மனிதரில் எத்தனை நிறங்கள்! (56)

"If we do not watch, we lose opportunities." – Seneca

பஞ்சவர்ணம் தன் பேரன் சொன்ன தகவலால் பரபரப்படைந்தாள். அடுத்த கணம் சரமாரியாக கேள்விக்கணைகள் அவளிடம் இருந்து வந்தன. இரண்டு பீரோவும் திறந்திருந்ததா, திறந்திருந்த பீரோவில் என்னென்ன எல்லாம் இருந்தன, ஆர்த்தி டைரி படித்துக் கொண்டு இருந்தாளென்றால் படித்துக் கொண்டு இருந்த டைரியைத் தவிர மீதி டைரிகள் எங்கிருந்தன, உத்தேசமாக எத்தனை டைரிகள் அவள் படித்திருக்கக்கூடும், அவள் முகபாவனை எப்படி இருந்தது, அவள் கூட யார் இருந்தார்கள்…….

சில கேள்விகளுக்குச் சரியான பதில் சொன்ன மூர்த்திக்கு சிலவற்றுக்குப் பதில் தெரியவில்லை. அவன் கடைசியில் சிரித்துக் கொண்டே சொன்னான். "பாட்டி, நான் சாவித்துளை வழியாய் தான் பார்த்திருக்கிறேன்ங்கிறதை மறந்துட்டீங்களா. ஏதோ நேரில் முழுசா நிறைய நேரம் பார்த்துட்டு வந்த மாதிரி கேள்வி கேட்டுகிட்டே போறீங்க?"

"புத்திசாலிக்கு நிறைய நேரம் வேண்டியதில்லை, சாவித்துளை அளவே அதிகம் …." என்ற பஞ்சவர்ணம் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு அறையில் நடக்க ஆரம்பித்தாள். "ஏண்டா சாவி எப்படிடா ஆர்த்திக்குக் கிடைச்சுது?"

"சிவகாமி கொடுத்திருப்பா"

"அப்படின்னா அவ தனக்கு பாதகமான எதையும் அந்த பீரோல விட்டுருக்க மாட்டா. சரி அதை விடு. அவளுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கப் போற டாக்டர் யார்னு தெரிஞ்சுதா?"

"ப்ரசன்னா. ஆகாஷோட நண்பன். ரொம்ப பிரபலமானவன். கோயமுத்தூர்ல இருக்கான். அடுத்த வாரம் அப்பாயின்மென்ட் ஆகாஷ் வாங்கியிருக்கான்"

"அவளை அழைச்சுட்டு யார் போவாங்க?"

"அது சரியாத் தெரியலை"

"சந்திரசேகரையோ இல்லை ஆகாஷையோ தான் சிவகாமி கூட அனுப்புவாள். அந்த ஆள் எப்படி ட்ரீட்மென்ட் செய்யப் போறான்னு ஏதாவது தெரியுமா?"

"சரியாத் தெரியலை. ஆனா ஹிப்னாடிசமாய் இருக்கலாம்னு நினைக்கறேன்"

"அந்த டாக்டர் தன்னோட க்ளினிக்குல பேஷண்டோட ரெக்கார்டெல்லாம் எப்படி வச்சுக்கறானாம். டேப்பா, இல்லை பேப்பரா வச்சுக்கறானா?"

மூர்த்திக்குத் தெரியவில்லை. பஞ்சவர்ணம் சொன்னாள். "அதைக் கண்டுபிடி. எப்படி வச்சாலும் அதை நம்ம கைல வரவழைக்கணும்"

"எப்படி பாட்டி?"

"எதைச் செய்யவும் உலகத்துல ஆள் இருக்குடா. ரேட்டு தான் முன்ன பின்ன இருக்கும். பணம் என்ன செலவானாலும் பரவாயில்லை. முதல்லயே சரியான ஆளைப் பிடிச்சு ரெடியா இரு. புரிஞ்சுதா?"

மூர்த்தி தலையசைத்தான். பாட்டி எல்லா விஷயத்தையும் யோசித்து வைத்திருப்பது அவனுக்கு வியப்பாய் இருந்தது. அதிர்ஷ்டம் சிறிது கருணை காட்டியிருந்தாலும் பாட்டி தன் சாமர்த்தியத்தால் எத்தனையோ சாதித்திருப்பாள் என்பதில் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை.

அடுத்தபடியாக அந்தப் பீரோக்கள் விஷயமாக யார் யாரிடம் என்ன கேட்டு எப்படித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பஞ்சவர்ணம் மூர்த்திக்குச் சொல்ல ஆரம்பித்தாள்.

அதே நேரத்தில் ஆர்த்தி தன் தாத்தா பாட்டியிடம் பீரோ சாவி கிடைத்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டு இருந்தாள். "…..பெரியத்தை அந்த ரெண்டு பீரோ சாவியும் குடுத்துட்டுப் போனாங்க"

சில வினாடிகள் நீலகண்டனும் பார்வதியும் திகைப்பில் அமர்ந்திருந்தார்கள். நீலகண்டன் தான் முதலில் சுதாரித்தவர். பரபரப்புடன் எழுந்து வந்து பேத்தியின் அருகில் உட்கார்ந்தார். "என்ன இருந்துச்சு"

ஆர்த்தி இருந்த பொருட்களைப் பட்டியலிட்டாள். டைரிகளில் கடைசி இரண்டு வருட டைரிகள் கிடைக்கவில்லை என்று சொன்ன போது உடனடியாக நீலகண்டன் சொன்னார். "சிவகாமி தான் எடுத்திருப்பாள். கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேணுமா?"

பார்வதி சொன்னாள். "அவள் எடுத்திருந்தா ஏன் சாவியைத் தரணும். சாவி காணோம், அது இதுன்னு ஏதாவது சாக்கு சொல்லி சமாளிச்சிருக்கலாமே."

"ஆனா எத்தனை நாளுக்கு சமாளிக்க முடியும்? டூப்ளிகேட் சாவியாவது செஞ்சு ஒரு நாள் திறந்து தானே ஆகணும். அதான் சாமர்த்தியமா நல்ல பிள்ளையாட்டம் சாவியைக் கொண்டாந்து குடுத்துட்டா. அதான் அந்த சம்பந்தியம்மா அவள் அந்த ரூம்ல இருந்து எதையோ எடுத்துட்டுப் போறதைப் பார்த்ததா சொன்னாங்களே"

"அந்தம்மா பேச்சை என் கிட்ட எடுக்காதீங்க. எனக்கு பத்திகிட்டு வருது. அந்தம்மா கிட்ட நாம பேசிட்டு வந்து அரை மணி நேரம் ஆகலை. அதுக்குள்ள அதை ஆகாஷ் கிட்ட பத்த வச்சு நம்மள இந்த வீட்டை விட்டே அனுப்பற அளவு அந்தம்மா கிரிமினல் புத்தி வேலை செய்யுது. இந்த லட்சணத்துல அந்தம்மா சிவகாமி பத்தி சொல்லுது. ஈயத்தைப் பார்த்து இளிச்சுதாம் பித்தளை"

"அதான் அந்தப் பையன் மூர்த்தி எதனால சொன்னேன்னு சொல்லி கால்ல விழாத குறையா மன்னிப்பு கேட்டானே"

"ஆகாஷ் கிட்ட சொல்றதிலயும் அந்தப் பையனுக்கு வேகம் தான். கால்ல விழாத குறையா மன்னிப்பு கேக்கறதுலயும் அந்தப் பையனுக்கு வேகம் தான். அதென்னவோ எனக்கு யதார்த்தமா தெரியலை. அவன் பேசறதெல்லாம் அவன் பாட்டி சொல்லிக் குடுத்த டயலாக் மாதிரி தான் தெரியுது…"

"அந்தம்மா என்ன சினிமா டைரக்டரா, இல்லை அந்தப் பையன் தான் நடிகனா டயலாக் சொல்லித் தர"

"அப்படியிருந்தாத் தான் பரவாயில்லையே. அந்த சினிமாவப் பார்க்காம இருந்து தொலையலாம். அவங்க நம்மளையில்ல டைரக்ட் செய்யப் பார்க்கற மாதிரி தெரியுது…?"

ஆர்த்தி வாய் விட்டுச் சிரித்தாள். நீலகண்டனும், பார்வதியும் தங்கள் வாக்குவாதத்தை விட்டு விட்டு பேத்தியைப் பார்த்தார்கள்.

ஆர்த்தி புன்னகையுடன் சொன்னாள். "அம்மா அவங்க டைரியில் உங்க சண்டை பத்தியெல்லாம் விவரமா எழுதி இருக்காங்க. தாத்தாவோட எட்டிமடை ஜோசியன், பாட்டியோட அம்மா தாத்தாவுக்கு தண்ணிக் காப்பி கொடுத்ததுன்னு எதையும் விடலை. தாத்தா எப்படி எல்லாம் செல்லம் கொடுத்தாங்க, பாட்டி எப்படி எல்லாம் விமரிசனம் செஞ்சாங்கன்னு எழுதி இருந்தாங்க"

கேட்ட மறுகணம் அந்த முதிய தம்பதியரின் கண்கள் நிரம்பின. ஒன்றும் பேசாமல் இருவரும் மௌனமாக இருந்தார்கள். இருவரும் தங்கள் மகளின் நினைவுகளில் ஆழ்ந்து போனதாய்த் தோன்றியது.

பார்வதி கண்ணீருடன் கேட்டாள். "நான் விமரிசனம் செஞ்சதையும், திட்டினதையும் மட்டும் தான் எழுதி இருக்காளா? என் பொண்ணு மனசுல அது மட்டும் தான் பதிஞ்சிருக்கா?"

ஆர்த்தி பாட்டியிடம் சொன்னாள். "சேச்சே அப்படியில்லை பாட்டி. அம்மா அதை ஒரு உயர்ந்த விஷயமாய் தான் எழுதி இருக்காங்க. அவங்க மேல் இருக்கற பாசமும், உங்களோட நியாய உணர்ச்சியும் அம்மாவுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கு"

பார்வதி ஒன்றும் சொல்லவில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டு கணவனைப் பார்த்தாள். அவர் கண்களில் இருந்து இன்னமும் கண்ணீர் வந்த வண்ணம் இருந்தது. குரல் கரகரக்க தனக்குள் சத்தமாகப் பேசிக் கொண்டார். "என் பொண்ணு எவ்வளவு நல்லவளா இருந்தா. அவளைக் கொல்றதுக்கு எப்படி மனசு வந்துச்சோ தெரியலையே"

(தொடரும்)”

About The Author