மனிதரில் எத்தனை நிறங்கள்!- 97

It is not bigotry to be certain we are right; but it is bigotry to be unable to imagine how we might possibly have gone wrong.
– G.K.Chesterton

ரிப்பேரான அந்தக் காரை பார்த்திபனும், மூர்த்தியும் முடிந்த அளவு சரி செய்ய முயன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. இருள் சூழ்ந்து கொண்டிருந்தது.

மூர்த்தி தன் ஆச்சரியத்தைப் பல முறை தெரியப்படுத்தினான். "நாம் வந்தப்ப சரியாயிருந்துச்சே… எப்படி இப்படி ஆச்சு…?"

"செல்லுல பேசி மெக்கானிக் யாரையாவது கூப்பிடலாம்னு பார்த்தா டவரும் கிடைக்க மாட்டேன்குது. சே" என்ற பார்த்திபனுக்கு உள்ளே லேசாக பயம் கிளம்ப ஆரம்பித்திருந்தது.

ஆர்த்திக்கு நிலைமையின் தீவிரம், கூட அவர்கள் இருவரும் துணைக்கு இருப்பதால் பெரியதாகத் தெரியவில்லை. "இந்தப் பக்கம் ஏதாவது வண்டியோ, ஆள்களோ வந்தால் பரவாயில்லை…..உதவியாவது கேட்கலாம். ஆனால் யாரும் வர்ற மாதிரி தெரியலை"

மூர்த்தி பரபரப்புடன் மணியைப் பார்த்தான். மணி ஆறே முக்கால். இன்னும் முக்கால் மணி நேரம் தான்…..

"வண்டியை இங்கேயே விட்டுட்டு கொஞ்ச தூரம் நடந்தால் என்ன?" பார்த்திபன் கேட்டான்.

"ஆனால் டார்ச்சும் இல்லையே. இந்த இருட்டுல காட்டுக்குள்ளே நடக்கிறது அபாயம் தான். சே…. சாரி ஆர்த்தி. இப்படியாகும்னு நான் நினைக்கவேயில்லை."

"கார் ரிப்பேரானதுக்கு நீங்க என்ன செய்வீங்க?" என்று ஆர்த்தி அவனை சமாதானப்படுத்தினாள்.

நேரம் ஆக ஆக பார்த்திபனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவனும் மூர்த்தியும் மட்டுமாக இருந்தால் காரிலேயே படுத்து மறுநாள் காலை கூட போகலாம். ஆர்த்தியை கூட வைத்துக் கொண்டு இங்கு இன்னும் இருப்பது அபாயமாகவே அவனுக்குத் தோன்றியது.

தூரத்தில் ஒரு கார் வருவது அதன் ஹெட்லைட் வெளிச்சத்தில் தெரிய மூர்த்தி மணியைப் பார்த்தான். மணி ஏழு. "அரை மணி நேரத்துக்கு முன்னாலேயே பசங்க வந்துட்டாங்க போல இருக்கு" என்று நினைத்துக் கொண்டான்.

பார்த்திபனும் ஆர்த்தியும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். நெருங்கிய கார் அவர்கள் அருகே நின்றது. டிரைவர் வெளியே எட்டிப் பார்த்தான். "இப்படி காரை நடுவில நிறுத்தினா நாங்க எப்படி போறது?"

"இதுக்கு மேல போக முடியாது. இது டெட் எண்ட். எங்க கார் ரிப்பேர் ஆயிடுச்சு. அதனால தவிச்சுகிட்டிருந்தோம். எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?" பார்த்திபன் ஆவலாகக் கேட்டான்.

டிரைவர் திரும்பி காரினுள் இருந்த யாரிடமோ பேசினான். உள்ளே யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பின் பதிலேதும் சொல்லாமல் காரை ரிவர்ஸ் எடுத்து வந்த வழியிலேயே போகத் திருப்பினான்.

பார்த்திபன் ஓடிச் சென்று கெஞ்சினான். "நாங்க சிவகாமியம்மா வீட்டு ஆளுங்க. எங்க கூட ஒரு பொண்ணும் இருக்கறதால ஏதாவது ஒரு மெயின் ரோடு வரைக்காவது லிப்ட் கொடுங்களேன் ப்ளீஸ்"

கார் நின்றது. "சரி ஏறச் சொல்லு" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

"தேங்க்ஸ்" என்ற பார்த்திபன் திரும்ப வந்து ஆர்த்தியையும் மூர்த்தியையும் அழைத்தான். "கடவுளே அனுப்பின மாதிரி இருக்கு. வாங்க போகலாம்"

மூர்த்திக்கு எரிச்சலாக வந்தது. "பார்த்தி அவங்களை எப்படி நம்பிப் போகிறது. காலம் கெட்டுக் கிடக்கு" என்றான்.

"உள்ளே ஒரு லேடியும் இருக்காங்க. இங்கே நிக்கறது தான் ஆபத்து. கார் இங்கேயே இருக்கட்டும். நாம் முதல்ல போகலாம்"

ஆர்த்தி உடனடியாக பார்த்திபனைப் பின் தொடர மூர்த்தி என்ன செய்வதென்று தெரியாமல் பின் தொடர்ந்தான். மணியைப் பார்த்தான். மணி ஏழு ஏழு. இன்னும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும் ஏற்பாடு செய்த ஆள்கள் வந்து விடுவார்கள்…

"இல்லாட்டி எங்க கார் ரிப்பேர் செய்ய உதவி செஞ்சீங்கன்னாலும் போதும்" என்று டிரைவரிடம் மூர்த்தி சொன்னான்.

டிரைவர் திரும்பிப் பார்க்க உள்ளே இருந்த பெண்மணியின் குரல் தெளிவாகக் கேட்டது. "அதுக்கெல்லாம் நேரம் இல்லை. வர்றதானா வரச் சொல்லு. இல்லைன்னா வண்டியைக் கிளப்பு"

பார்த்திபன் மூர்த்தியை முறைத்தான். "சமய சந்தர்ப்பம் தெரியாமல் பேசாதே மூர்த்தி. முதல்ல போகலாம் வா. ஆர்த்தி நீ ஏறிக்கோ"

பின் பக்கத்துக் கார் கதவு திறந்தது. "அந்தப் பொண்ணைப் பின்னாடி ஏறச்சொல்லு. அவங்களை முன்னாடி ஏத்திக்கோ" என்று குரல் கேட்டது. பின்னால் ஏறிய ஆர்த்தி "ரொம்ப தேங்க்ஸ் மேடம்" என்று சொல்லிவிட்டு உள்ளே அமர்ந்திருந்த பெண்மணியைப் பார்த்தாள்.

"நீங்க… நீங்க…. நந்தினி தானே"

அந்தப் பெண்மணி தலையசைத்தாள். நடுத்தர வயதில் கம்பீரமாகத் தோற்றமளித்த அந்தப் பெண்மணியின் புகைப்படங்களை ஆர்த்தி எத்தனையோ பத்திரிக்கைகளில் பார்த்திருக்கிறாள். நந்தினி ஒரு பிரபல சமூக சேவகி. பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராகப் பல வருடங்களாகக் குரல் கொடுத்து வருபவள். அவள் ஒரு வக்கீலும் கூட. அவளைப் பற்றி நிறைய படித்திருந்த ஆர்த்தி அவளை நேருக்கு நேராக இப்படியொரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் பார்ப்போம் என்று நினைத்திருக்கவில்லை.

பார்த்திபன் உள்ளே டிரைவர் அருகில் அமர மூர்த்தி கடைசியாக ஒரு முயற்சி செய்தான். "என்னோட பர்ஸ் அங்கே விழுந்திருச்சுன்னு நினைக்கிறேன். ஒரே நிமிஷம் வெயிட் செய்யறீங்களா…"

நந்தினி சொன்னாள். "நீ வண்டியை எடப்பா"

மூர்த்தி வேறு வழியில்லாமல் கிளம்பிய காரினுள் குதித்து அமர்ந்தான்.

நந்தினி ஆர்த்தியைக் கேட்டாள். "சிவகாமியம்மா வீட்டுக்காரங்கன்னு சொன்னீங்க. அவங்களுக்கு நீங்க எல்லாம் என்ன உறவு?"

ஆர்த்தி தன்னையும் அவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். நந்தினியும் தான் தற்போது கோத்தகிரியில் ஒரு வீட்டில் வசித்து வருவதாகச் சொன்னாள்.

மூர்த்தி தன் சந்தேகத்தை வாய் விட்டே உடனைடியாகக் கேட்டான். "நீங்க எப்படி இந்தப் பக்கம்?"

டிரைவர் சொன்னான். "ஒரு இடத்தில் ராங் டைவர்சன் எடுத்துட்டேன்…பாதி வந்தப்பவே சந்தேகம் வந்துச்சு"

அந்தப் பாதையிலிருந்து வலது பக்கம் திரும்பி சில மீட்டர்கள் போயிருப்பார்கள். வேறொரு கார் பின் பிற வழியில் வந்து அந்தப் பாதையில் திரும்பியது. அதை மூர்த்தியும் கவனித்தான். அவன் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் தான் அவன் வரச் சொல்லியிருந்த இடத்திற்குப் போகிறார்கள். நிஜமாகவே அவனுக்குத் தன் துரதிர்ஷ்டத்தை நினைக்கையில் பற்றிக் கொண்டு வந்தது.

நந்தினி திரும்பிப் பின்னால் பார்த்தபடி சொன்னாள். "வேறொரு காரும் அந்தப் பக்கம் திரும்புது. நிஜமாவே வேறெங்கயோ போக அது வழி போலத் தோணுது"

பார்த்திபன் சொன்னான். "அப்படித் தெரியலை"

சிறிது நேர அமைதிக்குப் பிறகு ஆர்த்தி சொன்னாள். "உங்க குரல் எனக்கு நிறையவே பரிச்சயமான குரல் மாதிரித் தோணுது மேடம்"

நந்தினி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சில வினாடிகள் மௌனம் சாதித்து விட்டுச் சொன்னாள். "நீ டிவியில் என் பேட்டி ஏதாவது பார்த்திருப்பாய்"

"இல்லை நான் உங்களைப் பத்திப் படிச்சதெல்லாம் பத்திரிக்கைகள்ல தான். ஆனா உங்க குரலை முதல்லயே கேட்ட மாதிரி இருக்கு….. பிரமையா இருக்கலாம். மேடம் நான் உங்க பேன். காலேஜ் நாள்கள்ல எனக்கு ரெண்டு பேர் மேல ஒரு பெரிய பக்தியே இருந்துச்சு. ஒண்ணு நீங்க"

"இன்னொண்ணு?"

"எங்க பெரியத்தை…."

"நீங்க எப்படி இந்த நேரத்துல இங்கே வந்து மாட்டிகிட்டீங்க?"

ஆர்த்தி சுருக்கமாக தங்கள் பயணத்தைப் பற்றியும் கடைசியில் அந்த இடத்தில் வந்து கார் பழுதானதையும் சொன்னாள். "கடைசியில் கடவுளே உங்களை அனுப்பியிருக்காங்க"

"ஒரு வேளை நாங்க வராம இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க"

"கடவுள் வேற யாரையாவது அனுப்பியிருக்காங்க. எங்க பாட்டி கடவுளை நம்பறவங்களை அவர் எப்பவுமே கை விட மாட்டார்னு எப்பவும் சொல்வாங்க"

ஆர்த்தியின் நம்பிக்கை நந்தினிக்கு வேடிக்கையாக இருந்தது போல தெரிந்தது. புன்னகைத்தாள்.

ஆர்த்தி அவளிடம் ஆர்வமாக அவளுடைய சமூக சேவை பற்றி கேட்க அவளும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். மூர்த்திக்கு இன்று கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றம் வாட்டி வதைத்தது. பஞ்சவர்ணம் ஒரு திட்டம் கைகூடவில்லை என்றால் சீக்கிரமாகவே அடுத்த திட்டம் மேற்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. கார் ஊட்டி கோத்தகிரி மெயின் ரோடிற்கு வந்தவுடன் "தேங்க்ஸ் மேடம். இங்கே இறங்கி நாங்க ஊட்டிக்கு போயிக்கறோம். போன் செய்தா பங்களாவில் இருந்து கார் அனுப்புவாங்க" என்றான்.

நந்தினி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஒன்பது. "மணி ஒன்பதாயிடுச்சு. கார் அனுப்பிச்சாலும் அது வந்து சேர இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். இந்த ராத்திரி நேரத்துல ஆர்த்தியோட நீங்க ரோட்டுல நிக்கறது பாதுகாப்பில்லைன்னு நினைக்கிறேன். நீங்க பேசாம என் வீட்டுக்கு வந்து தங்கிட்டு காலைல போங்களேன்"

"இல்லை வீட்டுல தேடுவாங்க" மூர்த்தி அவசரமாக மறுத்தான்.

"போன் பண்ணி சொல்லிடுங்களேன்"

"உங்களுக்கு எதுக்கு சிரமம்?"

"இதுல என்ன சிரமம் இருக்கு"

பார்த்திபனுக்கு இந்தப் பனி பெய்யும் இரவு வேளையில் தெருவோரமாக நிற்க விருப்பமில்லை. அவரசரமாக இடைமறித்துச் சொன்னான். "நீங்க சொல்றதும் சரி தான். தேங்க்ஸ் மேடம். ஆர்த்தி நீ என்ன சொல்றே"

"பாட்டி தாத்தாக்கு போன் பண்ணிடலாம். இல்லாட்டி என்ன ஆச்சோன்னு பயப்படுவாங்க."

மூர்த்தியின் அடுத்த ஆசைகளிலும் மண் விழ அவன் மௌனமானான். கார் கோத்தகிரியில் உள்ள நந்தினியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. நந்தினியின் வீடு பெரியதாக இருந்தது. நந்தினி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள். வீட்டில் விலை உயர்ந்த பொருள்கள் எதுவும் இல்லையென்றாலும் சகல வசதிகளுடனும் கச்சிதமாக இருந்தது.

முதலில் வீட்டுக்குப் போன் செய்து ஆர்த்தி பாட்டியிடம் தகவலைச் சொன்னாள்.

"அந்தக் கடன்காரன் கூட்டிகிட்டு போனப்பவே எனக்குத் திருப்தியில்லை. அதே மாதிரி ஆச்சு பார்த்தியா. பரவாயில்லை. கடவுள் அந்தம்மா ரூபத்துல வந்து காப்பாத்திட்டார்."

லௌட் ஸ்பீக்கர் ஆனில் இருந்ததால் அவள் குரல் சத்தமாகக் கேட்டது. நல்ல வேளையாக மூர்த்தி வெளியே தன் செல்லில் பேசிக்கொண்டிருந்ததால் அவன் காதில் விழவில்லை. ஆனால் நந்தினி காதில் பார்வதி சொன்னது விழ அவள் புன்முறுவல் பூத்தாள்.

வெளியே மூர்த்தியின் செல்லில் அவன் ஏற்பாடு செய்த ஆட்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். "என்ன சார் இது. எங்களை வரச் சொல்லிட்டு காரை விட்டுட்டு நீங்க போயிட்டீங்க……" மூர்த்தி மெல்லிய குரலில் அவர்களுக்கு பதில் சொல்லி சமாதானப்படுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

வேலைக்காரியிடம் சப்பாத்தி தயார் சொன்ன நந்தினி வரவேற்பறையில் அவர்களை அமர வைத்துப் பேசிக் கொண்டிருந்தாள். அவள் பார்வை மூர்த்தி மேல் அதிக நேரம் தங்கியது. அவனை ஆழமாக அவள் பார்வை ஆராய்ந்தது. அவன் அவளைப் பார்க்கையில் எல்லாம் அவள் பார்வை இடம் மாறினாலும் திரும்பத் திரும்ப மீண்டும் எதையோ அவனிடத்தில் கண்டுபிடிக்க முயல்வதாக இருந்தது அவள் பார்வை. மூர்த்தி தர்மசங்கடத்துடன் நெளிந்தான். "இவள் என்னை முன்பே அறிவாளோ? ஏனிப்படி பார்க்கிறாள்?"

திடீரென்று நந்தினி அவனிடம் நேரடியாகக் கேட்டாள். "உங்க அம்மா அப்பா எங்கே இருக்காங்க?"

அந்த எதிர்பாராத கேள்வி அவனை திகைக்க வைத்தது. எல்லாம் தெரிந்தே கேட்கிறாளா? இப்போது தான் தந்தையைப் பற்றி அவன் அறிந்திருக்கிறான். தாய் என்ன ஆனாள் என்று அவனுக்கே தெரியாது…..

அவன் தர்மசங்கடத்தை வேறு மாதிரி புரிந்து கொண்ட ஆர்த்தி அவனுக்காக பதில் சொன்னாள். "அவங்க அம்மாவும் அப்பாவும் ஊட்டியில் பல வருஷங்களுக்கு முன்னால் நடந்த லேண்ட் ஸ்லைடில் இறந்துட்டாங்க"

ஆர்த்தி பதில் சொன்னாலும் நந்தினி அவள் பக்கம் திரும்பாமல் மூர்த்தியையே கூர்மையாகப் பார்த்தாள். மூர்த்தி தலையை மட்டும் ஆட்டினான்.

சாப்பிடும் போது ஆர்த்தி நந்தினியைக் கேட்டாள். "மேடம் நீங்க இங்கே தனியாய் தான் இருக்கீங்களா?"

"ஆமா." அதற்கு மேல் தன்னைப் பற்றி சொல்ல அவள் பிரியப்படாதது போலிருந்தது.

அவளுக்கென்று ஒரு குடும்பம் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட ஆர்த்தி தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கேட்க விரும்பவில்லை. ஆனால் ஆர்த்தியின் ஆவல் அவளை வேறு கேள்வி கேட்க வைத்தது. "மேடம் ஆதரவில்லாத பெண்களுக்கு ஆதரவா எத்தனையோ போராட்டம் நடத்தியிருக்கீங்க. குரல் கொடுத்திருக்கீங்க. இப்படி உதவணும்ங்கற எண்ணம் உங்களுக்கு எதனால வந்துச்சு"

"ஒரு காலத்துல நானும் அப்படி ஆதரவில்லாம தான் இருந்தேன்……" என்ற நந்தினி அவள் மேற்கொண்டு கேள்வி கேட்பதை விரும்பாமல் ஆர்த்தியைத் தான் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.

தாயின் சந்தேகத்திற்குரிய மரணத்தின் விவரங்களை விட்டு பெரும்பாலான விஷயங்களை ஆர்த்தி சொன்னாள். ஆர்த்தி பேசும் போது அவள் முழுக் கவனமும் ஆர்த்தி மீதே இருந்ததை மூர்த்தி கவனித்தான். சற்று முன் அவனைக் கவனித்தது போல இப்போது நந்தினி ஆர்த்தியைக் கவனித்தாள். பார்த்திபனைப் பெரிதாக அவள் கண்டு கொள்ளவில்லை.

உறங்க மூர்த்திக்கும் பார்த்திபனுக்கும் ஒரு அறையை ஒதுக்கிய நந்தினி ஆர்த்தியைத் தனதறையிலேயே படுக்க ஏற்பாடு செய்தாள். நிறைய நேரம் தனதறையிலும் நந்தினி அவளிடம் பேசிக்கொண்டிருந்தாள். கடைசியில் களைத்துப் போன ஆர்த்தி தூங்க ஆரம்பித்த பின்னும் நந்தினி தூங்கவில்லை. அவளையே பார்த்தபடி நிறைய நேரம் அமர்ந்திருந்தாள்.

இதை ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மூர்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது. முதல் முறையாகப் பார்க்கும் மனிதர்களிடம் யாராவது இப்படி நடந்து கொள்வார்களா?

நந்தினி எழுந்ததைப் பார்த்த மூர்த்தி சத்தமில்லாமல் தங்களுக்கு ஒதுக்கியிருந்த அறையில் போய் படுத்துக் கொண்டான். பார்த்திபன் நல்ல உறக்கத்திலிருந்தான்.

நந்தினி மூர்த்தி படுத்திருந்த அறை ஜன்னல் வழியாக அவனைப் பார்த்தாள். ஓரக்கண்ணால் கவனித்த மூர்த்தி தானும் ஆழ்ந்து உறங்குவது போல நடித்தான். சில நிமிடங்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்த நந்தினி நகர்ந்தாள். அந்த அறை வெளியிலிருந்து பூட்டப்படும் சத்தம் மூர்த்திக்குக் கேட்டது.

(தொடரும்)

About The Author

1 Comment

Comments are closed.