முகங்கள் (6)

பேருந்தை விட்டு இறங்கி குன்றின் மேல் இருக்கும் எங்களின் கோவிலுக்கு, அதான், டான் டோக் செங் மருத்துவமனைக்கு ஜாலான் டான் டோக் செங் வழியே ஏற ஆரம்பித்தேன். எங்கள் கட்டடத்தின் அருகில் என்னுடன் வேலை செய்யும் பரிச்சயமான முகங்கள் தென்பட்டன். அங்கிருந்த இருக்கையில் வேலரி அமர்ந்து மூக்கை மூக்கைச் சிந்திக் கொண்டும் விசும்பிக் கொண்டுமிருந்தாள். அங்கே அவளைத் தேற்றிக் கொண்டிருந்த திருமதி மேரியின் அருகில் சென்று என்னவென்று விசாரித்தேன். "அதை ஏங்கேக்கற செல்வி, அவ குடியிருக்கிற அறையை நாளைக்கே காலி செய்யச் சொல்லிட்டானாம் வீட்டுக்காரன். அவ கூட தங்கியிருக்கிற மத்தவங்கள எல்லாம் ஒண்ணும் சொல்லல. இவ மட்டும் தானே நர்ஸா இருக்கா. எங்க போவேன், ஒரே நாள்ல எப்பிடி வேற எடம் கெடைக்கும். போற எடத்துலயெல்லாம் நர்ஸூன்னு தெரிஞ்சா வாடகைக்கு அறை எப்படிக் கிடைக்கும்னு ஒரேயடியா அழுவுறா, பேசாம மணிலாவுக்கே திரும்பிப் போயிடறேன்னு சொல்றா. அங்க ஊருலயும் ஏகப்பட்ட கடனிருக்காம். இங்கேயும் கொடுக்க வேண்டியது இருக்காம். இந்த நிலையில வேலையை எப்பிடி விட முடியும். அதான் குழப்பமாயிருக்கு அவளுக்கு. பாவம்பா." "இத்தகைய சிலுசிலுப்பிற்கெல்லாம் வேலையை விட்டால், பிறகு சிங்கையில் தாதியரே இருக்க முடியாது" என்றேன் வேலரியிடம் நான்.

ஒவ்வொருவருக்கும் எத்தனை பிரச்சனை, நெருக்கடி என்று நினைக்கும் போது மிகவும் பாவமாய்த் தானிருக்கிறது. இன்று வேலரியின் பிரச்சனையைப் பார்த்ததும் தைரியமாய் பேசும் இதே திருமதி மேரி, போன வாரம் சோகமே ஒருவாக அமர்ந்திருந்தார். தன் விலாசத்திற்கு மொட்டைக் கடிதம் வந்ததாய்ச் சொன்னார். ‘கட்டடத்தை விட்டே வெளியேறி விடு, இல்லையென்றால் விளைவுகள் விபரீதமாய் இருக்கும்,’ என்று எழுதியிருந்த கடிதத்தைக் காட்டினார். அன்றே சிங்கப்பூரை விட்டுவிட்டு திரும்ப தாயகம் திரும்பி விடுபவர் போலத் தான் பேசினார். அப்போதே அவருக்குக் கொச்சியில் போய் இறங்கிவிட மாட்டோமாவென்று இருந்தது. ஏதும் செய்பவன் மொட்டைக் கடிதத்திற்குள் முகத்தை மறைத்துக் கொள்ள மாட்டான் என்று சொல்லி நாங்கள் எல்லோருமாய் சமாதானம் செய்தோம். அத்துடன் அவருடன் யாராவது ஒவ்வொரு நாளும் துணைக்கு போனோம். இன்று அவருக்குத் தன் பிரச்சனை சிறிதாகிவிட்டது போலும். மற்றவர் பிரச்சனையைக் கேட்டது ஒரு காரணமென்றால், ஒரு வாரகாலம் செய்யும் ஜாலமும் ஒரு காரணம்.

ஒரேயடியாய்த் தலைக்கு மேல் தூக்குவதற்கும் ஒதுக்குவதற்கும் மக்களுக்கு எவ்வளவு எளிதில் வருகிறது என்று நினைக்கும் போது என்னால் வியக்காமல் இருக்க முடிவதில்லை. அச்சம் தேவைதான், அது எச்சரிக்கையுணர்வாக இருக்கும் வரை, நெருக்கடியான நேரத்தில் தாதியரை ஒதுக்கும் இதே சமூகம் பாதுகாப்பிற்காக விதிக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை விதிகளை மட்டும் மீறுவது ஏன்?

காய்ச்சல் கண்டுவிட்டதாலோ, சார்ஸ் உள்ள வெளிநாடுகளுக்குப் போய் வந்தாலோ முன்னெச்சரிக்கைக்காக இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தங்கும்படி சுகாதார அமைச்சு அதிகாரப் பூர்வ கட்டளை பிறபித்தும் சிலர் அலட்சியம் செய்து வெளியில் போகின்றனர். வேறு சிலரோ வீட்டில் இருக்கிறார்களா என்று சோதிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தொலைபேசியில் அழைத்தால், தொந்தரவாக நினைக்கிறார்கள். வெடுவெடுவென்று பேசுகிறார்கள்.

நேரமாகிவிட்டதால், வேலரியைச் சமாதானப் படுத்தி அழைத்துக் கொண்டு எல்லோரும் அவரவர் பணிக்குத் திரும்பினோம். கடைசியாய் தங்க இடம் கிடைக்காவிட்டால், மெய்ஃபங் தன் வீட்டில் தற்காலிகமாக வேலரியைத் தங்க வைக்க ஏற்பாடு செய்து தருவதாக ஒத்துக்கொண்டாள். அதுவும் இல்லையானால் திருமதி அலி தன் வீட்டில் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னார். ஒரு பெரிய தரை வீட்டில் அவர் வசிக்கிறார்.

மேலும் இரண்டு வாரங்கள் சென்றது. ஒரு நாள் இடைவேளை உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எங்கள் பிரிவின் செயற்கைக் கோளாக அறியப்பட்ட மெய்ஃபெங், நடிகை முதல் பாராளுமன்றம் வரை அலசுவாள். கலகலப்பான ஒரு செய்தி சொன்னாள். "நம்ம ஜோ டே, இல்ல, அதாம்பா மீடியா கார்ப் நிறுவனத்துல பன்னிரெண்டு வருஷமா நடிகையா இருக்காளே. ‘சேஜ்ஜேயே’ (பெரியக்கா)னு கூப்பிடுவாங்க. அவளுக்கு வைத்தியம் பார்த்த சீன மருத்துவருக்குக் காய்ச்சல் சார்ஸ்னு ஊர்ஜிதம் செய்துட்டாங்க. அதுனால, ஜோவை பத்து நாளைக்கு வீட்டிலேயே இருக்க ஆணை போட்டிருக்காங்க. அவ நிச்சயம் வீட்டுலயே இருப்பா. அவ கொழந்தை பெத்துக்கலையேன்னு கவலப்படுறதும், அவளப் பார்த்து புருவத்தை வழிச்சிக்கிறதும், முடிய சரச்சிக்கிறதும்னு செய்ற இந்த ஜனங்க இது மாதிரி சில நல்ல விஷயங்களையும் அவ கிட்டயிருந்து கத்துக்கிட்டாச் சரி. நான் நினைக்கிறேன், அவள நர்ஸா நடிக்க வச்சு, நாம படற பாட்டயெல்லாம் ஒரு சீரியலா எடுத்தா நிச்சயமா பேப்பர்ல படிச்சுத் தெரிஞ்சிக்கறத விட ஒழுங்கா புரிஞ்சுப்பாங்க மக்கள்," சிரித்தபடியே சொன்னதும் நாங்களும் ஆமோதித்துச் சிரித்தோம்.

(தொடரும்)

(‘நியாயங்கள் பொதுவானவை’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author