மின் விசிறிகள்

வீட்டுக்கு வெளியே அனல் பறக்கும் கோடை வெப்பம் தாங்க முடியாமல் வீட்டுக்கு உள்ளே நுழைந்ததும் நாம் செய்யும் முதல் வேலை மின் விசிறியின் குமிழை அழுத்தி அதைச் சுழலச் செய்வதுதான். விசிறி சுழலத் துவங்கியதும் நாம் குளிர்ச்சியும் வசதியும், மகிழ்ச்சியும் அடைகிறோம். மின்விசிறியின் கண்டுபிடிப்பு பற்றி அறிந்துகொள்வதும் உண்மையில் அத்தகைய மகிழ்ச்சியளிப்பதுதான்.

பழங்காலந்தொட்டே மனிதன் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கப் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தான். முன்னாளில் மர இலைகளும், பறவைச் சிறகுகளும் விசிறியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பனை ஓலைகளை நீரில் நனைத்து விசிறியாகப் பயன்படுத்தியபோது மனித உடலுக்குக் குளிர்ச்சியும் சுகமும் சேர்ந்து கிடைத்தன.

வௌவாலின் சிறகுகளைப் பார்த்து வியந்த ஜப்பானியர்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டில் அத்தகைய விசிறிகளை உருவாக்கினர். பெண்கள் அந்த விசிறியை அணிகலனாகவும் பயன்படுத்தினர்; வண்ணம் பூசி அவற்றை அழகுபடுத்தினர். சீனர்களும் அத்தகைய விசிறிகளைப் பின்னர் உருவாக்கினர். பின்பு போர்ச்சுகல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும் இத்தகைய விசிறிகள் பரவின.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். இதன் தொழில்நுட்பம் மிக விரைவாகப் பிற நாடுகளுக்கும் பரவி மக்களிடம் பெரும் புகழ் பெற்றது. இன்று இந்தியா உட்படப் பல நாடுகளிலும் தொங்கும் மின்விசிறி மற்றும் மேசை மின்விசிறி ஆகிய இரண்டும் பெருமளவுக்குப் பயன்பாட்டில் உள்ளன.

About The Author