மேளா (2)

பெண்டாட்டி துணிமணி, படம் என்று எதையும் அவன் கண்ணில்பட யாரும் விடவில்லை. கல்யாணத்துக்கு ஒரு தங்கை இருந்தாள். அப்பா. இவன் பெண்டாட்டி சௌதாமினி. உஷா மற்றும் அவன். நாலே பேர். அம்மா கிடையாது. பெண்டாட்டி கதையும்தான் முடிந்து விட்டது. மகா அழகு அவள். அபார அழகு வாழ்க்கைக்குச் சத்ரு என்பார்கள். உண்மையாச்சு. மண்டை வெள்ளரிக்காயாய்ப் பிளந்து மூளைச்சோறு வெளியே வந்ததைப் பார்த்ததில் அவன் புத்தி கலங்கிப்போனான். நாலைந்து வருஷம் ஆகிவிட்டது. நல்ல வேலையில் இருந்தான். அப்படியே விருப்ப ஓய்வு என்று அவன் கையெழுத்தை அவரே போட்டார். ஒத்துக் கொண்டார்களே, என்னவோ நல்ல மனசு.

சிவசைலத்தின் சித்தப்பா ஒருத்தன், ரமணி. அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தான். மெடிக்கல் ஸ்டோர் வைத்திருந்தான் நாலு ஊர் தள்ளி. டாக்டர் டாக்டராக அலைவதில் பாவம் கூட வந்தான். கிடைச்ச மருந்து கிடைக்காத மருந்து எல்லாம் வருத்தித் தந்தான்.

இருந்த வீட்டை இவன் வைத்தியத்துக்கு என்று விற்றாகி விட்டது. வாடகை வீடு என்று எங்கும் காலூன்ற முடியவில்லை. இவனை வைத்துக்கொண்டு எங்கும் நிலைப்பட முடியாதிருந்தது. வீட்டுக்காரர் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தால், அந்த வீட்டின் வயசுப் பெண்கள் அவனைப் பார்க்க பயந்தார்கள். அப்படியே மலைப்பாம்பு விழுங்கி விடுகிறாப் போல அவனது அழுத்தமான பார்வைக்கு அவர்கள் படபடத்தார்கள். சட்டென்று அவர்கள் வீட்டுக்குள் புகுந்து கட்டிலில் படுத்துக் கொண்டான்!

அவனை உள்ளே கட்டிப்போட்ட தினங்களில் சட்டையும் வேட்டியும் என்ன கதியில் இருக்குமோ. தலை கலைந்து கண் சிவக்க உள்ளே காட்டாறு புரட்டி உருட்டினாப்போல அவனைப் பார்க்க, அவன் கூச்சல்களைக் கேட்க படபடவென்று பக்கத்து எதிர்வீடுகள் நடுங்கி கதவைச் சாத்திக் கொண்டன.

ஊசி போட்டுத் தூங்க வைத்தால், எல்லாருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

உஷாவுக்கு வரன் பார்ப்பது தான் இப்போது பெரிய விஷயமாய் இருந்தது. பிளஸ் டூ தாண்டி அவள் ஒரு டிகிரி வாங்குமுன் இப்படி ஆகியிருந்தது. மன்னி இருந்தால் அவள் மேலும் படித்து இந்நேரம் கையில் ஒரு பிள்ளை இருக்கும் அவளுக்கு. இவனை விட்டுவிட்டு அவளைப் பெண் பார்க்க ஏற்பாடு செய்ய முடியாதிருந்தது. யாராவது வந்தாலும் வந்தவர்கள் இவனைப் பற்றி விசாரித்து விட்டு யோசனை பண்ணிச் சொல்வதாய்ப் போனார்கள். என்னா யோசனை, வேணான்னு அர்த்தம்.

திடுதிப்பென்று ஒரு கணக்கில் அவன் வீட்டில் தங்காமல் வெளியே திரியப் பிரியப் பட்டான். எதோ புண்ணியத்துக்கு என்று இடுப்பில் சுற்றிய வேட்டி. தாடியும் மீசையும். வாரம் ஒருமுறை, பத்துநாள் ஒருமுறை நாவிதனை வீட்டுக்கு வரவழைத்து சிச்ருஷை செய்ய வேண்டும். சட்டையையே துண்டாகத் தோளில் சார்த்தி நடப்பான். கோவில் பக்கம், சந்தைப் பக்கம் என்று சில சமயம் கூட்டங்களில் நடப்பான். வண்ணமயமான உலகத்தில் மௌனமாய் நடமாட விரும்பினான் போலும். எங்காவது மரத்தடியில், என்ன தோணுமோ, அப்படியே படுத்துக் கிடப்பான்.

நிறையப் பேர் இப்படிப் படுத்து மகான்கள் ஆகியிருக்கிறார்கள். சிலர் வயல் வேலைக்கும் போய் வந்தார்கள்.

ஒரு அருமையான வரன் வந்தது. பையன் துபாய். பரவாயில்லை. நாடு கடந்து கடல் தாண்டி அவளைக் கொடுத்து விட்டால் உஷா, சிவசைலத்தின் நிழல் கூட அண்டாமல் நிம்மதியாக இருப்பாள் என்றுகூடத் தோணியது. ஆனால் பெண் பார்க்க வந்தவர்களில் மாப்பிள்ளையின் தங்கை ரொம்ப அழகு. ரோஸ் வண்ணப் பட்டுப் புடவையில் தலைக்கு கனகாம்பரம் வைத்திருந்தாள். டிபன் சாப்பிட்டுக் கைகழுவப் போனவள். பின்னாடியே சிவசைலமும் போனான் போல. யாரும் கவனிக்கவில்லை.

திரும்பி வந்தவள் முகம் கலங்கியிருந்தது. ”வாண்ணா போலாம்…” என்றாள் படபடப்போடு. என்ன என்ன என்றார்கள். அவள் பதில் சொல்லவில்லை. மழையைக் காற்று கொண்டு போய்விட்டாப் போல இருந்தது.

யோசனை பண்ணிச் சொல்வதாகச் சொல்லிப் போனார்கள்.

அன்றைக்குத்தான் அப்பாவுக்குக் கோபம் வந்தது. உஷா உள்ளறையில் போய்ப் படுக்கையில் விழுந்து அழுது கொண்டிருந்தாள். சிவசைலம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சட்டென்று அப்பா பெல்ட்டை உருவினார்… ஐயோ ஐயோ என்று ஓடி வந்தான் ரமணி. அவர் கையைப் பிடித்துக் கொண்டு தடுத்தான். ”இந்த ஷனி இருக்கிற வரை இவ கல்யாணம் மண்ணுதான்… எழவெடுத்த பய…” என்று பெல்ட்டை வீசினார் அப்பா. சிவசைலத்துடன் பழகி அவருக்கும் சில கெட்ட வார்த்தைகள் பழகியிருந்தன…

ரமணிதான் அந்த யோசனை சொன்னது. முதலில் கேட்க பதற்றமாய்த்தான் இருந்தது. அவரும் ஒரு ராத்திரி யோசனை பண்ணினார்.

வைத்தியம் என்று சொல்லாமல் வெளியூர் கூட்டிப் போனால் பேசாமல் வருவான். புது இடங்களை வேடிக்கை பார்க்க அவனுக்குப் பிடித்தது. மருத்துவமனை வரை வருவான். சட்டென்று முரண்டும் கன்றுக்குட்டி போல விரைத்து அப்படியே நிற்பான். தரதரவென்று தரையோடு இழுபடுவான். சில சமயம் கையைக் கடித்துவிடக் கூடும். கடல் பிடிக்கும். பெரிய சொளகில் புடைக்கிறாப் போல கடல் தண்ணி எப்பவும் தளும்பிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பான். அங்கேயே கதகதப்பான மணலில் முதுகு சுட மல்லாக்கக் கிடப்பது பிடிக்கும். திரும்ப பிடிவாதமாய் வீட்டுக்கு அழைத்துவர வேண்டியிருந்தது.

சரி, என்றார் அப்பா.

(அடுத்த இதழில் முடியும்)

About The Author