மனிதரில் எத்தனை நிறங்கள்! (49)

“Like one blindfolded groping out his way, I will not try to touch beyond to-day. Since all the future is concealed from sight I need but strive to make the next step right.” – – Ella Wheeler Wilcox

ஆர்த்தி காலையில் விழித்தெழுந்தும் நிறைய நேரம் படுக்கையிலேயே அமர்ந்திருந்தாள். நேற்றைய கனவும், அதைத் தொடர்ந்து நடந்தவையும் மனதை நிறையவே அழுத்தின. எல்லாவற்றையும் விட பாதித்தது ஆகாஷின் பாராமுகம். அந்த நேரத்திலும் கூட அவனால் அவள் அவன் தாயை சந்தேகப்பட்டதை மறக்க முடியவில்லை என்பதை நினைக்கையில் மனம் வலித்தது. சிலர் கண்ணில் தெரிந்த இரக்கம் கூட அவன் கண்ணில் தெரியவில்லை. மாறாக இறுக்கமான கோபம் தான் இருந்தது. அந்த முகம் மனத்திரையில் அப்படியே தெரிய வருத்தத்தில் கண்களை சிறிது நேரம் மூடிக் கொண்டாள்.

நேற்று சிவகாமி சொன்ன வார்த்தைகள் காதில் மீண்டும் ஒலித்தது. "இந்த அழுகை, சுய பச்சாதாபம் எல்லாம் யாருக்கும் எப்பவும் பயன் தந்ததில்லை. நீ அதை நல்லா புரிஞ்சுக்கணும். எதையுமே நாம தைரியமா சந்திக்கறப்ப தான் அதை ஜெயிக்க முடியுது. ஓடி ஒளியறதுனாலயோ வருத்தப்படறதாலயோ ஜெயிக்க முடியாது…. ஒரு பிரச்சினை வருதுன்னு வச்சுக்கோ. எப்பவுமே அந்தப் பிரச்சினையை விட நாம் உயர்ந்தவங்கங்கற கோணத்துல இருந்து தான் அதைப் பார்க்கணும். பிரச்சினைன்னு ஒண்ணு இருந்தா தீர்வுன்னும் ஒண்ணு இருந்து தான் ஆகணும்கிற நம்பிக்கையோட தான் அதை அணுகணும். அப்பத் தான் எல்லாம் சுமுகமாய் முடியும்"

சிவகாமி நல்லவளோ, கெட்டவளோ, குற்றவாளியோ, நிரபராதியோ, அவள் வார்த்தைகள் அறிவுபூர்வமாக இருந்தது என்பதை ஆர்த்தியால் மறுக்க முடியவில்லை. அவள் நடந்து கொண்ட விதத்திலும் ஆர்த்தியால் குறை கண்டு பிடிக்க முடியவில்லை. உணர்ச்சிவசப்படாமல், பதட்டம் இல்லாமல், கேள்விகளால் துளைத்து எடுக்காமல் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் முடிவெடுத்த விதத்தை நினைக்கையில் ஆர்த்திக்கு அவள் மீது முதலில் தோன்றிய மதிப்பு மீண்டும் வந்தது.

முடிந்த வரை பெரியத்தை போல் எதாலும் பாதிக்கப்படாமல் இருப்பது தான் சிறந்தது என்று நினைத்தாள். இனி தேவையில்லாமல் வருத்தப்படப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டாள். விலகிய ஆகாஷ் இனி என்றுமே தன்னை நெருங்கப் போவதில்லை என்பது சகிக்க முடியாததாக இருந்தாலும் விதியின் அந்த தீர்மானத்தை எதிர்த்து வருத்தப்பட்டு என்ன ஆகப் போகிறது என்று சமாதானம் செய்து கொண்டாள். அவனுடன் பழகிய அந்த சில நாட்களை, அந்த இனிமையான தருணங்களை மட்டும் மனதின் மூலையில் என்றென்றும் பாதுகாப்பாள். மற்றபடி நடந்ததைப் பற்றி கவலைப்படுவதை விடுத்து நடக்க வேண்டியதை மட்டும்
கவனிப்பாள்.

ஆர்த்திக்கு மனதில் மீண்டும் புத்துணர்ச்சி பிறந்தது. எழுந்து தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் குளித்து விட்டு வந்த போது பவானி வந்தாள்.

ஆர்த்தியின் முந்தைய நாள் நிலையைப் பார்த்து அவளுக்காக வருத்தப்பட்ட பவானிக்கு அந்த அறையில் நுழைய கஷ்டமாக இருந்தாலும் அவளைச் சென்று பார்க்காமல் இருக்க மனம் கேட்கவில்லை. வந்தவளுக்கு ஆர்த்தியின் முகத்தில் தெரிந்த தெளிவு பெரும் நிம்மதியைத் தந்தது.

"ஹாய் ஆர்த்தி"

"ஹாய் சித்தி"

"உன்னை இப்ப உங்கப்பா பார்த்தா சந்தோஷப்படுவார். நேத்து பூரா அவர் சரியா தூங்கவேயில்லை"

தந்தையின் பாசம் அவளை நெகிழ வைத்தது. "அப்பா என்ன செய்யறார்"

"பெரியக்கா கிட்ட போயிருக்கார். ஏதாவது பிரச்சினைன்னா அவருக்கு அக்கா பக்கத்துல இருக்கணும். அவங்க வாக்கிங் போயிருக்கறப்ப போனா திட்டுவாங்கன்னு வர்ற வரைக்கும் கஷ்டப்பட்டு காத்துகிட்டு இருந்துட்டு பிறகு போனார்"

"வாக்கிங் போறப்ப அப்பா போனா ஏன் அத்தை திட்டுவாங்க"

"காலைல வாக்கிங் போற நேரமும், ராத்திரி தூங்கறதுக்கு முன்னால் தோட்டத்துல ம்யூசிக் கேட்டுட்டு உட்கார்ற நேரமும் அவங்க தன் புருஷனோட தனியா இருக்க விரும்பற நேரங்க. அந்த நேரத்துல யார் வந்து தொந்தரவு செஞ்சாலோ, சீரியஸ் விஷயங்களைப் பேசினாலோ அவங்களுக்கு பிடிக்காது. அதான்"

சிவகாமி எல்லாவற்றிலும் வித்தியாசமாய் தெரிந்தாள். தம்பியின் இத்தனை சொத்துகளும் சிவகாமியை எந்த விதத்திலும் மாற்ற முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

"ஆர்த்தி நாம நேத்து எடுத்த டிரஸ்ல ஒண்ணு நீ இன்னைக்குப் போட்டுக்கப் போறே. எது போட்டுக்கறே. சேலையா, சுடிதாரா? என்ன கலர்?"

அவள் நேற்றைய கனவைப் பற்றி பேசாமல் உரிமையுடன் இந்த ஆடைகள் விஷயத்திற்கு வந்தது ஆர்த்திக்குப் பிடித்திருந்தது.

"நீங்களே செலக்ட் செய்யுங்க சித்தி. நான் அதைப் போட்டுக்கறேன்"

அந்த வார்த்தை பவானிக்கு பெரிய சந்தோஷத்தைத் தந்தது. இந்த நெருக்கத்தை, இந்த அங்கீகாரத்தை கனவு கண்டிருக்கிறாள். ஆனால் தைரியமாக ஆர்த்தியிடம் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு குழந்தையின் குதூகலத்தோடு ஆடைகளைப் புரட்ட ஆரம்பித்தாள். ஆடைகளைத் தேர்ந்தெடுத்ததோடு நிற்காமல் அவளுக்குத் தானே தலை வாரினாள். அலங்காரம் செய்தாள்.

சிறிது நேரத்தில் சந்திரசேகர் ஆர்த்தியின் அறையில் நுழைந்த போது இருவரும் பேசி சிரித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தார். மகள் எந்த மனநிலையில் இருப்பாளோ என்று பயந்து வந்தவருக்கு இந்தக் காட்சி தந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அவருக்கு உடனடியாக என்ன சொல்வதென்று தெரியவில்லை. புன்னகையுடன் வந்த காரியத்தைச் சொன்னார். "டிபன் ரெடியாய் இருக்கு. இன்னைக்கு எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்னு கூப்பிட வந்தேன்…."

அவர் கண்கள் மகளை ஆராய்ந்தது. மகள் இன்று பேரழகாய் இருப்பதாக அவருக்குத் தோன்றியது. மனைவியின் அலங்காரத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவளைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

பவானிக்கு சந்தோஷமாக இருந்தது. கணவனிடம் நேற்று ஆரம்பித்த இந்த மாறுதலுக்குக் காரணம் ஆர்த்தி தான் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை.

ஆர்த்திக்கு அப்போது தான் அன்று ஞாயிற்றுக் கிழமை என்பது நினைவுக்கு வந்தது. ஞாயிறு காலையும் எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் வழக்கம் அந்த வீட்டில் இருந்தது. "ஆச்சு. வந்துட்டோம்ப்பா" என்றாள்.

டைனிங் ஹாலில் அவர்கள் நுழைந்த போது அத்தனை கண்களும் ஆர்த்தி மேல் இருந்தன. முந்தைய நாள் நிகழ்ச்சிக்குப் பின் எப்படி இருக்கிறாள் என்றறியும் ஆவலுடன் பார்த்தவர்கள், அவள் நேற்றைய சுவடே இல்லாததோடு தெளிவாகவும், மிக அழகாகவும் தெரிகிறாள் என்பதையும் கவனித்தார்கள். ஆகாஷ் உடனடியாக கண்களைத் திருப்பிக் கொண்டான். மூர்த்தியும், பார்த்திபனும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதைக் கண்ட போது அவன் தாடை ஒரு கணம் இறுகினாலும் மறு கணம் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் அருகில் இருந்த சங்கரன் சிவகாமியிடம் மெல்லிய குரலில் சொன்னார். "இந்தப் பொண்ணு ஆனந்தியை விட அழகாய் இருக்காள் இல்லையா சிவகாமி"

சிவகாமி தலையாட்டினாள். தன் தந்தை மனிதர்களைக் கவனிப்பதே அபூர்வம் என்பதால் அவரையே கவனித்து சொல்ல வைத்திருக்கிற ஆர்த்தியை ஆகாஷ் மறுபடி ஒரு முறை பார்த்தான். ஆர்த்தியும் அவனைப் பார்த்த போது அவளையுமறியாமல் புன்னகைத்தாள். அவன் புன்னகைக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவளுக்கு அவமானமாக இருந்தது. ஆனால் காலையில் தான் எடுத்த முடிவை நினைவுபடுத்திக் கொண்டு தன்னை திடப்படுத்திக் கொண்டாள்.

அப்போது தான் அமிர்தம் தன் அக்காவிடம் சொன்னாள். "அக்கா, அந்த விஜயா சாகலை. நான் அவளை நேத்து பார்த்தேன்"

"எந்த விஜயா?"

"வேலைக்காரி விஜயா. ஆனந்தி இறந்தப்ப அவளும் செத்திருப்பான்னு நினைச்சுட்டு இருந்தோமே அந்த விஜயா…."

திடீரென்று அங்கு மயான அமைதி நிலவியது.

(தொடரும்)

About The Author