மாத்தி யோசி – இசை விமர்சனம்

பாய்ஸ் திரைப்படத்தில் கேட்ட பாடல் ஞாபகம் இருக்கிறதா.. ‘மாற்றி யோசி..’ என்று? இப்பொழுது அப்பெயரில் ஒரு புதுப்படம் வெளிவந்திருக்கிறது. நந்தா பெரியசாமியின் இயக்கத்தில், சேகர் ரெட்டியின் தயாரிப்பில், ஹரீஷ், கோபால், அலெக்ஸ், லோகேஷ் என்றொரு புதுமுகப் பட்டாளமே நடிக்கின்றது. தேசிய விருது பெற்ற கஞ்சீவரம் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜின் மகளாக நடித்த ஷம்மு, இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கவிஞர் சிநேகன் பாடல்களை எழுத, குரு கல்யாண் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அயல் தேசத்தில் அமர்ந்து கொண்டு படத்தைத்தான் பார்க்க முடியவில்லை, பாடல்களையாவது கேட்போமே!

தொம் தொம்

இசைத்தட்டின் தொடக்கத்திலேயே ஒரு சிறிய பிட் சாங். வரிகள் அதிகம் இல்லாது, கிடாரையும், கார்ட்ஸையும், ஸ்ட்ரிங்ஸையும் வைத்தே தன் திறமையைக் காடுகிறார் இசையமைப்பாளர். அழகான முயற்சி. இருந்தும், கல்யாண் அவர்கள் பாடும் பொழுது – என்னதான் இரண்டே வரிகள் என்றாலும் – மிக்ஸிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. பரவாயில்லை, இசைத்தட்டைத் தொடர்ந்து கேட்போம்.

அத்திலி பித்திலி

பாடலின் ஆரம்பத்திலேயே கிராமிய மணம் வீசுகின்றது. ஆனால், சீக்கிரமே அந்த வாசம் சென்று, வெறும் ‘குத்துப்பாடல்’ ஒன்றைக் கேட்பது போலவே இருக்கின்றது. கல்யாண், மாலதி, சுரேஷ், சதா என்று ஒரு கூட்டமே சேர்ந்து இப்பாடலைப் பாடியிருக்கிறார்கள். "இதுவும் ஒரு பாடலா" என்றெல்லாம் கேட்க வேண்டாம். பாடலாசிரியர் மொத்தமும் அர்த்தமில்லாத வரிகளை எழுதியிருக்கிறார். பாட்டின் முதல் வரி என்னவென்றால், "குர்ர குர்ர கொக்கு டா!" கேட்கச் சகிக்கவில்லை. இதற்கு மேலும் இப்பாடலைப் பற்றிப் பேச வேண்டுமா ?

மெதுவாய் மெதுவாய்

ஒரு மென்மையான மெலடியைத் தர நினைத்திருக்கின்றார் இசையமைப்பாளர். மென்மையான பீட்ஸ், புல்லாங்குழல் என்று வாத்தியங்களை எல்லாம் சரியாய்ப் பயன்படுத்தியவர், பீட்ஸில் அத்தனை அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை போலும்! விளைவு – கேட்டுக் கேட்டு சலித்துவிட்ட மெட்டைக் கேட்பது போலவே இருக்கிறது. ராஜகோபால் "மெதுவாய் மெதுவாய்" என்று மெதுவாய்ச் சொல்லச் சொல்ல பாடல் ஆரம்பிக்கிறது. அதன் பிறகு கார்த்திக்கும் ஜெயாவும் சிநேகனின் காதல் வரிகளுக்கு உயிர் தருகிறார்கள். ஜெயாவின் குரல் இன்னும் மென்மையாய் இருந்திருக்கலாம். இதே பாடல் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தில் வந்திருந்தால், "எத்தனை முறை ‘மெதுவாய்’ என்ற வார்த்தை வருகிறது?" என்று தொ(ல்)லைக்காட்சிகள் கேள்வி கேட்டு போட்டி ஒன்றையும் வைத்திருப்பார்கள்!

கும்மிப் பாட்டு பொண்ணு

ஹார்மோனியத்தில் ஆரம்பிக்கும் அக்மார்க் கிராமிய கும்மி. இதுவும் சிறிய பிட் சாங். கார்த்திகேயனும், குரு கல்யாணும் சேர்ந்து பாடுகின்றார்கள். வேண்டுமென்றே செகண்ட்ஸ் கொடுத்திருக்கிறார் குரு கல்யாண். வேண்டுமென்றே கொஞ்சம் சுருதி சேராது விட்டாரா என்று அவர்தான் சொல்லவேண்டும். ரொம்பவும் "மாத்தி யோசி"க்கிறார் போல!

மாத்தித்தான் யோசிடா

தாளம் போட வைக்கும், தலைப்பைச் சுட்டிக் காட்டும் பாடல். பாடல் முழுவதும் பீட்ஸின் ஆதிக்கம்! சத்யனும், பிரஷாந்தினியும் பாடலைப் பாட, திடீர் திடீர் என்று யாரெல்லாமோ விதவிதமாய் உச்சஸ்தாயியில் பிதற்றுகிறார்கள். ஒன்றும் புரியவில்லை! ரொம்பவும் வித்தியாசமான பாடல்.

அச்சம் தவிர்

அப்பாடா! பாடல் வரிகள் புரியாவிட்டாலும், இது நமக்குத் தெரிந்த பாரதியாரின் ஆத்திச்சூடி என்று. கல்யாண் புரியும்படியாகவே பாடுகிறார். இருந்தும், முன்பு சொன்னது போலவே இதிலும் மிக்ஸிங் இன்னும் கொஞ்சம் நன்றாக அமைந்திருக்கலாம். மீண்டும் கொஞ்சம் பீட்ஸின் ஆதிக்கம் அதிகம். ஆங்காங்கே வயலின் கூட கேட்கலாம். பாராட்டிற்குரிய விஷயம் என்னவென்றால், பாரதி என்றால் நம் கண் முன் வரும் வீரமும் துடிப்பும் இப்பாடலிலும் தெரிகின்றன.

தமிழ் சினிமா உலகிற்கு வருகை தரும் இன்னொரு புது இசையமைப்பாளர் – வருக வருக! முதல் முயற்சி என்பதால், சிறு சிறு தவறுகளைப் பொறுத்தருள்வோம். இசைக்கருவிகளை நன்றாகவே உபயோகித்திருக்கின்றார். இருந்தாலும், கொஞ்சம் தொழில்நுட்பத்திலும், குரல்களை இசையோடு கலப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தினால், பாடல்கள் இன்னும் அம்சமாகவே அமையும்! இன்னும் நிறைய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிட்டட்டும். வாழ்த்துக்கள்!

About The Author