மெட்ராஸ் – இசை விமர்சனம்

இயக்கம்: பா.ரஞ்சித்
இசை: சந்தோஷ் நாராயணன்

மெட்ராஸ்

சென்னை… இல்லை இல்லை, மெட்ராஸின் பெருமை கபிலனின் வரிகளில் சில கம்யூனிச வார்த்தைகளுடன் உண்மைப் புகழ் பாடுகிறது. உள்ளூர்ப் பறையுடனும் சில எலக்ட்ரானிக் வாத்தியங்களுடனும் பாடல் வித்தியாச விருந்தளிக்கிறது. இதை ஹரிஹரசுதன், மீனாட்சி இருவரும் பாடியிருக்கிறார்கள்.

பாடலிலிருந்து:

ரிப்பென் பில்டிங்க் ஹைகோர்ட் எல்லாம்
செங்கல் மணல் மட்டுமல்ல
எங்களோட ரத்தங்களும் சேர்ந்திருக்குடா!

உழைக்கும் இனமே! உலகம் ஜெயித்திடும் ஒரு நாள்
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்தத் திருநாள்!

காகிதக் கப்பல்

வடசென்னை பற்றிய படத்தில் கானா பாலா இல்லாமலா? இதோ ஒரு தத்துவ கானா. மெலிதான பீட்டுகளுடன் ஆரம்பித்து அதே தொனியில் நகர்கிறது. காதல் தோல்வி, வாழ்க்கை முறை, தன்னம்பிக்கை என இதுதான் பாடுபொருள் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாதபடி பாடல் ஒலிக்கிறது. எழுதியதும் கானா பாலாதான்.

பாடலிலிருந்து:

தடையை தாண்டி நீ நடைய போடுடா!
தடுக்க நினச்சாலே நீ தட்டிக் கேளுடா!

நான் நீ

மனதை வருடும் மெலடி. சக்தி ஸ்ரீ கோபாலனின் குரலில், மெலிதான மேற்கத்திய இசையில் காற்றில் பரவுகிறது. அங்கங்கே வயலின் வேறு அழகு சேர்க்கிறது. காதலனுக்கு ஆறுதல் சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கும் பாடல்.

பாடலிலிருந்து:

பழி தீர்க்கும் உன் கண்ணில்
ஒரு காதல் அழகாய் தோன்றிடுமே
அன்பே ஓர் பார்வை பாராயோ!

ஆகாயம் தீப்பிடிக்க

கிதாரின் மென் மீட்டல்களுடன் சற்றே மென்மையாகத் தொடங்குகிறது. காதல் புகழ் பாடும் பாடல். வருடும் இசையும், வரிகளில் கிராமத்துப் பாடலின் சாயலும் கவர்ந்திழுக்கின்றன. பிரதீப் குமாரின் குரல் பாடலுக்கு ஏகப் பொருத்தம்! இதையும் எழுதியிருப்பவர் கபிலனே.

பாடலிலிருந்து:

வாடகைக்குக் காதல் வாங்கி வாழவில்லை யாரும்
என்ன மட்டும் வாழச் சொல்லாதே!
உடம்பிலுள்ள உசுர விட்டுப் போக சொல்லு – நீதான்
உன்ன விட்டுப் போக சொல்லாதே!

சுவர் (இசைக் கோவை)

படத்தின் தீம் மியூசிக். மெலிதாகத் தொடங்கினாலும் செல்லோ வயலின் வந்தவுடன் பாடலில் ஏதோ கனம் தொற்றிக் கொள்கிறது. செவி வழி அது நம்மையும் தாக்குகிறது.

காளி (லவ் தீம்)

கீபோர்டும், கிதாரின் சாயல் கொண்ட இசைக் கருவியும் இணைய இசை தொடங்கி ஒரே ரிதத்தில் பயணிக்கிறது. கேட்கும்போது ஏதோ இனம் புரியாத உணர்வு மனதில் ஏற்படத்தான் செய்கிறது.

சந்தோஷின் உழைப்பு பாடல்களில் தெரிகிறது. அவரது மெனக்கெடல் மெட்ராஸைத் தனித்துவமாக்கியிருக்கிறது.

மெட்ராஸ் – காலம் கடந்து நிற்கும்!

About The Author