மனிதரில் எத்தனை நிறங்கள்! (52)

"It’s the repetition of affirmations that leads to belief. And once that belief
becomes a deep conviction, things begin to happen." — Claude M. Bristol

ஆகாஷ் தாயிடம் வந்து சொன்னான், "ப்ரசன்னா இப்ப ஜெர்மனில இருக்கான். சைக்காலஜிகல் கான்ஃப்ரன்ஸ்க்காக போயிருக்கான். அடுத்த வாரம் தான் வருவான். நான் ஆர்த்திக்காக அப்பாயின்மெண்ட் பத்தி பேசினேன். வந்த நாளே ராத்திரி பன்னிரண்டு மணி ஆனாலும் கூட கண்டிப்பா பார்க்கறதா சொல்லிட்டான்…."

"நல்லதா போச்சு"

"அம்மா நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே"

"கோவிச்சுக்கற மாதிரி நீ எதுவும் சொல்லாட்டி கண்டிப்பா நான் கோவிச்சுக்க மாட்டேன்"

"ஆர்த்தி விஷயத்துல எல்லாத்தையும் நீயே தீர்மானம் செய்யறது சரியில்லைன்னு தோணுது"

"அவ என் மருமகள். என் தம்பி என்னை விட நல்லா முடிவெடுக்கறவனாய் இருந்தா அவன் கிட்ட அதை விட்டுருப்பேன். அவன் எந்த விஷயத்துலயும் தானா தீர்மானம் செய்யாம என் கிட்ட தான் எல்லாத்தையும் விடறான். அப்பறம் என்ன செய்யறது…."

ஆகாஷ் வாய் விட்டுச் சொல்ல முடியாமல் தவித்தான். ‘அம்மா அவங்க சந்தேகம் உன் மேல் தான் இருக்கு. அப்படி இருக்கும் போது நீ செய்யறதுக்கெல்லாம் அர்த்தம் வேறாகிவிடும்’. அதற்குப் பதிலாக வேறு மாதிரி சொன்னான். "இல்லை. ஆர்த்தியோட தாத்தா, பாட்டி கிட்டயே விடலாமே"

"பதினெட்டு வருஷமா பிரச்சினையை அப்படியே வச்சிகிட்டு எந்தப் பரிகாரமும் செய்யாம இருந்தவங்க கிட்ட இப்ப எதை வச்சு அதைக் கொடுக்கணும்கிறாய்"

அம்மாவிடம் பேசி ஜெயிப்பது சுலபமல்ல. ஆனால் ஆகாஷ் விடவில்லை. "நாம செய்யப் போற சிகிச்சை சரியில்லைன்னு சில பேர் நினைக்கலாம்."

"எவனெவனோ என்னென்னவோ நினைக்கிறான்னு நாம செய்யறதை செய்யாம இருக்க முடியாது. நீ மனசுக்குள்ள எதையோ வச்சிகிட்டுருக்கற மாதிரி தோணுது. என்ன அது உடைச்சு சொல்லு"

ஆகாஷ் எச்சிலை மென்று விழுங்கினான். "ஒண்ணுமில்லைம்மா. தோணியதை சொன்னேன்"

"ஆர்த்தியை டாக்டர் கிட்ட காமிக்கணும்கிறதுல உனக்கு சந்தேகம் இல்லையே"

"இல்லை"

"பிரசன்னாவை விட நல்ல டாக்டர் வேற யாராவது உனக்குத் தெரியுமா?"

"தெரியாது"

"அப்ப இது பத்தி இனி பேசறதுக்கு ஒண்ணும் இல்லை. நீ போய் உன் வேலையைக் கவனி"

ஆகாஷ் மறு பேச்சு பேசாமல் கிளம்பினான்.

**************
அதே நேரத்தில் மூர்த்தி தன் காந்தல் விஜயத்தைப் பற்றி பஞ்சவர்ணத்திடம் சொல்லிக் கொண்டு இருந்தான். "அந்த வீரையன் தன் தங்கை அப்பவே செத்துட்டான்னு அடிச்சு சொல்றான். ஆனா அவன் பொய் சொல்றான்னு அவன் கண்ணைப் பார்த்தாலே தெரியுது. ரொம்பவே பயப்படறான்… பத்தாயிரம் ரூபாயைக் கண்ல காட்டுனேன். அவன் வீடு இருந்த நிலைமைக்கு அவன் உண்மையைச் சொல்லி அதை வாங்கியிருந்துருக்கணும். ஆனா வாங்கலை"

பஞ்சவர்ணம் சொன்னாள். "பேராசையை விட பயத்துக்கு சக்தி அதிகம்டா. அவன் பயப்படறான்னா அது சிவகாமிக்காகத் தான் இருக்கும். ஏண்டா ஒரு வேளை சிவகாமியோ இல்லை அவ அனுப்பிய ஆள் யாராவதோ போய் முதல்லயே அவனைப் பார்த்திருப்பாங்களோ?"

"தெரியலை. ஆனா யாரும் அவன் வீட்டுல போய் பார்க்கலைங்கறது உறுதி. அவன் வீட்டு புரோக்கர்ங்கிறதால வேலை செய்யற இடத்துக்குப் போய்ப் பார்த்திருக்க வழியில்லை. ஆனா இவனைப் போகிற வழியில் பார்த்துப் பேசியிருக்க சான்ஸ் இருக்கு."

"வீட்டுல போய் பார்க்கலைங்கறத எப்படி உறுதியா சொல்றே?"

"அவன் வீட்டுக்கு எதிர்ப்பக்கம் நாலு வீடு தள்ளி எப்பவுமே வெளிய கயித்துக் கட்டில்ல உட்கார்ந்திருக்கற ஒரு கிழவியப் புடிச்சேன். நூறு ரூபாக்கு எல்லாம் சொல்லிச்சு. விஜயாவுக்கு அடுத்ததா அவன் வீட்டுக்குப் போன முதல் வெளியாள் நான் தான்னுச்சு"

"என்ன விஜயாவா….?

"ஆமா. யாரோ ஒரு பொம்பளை வீரையன் வீட்டுல ரெண்டு நாள் இருந்ததாகவும் அவனை அண்ணான்னு தான் கூப்பிட்டுகிட்டு இருந்ததாகவும், அமிர்தம் சொன்ன அதே சாயங்காலம் அவசர அவசரமா ஓடி வந்து தன்னோட துணிமணிகளை எடுத்துட்டு போயிட்டதாவும் சொல்லிச்சு"

பஞ்சவர்ணம் எழுந்து அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தாள். "ஊம் அப்புறம்"

"அந்த வீரையன் குடும்பம் அப்படி யார் கிட்டயும் பேசறதோ பழகறதோ இல்லைங்கறதால் இந்தக் கிழவிக்கு வேற எதுவும் தெரியலை. ஆனா அந்த விஜயா ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை அங்க வந்து ரெண்டு மூணு நாள் இருந்துட்டு போவாள்ங்கறதை சொல்லிச்சு"

"வேறென்ன?"

"அந்த வீரையன் நான் யார்னோ, எதுக்காக விஜயாவைப் பத்திக் கேக்கறேன்னோ ஒரு வார்த்தை என் கிட்ட கேக்கலை"

"அந்த விஜயா அமிர்தத்தைப் பார்த்ததா அண்ணன் கிட்ட சொல்லி இருப்பாள். அதனால இந்த வீட்டுல இருந்து யாராவது ஒருத்தர் வருவாங்கன்னு அவன் எதிர்பார்த்துருப்பான்."

"ஏன் பாட்டி அவனை தனியா நாலு தட்டு தட்டிக் கேட்டா என்ன?"

"வேண்டாம். அதுக்கு ரெண்டு காரணம். ஒண்ணு அவனுக்குப் பெருசா எதுவும் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்துருச்சுன்னா நமக்கு முன்னால் சிவகாமி அவனைப் பார்த்து ஊரை விட்டே கிளப்பி இருப்பாள். சிவகாமி அதைச் செய்யாம அமைதியாய் இருக்கான்னா அவளுக்கு எதிரான எந்த விஷயமும் இவங்களுக்குத் தெரியலைன்னு அர்த்தம். ரெண்டாவது காரணம், அடிதடின்னு வந்துட்டா சிவகாமி காதுல விழாமல் இருக்காது. அடிதடில உன் பேரு மாட்டிகிட்டா ஆர்த்தியைக் கட்டிக்கறது முடியவே முடியாது. நாம கவனமாய் தான் இருக்கணும். முதல்ல அந்த விஜயாவைக் கண்டு பிடிக்கப் பார். மீதிய அப்பறம் பார்க்கலாம்."

சிறிது நேரம் மூர்த்தியும், பஞ்சவர்ணமும் தங்கள் தங்கள் எண்ணங்களில் ஆழ்ந்து இருந்தார்கள். பின் திடீரென்று மூர்த்தி உறுதியான குரலில் சொன்னான். "பாட்டி, என்னைக்கானாலும் சரி எங்கப்பா அம்மாவைக் கொன்ன அந்த சிவகாமியும் அந்த நேபாளமும் என் கையால தான் சாகப் போறாங்க…"

"சந்தோஷம். ஆனா பொறுமையாய் காத்திரு. நான் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தர்றேன். அதை அந்த நேரத்துல நல்லா பயன்படுத்திக்கோ. அது வரைக்கும் மனசுல இருக்கறதை வெளியே காமிச்சுக்காதே"

மூர்த்திக்கு அன்றிரவு தூங்க முடியவில்லை. தன் பெற்றோரின் போட்டோவை பார்த்தபடி நிறைய நேரம் உட்கார்ந்திருந்தான். இன்று தூங்குவது கஷ்டம் என்று தோன்றியது. செல்ஃபோனை எடுத்து எண்களை அழுத்தினான். மறுபக்கத்தில் ஹலோ கேட்டவுடன் சொன்னான். "ரெடியாய் இரு. நான் இப்ப வர்றேன்"

பஞ்சவர்ணம் தன் அறை ஜன்னல் வழியாக பேரன் பைக்கில் போவதைப் பார்த்தாள். கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பதினொன்று. அவள் முகத்தில் அடக்க முடியாத கோபம் தெரிந்தது.
"முட்டாள்…முட்டாள்"

(தொடரும்)

About The Author