மனிதரில் எத்தனை நிறங்கள்! -104

The truth is often a terrible weapon of aggression. It is possible to lie, and even to murder, for the truth.
– Alfred Adler ‘The Problems of Neurosis’

இத்தனை நாள் தாம்பத்திய வாழ்க்கையில் மனைவி பேச்சிழந்து பார்த்திராத நீலகண்டன் நிஜமாகவே பயந்து போனார். "பார்வதி. என்னாச்சு" மனைவியை உலுக்கினார்.

பார்வதி கணவனையும், டேவிடையும், மேரியையும் மாறி மாறிப் பார்த்தாள். பின் மெல்ல சொன்னாள். "ஆனந்தியோட குரல்….."

"என்ன உளர்றே நீ. அந்த நந்தினி கிட்ட தானே ஆர்த்தி பேசிகிட்டிருந்தா. பேசிட்டு தானே உன் கிட்ட போனைக் கொடுத்தா"

"பேசினது நந்தினின்னு தான் சொன்னாள். ஆனா குரல் ஆனந்தியோடது"

ஒரு நிமிடம் அங்கு மயான அமைதி நிலவியது.

"ஒரே மாதிரி குரல் எத்தனையோ பேருக்கு இருக்கும். அதுவும் போன்ல குரல் எப்பவும் கொஞ்சம் வித்தியாசமாய் தான் கேட்கும்…" டேவிட் சொன்னார்.

"என் பொண்ணு கிட்ட எத்தனையோ தடவை நான் போனில் பேசியிருக்கேன். அவ ஹலோ சொல்ற விதமே ஒரு விதமா இருக்கும்….. இது அவள் குரல் தான்…"

இருந்திருந்தாற் போல தன் மனைவிக்கு மூளை கலங்கி விட்டதோ என்று நீலகண்டன் பயந்தார். என்னென்னவோ பேசுகிறாள். சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. கடைசியில் டேவிட் சொன்னார். "எதுக்கு வீண் சந்தேகம். கோத்தகிரி ஒரு மணி தூரம் தான். என் கார்லயே போய் நேரில் அந்த நந்தினியைப் பார்த்து விட்டால் போச்சு."

"இவ சொல்றதை நம்பி நாம போறது சரி தானா?" நீலகண்டன் கேட்டார்.

"அந்த வழியா வந்தவங்க அப்படியே அவங்களைப் பார்க்கப் போனதாய் சொல்லலாம். பேச்சு கொடுக்கறப்ப நம்ம சந்தேகத்தை நிவர்த்தி செய்துட்டா போச்சு"

கிளம்பினார்கள். போகும் போது ஒருவரும் பேசவில்லை. அவர்களுக்கு இந்தக் குரல் விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் விஷயம் எங்கோ இடித்தது.

கோத்தகிரியில் அந்த வீடு எங்கே என்ற அடையாளத்தை ஆர்த்தி வாயில் சொல்லக் கேட்டிருந்த டேவிடிற்கு அந்த வீட்டைக் கண்டுபிடிப்பது பெரிய கஷ்டமாய் இருக்கவில்லை.

அழைப்பு மணியை அவர்கள் அழுத்த நந்தினி வந்து கதவைத் திறந்தாள். "யாரு வேணும்?"

"நந்தினி…."

"நான் தான்"

பல முறை பத்திரிக்கைகளில் பார்த்து இருந்த முகம். ஆனால் குரல் ஆனந்தியினுடையதாய் தான் இருந்தது. டேவிடும் மேரியும் பார்வதியைப் பார்த்தார்கள். நீலகண்டனும் அந்தக் குரலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துதானிருந்தார். அவரும் மனைவியைப் பார்த்தார்.

பார்வதி அசரவில்லை. "நான் ஆர்த்தியோட பாட்டி. உங்க குரல் என் மகளோட குரல் மாதிரியே இருந்ததால் நேரில் ஒரு தடவை பார்த்துட்டு போகலாம்னு தோணிச்சு"

நந்தினி ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் அவர்களைப் பார்த்தாள். பிறகு அவர்களை ஹாலில் அமரச் சொன்னாள். அவர்கள் அமர்ந்த பிறகு கேட்டாள். "என்னைப் பார்த்தால் உங்க மகள் மாதிரி தோணுதா?"

நீலகண்டன் இல்லையென்று தலையசத்தார். பார்வதி சொன்னாள். "உருவத்தைப் பார்த்தா இல்லை. ஆனா குரல் எங்க பொண்ணோடது தான்"

நந்தினி முகத்தில் பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகள் வந்து போயின. பின் வரண்ட குரலில் சொன்னாள். "உங்க பொண்ணு செத்துப் பல வருஷம் ஆயிடுச்சும்மா"

பார்வதி மெள்ள எழுந்தாள். "ஆனந்தி"

நீலகண்டன் மனைவியை இழுத்து உட்கார வைக்கப் பார்த்தார். பார்வதி உட்கார்வதாயில்லை. "முகம் வேறாக இருக்கலாம். பேசற ஸ்டைல் எல்லாம் ஆனந்தியோடது தான்."

நந்தினி கண்களில் நீர் நிரம்பியது. "உங்க ஆனந்தி என்னைக்கோ செத்துட்டாம்மா. இப்ப இந்தக் குரலைத் தவிர அவ கிட்ட எதுவுமே மிச்சமில்லை" சொல்லச் சொல்ல அவள் குரல் உடைந்தது. அவள் ஓடி வந்து பார்வதியைக் கட்டிக் கொண்டு அழுதாள். எல்லோரும் அவளைத் திகைப்புடன் பார்த்தார்கள்.

"எனக்கு மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு. என்னங்க புதிர் போட்டு பேசறீங்க" டேவிட் வெளிப்படையாகச் சொன்னார்.

பார்வதியிடமிருந்து மெள்ள விலகிய நந்தினி கண்களைத் துடைத்துக் கொண்டாள் தன்னை ஓரளவு கட்டுப்படுத்திக் கொண்டவள் டேவிடைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் நீலகண்டனையும், பார்வதியையும் பார்த்துச் சொல்ல ஆரம்பித்தாள். சொல்கையில் அவள் முகத்தில் ஒரு பலத்த சோகம் படர்ந்தது.

"உங்க மகள் ஆனந்தியோட கல்யாண வாழ்க்கையைப் பத்தி நீங்க தெரிஞ்சுகிட்டது கொஞ்சம் தான். தெரிஞ்சுக்காதது நிறைய இருக்கு. ஒரு சொர்க்கத்தையே எதிர்பார்த்துட்டு தான் புருஷன் வீட்டுக்கு வந்தாள். காதலிச்சவனோட வாழ்றதுங்கறதே ஒரு சொர்க்கம் தானே. ஆரம்ப சொர்க்கம் போகப் போக நிறம் மாற ஆரம்பிச்சுடுச்சு. தன்னோட அக்காவோட அழகு, அறிவு, புத்திசாலித்தனம், சுறுசுறுப்பை வாய்க்கு வாய் சொல்லி ரசிச்ச மனுஷருக்கு தன்னோட மனைவி அப்படி இருக்கிறது புடிக்காமப் போக ஆரம்பிச்சுது. பார்க்கறவங்க பல பேர் அவரை விட அவர் மனைவி எல்லா விஷயங்களையும் வேகமா புரிஞ்சுக்கறாள், திறமைசாலி, சுறுசுறுப்புன்னு எல்லாம் சொல்ல ஆரம்பிச்சதை அவர் ரசிக்கலை. மனைவி வேணும்னே நாலு பேர் முன்னால் ஷோ செய்யறாள்ங்கற அபிப்பிராயம் வர ஆரம்பிச்சது… அவங்க அக்காவே அவளைப் பார்த்தாவது மாறுன்னு சில சமயம் சொன்னது அவரோட ஈகோவை பாதிச்சுது. மனைவி அடக்கி வாசிச்சா பரவாயில்லைன்னு நினைச்சார். ஆனந்தி அவர் நினைச்சபடி நடந்துக்கலை. அவங்களுக்குள்ளே விரிசல் வர ஆரம்பிச்சது….குழந்தையைப் பெத்துட்டு ஆனந்தி போனதுக்கப்புறம் அந்த விரிசல் அதிகமாச்சு…."

"அவளுக்கும் அக்கா கிட்ட முழு வியாபாரத்தையும் விட்டுட்டு ஒரு அலங்கார பொம்மை மாதிரி இருந்துகிட்டு இருந்த கணவர் மீது மரியாதையும் அன்பும் குறைய ஆரம்பிச்சுது. அவருக்கும் தன்னை விட மேலாய் இருக்கிற மனைவி மேல் காதல் குறைய ஆரம்பிச்சது. சாதாரணமா அவங்கக்கா கண்ணுல எதுவும் படாமல் போகாது. ஆனா அவங்க புது யூனிட் ஒன்னை உருவாக்கற முயற்சியில் பிசியா இருந்தாங்க. ஓரளவு ஏதோ பிரச்சனைன்னு தெரிஞ்சாலும் அடுத்தவங்க தனிப்பட்ட விஷயங்கள்ல தலையிடற வழக்கம் இல்லாத அவங்க அதுக்கு மேல கண்டுக்கலை. அவர் தன்னோட நண்பர் டேவிட் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல குடி வந்த ஒரு அழகான பொண்ணு பவானி கிட்ட பழக ஆரம்பிச்சார். அதை அக்காவுக்குத் தெரியாமல் எச்சரிக்கையா செஞ்சார். அவர் நண்பர் அவரைக் கொஞ்சம் கண்டிச்சார்னு மேரி ஆனந்தி கிட்ட சொன்னாள். ஆனா அந்தப் பழக்கம் தொடர்ந்தது. ஆனந்தி அதை அவங்கக்கா கிட்டே தெரிவிச்சிருந்தா அந்த பழக்கத்தை அடியோட நிறுத்தியிருக்கலாம். ஆனா அவரை அவங்கக்கா கிட்ட போய் சொல்லி புருஷனைத் திருத்தறதை ஆனந்தி அவமானமா நினைச்சாள். அது அவளுக்கு மட்டுமல்ல அவளோட காதலுக்கே அவமானம்னு நினைச்சாள். கட்டாயத்தால தக்க வச்சுக்கற உறவுல அவளுக்கு நம்பிக்கை இருக்கலை…."

மேரியின் கண்கள் ஈரமாயின. டேவிட் ஒருவித குற்ற உணர்ச்சியுடன் விட்டத்தை வெறித்துப் பார்த்தார். அவராவது சிவகாமியிடம் தெரிவித்திருக்கலாம். எல்லாவற்றையும் நிறுத்தி இருக்கலாம். ஆனால் நண்பனைக் காட்டிக் கொடுக்க ஏனோ அந்தக் காலத்தில் மனம் வரவில்லை. நீலகண்டனும், பார்வதியும் நந்தினியை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"அந்த சமயம் சிவகாமியக்கா வெளிநாடு போயிட்டாங்க. அக்காவைத் தவிர யாரைப் பத்தியும் கவலைப்படாத அவர் அந்தப் பொண்ணு பவானி கூட இன்னும் நெருக்கமாய் பழக ஆரம்பிச்சார். அவரா ஆனந்தி கிட்ட விவகாரத்து பத்தி பேசலை. ஆனா பவானியோட அண்ணி கல்யாணி ஆனந்தி கிட்ட வெளியிடங்கள்ல பார்த்து விவகாரத்து செஞ்சுட சொல்லி பேச ஆரம்பிச்சா. அந்த கல்யாணி ஒரு சைகிக்னு ஆனந்திக்கு ஆரம்பத்துலயே தெரிஞ்சுடுச்சு. ஒருவித அமானுஷ்யமான சிரிப்பு, கிறுக்குத் தனமான பேச்சு எல்லாம் பார்த்த ஆனந்தி ஆரம்பத்துல அவளை சீரியசா எடுத்துக்கலை. ஆனால் போகப் போக அவளோட நடவடிக்கையும், கொலை மிரட்டலும் ஆனந்தியை லேசா பயமுறுத்த ஆரம்பிச்சுது. ஒரு கட்டத்துல ஆனந்தி வெளிநாட்டுல இருக்கிற சிவகாமியக்கா கிட்ட நடந்ததைச் சொல்ல வேண்டியதாயிடுச்சு. அவங்க உடனடியா கிளம்பி வந்தாங்க…."

"ஆனா அவங்க வந்த அந்த நாள்ல பெரிய மழை. அங்கங்கே நிலச்சரிவு ஆயிருந்தது. அவங்க ஊட்டிக்கு வர நேரமாயிடுச்சு. அவங்க வர்றதுக்கு முன்னால் அந்த கல்யாணி வந்துட்டா. அவ சுய நினைவுல இருந்த மாதிரி தெரியல. அவ ஆனந்தியைக் கத்தியைக் காட்டி மிரட்ட வந்தவ, நேரமாக ஆக, நிஜமாவே கொலைகாரி மாதிரி நடக்க ஆரம்பிச்சுட்டா. ஆனந்தியோட முகத்துல அவளோட கத்தி விளையாட ஆரம்பிச்சுது. அவள் ஆனந்தி முகத்தை செதுக்கி முடிச்சப்ப ஆனந்தி மயங்கி விழுந்துட்டா. அந்தக் காட்சியைப் பார்த்த ஆனந்தியோட குழந்தை மனசுல அது ஆழமான வடுவா பதிஞ்சுடுச்சு. அது இன்னைக்கு வரைக்கும் எப்படி அவளைப் பாதிச்சுதுன்னு உங்களுக்கே தெரியும்"

நீலகண்டனும், பார்வதியும், மேரியும் கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். டேவிட் இப்படியெல்லாம் நடக்குமா என்பது போல அதிர்ச்சியுடன் நந்தினியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"சிவகாமியக்காவும் அர்ஜுனும் அந்த நேரமாய்ப் பார்த்து வந்து சேர்ந்தாங்க. கொஞ்சம் லேட்டா வந்திருந்தா கல்யாணி ஆனந்தியைக் கொன்னுருப்பா. உள்ளே ஓடி வந்து பார்த்த அர்ஜுன் ஆனந்தி மயங்கிக் கிடந்ததையும் ரத்தம் வடியற கத்தியோட கல்யாணி நின்னுகிட்டுருக்கறதையும் பார்த்த பிறகு ஒரு நிமிஷமும் தாமதிக்கலை. துப்பாக்கியால கல்யாணியை சுட்டுட்டான்…. அன்னைக்கு செத்தது ரெண்டு பேரு. உடம்பால செத்தது கல்யாணி, மனசால செத்தது ஆனந்தி….. உடனடியா ஆஸ்பத்திரிக்கு ஆனந்திய கூட்டிகிட்டுப் போனாங்க. ஆனந்தியோட முகத்தில் எலும்புகள் சில சேதமாயிருந்ததால முகத்தை அதே மாதிரி திரும்ப சர்ஜரி செய்யறது கஷ்டம்னு டாக்டர்கள் அபிப்பிராயப்பட்டாங்க. ஆனந்திக்கும் பழைய முகம், பழைய வாழ்க்கை எதுவுமே தேவையிருக்கலை."

"நடந்ததுக்கெல்லாம் சிவகாமியக்கா வருத்தம் தெரிவிச்சாங்க. இனி அவங்க தம்பி தவறான உறவு எதுவும் வச்சுக்காம தான் பார்த்துக்கறதாய் சொன்னாங்க. அவங்க அழுத்தமா சொன்ன எதையுமே அவங்க தம்பி மறுக்கப் போகிறதில்லைன்னு ஆனந்திக்கும் தெரியும். ஆனால் ஆனந்திக்கு கட்டாய உறவுகள்ல எப்பவுமே ஈடுபாடு இருந்ததில்லை. உண்மையை சொல்லப் போனா வாழ்க்கையிலயும், காதல்லயும் தோத்துப் போன ஆனந்தியாய் வாழவே அவளுக்கு இஷ்டம் இருக்கலை. அதில் அவள் உறுதியா இருந்தாள். ஒரு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துட்டு வேறொரு மனுஷியாய் மாறி விட நினைத்தாள். இனி யாரையுமே ஆனந்தியா என்னைக்கும் சந்திக்கப் போகிறதில்லைன்னும், உலகத்தைப் பொறுத்த வரைக்கும் தான் செத்தவளாகவே இருந்து விடப்போறதா ஆனந்தி சொல்லிட்டா. எத்தனையோ தடவை வற்புறுத்தியும் அவள் மனம் மாறலை. ஆக்ரோஷமா பேசின ஆனந்தி இனி பின்மாறப்போவதில்லைன்னு சொன்னதைப் பார்த்து சிவகாமியக்கா ஒத்துகிட்டாங்க. கல்யாணியோட பிணத்தை என்ன செய்வதுன்னு யோசிச்சுகிட்டு இருந்த சிவகாமியக்கா பிறகு அதையே ஆனந்தி பிணமா மாத்திட்டாங்க. அதனால தான் அந்த பிணத்தோட முகத்தை அவங்க யாருக்கும் காண்பிக்கலை. ஆனந்தியாவே எரிச்சுட்டாங்க. ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகிட்ட ஆனந்தி நந்தினியா மாறிட்டா. மீதி இருக்கிற காலத்தை அபலைப் பெண்களுக்காக அர்ப்பணம் செய்துகிட்டா…."

அவள் பேச்சை நிறுத்தினாள். ஒரு நிமிடம் அங்கு மயான அமைதி நிலவியது. கோபத்தின் உச்சகட்டத்திற்கே சென்று அந்த அமைதியைக் கலைத்தது பார்வதி தான். தன்னுடைய கதையையே யாருடைய கதையையோ போல் சொல்லி இந்த நேரத்திலும் தான் ஆனந்தி என்ற பாத்திரத்தை ஏற்கத் தயாராக இல்லாத மகள் மீது அவளுக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை.

"அந்த கல்யாணி கத்தியில குத்தினதுல முகத்தில மட்டும் தான் அடிபட்டுதா. இல்லை ஆனந்தியோட மூளையிலும் அடிபட்டுடுச்சா"

நந்தினிக்கு பார்வதி எங்கு வருகிறாள் என்று புரிந்தது. "மூளைக்கு அடிபடலை. இதயத்துக்கு தான் பலமான அடி"

"இதயம்கிற ஒன்னு இருந்திருந்தா அவள் இந்த முடிவு எடுத்திருப்பாள்னு எனக்குத் தோணலை. அவள் செத்துட்டதா நினைச்ச காலத்துல இருந்து என் புருஷன் சந்தோஷமாய் ஒரு நாள் இருந்து நான் பார்த்ததில்லை. எத்தனை நாள் நானும் அவரும் அழுதுருப்போம்னு எங்களுக்குத் தான் தெரியும்…"

"இந்த முகத்தோட நான் வந்திருந்தா என்னை உங்க மகளாய் ஏத்துக்க முடிஞ்சுருக்குமா? உண்மையை சொல்லுங்க" பார்வதியையும் நீலகண்டனையும் பார்த்து நந்தினி கேட்டாள்.

"கொஞ்சம் கஷ்டமாயிருந்திருக்கும். ஆனா உடனே ஏத்துக்கப் பழகியிருப்போம். பெத்தவங்க பாசத்தைக் கொட்டறது முகத்தை வச்சு அல்ல. பெத்த பொண்ணையாவது நீ நினைச்சுப் பார்த்திருக்கலாம்"

"நினைச்சுப் பார்க்காம இருக்கலை. நான் என் அம்மா அப்பா தான் என் குழந்தையை வளர்த்தணும்னு சிவகாமியக்கா கிட்ட கேட்டுகிட்டேன். அவங்க கிட்ட நான் கடைசியா அப்படிக் கேட்டுகிட்டதா உங்க கிட்ட சொல்லச் சொல்லியிருந்தேன். ஆனா அதுக்கு நீங்க சந்தர்ப்பமே தராமல் ஆர்த்தியை எடுத்துட்டு ஓடிட்டீங்க. நீங்க எங்க இருக்கீங்கன்னு கண்டுபிடிக்க அவங்களுக்கு அதிக நாள் ஆகலை. ஆனா உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆகாத வரைக்கும், 21 வயசு ஆகாம ஆர்த்தியை எந்தக் காரணத்தை வச்சும் ஊட்டிக்கு கூட்டிகிட்டு வரக் கூடாதுன்னு நான் சொல்லியிருந்தேன். இன்னொருத்தி என் குழந்தையை வளர்க்கறது எனக்குப் பிடிக்கலை….. பாண்டிச்சேரியில் அந்த லைப்ரரி வேலை அப்பாவுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்தது கூட சிவகாமியக்கா தான்."

பார்வதி ஆனந்தியிடம் பேசுவதை விட்டு கணவன் பக்கம் திரும்பினாள். "பொண்ணை பொண்ணு மாதிரி வளர்த்தணும். அதிகமா செல்லம் கொடுத்து குட்டிச்சுவர் செஞ்சதோட விளைவைப் பாருங்க. என் பொண்ணு மாதிரி உலகத்துல புத்திசாலி இல்லைன்னு தலையில வச்சு கூத்தாடினீங்களே. பாருங்க அவளோட புத்திசாலித்தனத்த. இத்தனை நாள் அந்த சிவகாமியை வாயிக்கு வந்த மாதிரி கரிச்சுக் கொட்டினீங்களே. இப்ப என்ன சொல்றீங்க…"

நீலகண்டன் தளர்ந்து போயிருந்தார். அவர் உடைந்த குரலில் மகளிடம் கேட்டார். "உனக்கு எப்படி முடிஞ்சது ஆனந்தி. ஆர்த்தியையோ, என்னையோ பார்க்கணும்னு தோணவேயில்லையாம்மா உனக்கு?"

பார்வதி கணவனிடம் எரிந்து விழுந்தாள். "ஊம். இதுல என்னை விட்டுருங்க. நான் தான் சத்துரு. உள்ளதை உள்ளது மாதிரி சொல்றேன் பாருங்க…"

"சரி…உங்கம்மாவையும் தான்… பார்க்கணும்னு தோணவேயில்லையா?"

ஆனந்தி அழுது கொண்டே சொன்னாள். "எப்படிப்பா தோணாமல் இருக்கும். ஏதோ ஒரு பிடிவாதத்தில் நந்தினியா மாறினாலும் நான் உங்களை நினைக்காத நேரம் இல்லை. எத்தனையோ தடவை நான் பாண்டிச்சேரி வந்திருக்கேன். தூரத்துல இருந்து உங்களை எல்லாம் பார்த்துட்டு திரும்பி வந்துருக்கேன். எத்தனையோ தடவை என் மகளை பின் தொடர்ந்திருக்கேன்…. கடைசியா கூட உங்களுக்கு ஹார்ட் அட்டாக்குன்னு தெரிஞ்சப்ப உங்களைப் பார்க்க பாண்டிச்சேரி ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கேன். உங்க பக்கத்துல நின்னு பார்த்திருக்கேன். அம்மா என்னைப் பார்த்ததுக்கப்பறம் அவசர அவசரமா அங்கேயிருந்து ஓடியிருக்கேன்….."

நீலகண்டன் அதற்கு மேல் தாமதிக்கவில்லை. எழுந்து வந்து மகள் கைகளைப் பிடித்துக் கொண்டார். "எத்தனை கஷ்டப்பட்டுட்டே குழந்தை நீ"

ஆனந்தி தன் தந்தையின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தவள் நிறைய நேரம் நிறுத்தவில்லை. இப்போது கூட அவர் மட்டுமே அவள் கஷ்டத்தைப் பார்க்கிறார்…..

*****

டிரைவர் தெரிவித்த செய்தி சிவகாமியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவனிடம் நடந்ததைத் தெளிவாக இன்னொரு முறை சொல்லச் சொன்னவள் அவன் சொல்லி முடித்த பிறகு காரைத் திரும்ப வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகச் சொன்னாள். இதை இனி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று மட்டும் சொல்லி விட்டு போனை வைத்தாள்.

கடத்தல் தான் இது என்பது அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது. இன்னொரு போனுக்காகக் காத்திருந்தாள். நினைத்தபடி கால் மணி நேரத்தில் அந்த போன் கால் வந்தது. பேசினவன் வரண்ட குரலில் உணர்ச்சியே இல்லாமல் சொன்னான்.

"சிவகாமியம்மா. இன்னேரம் உங்களுக்கு செய்தி தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். உங்க மருமகள் என் கஸ்டடியில் தான் இருக்கிறாள். எனக்கு அவசரமா ஒரு பத்து லட்ச ரூபாய் தேவைப்படுது. உங்க மருமகளுக்காக இன்னும் அதிகமா கேட்டா கூட நீங்க கொடுப்பீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா எனக்குத் தேவைப்படற தொகையைக் குடுத்தா போதும். உங்க மருமகளை நீங்க பத்திரமா கூட்டிகிட்டு போயிடலாம். நீங்களும், உங்க வேலைக்காரன் அர்ஜுனும் மட்டும் வந்து அந்தப் பணத்தை நான் சொல்ற இடத்துல தந்தா போதும். இடத்தைக் குறிச்சுக்குங்க….."

அமைதியாக அவன் சொன்ன இடத்தின் விலாசத்தையும் போக வேண்டிய நேரத்தையும் குறித்துக் கொண்ட சிவகாமி சொன்னாள். "நான் பணத்தோட வர்றேன். ஆனா அவள் மேல ஒரு சின்ன கீறல் கூட விழக்கூடாது"

"நீங்க போலீசுக்குப் போகாத வரைக்கும் அவ மேல சின்னக் கீறல் கூட விழாது. அதுக்கு நான் க்யாரண்டீ. அப்படி போலீசுக்குப் போனா அவளை அறுத்து பத்து பன்னிரண்டு பொட்டலமா நீங்க பல இடங்கள்ல இருந்து பொறுக்க வேண்டியிருக்கும். அதுக்கு நீங்க இடம் தர மாட்டீங்கன்னு நினைக்கிறேன். ஞாபகம் வச்சுக்கோங்க. பணத்தை நீங்களும் அர்ஜுனும் கொண்டு வந்தால் போதும்"

பப்ளிக் பூத்தில் போனை வைத்த அசோக் நாலைந்து கடை தள்ளி இருந்த காயின் பாக்ஸில் இருந்து மூர்த்திக்குப் போன் செய்து பேசினான். போனை வைத்து பக்கத்து தெருவுக்குச் சென்று ஒரு காயின் பாக்ஸில் போன் செய்து, அடுத்து செய்ய வேண்டியதை சங்கேத மொழியில் தெரிவித்தான். பின் கோவைக்குப் போகும் பஸ்ஸில் ஏறினான். இன்று இரவு அவன் ரயிலில் டெல்லிக்குச் செல்கிறான். சிவகாமியைப் போல் ஒரு பெரும்புள்ளி மர்மமான முறையில் காணாமல் போகும் நேரம் பலர் பார்வை படும்படியாக வேறு இடத்தில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது நல்லது என்பது அவன் கருத்தாக இருந்தது.

(அடுத்த வாரம் முடிவுறும்)

About The Author

7 Comments

  1. arockia

    ச்டொர்ய் சுபெரா பொஇகிடு இருக்கு, திடெர்னு முடிய பொகுதுனு சொல்ரிங. நேலம இருந்தாலும் அருமையன கதை. cஒங்ரடுலடிஒன்.

  2. Madhumitha

    ஏன்டா கதை இவ்வலவு சீக்கிரம் முடியுது என்ட்ரு கவலயாக இருக்கு.தயவு செய்து கதயை சுபம் ஆக முடிக்கவும்.

  3. suj

    hello Ganeshan sir,

    Looks like you are rushing the story towards the end. .

    This is the meat” of the entire story, please give us time to enjoy it for a bit before completing 🙂

    Please give it enough taste and phase before completion. I felt the same with previous thodar also. Please give us few more episodes :)”

  4. N.Ganeshan

    அன்பு வாசகர்களுக்கு,

    கதையை எப்போது முடிப்பீர்கள் என்று சிலர் சில வாரங்கள் தொடர்ந்து நச்சரிக்க வேறு வழியில்லாமல் நான் அவசரமாக தொடரை முடிக்க வேண்டி வந்து விட்டது. எனக்கும் இப்படி முடிப்பதில் முழுத் திருப்தி இல்லை தான். தங்கள் ஆதரவுக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    என்.கணேசன்

  5. Veena Kumar

    Hello wonderful writer Mr. Ganeshan,
    கதை தொடங்கிய முதல் நாளிலிருந்து உங்கள் கதையை மிகவும் ஆவலாக படித்து படித்து வருகிறேன். உங்கள் கதை மிகவும் அருமை. அடடா கதை முடியப்போகிறதே என்று உள்ளது. கதையில் ஆகாஷ், ஆர்த்தி, சிவகாமி, பார்வதி இவர்கள் அருமையான கதாப்பாத்திரங்கள். உங்கள் கதையை ஒவ்வொரு வாரமும் ரசித்துப்படித்தேன். இவ்வளவு நாளும் நீங்கள் உங்களுடைய அழகான எழுத்து திறமைமூலம் எங்களை மகிழ்வித்ததிற்கு எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகள் பல. நீங்கள் நிறைய எழுதவேண்டும். அடிகடி எழுதவேண்டும்..எங்களுக்கு எப்போதும் படித்து மகிழ உங்கள் கதைகளை கொடுக்க வேண்டும். Thanks a lot & i always wish u the best.

    Always have pleasant days.

Comments are closed.