யோக வழி யோகம்!

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்!
பாரத பூமி பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்!

என்று மஹாகவி பாரதியார் நம்மை எச்சரித்தார்!

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு!

என்று இந்தியா என்னும் பாரதத்தின் பெருமையைப் பாடினார் பாரதி. பாரத நாடு எப்படி பாருக்குள்ளே நல்ல நாடு ஆயிற்று என்பதற்கு அழகிய விளக்கங்கள் அளித்தார் அவரது தெள்ளு தமிழ் பாடலிலே, பாட்டுக்கொரு புலவனான பாரதி!

"யாகத்திலே தவ வேகத்திலே – தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு"- இந்த பாருக்குள்ளே நல்ல நாடு!

"யோகத்திலே உயர் நாடு பாரத நாடு" என்ற வரியில் "யோகம்" என்பது எதைக் குறிக்கிறது என்பதைச் சற்று நோக்குவோமே!

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்று மூன்று வகை யோகங்களை விளக்குகிறது பகவத் கீதை என்று அறிவோம்.

"யோகம்" என்ற சொல்லிற்குப் பல பொருள் உண்டு. அவற்றில் சில: அதிர்ட்டம், உயர்ச்சி, தகுதி, பலன், வரம் என்பன.

யோகத்திற்கு மற்றொரு பொருள்: "இந்திரியங்களைத் தன் வயப்படுத்தி, தன் வழிப் படுத்திக்கொண்டு, உள்ளத்தைப் பிரம்மத்தில் நிறுத்தல்" ஆகும்.

உடலையும் உள்ளத்தையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் துணை நிற்பது "யோக சாதனம்" ஆகும். அதையே யோகப் பயிற்சி, யோக சாதனை என்றும் கூறுவர். தியானம் பண்ணுதல் யோகம் செய்யுதல் ஆகும். தியானத்தில் அமர்வது யோக நிலைக்கு இட்டுச் செல்லும்.

இந்த யோக மார்க்கத்தை உலகிற்கு அளித்தது நமது பாரத நாடு. யோகக் கலை என்பது ஆய கலைகள் அறுபத்தி நான்கில் ஒன்றாகும்.

இந்த "யோக வழியில்" சென்றால் மனித குலத்திற்கு "யோகம்" கிட்டும் என்பதை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியா உலகிற்கு அறிவித்து வருகிறது. யோகக் கலையைக் கற்பிப்பதற்கு ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் வாழும் நாடு இது.

யோகக் கலையைக் கற்றுத் தரும் நல்லாசிரியர்களோடு கலந்து அக்கலையில் பயிற்சி பெறுதல் வையத்து வாழ்வாங்கு வாழ வழி அமைக்கும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று இள வயதிலேயே நமக்குக் கூறப்பட்டுள்ளது. அந்தக் குறைவற்ற செல்வத்தைப் பெறுவதற்கு உற்ற துணையாய் நிற்பது யோகக் கலையாகும். விரைந்து செல்லும் இந்த உலகத்தில் உடல் நலத்தையும், உள்ள மகிழ்வையும் அடைவது நமது நல்ல பழக்க வழக்கங்களின் அடிப்படையில் அமைகிறது. அதற்கு உதவுவது நமது பண்பாடும், நாகரிகமும் ஆகும். நமது முன்னோர்களின் ஆராய்ச்சியின் பயனாய் கிடைத்த விலை மதிக்க ஒண்ணாக் கலைகளுள் ஒன்று "யோகா". மதம், மொழி, நாடு, இனம் இவை அனைத்தையும் கடந்து மனிதனை மனிதனாக வாழ வழி காட்டும் கலை "யோகக் கலை".

இந்த யோகத்தின் ஒரு துளியை நினைத்துப் பார்ப்போமா?

யமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு வகைப் படும். யோகப் பயிற்சியின் முதல் நிலையில் இருப்பவர்கள் யமம், நியமம், பிராணாயாமம், தியானம் ஆகிய சொற்களைக் கேட்டிருப்பார்கள்.

"யமம்" என்றால் கொலை களவு செய்யாமை, உண்மை பேசுதல், கள்ளுண்ணாமை, பிறர் பொருளின் மேல் ஆசைப் படாதிருத்தல், புலனடக்கம் முதலியன ஆகும். இதைச் சிறிது சிறிதாக ஏற்று வழி நடந்தால் இந்த மண்ணுலகம் விண்ணுலகம் ஆகாதோ?

"நியமம்" என்பது தத்துவ நூல்களைப் படித்தல், அறிந்து கொள்ளுதல், ஆராய்தல், தவம் செய்தல், உடல் தூய்மை, மனத்தூய்மை பெறுதல், தெய்வ வழிபாடு செய்தல் போன்றன ஆகும். மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்து அறம் அல்லவா?

"பிராணாயாமம்" மூச்சுப் பயிற்சி ஆகும். பிராண வாயுவை இழுத்து, அடக்கி, வெளிவிடும் பயிற்சி. இதில் பலவகை உண்டு. அவற்றை சரியான ஆசிரியர் துணையோடு கற்றுப் பயன் பெற வேண்டும்.

"தியானம்" – ஐம்புலன் அடக்கி யோகம் செய்தல்.

யோகத்தின் பயனை அறிந்தவர்கள், ஆய்ந்தவர்கள், அனுபவித்தவர்கள் வாழ்க்கை வளமோடு அமையும் என்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

"யோகா கற்போம்! யோக வழி நடப்போம்!! யோகம் பெறுவோம்!!!"

About The Author

3 Comments

  1. P.Balakrishnan

    பாரதத்தில் யோகக் கலையைப் பழுதறக் கற்ற வெளிநாட்டினர் பலர் தத்தம் நாடுகளில் அதனைப் பரப்பி வருகின்றனர். அமெரிக்காவில் பல நிறுவனங்களில் இடைவேளையில் பணியாளர்களுக்கு யோகப் பயிற்சி இலவசமாக அளிக்கப் படுகிறது.

Comments are closed.