மனிதரில் எத்தனை நிறங்கள்! (99)

It is a good rule in life never to apologize. The right sort of people do not want apologies, and
the wrong sort take a mean advantage of them.
P. G. Wodehouse ‘The Man Upstairs’ (1914)

சிவகாமியால் அடுத்ததாக அழைக்கப்பட்டவள் ஆர்த்தி.

"உட்கார்." என்றவள் மருமகள் உட்கார்ந்ததும் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள். "ஆர்த்தி! மூர்த்தியும் அவன் பாட்டியும் ரெண்டு மூணு நாள்ல இந்த வீட்டை விட்டு வெளியே போகப் போறாங்க…. இனி வெளியே எங்கேயாவது அவன் உன்னைப் பார்த்து கூப்பிட்டான்னா நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் அவன் கூட நின்னு பேசறதோ, அவன் கூட எங்கேயாவது போறதோ கூடாது. புரியுதா?"

ஆர்த்திக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஆனாலும் தலையசைத்தாள். "உன் தாத்தா மேல் சத்தியம் பண்ணு"

ஆர்த்திக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மூர்த்தி தாய் தந்தையில்லாதவன், பாவம், என்றெல்லாம் எண்ணியிருந்த ஆர்த்தி சத்தியம் பண்ணச் சொன்னதும் தயங்கினாள். ஏனென்று புரியாவிட்டாலும் அந்த ஞாயிற்றுக் கிழமை பிக்னிக் தான் இதற்கு முக்கிய காரணம் என்பது மட்டும் தெரிந்தது.

"அத்தை. அன்னைக்கு பிக்னிக்ல கார் நின்னு போய் நாங்க மாட்டிகிட்டதுக்கு மூர்த்தி காரணம்னு நீங்க நினைக்கிற மாதிரி தெரியுது. ஆனா அது உண்மையில்லை அத்தை. மூர்த்தி ரொம்ப நல்லவர்…."

மருமகளைக் கூர்மையாகப் பார்த்த சிவகாமி கேட்டாள். "ஆர்த்தி. நீ பழகினதுலயே யாராவது கெட்ட ஆள் ஒருத்தர் பேரைச் சொல்லேன்"

ஆர்த்தி யோசித்தாள். கஷ்டப்பட்டு யோசித்தாள். அவளுக்கு யாரையும் சொல்லத் தெரியவில்லை. அசடு வழிந்தபடி சிவகாமியைப் பார்த்தாள்.

சிவகாமி சொன்னாள். "உன்னை மாதிரியே இந்த உலகத்துல எல்லாரும் இருந்துட்டா உலகம் சொர்க்கமாயிடும் ஆர்த்தி…இத்தனை வருஷங்கள்ல இந்த கலிகாலத்துல நீ பழகின ஆள்கள்ல ஒரு கெட்டவனை உனக்கு சொல்லத் தெரியலை…இது உனக்கு ஆச்சரியமாயில்லையா ஆர்த்தி"

ஆர்த்திக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"உன்னை ஒருத்தனுக்குக் கட்டிக் கொடுக்கற வரை பாதுகாக்கற பொறுப்பு எனக்கு இருக்கு ஆர்த்தி. கல்யாணம் ஆகிற வரைக்கு மட்டும் நான் சொன்னபடி கேட்டால் போதும். அப்புறம் நீயும் உன் புருஷனும் சேர்ந்து அவன் வீட்டுக்கு விருந்தே சாப்பிடப் போனாலும் எனக்குக் கவலையில்லை."

"வீட்டை விட்டுப் போறதுக்கு முன்னால் என் கிட்ட போயிட்டு வர்றேன்னு சொல்ல வந்தா நான் பேசலாமா?" தயக்கத்துடன் ஆர்த்தி கேட்டாள்.

சிவகாமி தலையசைத்தாள். "இந்த வீட்டுக்கு வெளியே தான் நான் சொன்னேன்…"

ஆர்த்தி சத்தியம் செய்து கொடுத்து விட்டு எழுந்தாள். சிவகாமி அவளை மறுபடி உட்காரச் சொன்னாள். "மத்தவங்களையும் கூப்பிட்டிருக்கேன். எல்லார் கிட்டயும் சேர்ந்து பேச வேண்டியிருக்கு. கொஞ்சம் பொறு ஆர்த்தி"

இரண்டு நிமிடங்களில் சந்திரசேகர், ஆகாஷ், பார்த்திபன் மூவரும் வந்தார்கள். உட்காரச் சொன்ன சிவகாமி சொல்ல நினைத்ததைச் சொன்னாள். "வக்கீல் தேசிகாச்சாரி ஆர்த்திக்குக் கம்பெனி அதிகாரங்களை கொடுத்துட்டீங்களா, ஆர்த்தி கம்பெனிக்குப் போகிறாளா, பேப்பர்ஸில் கையெழுத்து போடறாளான்னு தினம் போன் செய்து கேட்டுகிட்டிருக்கார்….."

சந்திரசேகர் முகம் சுளித்தார். "அந்தாளுக்கு வேற வேலை இல்லை"

"ஆனால் அவர் சொல்றது சரி தானே சந்துரு. அதனால் நாளைக்கு புதன் கிழமையில் இருந்து ஆர்த்தி கம்பெனி விஷயங்கள்ல கலந்துக்கட்டும்னு நினைக்கிறேன். ரெண்டு மாச காலத்துக்கு நானும் இருந்து சொல்லித் தர்றேன்…."

சந்திரசேகர் சந்தேகத்தோடு கேட்டார். "அப்புறம் நீ எங்கே போகிறாய்?"

"நானும் அவரும் உலகச் சுற்றுப் பயணம் போகப்போகிறோம். போனா வர ஒரு வருஷம் ஆகும்"

"நானும் வர்றேன்" என்று சந்திரசேகர் சொன்னதைக் காதில் விழுந்த மாதிரியே காட்டிக் கொள்ளாத சிவகாமி தொடர்ந்து சொன்னாள்.

"என் வாழ்க்கைல நான் ஒருத்தரைத் தவிர மற்ற எல்லார் கிட்டயும் நியாயமா நடந்துகிட்டிருக்கேன்னு உறுதியா சொல்ல முடியும். நான் நியாயமா நடக்கலைன்னு நினைக்கிறது என் புருஷன் கிட்டத் தான். ஆரம்பத்திலிருந்தே நான் என் அப்பா, என் தம்பி, தங்கை, என் பிசினஸ்னு இருந்துட்டேன். அவர் ஒரு தடவை கூட அதைத் தப்பா சொன்னதில்லை. அவர் ரிடையராகற வரை அவரும் பிசியா இருந்தார். நானும் பிசியா இருந்தேன். ஆனா அவர் ரிடையரானதுக்கப்புறம் அவர் ப்ரீயாயிட்டார். நான் மட்டும் பிசியாவே இருக்கேன். ஒவ்வொரு நாளும் ஆபிசுக்குக் கிளம்பறப்ப தோட்டத்துல உட்கார்ந்துட்டு படிச்ச தேவன் புஸ்தகத்தையே திரும்பத் திரும்பப் படிச்சுட்டு தனிமையில இருக்கிற அவரைப் பார்க்கிறப்ப எல்லாம் எனக்கு குற்றவுணர்வு வருது. நான் ரொம்பவே சுயநலமா இருந்துட்டேனோன்னு தோணுது…."

அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சி வசப்படாத சிவகாமியின் குரல் தழுதழுத்ததைப் பார்க்கையில் நான்கு பேருக்குமே மனம் நெகிழ்ந்தது. சிவகாமி நொடியில் சுதாரித்துக் கொண்டு அமைதியாகப் பேசினாள்.

"….ரொம்ப காலமா ரெண்டு பேருமா சேர்ந்து உலக சுற்றுப் பயணம் போகணும்னு ஆசைப்படறார். வயசும் எங்களுக்கு ஆயிட்டே போகுது. இனிமேயும் தள்ளிப் போட்டா போகவே முடியாதோன்னும் தோணுது. அதனால பாம்பேயிலேயே டிக்கட் பண்ண சொல்லிட்டேன்… வேறெந்த யோசனையும் இல்லாம அவரோட சேர்ந்து சுத்திப் பார்த்துட்டு வர்றேன். வர்ற வரைக்கும் நீங்க எல்லாம் ஒழுங்கா பிசினஸ் பார்த்துக்கணும்…"

"நானும் பவானியும் கூட வர்றோம். எங்களுக்கும் டிக்கெட் பண்ண சொல்லிடேன்"

சிவகாமி பொறுமையிழந்து சொன்னாள். "எட்டு வயசை நீ எப்பவோ தாண்டிட்டே சந்துரு. இன்னும் அந்த வயசுப் பையனாகவே நடந்துக்காதே"

+++++++++++++++++

சாயங்காலம் மூர்த்தி பாட்டியின் அறையில் நுழைந்த போது பஞ்சவர்ணம் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

"பாட்டி…இன்னொரு தகவல். இன்னும் ரெண்டு மாசத்துல அந்த ராட்சஸி உலகப் பயணம் போறாளாம் புருஷனோட. ஊமைக் கோட்டான் கிட்ட பார்த்தி சொல்லிட்டு இருந்ததைக் கேட்டேன்"

பஞ்சவர்ணம் அமைதியாகச் சொன்னாள். "அவள் உலகப் பயணம் போகப் போறதில்லை. உலகத்தை விட்டே போகப் போறாள்."

"என்ன பாட்டி சொல்றீங்க"

"மூர்த்தி. எனக்கு சின்ன வயசுல இருந்தே பணம், அதிகாரம் மேல தீராத ஆசை இருந்துச்சு. அது தான் என் லட்சியமா நினைச்சுட்டு இருந்தேன். நேத்துல இருந்து எனக்கு அந்த ஆசை போயிடுச்சு. இப்ப எனக்கு ஒரே ஒரு ஆசை தான் இருக்கு. அந்த சிவகாமியை நான் அழிக்கணும். அவள் அணு அணுவா சாகறதை என் கண்ணால பார்க்கணும். அது மட்டும் முடிஞ்சுதுன்னா என் வாழ்க்கைல வேற ஆசை இல்லை"

பஞ்சவர்ணத்தின் வார்த்தைகள் அடிமனத்திலிருந்து உறுதியாக வந்தன.

"நான் என்ன செய்யணும் பாட்டி?"

"அந்த அசோக்குக்கு போன் போடு. நான் அவன் கிட்ட பேசணும்"

மூர்த்தி தயங்கினான். "பாட்டி அவன் ஆபத்தானவன். அகம்பாவம் புடிச்சவன்….."

"சிவகாமி மாதிரி அவன். அவளை அழிக்க அவன் தான் நமக்கு சரியா உபயோகமாவான் மூர்த்தி. போனைப் போடு"

தயக்கத்தோடு மூர்த்தி அசோக்கின் செல்லிற்கு இணைப்பு தந்து செல்லை பஞ்சவர்ணத்திடம் தந்தான்.

"ஹலோ. தம்பி நான் மூர்த்தியோட பாட்டி பேசறேன். உன்னை நேர்ல பார்த்துப் பேசணும்."

"என்ன விஷயமா?"

"ஒரு புது வேலை இருக்கு. அதை நானே நேர்ல சொல்லணும்."

"அடுத்த வாரம் புதன்கிழமை?"

"இது அவசரமான விஷயம். நாளைக்கே பேச முடிஞ்சுதுன்னா நல்லது"

சில வினாடிகள் மௌனம் சாதித்த அசோக் பேசினான். "சரி எல்க்ஹில் முருகன் கோயிலுக்கு நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு வாங்க"

போனை பேரனிடம் திருப்பித் தந்த பஞ்சவர்ணம் தன் அபூர்வ புன்னகையுடன் சொன்னாள். "சூரசம்ஹாரம் செய்ய பிள்ளையார் சுழி முருகன் கோயில்ல போடறது பொருத்தம் தான்"

**********

சிவகாமி இரண்டு மாதம் கழித்து உலகப் பயணம் போகிறாள், சுமார் ஒரு வருடம் கழித்து தான் வருவாள் என்பதை அறிந்த கணம் முதல் சந்திரசேகர் மனதில் ஆர்த்தியின் திருமணம் பற்றிய எண்ணம் தான் பிரதானமாக இருந்தது. அவள் போவதற்குள் ஆர்த்தியின் திருமணத்தை முடித்து விட்டால் நிம்மதி என்று தோன்றியது. ஆகாஷிற்கும், ஆர்த்திக்கும் இடையே திருமணம் செய்தால் என்ன என்று பல சந்தர்ப்பங்களில் பல விதங்களில் சிவகாமியிடம் சொல்லிப் பார்த்திருந்தார். அது அவர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம், இதில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதே அவளுடைய பதிலாக இருந்தது.

ஆர்த்தியும், ஆகாஷ¤ம் ஒருவரை ஒருவர் காதலிக்கிற மாதிரியும் தோன்றியது. அதே நேரத்தில் ஆகாஷிற்கு ஆர்த்தி மேல் அதீத கோபம் இருப்பது போலவும் தெரிகிறது. இதற்கு ஒரே வழி அவர்களுக்குள் இடையே என்ன பிரச்சினை என்பதைத் தெரிந்து கொள்வது தான் என்று சந்திரசேகர் முடிவு செய்து மகளை தனதறைக்கு வரவழைத்து நேரடியாகக் கேட்டும் விட்டார்.

"ஆர்த்தி, உனக்கும் ஆகாஷ¤க்கும் இடையில் என்ன பிரச்சினை?"

ஆர்த்தி தன் தந்தையைப் பரிதாபமாகப் பார்த்தாள். பிரச்சினை சிவகாமி மேல் அவள் சந்தேகப்பட்டது தான் என்பதை அவள் அவரிடம் எப்படி சொல்வாள்.

"அப்படியெதுவும் பிரச்சினை இல்லைப்பா"

அவர் அவள் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. "பார் ஆர்த்தி. பொதுவா அவன் அப்படி ஒரு கோபத்தை ரொம்ப நாளைக்கு வச்சுகிட்டிருக்கிற ரகம் அல்ல. அப்படி விடாமல் கோபத்தை வச்சிருக்க நீ என்ன செய்தாய்?"

ஆர்த்தி மௌனம் சாதித்தாள்.

"ஒன்னு நீ சொல்லு, இல்லாட்டி அவன் கிட்ட போய் நான் கேட்டுக்கறேன். தெரியாமல் நான் விடப் போறதில்லை."

அவள் கண்களில் லேசாக நீர் திரண்டது. அவர்களுக்குள் இருந்த விரிசலுக்குக் காரணம் அறிந்திருந்த பவானி அவருக்குப் பின்னால் இருந்து சொல்லாதே என்று சைகை காண்பித்தாள். சிவகாமியைப் பற்றித் தவறாகச் சொல்பவர்களை அவர் எப்படி வெறுத்திருக்கிறார் என்பதை அவள் அறிவாள்.

"சரி நான் ஆகாஷ் கிட்டயே போய் கேட்டுக்கறேன்…." சந்திரசேகர் தீர்மானமாக எழுந்தார்.

தந்தையின் கைகளைப் பிடித்து நிறுத்திய ஆர்த்திக்குக் கண்களில் திரண்ட நீர் வழிய ஆரம்பித்தது. பவானியின் சைகையையும் மீறி அவள் அவரிடம் உண்மையைச் சொல்ல நினைத்தாள். ஆகாஷ் வாயால் அவர் அதைக் கேட்பதை விட அவள் வாயால் கேட்பதே நல்லது என்று தோன்றியது.

"அப்பா, அம்மாவோட சாவு…. இயற்கையாய் இருக்கலைப்பா. அவங்க சாவுக்கு…. சாவுக்கு பெரியத்தை காரணமாய் இருப்பாங்களோங்கற சந்தேகம் எனக்கு இருந்தது. அதைத் தெரிஞ்ச நாள்ல இருந்து அவர் என் கிட்ட சரியாய் பேசறதில்லை….."

பவானிக்கு ஒரு கணம் இதயத் துடிப்பு நின்று போனது. சந்திரசேகர் முகத்தில் முதலில் நம்ப முடியாமை, பின் அதிர்ச்சி, ரௌத்திரம் எல்லாம் தொடர்ந்து தெரிந்தன. கோபத்தில் உடல் லேசாக நடுங்க மகளை ஓங்கி அறைய கையை அவர் உயர்த்த, பவானி பாய்ந்து வந்து அவர் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

பவானியை வெறித்துப் பார்த்தபடி சில வினாடிகள் நின்ற சந்திரசேகர் பின் பார்வையை மகள் மீது திருப்பினார். அவர் பார்வையில் புது மனிதரைப் பார்த்தாள் ஆர்த்தி. உண்மையைச் சொல்லி ஆகாஷிற்கு அடுத்ததாக இன்னொரு எதிரியை சம்பாதித்துக் கொண்டோம் என்பது ஆர்த்திக்குப் புரிந்தது. அவர் கண்கள் தீப்பிழம்பாய் அவளைச் சுட்டன. ஒரு அற்பப்புழுவைப் பார்ப்பது போல மகளைப் பார்த்துக் கேட்டார். "எங்கக்காவுக்கு உங்கம்மாவைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு?"

அந்தக்குரலில் இருந்த கடுமை ஆர்த்தியை வாய் திறக்க விடவில்லை. அவரை அவ்வளவு கோபத்தில் இதுவரை பார்த்திராத அவளுக்கு பயமாக இருந்தது. கோபத்தின் உச்சத்தில் இருந்த சந்திரசேகர் மகளை மறுபடியும் கேட்டார். "சொல்லு"

"எனக்கு …. தெரியலை…. சொத்து காரணமாய் இருக்கும்னு…." என்று தட்டுத் தடுமாறிச் சொல்லி தாத்தாவின் பெயரைச் சொல்ல வந்த ஆர்த்தி அப்படியே நிறுத்திக் கொண்டாள். சொன்னால் இந்த வயதான காலத்தில் தாத்தாவையும் பாட்டியையும் வெளியனுப்பி விட்டால் அவர்களுக்கு யாருமில்லை. சற்று முன் தான் பஞ்சவர்ணத்தைப் போகச் சொல்லி இருக்கிறார்கள். அவளுக்காவது மூர்த்தி இருக்கிறான். ஆனால் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் போக போக்கிடம் கிடையாது…..

"சொத்து…." என்ற சந்திரசேகரின் உதடுகள் பிதுங்கி முகம் கோணியது. மகளை வினோதமாகப் பார்த்தார். ஆனால் சிறிது நேரத்தில் மகள் முகத்தில் தெரிந்த துக்கம், வெகுளித்தனம் எல்லாம் அவரை முழுக் கோபத்தையும் அவள் மேல் காண்பிக்க முடியாமல் தடுத்தன. அவரால் அவள் மீது கோபித்துக் கொள்ள முடியாது என்று தோன்றியது. மெள்ள கோபம் வடிந்தவர் முகத்தில் சோர்வு தெரிந்தது.

அவள் அருகில் உட்கார்ந்தவர் கண்கள் லேசாய் ஈரமாயின. "அவன் அக்காவோட ரத்தம். அதனால தான் இத்தனை ஆனதுக்கப்புறமும் உன் கிட்ட மனிதாபிமானத்தோட நடந்திருக்கான் ஆர்த்தி. உன்னை டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போயிருக்கான்… இதைப் பத்தி ஒரு வார்த்தை யார் கிட்டயும் சொல்லலை…."

தந்தையின் கோபம் சற்று குறைந்ததால் அவர் தோளில் சாய்ந்து ஆர்த்தி வாய் விட்டு அழுதாள். அவளை ஒரு கையால் அணைத்துக் கொண்ட சந்திரசேகர் மகள் பெயரைத் திரும்பத் திரும்ப சொன்னார். "ஆர்த்தி…. ஆர்த்தி…"

அவர் கண்கள் அவர் அறை சுவரில் பெரியதாகத் தொங்கிய அவரது தந்தை தர்மலிங்கத்தின் படத்தின் மீது சிறிது நேரம் தங்கியது. பின் உணர்ச்சிகரமாக மகளிடம் பேச ஆரம்பித்தார்.

"ஆர்த்தி. நீ சொத்து பத்தி பேசினாய். அத்தனை சொத்தும் எங்க பரம்பரை சொத்து அல்ல. எங்கப்பா சம்பாத்தியம். எங்கப்பா ஒரு ஏழை விவசாயியோட மகன். அவரோட அம்மாவை சின்ன வயசிலயே இழந்துட்டு, அவரோட அப்பா வயசான காலத்தில் ஒரு கல்யாணம் செய்துகிட்டு அந்த சித்தி கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெறும் கையோட ஊட்டிக்கு ஓடி வந்தார். இங்கே பல இடங்கள்ல எடுபிடியாய் வேலை பார்த்தார் பிறகு ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணான எங்கம்மாவைக் கட்டிகிட்டார். எங்கக்கா பிறந்த பிறகு சின்னதாய் வியாபாரம் செய்ய ஆரம்பிச்சார். அப்புறம் அவர் தொட்டதெல்லாம் பொன்னாச்சு. நாலைந்து வியாபாரம் செய்ய ஆரம்பிச்சார். அதிலேயும் நல்ல லாபம் வர ஆரம்பிச்சது. அத்தனை அதிர்ஷ்டத்துக்கும் அக்கா தான் காரணம்னு எங்கப்பா உறுதியா நம்பினார். ‘அவ வளர வளர என் கிட்ட இருந்த பணமும் வளர ஆரம்பிச்சுது’ன்னு என் காது படவே பல தடவை சொல்லியிருக்கார்."

"பெரியக்காவுக்கு அப்புறம் சின்னக்கா, நான் எல்லாம் பிறந்தோம். எங்கம்மா நான் பிறந்த கொஞ்ச காலத்திலேயே இறந்துட்டாங்க. எங்கப்பாவுக்கு சின்னக்கா மேலயோ, என் மேலயோ பெருசா பாசம் இருக்கலை. அவரைப் பொறுத்த வரைக்கும் பெரியக்கா ஒருத்தி தான் அவரோட அதிர்ஷ்டக் குழந்தை. அழகு, புத்திசாலித்தனம், தைரியம்னு எல்லாமே அக்கா கிட்ட இருந்ததால் அவருக்கு அவள் மேலிருந்த பாசம் கூடிகிட்டே வந்தது. எனக்கும் சின்னக்காவுக்கும் அவள் தான் அம்மா ஸ்தானத்துல இருந்தாள். எது வேணும்னாலும் அப்பா கிட்ட நாங்க நேரா கேட்டதில்லை. அக்கா மூலமா தான் கேட்போம். அக்காவுக்கு மட்டும் அவர் எதுவும் இல்லைன்னு சொன்னதில்லை…"

"எனக்கு கிட்டத்தட்ட எட்டு வயசு இருக்கறப்ப எங்கப்பா வாழ்க்கையில ஒரு பொண்ணு வந்தா. பேரு மாலினி. பார்க்க அழகாய், கவர்ச்சியாயிருப்பாள். அப்பாவை அவள் வசியம் பண்ணிட்டாள். ஆரம்பத்துல நாங்க பெருசா கண்டுக்கலை. ஆனா கடைசில அவளை அப்பா இந்த வீட்டுக்கே கூட்டிகிட்டு வந்துட்டார். அவளோட அண்ணன் ஒரு பெரிய ரௌடி. அவனும் அவள் கூடவே இந்த வீட்டுக்கு வந்துட்டான். வீட்டுல அவங்க ராஜாங்கம் நடக்க ஆரம்பிச்சுது. பெரியக்கா மேல உயிரையே வச்சிருந்த எங்கப்பா அவளை நேரா பார்த்துப் பேசறதைக் கூட கை விட்டுட்டார்…."

சந்திரசேகர் தன் தந்தையின் படத்தையே பார்த்துக் கொண்டு சில வினாடிகள் சொல்வதை நிறுத்தினார். அவர் அந்தக் காலத்திற்கே போய் விட்டது போல் தோன்றியது. இது வரை கேள்விப்பட்டிராத இந்த விஷயத்தை ஆர்த்தியும் பவானியும் கேட்டு ஆர்வத்துடனும், திகைப்புடனும் இருந்தார்கள்.

சந்திரசேகர் தொடர்ந்தார். "அந்த மாலினிக்கும், அவளோட அண்ணனுக்கும் பெரியக்கா ஒருத்தி தான் எதிராய் நின்னா. அக்கா யாருக்கும் பணிஞ்சு நடக்கற ரகம் இல்லை. அதனால அவளை இந்த வீட்டுல இருந்தே அனுப்ப அவங்க தீர்மானிச்சாங்க. எங்கப்பா கிட்ட பேசி அவரை ஒத்துக்கவும் வச்சுட்டாங்க. அப்பா எங்க மூணு பேரையும் இன்னொரு வீட்டுக்கு அனுப்ப முடிவு செஞ்சார். அக்காவைக் கூப்பிட்டு எங்களை அங்கே போகச் சொன்னார். என்ன வேணுமோ அதை எங்களுக்கு அங்கே அனுப்பறதா சொன்னார். அக்கா "என் பிணம் தான் இந்த வீட்டை விட்டுப் போகும். உயிரோட நான் வெளியே போக மாட்டேன்"னு சொன்னதோட வீட்டுல இருந்துட்டே சாப்பிடாம சத்தியாகிரகம் செய்ய ஆரம்பிச்சா"

"அக்கா ரெண்டு வேளை சாப்பிடலைன்னு ஆனதுக்கப்பறம் அப்பாவுக்கு ஒரு மாதிரியாயிடுச்சு. என்ன தான் அந்த மாலினி மேல மோகம் இருந்தாலும் அவர் மனசு கேட்கலை. அக்காவோட பிடிவாதம் தெரிஞ்ச அவர் அவள் கிட்ட "உங்களுக்கு அங்கே போனாலும் எந்தக் குறையும் வைக்க மாட்டேன்" அப்படி இப்படின்னு சொல்லி அனுப்ப ஆன வரைக்கும் முயற்சி செய்தார். அக்கா அவர் கிட்ட ஒரு வார்த்தை பேசலை. அவர் முகத்தை நேரா பார்க்கலை… சுவத்தைப் பார்த்துட்டே உட்கார்ந்திருந்தாள். நானும் சின்னக்காவும் அவள் பின்னால் கூனிக்குறுகி உட்கார்ந்திருந்தோம். எனக்கு பயம்.. அவள் சாப்பிடாம செத்துப் போயிட்டா எங்களுக்கு யாருமில்லாமப் போயிடும்னு…. நாங்களும் அவளைக் கெஞ்சினோம். அக்கா அழுத்தக்காரி. அமைதி இழக்கலை. அசரலை….."

"அன்னைக்கு ராத்திரி அக்காவோட மூணாவது வேளை பட்டினி. அப்பாவுக்கு தூங்க முடியலை. அவர் மறுபடி வந்து அவள் கிட்ட பேசிப்பார்த்தார். அக்கா அவர் சொன்னதைக் கேட்ட மாதிரியே காமிச்சுக்கலை. அப்பா அப்படிக் கெஞ்சறது அந்த மாலினிக்குப் பிடிக்கலை. அப்பாவோட சப்போர்ட் தனக்கு இருக்குங்கற கர்வத்துல அவள் முட்டாள் தனமாய் ஒரு காரியம் செஞ்சாள். ‘என்ன திமிர் இவளுக்கு. ஒரு பொண்ணுக்கு இவ்வளவு திமிர் ஆகாது’ன்னு சொல்லி கோபத்துல அக்காவை ஓங்கி ஒரு அறை அறைஞ்சா. எங்கப்பா அக்காவை சின்ன வயசுல இருந்து ஒரு அடி அடிச்சதில்லை. அந்த ஒரு நிமிஷத்துல அவர் மாறுன விதத்தை என்னால இன்னும் நம்ப முடியலை. நரசிம்மாவதாரம் எடுத்துட்டார். அந்த மாலினி மேல இருந்த மோகம் எல்லாம் அந்த நேரத்துல காணாமல் போயிடுச்சு. "என் பொண்ணு மேல கை வைக்கறயாடி நாயே"ன்னு அந்த மாலினியை அடிக்க ஆரம்பிச்சவர் அவள் மயக்கம் போட்டு கிழிஞ்ச சாக்காய் விழற வரைக்கும் விடலை. தடுக்க வந்த அவள் அண்ணனுக்கு நல்லாவே அடி விழுந்தது. அந்த நேரத்துல அவரு மனுஷனாவே இருக்கலை. நான் என் வாழ்க்கைல அப்படியொரு மனுஷன் பேயாட்டம் ஆடினதைப் பார்த்ததில்லை….அதுக்கப்புறம் அந்த ரெண்டு பேரையும் நான் பார்க்கலை. கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அப்பா அவங்களை ஊரை விட்டே அனுப்பிச்சிட்டாரு…. அப்புறம் அப்பா பழையபடி மாறிட்டார்….."

"அந்த நாள்களைப் பத்தி அப்புறம் அவரும் பேசலை. அக்காவோ, நாங்களோ பேசலை. கடைசில அவர் சாகறதுக்கு கொஞ்ச நாள் முன்னால் உயில் எழுதப் போகிறதுக்கு வக்கீல் தேசிகாச்சாரியை வரச் சொல்லிட்டு அக்காவைக் கூப்பிட்டு பேசினார். நான் அவங்க பேசறதை வெளியில இருந்து கேட்டேன். அப்பா சொன்னார். "சிவகாமி நான் சொத்து எல்லாத்தையும் உன் பேருக்கே எழுதிடலாம்னு இருக்கேன். அப்புறமா நீயா பார்த்து உன் தம்பிக்கும் தங்கைக்கும் என்ன தரணும்னு நினைக்கிறியோ அதைத் தந்துடு"

"அக்கா கேட்டா. "ஏன் அப்படி?"

"அப்பா கொஞ்ச நேரம் எதுவும் சொல்லலை. பிறகு சொன்னார். "அமிர்தம் புருஷனுக்கு வியாபார அறிவு இருக்கற மாதிரி தெரியலை. அவளுக்கும் போதாது…"

"சரி சந்துரு"ன்னு அக்கா கேட்டாள். அப்பா தயங்கிட்டே சொன்னார். "என் தாத்தாவுக்கும் வயசான காலத்துல ஒரு வைப்பாட்டி இருந்ததா எங்கப்பா சொல்லுவார். எங்கப்பாவும் வயசான காலத்துல ஒருத்தியைக் கட்டிகிட்டு என்னைத் துரத்திட்டார். நானும் ஒரு காலத்துல அந்த மாலினி கிட்ட ஏமாந்து போயிட்டேன்னு உனக்குத் தெரியும். இது எங்க பரம்பரையிலயே வர்ற வியாதி மாதிரி எனக்குத் தோணுது சிவகாமி. நான் மாறுறதுக்கு நீ இருந்தாய்… இல்லாட்டி என்ன ஆயிருக்கும் யோசிச்சுப் பார். எனக்கென்னவோ சந்துருவும் அப்படியே ஆயிடுவான்னு தோணுது சிவகாமி…."

சொல்லும் போது சந்திரசேகரின் குரல் தானாக வலுவிழந்து தோய்ந்தது. பவானி அவளையறியாமல் இரண்டடி விழகினாள்.

"…அக்கா அது பைத்தியக்காரத்தனம்னா. நான் அப்படி ஆக மாட்டேன்னு சொன்னாள். அப்பா ஒத்துக்கலை. "சொத்து அவனுக்கு எழுதி வச்சா கை மாறி போயிடும்னு எனக்குப் பயமாயிருக்கு சிவகாமி. அவனுக்கும் அமிர்தத்துக்கும் நீ அக்கா இல்லை. அம்மா மாதிரி. நீ நியாயமானவள். நீயா பார்த்து அவங்களுக்கு அப்புறமா கொடு"ன்னார். அக்கா சொன்னாள். "அப்பா நான் நியாயமானவளா இருக்கலாம். என் குழந்தைகள் எப்படி இருப்பாங்கன்னு நான் எப்படி சொல்ல முடியும். பணம் பத்தும் செய்யும்பா. அவங்க மனசு பிறகு மாறலாம். அதெல்லாம் வேண்டாம்…"னாள். கடைசில இந்த மாதிரி உயில் எழுத அப்பாவுக்கு யோசனை சொன்னவளே அவள் தான் ஆர்த்தி. அன்னிக்கு அவள் அவ்வளவு உஷாரா இல்லாம இருந்திருந்தா சொத்து எல்லாம் மாலினி கைக்குப் போயிருக்கும். அப்பா சொன்னதுக்கு அக்கா ஒத்துகிட்டிருந்தாலும் சொத்து அக்கா கைக்குப் போயிருக்கும். இந்த சொத்து எனக்கு அவள் போட்ட பிச்சை ஆர்த்தி. அந்த சொத்தும் இத்தனை மடங்கா பெருகுனதும் அவளால தான். அவளைப் பார்த்து இந்தச் சொத்துக்காக கொலையே பண்ணியிருப்பாள்னு சொல்றியே ஆர்த்தி…."

(தொடரும்)

About The Author

2 Comments

  1. நிஷா

    கதை நன்றாக இருக்கிரது. இக்கதையை நான் ஆரம்பத்திலிருந்து படித்து வருகிறேன். வாரம் ஒருமுரை என்பது அதிகம் காத்திருக்க வேண்டி இருந்தாலும் அடுத்து என்ன எனும் ஆவலைத்தூண்டி விட்டபடி முடிவு எப்படி இரக்கும்.

Comments are closed.