மரணம் உங்கள் எதிரியா? தோழனா?

(சுவாமி சத்ய வேதாந்த் அவர்கள் உரையின் தமிழாக்கம்)

உயிரில்லாத உடலாக அம்மா என் முன்னே கிடந்த போது எனக்கு எட்டு வயது. அதுதான் நான் முதலில் பார்த்த மரணம். சாந்தமான ஒரு புன்னகையோடு அம்மா செத்துப் போயிருந்தாள். அம்மா இறந்து போனாள் என்றே நம்ப முடியாமல் தடுமாற வைக்கிற அற்புதமான, இயற்கையான புன்னகை. அன்றிலிருந்து இறந்தவர்களைப் பார்க்கும் போதெல்லாம் சாவைப் பற்றிய பயமோ அல்லது வேறு எதிர்மறையான எண்ணங்களோ எனக்கு வந்ததே கிடையாது.

ஒருவர் இறந்த உடனே உற்றார் உறவினர் கூடி அழுவதானாலோ, செய்தித்தாள்களில் ‘மரண அறிவித்தல்’ என்று விளம்பரப்படுத்துவதாலோ, அல்லது நகரின் சுவரெங்கும் ‘ கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டுவதாலோ, மரணம் ஒரு பொதுவான விஷயம் என்று எண்ணி விடாதீர்கள். மரணம் ரொம்ப பர்ஸனல் விஷயம்.

ஓஷோ சொன்னது போல உலக வாழ்க்கையில் இரண்டே இரண்டு அனுபவங்கள்தாம் அந்தரங்கமானவை. உங்கள் கனவுகளும் உங்கள் மரணமும். ஒருவன் போல இன்னொருவன் கனவு காணுவதும், ஒருவன் போலவே இன்னொருவன் இறப்பதும் சாத்தியமில்லாதவை. வாக்குச் சாவடியில் உங்கள் வாக்கை இன்னொருவர் போட இயலும். ஆனால் உங்கள் கனவை வேறொருவர் காண முடியாது.

மேற்கத்தியர்களின் பார்வையில் மரணம் ஒரு தீண்டப்படாத விஷயமாகவே இருக்கிறது. மரணம் பற்றிப் பேசவோ அல்லது விவாதிக்கவோ யாருமே அங்கு விரும்புவதில்லை. மரணம் பற்றிய பயமே அவர்களுக்கு அதிகம். மரணம் ஒரு கெட்ட விஷயமாக, எதிர்மறை சமாச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் முதுமை என்பதே ஒரு தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாக பிரச்சாரம் செய்யப்பட்டு, ”வயதாகாமல் தடுப்பது எப்படி, எப்போதும் இளமையாக இருப்பது எப்படி, அதற்கு என்னென்ன அழகுச் சாதனங்கள் உபயோகப்படுத்த வேண்டும்” என்றெல்லாம் வணிக வழிகளில் மக்களின் கவனத்தைத் திருப்புகிற வழிகளைப் பிரமாதமாகக் கையாளுகிறார்கள் அவர்கள்.

கீழை நாடுகளின் மரணம் பற்றிய பார்வை இதிலிருந்து மாறுபடுகிறது. ஓஷோவின் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் வழியே சொல்ல வேண்டுமென்றால் – பிறப்பும் இறப்பும் இரு பகுதிகள், நீண்ட பிரபஞ்ச வாழ்வின் இரு பகுதிகள்.

ஒவ்வொரு உள் வாங்கும் சுவாசத்திலும் நீங்கள் பிறக்கிறீர்கள், ஒவ்வொரு வெளி விடும் சுவாசத்திலும் நீங்கள் இறக்கிறீர்கள். ஆனால் இந்த இரண்டு எதிர்மறை நிகழ்வுகளுமே ஒரு வித ஒற்றுமையுடன் இயங்குவதால்தான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால் பிறக்கும்போதே நீங்கள் இறக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.

பிறப்பும் இறப்பும் ஒரே நேரத்தில் தொடர்ந்து நிகழ்கிற வாழ்வின் இரண்டு அம்சங்கள். மரணம் என்பதை வாழ்வின் எதிரியாகவே எண்ணுகிற தவறான மனப்போக்கு நம் எல்லோருக்குமே இருக்கிறது. மரணம் இல்லாமல் வாழ்வு இல்லை. ஒரு பறவையின் இரண்டு சிறகுகள் போலவே வாழ்வின் இரண்டு சிறகுகள்தாம் பிறப்பும் இறப்பும். ஒரு சிறகுடன் பறவை பறக்க முடியாது.

மரணம் உங்கள் எதிரி அல்ல. மரணம் உங்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. ஒவ்வொரு முறை மூச்சு வெளிவிடும் போதும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டுதானிருக்கிறோம். ஆனால் அதன் மீது இருக்கிற பயத்தினால்தான் மரணம் எங்கோ தொலைவில், ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் இருப்பதாக கற்பனை சுகத்தில் சந்தோஷப்பட்டுக்கொள்கிறோம்.

About The Author

3 Comments

  1. tamim

    மரணம் என்ற ஒன்றை மனிதன் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது தான் உண்மை மனிதனை படைத்த இறைவனும் அந்த மரணத்தை மறைத்தே வைத்திருக்கிறான் இன்ன கிழமை இந்த நேரத்தில் உன் உயிர் கைப்பற்றப்பட போகிறது என்பதை முன் கூட்டியே அவனுக்கு அறியத்தந்தாலும் அவன் நேர்வழிக்கு வரமாட்டான் தன்னை படைத்த இறைவனுக்கு மாறு செய்யக்கூடியவனாக மனிதன் வாழ்கிறான் நன்றிக்கெட்டவனாகவுமே இருக்கிறான்

  2. Ravi

    மரணம் என்பது உடலுக்கு மட்டுமெ உயிர் அல்லது அன்மாவிக்கு கிடயாது

  3. maayan

    மனிதர்கள் தம் வாழ்வில் 80% பகுதியை கனவுகளுக்கும், கடந்தகால நினைவுகளுக்கும் விட்டுவிடுகிறார்கள். உயிர்ப்புடன் இருக்கும் நேரங்கள் சில நாட்களே. ஆகவேதான் பெரும்பாலோனருக்கு மரணம் எதிரியாகிவிடுகிறது.

Comments are closed.