச் சொன்னோம்கிற பேரை மட்டும் தயவு செஞ்சு வாங்கிக் கொடுத்துடாதே. அந்த பஞ்சவர்ணம் எதிர்பார்த்ததை மட்டும் செஞ்சுடாதே. தயவு பண்ணுப்பா…." சொல்லச் சொல்ல பார்வதி குரல் உடைந்தது.

பஞ்சவர்ணம் திட்டப்படி இயங்க ஆகாஷுக்கும் விருப்பமில்லை. ஆனால் பார்வதியின் வேண்டுகோள் குறித்து அவனால் முடிவெடுக்க முடியவில்லை. "சரி நீங்க சொன்னீங்கன்னு சொல்லலை. பஞ்சவர்ணம் உங்ககிட்டே சொன்னான்னு சொல்லட்டா"

"அவ சொன்னான்னு என்ன ஆதாரம் எங்க கிட்ட இருக்கு. அவ நாங்க தான் சொன்னோம்னு திருப்பி விட நிறைய விஷயம் என் வீட்டுக்காரர் கிட்ட சேகரிச்சு வச்சிருக்கா. ஆனந்திய எரிச்ச அன்னைக்கு என்ன எல்லாம் நடந்ததுன்னு அவர் விலாவரியா சொல்லி இருக்கார். நாங்க சொல்லாம அது எல்லாம் தனக்கு எப்படித் தெரியும்னு சுலபமா அந்தம்மா சொல்லிடுவா"

பார்வதி சொன்னதில் அர்த்தம் இருப்பதாக ஆகாஷுக்குப் பட்டது. யோசித்துச் சொன்னான். "நான் அம்மா கிட்ட சொல்லாட்டியும் அம்மா காதுல விழாமப் போகாது. அந்த மூர்த்தி நீங்க தான் சொன்னதா அந்தப் புரளியை வீட்டுல ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் சொல்லாம இருக்க மாட்டான்."

(தொடரும்)

About The Author