முகமூடி – திரை விமர்சனம்

பிரச்சினை என்னவென்றால், மிஷ்கின், தான் இதுவரை எடுத்த படங்களின் மூலம், தமிழ் சினிமாவின் தரத்தைச் சற்றே உயர்த்திவிட்டார். அவர் படங்களில், கதையோடு சம்பந்தமில்லாத காட்சிகள் குறைவு. திரைக்கதையோடு ஒட்டாத, தனிக் காமெடி டிராக் தேவையில்லை என நினைப்பவர். இவற்றையெல்லாம் விட, கதைக்கும் திரைக்கதைக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுப்பவர். அவருடைய கதாநாயகர்கள் ஆங்காங்கே, கொஞ்சம், வாங்கிய காசுக்கு ஜாஸ்தியாக நடித்தாலும், அவற்றையெல்லாம் மறக்கடித்துவிட்டுக், கதையில் நம்மை மூழ்கடிப்பார். படத்திற்குப் படம், சாராயக் கடைப் பாடலோ, குத்துப் பாட்டோ ஒன்று இருந்தாலும், இரண்டரை மணி நேரப் படத்தில், மொத்தமாக இரண்டு/மூன்று பாடல்களுக்கு மேல் இருக்காது. அதற்குக் காரணம், திரைக்கதை, பார்ப்போரைக் கவர்ந்து ஈர்க்க வேண்டும் என்பதுதான்.

இவற்றால்தான் மிஷ்கினின் ‘முகமூடி’, அநேக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத்தான் ஆரம்பத்திலேயே ‘பிரச்சினை’ என்றேன்! அதாவது, எதிர்பார்ப்பை நிறைவேற்றாவிடில், ஒரு நல்ல படத்தில் கூட, நிறையக் குறைகள் தெரிகின்றன.
முதலில், நிறைகளைப் பற்றிப் பேசலாமா, குறைகளைப் பற்றிப் பேசலாமா? நல்லதிலிருந்தே ஆரம்பிப்போமே, தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம் எனும் பெயரில் வந்திருக்கும் முகமூடியில், கதை பெரிதாக இல்லை என்றாலும், இருக்கும் கதையை அழகாய்ச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

முதல் ப்ளஸ் ஜீவா! அவரது கதாபாத்திரத்தில், கனக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆரம்பத்தில், குங்ஃபு வித்தையில் கலக்குவதாகட்டும், பிறகு, நாயகி பூஜா ஹெக்டேவைத் துரத்துவது ஆகட்டும், நண்பன் இறந்ததும், மனம் வருந்தி கயவர்களைப் பிடித்தே தீர வேண்டும் என்று போராடுவது ஆகட்டும், ஜீவா சூப்பர்!

அடுத்து என்னைக் கவர்ந்த விஷயம், கேவின் பின்னணி இசை. பின்னணி இசை மட்டுமில்லை, "வாயை மூடி சும்மா இருடா!" பாடலும், ஒருவித வித்தியாசமாய், நன்றாகவே இருக்கிறது! "பார் அந்தம்" பாடலை என்னால் ரசிக்க முடியவில்லை. மிஷ்கின்! ஏன் ஐயா படத்திற்குப் படம் இப்படியொரு ஒரு பாடலைச் சேர்க்கிறீர்?

கடந்த நாலு மாத காலத்தில், நான் பார்க்கும் மூன்றாவது சூப்பர் ஹீரோ படம் இது. மே மாதத்தில் ‘அவென்ஜர்ஸ்’, பிறகு ஜூலையில் ‘தி டார்க் நைட் ரைஸஸ்’. முகமூடி பார்ப்பதற்குத் திரையரங்குக்குச் சென்றபொழுது, என் மனதில் இருந்த பயமெல்லாம், ஹாலிவுட்டின் ஆதிக்கம் நம் தமிழ்ப் படத்தில் இருக்கக்கூடாதே என்பதுதான். மிஷ்கின் அந்த விஷயத்தில், அற்புதமாகச் சாதித்து விட்டார்! படம் முழுவதும் நம்மூர் மண்வாசம்தான் வீசுகின்றது! குறிப்பாக, நாயகனின் தாத்தா, (அவர் நாடகங்களுக்குத் துணிகளை வடிவமைத்துத் தைப்பவர்) ஜீவாவின் சூப்பர் ஹீரோ காஸ்ட்யூமை வடிவமைக்கும் காட்சி. எந்த ஒரு மேற்கத்திய ஆதிக்கமும் இல்லாமல், மிகவும் அழகாய் இருந்தது!

இன்னும் ஒரு பாராட்ட வேண்டிய விஷயம், ஒரு சாதாரண மனிதன் எப்படி சூப்பர் ஹீரோ ஆகிறான் என்பதை, மிகவும் இயல்பாகக் காட்டியிருக்கிறார். ‘பேட்மேன் பிகின்ஸ்’ திரைப்படத்தோடெல்லாம் தயவு செய்து ஒப்பிட வேண்டாம்! க்ரிஸ்டஃபர் நோலனின், தியேட்ரிகாலிடியெல்லாம் முகமூடியில் கிடையாது. மிஷ்கின், படத்தை மிகவும் எளிமையாகவே கையாண்டிருக்கிறார். பக்க பலமாக வரும் மற்ற நடிகர்கள் நாசர், செல்வா, ஜீவாவின் நண்பர்கள், எல்லோருமே அவர்தம் பாத்திரங்களைச் சரிவரச் நடித்திருக்கிறார்கள். மிஷ்கினின் பெயரைச் சொல்லும் கேமரா ஷாட்டுகளும் படத்தில் நிறைய உண்டு. மனிதர்கள் நகரும்போது, அவர்களின் கால்களை மட்டும் காட்டுவது. காரில் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதை, தெரு விளக்குகளை மட்டும் காட்டிச் சொல்லாமல் சொல்வது. மஹேஷ் முத்துஸ்வாமியாக இருந்தாலும் (சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா), சத்யாவாக இருந்தாலும் (யுத்தம் செய், முகமூடி), ஒளிப்பதிவாளரின் வேலை வித்தியாசமாகவும், மெச்சும்படியும் அமைந்துவிடுகிறது மிஷ்கின் படங்களில்!

சரி, குறைகளுக்கு வருவோம்! முதலில் கதை! இன்னும் கொஞ்சம் கதை இருந்திருக்கலாம். அஞ்சாதே, யுத்தம் செய் போன்ற படங்களில் இருந்தளவு கதை இதில் இல்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில், எப்போது விறுவிறுப்பு அதிகரிக்கும் என நினைக்கிறோமோ, அப்போது திரைக்கதை நம் எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்க மறுக்கிறது.

இரண்டாவது மைனஸ், வில்லன் நரேனின் கதாபாத்திரம். மிகவும் வலுவான ஒரு முன்கதை இல்லை. மக்களைக் கொன்று, நகைகளைக் கொள்ளையடித்து என்னதான் செய்யப்போகிறார்?! இருபது ஆண்டுகளாக எப்படி அவர் அகப்படவில்லை? க்ளைமாக்ஸில், ‘சூப்பர்மேன், பேட்மேன்’ என்று, அமெரிக்காவின் சூப்பர் ஹீரோக்களை ஏன் மூன்று முறை வரிசைப்படுத்த வேண்டும்? இப்படி, இயக்குநரே தன் சூப்பர் ஹீரோவை, ஏன் அவர்களுடன் ஒப்பிட வேண்டும்?!

மூன்றாவது மைனஸ் கதாநாயகி. சிலை போல் இருக்கிறார்; சிலை போல் நடிக்கிறார். வேறேதும் சொல்லத் தேவையில்லை. மிஷ்கின்! நீரும் தமிழ் பேசத் தெரியாத நடிகையைத் தேடிச் சென்று விட்டீரே!

மொத்தத்தில், தமிழில் முதல் சூப்பர் ஹீரோ படம் எடுக்க வேண்டும் என்ற முயற்சியைப் பாராட்ட வேண்டும்! கண்டிப்பாக, முயற்சியில் ஜெயித்திருக்கிறார்கள்! இருந்தும், படத்தின் தரத்தை உயர்த்துவதற்கு அநேக வழிகள் இருக்கின்றன. படத்தின் குறைகளை அறிந்ததனாலோ என்னவோதான், மிஷ்கின், இன்னும் சில திரைப்படங்களில், முகமூடியின் கதையைத் தொடர்ந்து சொல்வேன் என்று கூறியிருக்கின்றார்! அம்முயற்சிகளில் மிஷ்கின், குறைகளைக் குறைப்பார் எனவும், மீண்டும் முகமூடியை வெள்ளித்திரையில் பார்ப்போம் எனவும் நம்புவோம்!

About The Author