முதல் வேலை முதல் அதிகாரி (2)

நான் போய் அவசரஅவசரமாய் ஹைமன் பகுதிக்குப் பேசி முடித்தபோது, ஐயா வந்திருந்தார். ஒரு கையில் நடைக்குச்சி, இன்னொன்றில் மழைக்கோட்டு. அதே உடையில் ஆனால் ஆளே இப்போது வேறாய்த் தெரிந்தார். சுதாரிப்பாய் தெம்புடன் ஆனால் அமைதி காத்தார். படுக்கையில் குச்சியையும் மழைக்கோட்டையும் வீசிவிட்டு ராணுவ அதிகாரியிடம் சொன்னார்.

”அத்தனை ராணுவத்தையும் நீங்களே தலைமையேத்து தெற்கு அணைக்குக் கூட்டிப் போகணும்.” ”உத்தரவு!” என்று சிப்பாய் போல சொல்லியபடி அவர் துரிதமாய் வெளியேறினார். ”தோழர் வேங், ஒரு கார் வேணுமே, உடனே வரவழைங்க!” பேசியபடி பல்வேறு ஊர்களுக்கு மளமளவென்று ஐயா பேசினார். முக்கல் முனகல் இல்லை, ஆணைகள்! எல்லாரும் அவரையே கவனித்தபடி காத்திருந்தார்கள். ”சென்ட்ரல்! டூ கிராமத்துக்கு இணைப்பு குடுங்க. அப்படியே ஷாங்ஷே, அடுத்து கூசெங்… டூ கிராமமா? யார் பேசறது? நான் தியான். கவனிங்க, மூணாமத்த தடுப்பில் இருந்து ஒரேயொரு மதகை உருவிருங்க. என்னாச்சி?

ஏற்கனவே மூணு மதகை உருவியாச்சா, நினைச்சேன் இப்டி ஏடாகூடம் பண்ணிப்புடுவீங்கன்னு, ம் சரி, அதுல ரெண்டு மதகை திரும்பச் சொருகிருங்க. போன குளிர்காலத்துலதான அதை நாம நிர்மாணித்தோம். அங்க இத்தனை விரைசலா தண்ணி சேராது. அணைப் பக்கத்துல எல்லாரும் தயாரா இருங்க. நடுராத்திரிக்குப் பிறகு இன்னொரு பெரிய பெருக்கு உங்க பக்கம் இருக்கும்!” ஒரு தொலைபேசியை வைத்துவிட்டு அடுத்ததை எடுத்தார். ஷாங்ஷே, கூசெங் ஊர்களுக்கு விலாவாரியா ஆணைகள். எந்தப் பக்கம், எந்த அணையில் உஷாரா யிருக்கணும், எந்த மதகைத் திறக்கணும், எதை மூடணும், முதலாய் எந்தக் கம்மாயை நிரப்பணும், அடுத்தது எது… நான் அவசர அவசரமாய் அந்தப் பகுதி வரைபடத்தை அவர்முன் விரித்துக் காட்டினேன், மனுசன் பார்க்கவே இல்லை. எல்லா அணையும், கம்மாயும், கால்வாயும் அவருக்கு நல்லாத் தெரிந்திருந்தது.

புருவத்தில் வழிந்த வியர்வையை தியான் வழித்தபடி, ”தோழர் வேங், நீங்களும் குன்னும் இங்க வர்ற தொலைபேசி அழைப்புகளைப் பாத்துக்கோங்க. செயலாளர் ஹாவ், நீங்களும் உங்களாட்களும் படுக்கப் போலாம். நானும், இவனும் (என்னைக் காட்டினார்) ஹைமனுக்குப் போறோம். அவங்க தெற்கத்தி அணைல சிக்கல் வந்திருக்கும்னு தோணுது.” தென்னணை பலமானது, என்றேன் நான். வடக்கணைதான் சிக்கல் தரும்னு நான் நினைக்கிறேன். நேத்து முன்தினம்தான் நான் அங்கே போயிருந்தேன், எனக்கு அது நல்லாத் தெரியும். ”சூறாவளி பாத்தியா வடகிழக்கா கிளம்பி வருது…” அடாடா அதை கவனிக்காம விட்டமே என்றிருந்தது. ”உங்களுக்கு உடம்பு அத்தனை சொகமில்லை” என்று தோழர் வேங் சொன்னார். ”நீங்க இங்க இருங்க, நா வேணாப் போயி நிலவரத்தைப் பார்க்கிறேன்…”

”உம்மால சமாளிக்க முடியாது வேய்” என்று கில்லியடித்தார் ஐயா. குச்சி, மழைக்கோட்டு சகிதம் ஐயா கிளம்ப ஒரு கெட்டி கோட்டை எடுத்துக் கொண்டு பின்னால் போனேன். வாசலில் ஜீப். ”டிரைவர் ஹைமனுக்குப் போலாம்.” அவர் தோரணையும் விரைப்பும் நம்பவே முடியாதிருந்தது. ஆனால் ஆன்லே அணை உடைந்ததையிட்டு அவர் அலட்டிக்கவே இல்லை, அதான் ஏன் புரியவில்லை. அதேசமயம் சன்சா நதியில் உடைப்புன்னதும் சுதாரிச்சாரு. அந்த நீர்வரத்து விநாடிக்கு 90 கன மீட்டர்தான். சன்சாவில் வெள்ளம் வர்றச்சல்லாம் பெரும் சேதம் வந்திருக்கு. ஆனால் இந்த அஞ்சி வருஷத்துல நிறைய வெள்ளக் கட்டுப்பாட்டுப் பணிகள் நடந்திருக்கு. நிறைய கம்மாய்கள் வெட்டி பெருகும் நீரை ஒதுக்க வழி பண்ணியிருக்கு. அதன் தாழ் பகுதிகள் மகா அகலமான வெளிகள். ஒரு 200 கன மீட்டர் வரத்துன்னாலும் தாக்குப் பிடிக்கும். 90 கன மீட்டர் வரத்துக்கு இந்தாள் பதறுது! அத்தோட நடுராத்திரியில் இன்னொரு பெருக்கு வருதுன்றாரு… இந்தாள் என்ன கடவுளா, ஜோசியரா, எப்பிடி தெரியும் அவருக்கு?

கார் போயிட்டிருந்த போது மெல்ல கேட்டு வைத்தேன். ”யோங்கன் நதி நல்ல ஆழமப்பா, ஆனால் கொள்ளளவு கம்மி” என்றார் ஐயா. ”நல்ல வேகமா தண்ணி பாயும், ஆனால் நாலே மணி நேரம் சொட்டுத் தண்ணி நிக்காது உள்ளே. நாலு மணிநேரத்தில் ஒரு உடைப்புச் சரிசெய்ய முடியுமா? முடியாது, இல்லியா… அத்தோட அந்த உடைப்புனால சேதாரம் குறைவுதான். நெடுஞ்சாலை கிழக்கால வயல்ல விளையறதெல்லாம் நீண்ட தண்டுச் செடிகள். எதுவும் தண்ணில மூழ்கிறாது. வயல் வழியா ஓடி பெரு அறுவடை வாய்க்கால்ல போயிக் கலக்கும். அங்கேர்ந்து வடக்க பார்த்துப் போகும். அந்தப் பக்கமெல்லாம் தண்ணிப் பஞ்சமான பகுதிதானே?”

”அது சரி, சன்சா நதியில் பாதி ராத்திரிக்கு மேல இன்னொரு பெருக்கு வருதுன்னீங்களே ஐயா?” அதில் அவருக்கு சந்தேகமே இல்லை. வர்ற 90 கன மீட்டர், மத்தியக் கிளையின் தண்ணி அது. வடக்கு மற்றும் தெற்கு மலைச்சாரல்கள் நல்லா தண்ணியை வெச்சிக்கிட்டும் மீறி வர்ற தண்ணி இது. மேல் தண்ணி, மலைலேர்ந்து வர்றது வந்து சேர இன்னும் மூணு மணிக்கூர், நடு நிசி ஆயிறாதா பையா?” ஐயா கொஞ்ச நேரம் பேசவில்லை. ”மலைலேர்ந்து கீழ இறங்கி தண்ணி சன்சா வருது. ஹைமன் பகுதி தட்டைபூமி மணல்வெளி. தண்ணி ஏற ஏற எங்கயும் போக முடியாது, பொங்கி வழியறதுதான்… ரொம்ப ஆபத்து.” ஹைமனை நினைத்து கவலையுடன் மௌனம் காத்தார் ஐயா. நான் பேசவில்லை. குன் சொல்லியிருக்கிறான், வியாதிக்கு நாட்டு வைத்தியன் மாதிரி, அவசர ஆபத்துக்கு தீர்வுசொல்ல ஐயா கில்லாடி வேலைக்காரர்! ரொம்ப அளக்கிறான் அவன்னு அப்ப நினைச்சது தப்பு என்று இப்ப புரிந்தது. தெளிவா தெரிஞ்சதைவெச்சி அழகா கணக்குப் போட்டுப் பேசுகிறார், பம்மாத்தோ அல்ட்டாப்போ தெரியவில்லை. ஒரு பதினோரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது ஹைமன். ஒரு மைல் தூரம் முன்னாடியே வண்டியை நிறுத்தச் சொன்னார் ஐயா. ”ரெண்டாவது கிளைக்கு வந்திருக்கு தண்ணி.” வண்டியைத் திரும்ப அனுப்பி விட்டு நடக்க ஆரம்பித்தார். நான் கூடப் போனேன்.

கருமையான இரவு, வானில் நட்சத்திரமே இல்லை, வடகிழக்கு எதிர்காற்று முட்டியது. இந்த எதிர்காத்தில் குச்சியை முன்னகர்த்தி என்ன வேகமான நடை. நான் கூடவே ஓட வேண்டியிருந்தது. ரெண்டாம் கிளையின் படுகை. நீர்ச் சலசலப்பு கேட்டது. ஓடையில் இறங்கி கால்நனைய நடந்தோம். ஹைமன் ஊருக்குப் போகாமல் நேரே தெற்கு அணையைப் பார்த்தே போனோம். விளைந்த சோளக்கதிர்களுக்கு மேலே தூரத்து மதகில் விளக்குகள் நடமாட்டம். மனுச ஒலிகளுடன் தண்ணீர் பாயும் சத்தமும் மங்கலாய். ஐயா நடைவேகம் அதிகரித்தது. நான் பதட்டத்துடன் பின்னால் ஓடினேன். மதகில் ஏறிப் பார்த்தால் இன்னும் ஒண்ணு ரெண்டு மீட்டர்அளவே கதவு தெரிந்தது. மதகை வைக்கோல்பாய், மரக்கட்டை, மணல்மூட்டை எனப்போட்டு அடைத்திருந்தார்கள். இன்னும் எடுத்துவந்தபடி இருந்தார்கள். மதகை இன்னும் உயர்த்த வேண்டியிருந்தது. எத்தனை நீளமான மனுச வரிசை, குரல் களேபரம்.

அவர்களை ஊடுருவினோம். கிழக்கால, சுத்தியும் கனமான கரை எடுத்த உயர கண்காணிப்பு குடில். எந்த வெள்ளத்துக்கும் அசங்காது. சின்ன அறையென்றாலும் நிறையப் பேர் உள்ளே. கட்சிக் குழுவின் செயலாளர் ழாய், ஹைமன் மற்றும் தியான்ஜியா பகுதிச் செயலாளர்கள், மக்கள் சபைத் தலைவர்கள்… எல்லாருமே வந்திருந்தார்கள். எல்லாருமே தயார் நிலையில் இருந்தார்கள். கனமாய் சிகெரெட் புகை, மூச்சு முட்டியது.

”ஆகா ஐயா வந்தாச்சு…” கூட்டத்தில் இருந்து உற்சாகக் குரல். கூட்டமே சிலிர்த்து எழுந்து கொண்டது. குரல்கள் ஆரவாரித்தன. ஐயா வந்தாச்சு.. வாங்கய்யா. நீங்க வந்துருவீங்கன்னு தெரியும்… தியான் வந்ததில் எந்தப் பிரச்னைன்னாலும் சமாளிச்சிக்கலாம் என்கிற ஆசுவாசம் வந்திருந்தது. என்னென்ன ஜாமான்லாம் அடைக்கக் கொண்டாந்தீங்க, அமயஞ்சமயம்னா வேலைக்கு எத்தினி ஆள் இருக்கு, நீர்மட்டம் எந்த வேகத்துல உயந்துக்கிட்டிருக்கு… எல்லாம் ஐயா விஜாரிச்சார்.

”ஒரு மணிக்கூர் முன்னால இந்தப் படுகைல இதில் பாதியளவுதான் தண்ணி கெடந்தது. இப்ப என்ன உயரம் வந்திருக்கு நீங்களே பாருங்க…” செயலாளர் சொன்னார். ஐயா யோசித்தார். ”வட கிளையில் இருந்து தண்ணி இந்தப் பக்கம் வர ஆரம்பிச்சிட்டது. விரைசலா நிலைமை சிக்கலாயிரும்… மதகுப்பக்கம் வைக்கோல் பாய்களை நிறுத்திருங்க சீக்கிரம். காத்து அடங்கறாப்லவே இல்லியே…” சிலர் அவர் சொல்லை நிறைவேற்ற ஓடினார்கள். ஐயா அறைக்குள் சுற்றுமுற்றும் பார்த்தார். ”பெரியவர் ஜியாங்கைக் காங்கலியே…?” அவர் வரணுமா, பிரச்னை பெரிசா இல்லன்னு நினைச்சம், என்றார் ஹைமன் பகுதி கட்சிச் செயலாளர். ”அப்டில்லாம் அசால்ட்டா இருந்திறப்டாது” என்றார் ஐயா. தொலைபேசிக்குப் போனார். தொடர்பு நிலையில் அது இல்லை, சரி செய்ய யாரோ போயிருந்தார்கள். ”ஊருக்குள்ள போயி பெரியவர் ஜியாங்கை யாராவது கூட்டியாங்க.” என் பக்கம் திரும்பி ஐயா சொன்னார். ”அந்தாள் கூட நீயும் போ. ஊர்த் தொலைபேசிலேர்ந்து இயக்குநர் நியூவைப் பிடி. அங்கியும் பாய்த்தடுப்பு போட்டாகணும். வேங்சியா சரிவில் விசேஷ கவனம் வேணும்னு சொல்லு.” மதகைத் தாண்டுகையில் எல்லாரும் பாய்களை உயர்த்துவதில் மும்முரமாய் இருந்தார்கள். யாரோ சிலர் பேச்சு காதில் விழுந்தது. ஐயா வந்திட்டார்ல, இனி கவலப்படண்டாம்… …டேய் கோட்டிக்காரா, கவலைப்படறா மாதிரி விஷயம் இல்லன்னா ஐயா ஏன்டா வர்றாரு? – அது சரிதான், ஆனால் பெரிய பிரச்னை எதும் இராது, ஐயா காமிச்சிக்கலியே, என்னான்றே?…

போகிற வழியில் கூடவந்தவனிடம் பெரியவர் ஜியாங் பத்திக் கேட்டேன். உடைப்புகளை அடைக்கிறதில் சூரன் அந்தாள். அவரை வரச் சொன்னா நிசமாகவே விஷயம் பெரிசுதான், என்று பெருமூச்சு விட்டான். எனக்குச் சங்கடமாகி விட்டது. அடுத்த வருஷம்னா தேவலை, ஆற்றின் மேல்பகுதிகளில் பெரிய கம்மாய் ஒன்று தயாராக்கி வருகிறோம். இலையுதிர் காலம் ஆரம்பிக்குமுன் வேலை முடிஞ்சிரும். விறுவிறுவென்று நதியோடு போய் ஹைமன் ஊரை அடைந்தோம். நான் தொலைபேசியில் பேசி முடிக்குமுன் பெரியவரைப் போய் அவன் கூட்டி வந்துவிட்டான். வெண்தாடி வேந்தர். தள்ளாத வயது, நிற்கவே ஆளைத் தள்ளுகிற வயசு! எழுவதுச் சொச்சம்… விழுந்துறாதய்யா. ஒரு கழுதை வெச்சிக்கலாமா, என்றால் வேணாம் என்று நடந்தே வந்தார். ”நீங்க போயிட்டே இருங்க கண்ணுகளா, நான் மெல்ல வந்து சேர்றேன். பிரச்னைன்னு வந்தா…. நடு நிசிக்கு முந்தி வராதுன்னு வை. போங்க…” அவனை முன்னாடி போகச் சொன்னேன், தாத்தாவை நான் கூட்டியாறேன்… அவன் நடையோட்டமாய் மதகை நோக்கிப் போனான். என் தோளைப் பிடித்தபடி தாத்தா ”தியானுக்கு உடம்பு இப்ப தேவலையா?” என்று கேட்டார். அவர் உடம்புக்கு என்ன, என்று கேட்டேன். ”உனக்குத் தெரியாதா… போன குளிர் காலத்தில் அவர் கால் விழுந்துட்டது, படுத்த படுக்கை. என்ன கோளாறுன்னு சொல்லுவீங்க… ம் மூட்டுப்பிடிப்பு.” கடும் வெக்கையிலும் கனமாய் முட்டியை அவர் ஏன் மூடிக்கிறார் என்று தெரிந்தது. (முட்டி தெரியவில்லை!) அவர் தள்ளாட்ட நடைக்கும் மூட்டுக்கோளாறுதான் காரணமா, பாவம். அதுக்கும் மீறி இப்ப ஜீப்பை விட்டிறங்கி, என்ன வேகம். செம வலி இருக்கும் உள்ளூற.

தாத்தா நிறையப் பேச விரும்பினார். ”1954ல் வந்தது அந்தப் பிடிப்பு. அந்த உதிர்காலத்தில் மழை பிச்செடுத்திட்டது. இந்தப் பிராந்தியமே வெள்ளக்காடு. ஐயா தியான் மழையிலும் வெள்ளத்திலும் இந்தப் பக்கமாவே சுத்தித் திரிய வேண்டியிருந்தது. கிராமம் விட்டு கிராமம் ஒரே அலைச்சல். ஏழு பகல், ஏழு ராத்திரி கடும் போராட்டம். அவர்தான் முன் நின்று சமாளிச்சது. வெள்ளம் வடியுங்காட்டியும் அவர் கால் ரெண்டும் புஸ்சுனு வீங்கிட்டது.” ஒரு பெருமூச்சு விட்டார் தாத்தா. ”ஆனால் மனுசன் நினைச்சதை சாதிச்சிருவான். அவங்கப்பாவைக் காட்டிலும் இவன் கெட்டிக்காரன்!”

ஹைமனிலிருந்து ஒரு கிலோமீட்டரில் தியான்ஜியா கிராமம். அதுதான் தியானின் ஊர். நீச்சல் வீரரான அவங்கப்பாவும் ஜியாங்கும் நல்ல சிநேகிதர்கள். எந்த உடைப்புன்னாலும் ரெண்டு பேருமாத்தான் போவாங்க. அப்ப அந்தக் காலத்தில் நதியைச் சீரமைக்க, மராமத்து பார்க்க என்று ஊரில் குழு உண்டு. ஆனால் எல்லாவனும் கொள்ளையடிக்கவே பதவிக்கு வந்தான்கள். குளம் மதகு சீரமையாமலே கிடந்தது. வருஷம் ரெண்டு வாட்டியாவது உடைப்பு, பெரிய வெள்ளம்னில்லை வானம் மூக்குச் சிந்தினாலே கதை கந்தல். அந்நேரம் அதிகாரிகள் காணாமல் போனார்கள். மதகணைப் பக்கம் அவர்கள் தலைவெச்சிப் படுக்கறதே கிடையாது.

அப்பவே தியான் அப்பாகூட உதவி ஒத்தாசைன்னு வருவான். நல்ல தைரியம், விஷயமான வீர்யமான ஆளு. இருபது வயசுக்குள்ளியே அந்தப் பக்கத்ல நல்ல பேர். யாரைக் கேட்டாலும் தெரியும்பாங்க. புரட்சிக்குப் பிறகு நீர் சேமிப்புக்காரனாக உள்ளூர் பஞ்சாயத்து அவனை நியமனம் செய்தது. எங்கயும் அவன் இருந்தான், நதியை ஆழப்படுத்த, வயல்பக்கம் வாய்க்கால் வெட்ட… பிறகு பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் தேறி பின் ஊரின் பல நீர்த்தேக்கங்களை அவன்தான் வடிவமைத்துக் கொடுத்தான்.

தெற்கு அணைக்கு வந்து சேர்ந்திருந்தோம். நேரே அணைக்குப் போகாமல் பின்பக்க வயல்வெளியில் போய் கண்காணிப்பு குடிலில் ஏறினார். ஏன் அப்படிச் செய்தீர்கள் தாத்தா? . சனங்க என்னைப் பார்த்தாலே அபசகுனம், எதோ பிரச்னைன்னு டர்ர்ராயிருவாங்க! அவர் சிரித்தார். அறை அமைதியாய்க் கிடந்தது. ஐயாவும் ஒரு பெண் மருத்துவரும் மாத்திரம் இருந்தார்கள். அவளிடம் தியான் ஐயா ”இங்கியே இருந்து தொலைபேசியை கவனிச்சுக்கம்மா, தலைல இடியே விழுந்தாலும் அசையப்டாது ஆம்மா…” என்று சொல்லிக்கொண்டிருந்தார். தொலைபேசி சரி செய்யப் பட்டிருந்தது. ஐயா எழுந்து கைகுலுக்க எங்களை நோக்கி வந்தார்.

”என்ன நிலவரம்?” என்று கேட்டார் பெரியவர். ”மதகு ராத்திரிக்குத் தாளுமா?” ஐயா உதட்டைப் பிதுக்கினார். ”கடுமையான காத்து மாமா, ஆபத்தாதான் தோணுது. இப்படித் திண்டுல சித்த உடம்பைக் கிடத்துங்க. தேவையின்னா கூப்புடுறோம். நான் போயி கிழக்காம நிலைமையப் பாத்துட்டு வாரேன்…” கூடவே நானும் வெளியே வந்தேன்.

நான் போனபோது இருந்ததைவிட இப்போது தண்ணீர் கலங்கலாய் இருந்தது. ஒரு மீட்டர் அளவு மதகு தெரிந்தது, என்றாலும் காற்று வீசியதில் அலைகள் நுரைத்து ஆக்ரோஷமாய் எழுந்தன. பாய்மறைப்பு இல்லாட்டி மதகு கிதகெல்லாம் பிச்சுக்கும் என்றிருந்தது. நாங்கள் போகும்போதே தெளித்த நீரில் எங்கள் ஷு சாக்ஸ் எல்லாம் சொட்டச் சொட்ட நனைந்துவிட்டது.

திடீரென்று, டமார்.. தொடர்ந்து எச்சரிக்கை மணி அலறல். அணையில் ஒரு பக்கம் பிளந்துகொண்டு விட்டிருக்க வேண்டும்… ஐயா உத்தரவுக்காகக் காத்திருக்காமல் நான் பெரியவர் ஜியாங்கைக் கூட்டிவர ஒடினேன். அவசரஉதவி ஆட்கள் கையில் அடைப்பு சாமான்களும் விளக்குகளுமாய் ஓடினார்கள். ஜியாங் குடிலை விட்டு வெளியே வந்தார். ”எங்க உடைஞ்சது? எந்தப் பக்கம்?…” கிழக்குப் பக்கமாக நான் கைகாட்டி அவருக்கு உதவி என்று கிட்ட போனேன்.. என்னை உதறிவிட்டு வேகமாகப் போனார். இநத் வயசில் எப்படி இத்தனை உக்ரமும் தெம்பும் அவருக்கு வந்தது, திகைப்பாய் இருந்தது. உடைப்பெடுத்த பகுதியில் விளக்குகள் பிரகாசமாய் எரிந்தன. மணல்மூட்டைகளை விநியோகித்தபடி மனிதர்கள் இங்குமங்குமாய்ப் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். ஒரே இரைச்சலாய் இருந்தது. ஜியாங்கைப் பார்த்துவிட்டு அவர்கள் வழிவிட்டார்கள். நாங்கள் போய்ப் பார்த்தோம். உடைப்பு ஏழு மீட்டர் அகலம், அதன் வழியே சீறிப் போனது வெள்ளம்.

(தொடரும்)

About The Author