ராஜராஜேஸ்வரம்- 1000(7)

கண்கவர் ஓவியங்கள்! கருங்கல் காவியங்கள் (7)

தஞ்சைப் பெரிய கோவிலின் பலவகைச் சிறப்புக்களை நாம் பார்த்தோம். கோவிலின் அழகுக்கு அழகு சேர்ப்பவை அங்கு காணப்படும் ஓவியங்களும் சிற்பங்களும்.

ராஜராஜேஸ்வரம் கருவறையைச் சுற்றி அமைந்த உட்சுவர்களில் சோழர்கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டதே ஒரு சுவாரஸ்யமான விஷயம். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வாளர் திரு.எஸ்.கே.கோவிந்தசாமி அவர்கள்தான் இந்த சோழர்கால ஓவியங்களை வெளிக்கொண்டு வந்தார். 1931ஆம் ஆண்டு கருவறைச் சுவர்களுக்குள் இருந்த ஓவியங்களைப் பார்த்து கொண்டு வந்த அவருக்கு, ஓர் ஓவியத்தின் பின்னால் இன்னோர் ஓவியம் இருப்பது புலப்பட்டது! அதுதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர்காலத்து ஓவியம்!

ஓவியங்கள் அமைந்திருந்த பாதை இருளடைந்தது. திரு. கோவிந்தசாமி இரண்டு சுவர்களிலும் கீழிருந்து மேல் வரை வரையப்பட்ட ஓவியங்களில் இரண்டு படிமங்கள் இருப்பதைக் கண்டார். மேலே காணப்பட்ட ஓவியங்கள் நாயக்கர் காலத்தவை. அவற்றில் செவப்பா, அச்சுதப்பா என்ற பெயர்கள் தெலுங்கில் காணப்பட்டன. அதற்குப் பின்னால் காணப்பட்ட ஓவியங்கள் ராஜராஜனின் தீவிர சிவபக்தியைக் காட்டுபவையாக இருந்தன. நாயக்கர் காலத்து ஓவியங்கள் சிதையாமல், அவை ஒரு துணியால் ஒற்றி எடுக்கப்பட்டு, அவையும் மீட்கப்பட்டு, சோழர்கால ஓவியங்களும் மீட்கப்பட்டன.

ஆனால் இன்னும் எல்லா ஓவியங்களும் வெளிச்சத்தைக் காணவில்லை. மத்திய தொல்லியல் துறையைச் சார்ந்த முனைவர்.தியாக.சத்தியமூர்த்தி, ஸ்ரீராமன், புகைப்படக் கலைஞர் தியாகராஜன் ஆகியோரின் கடின முயற்சியில் அவ்வோவியங்கள் அதே அளவில் மீள்புகைப்படங்களாக வடிக்கப்பட்டு, ஒரு நிரந்தரக் கண்காட்சி கோவில் வளாகத்திலேயே நிறுவப்பட்டுள்ளது.

தஞ்சைப் பெரிய கோவிலைத் தவிர வேறெந்த இடத்திலும் சோழர்களின் ஓவியங்கள் இந்த அளவு காணக் கிடைப்பதில்லை. இந்த ஓவியங்களைத் தீட்டப் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் தாவரம், கனிம வகைகள் இரண்டிலிருந்தும் பெறப்பட்டிருக்கலாம். ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து நிலைத்து நிற்கும் இந்த அற்புத வண்ண ஓவியங்களைப் படைக்கும் திறமை நம் முன்னோர்களுக்கு இருந்தது என்பது பெருமைப்பட வேண்டிய செய்தி! ஓவியங்கள் கருவறைக்குள் அமைந்திருந்ததால் வெயில், மழை ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படவில்லை என்பதும், நாயக்கரது ஓவியங்கள் சோழர் கால ஓவியங்களின் மேல் ஒரு பாதுகாப்பு அடுக்காக இருந்தன என்றும் கூடச் சொல்லலாம்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகச் சில ஓவியங்களின் சிறப்பை மட்டும் இப்பொழுது காண்போம்!

எல்லா ஓவியங்களிலும் பொதுவாகக் காணப்படுபவை உணர்ச்சி பாவங்கள். மேலும், அக்காலத்து நடை, உடை, பழக்கவழக்கங்கள், சமுதாயம் முதலியவற்றையும் படம் பிடித்துக் காட்டுகின்றன இந்த ஓவியங்கள். வெண்தாடியுடன் காணப்படும் தட்சிணாமூர்த்தியின் ஓவியம் நம் மனதைக் கொள்ளை கொள்கிறது. அடுத்து சுந்தரமூர்த்தி நாயனார் கதை ஓவியங்களாகக் காட்சி தருகிறது. கதையின் ஒவ்வொரு காட்சியும் அடுத்தடுத்து வரையப்பெற்று ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல அமைந்திருக்கிறது.

சமையல் அறைக் காட்சிகள், அதற்கு மேல் உள்ள காட்சியில் வெண்தாடி, மீசை, கையில் குடையுடன் ஒரு பெரியவர் மணக்கோலத்தில் இருக்கும் சுந்தரரிடம் ஓர் ஓலையை நீட்டுகிறார். அடுத்த காட்சி விசாரணை மன்றம். அந்தக் காலத்தில் விசாரணை மன்றங்கள் கோவிலில் நடந்தன என்பதையும், விசாரணை செய்பவர்கள் நன்கு படித்தறிந்தவர்கள் என்பதையும், எல்லார் முகத்திலும் காணப்படும் அதிர்ச்சி ஏதோ நடக்கக்கூடாதது நடக்கிறது என்பதையும், வெண்தாடிக் கிழவர் ஓலைச் சுவடியுடன் கையை ஆட்டிப் பேசுவதையும் ஓவியத்தில் உயிரோட்டத்தோடு காண முடிகிறது. கடைசியாக, சுந்தரர் இந்திரனின் ஐராவதத்தில் ஏறி வானுலகம் செல்லும் காட்சி, திருக்கயிலாயக் காட்சி ஆகியவை ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் உள்ளன.

சுந்தரர் என்னவெல்லாம் பாடியிருக்கிறாரோ அவை அனைத்தையும் வெளிப்படுத்துபவையாகவே இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. ஆதலின், இராஜராஜன் சுந்தரர் தேவாரத்தின் விளக்கமாக அவரது பாடல்களையே கொண்டு அவரது சரிதத்தை வரைந்துள்ளது வரலாற்றின் உச்சியாகும்! அதனால், ‘திருமுறை கண்ட சோழன்’ எனும் பெயர் ராஜராஜனுக்குச் சாலப் பொருந்தும்!

சுந்தரருக்கும் ராஜராஜனுக்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்வளவு விரிவான காட்சிகளை யாரும் பாடவில்லை. சேக்கிழார் இராஜராஜனுக்கு 150 ஆண்டுகளுக்குப் பின் வந்தவர். அவர் தரும் செய்திகள் இந்த ஓவியத்தின் அடிப்படையில் அமைந்தவை. இராஜராஜனுக்குக் கிடைத்த சான்று சுந்தரரின் பாடல்களேயன்றி வேறில்லை. இதை, ‘வார ஓவியம்’ என்பதே பொருந்தும்" என்று கூறுகிறார் டாக்டர் நாகசாமி அவர்கள்.

அன்று அந்த ஓவியங்களை வரைந்தவர்கள், எல்லா தேவாரப் பாடல்களையும் கற்றுத் தேர்ந்தவர்கள் என்பது ஒரு சிறப்பு.

அடுத்து நடராஜ வழிபாட்டு ஓவியம், திரிபுரசம்ஹார ஓவியம் என்று ஓவியங்கள் நம்மை மிரட்டுகின்றன. இந்தியாவின் மோனோலிஸா, ஏன் அதற்கும் மேலான ஓர் ஓவியம் என்று திரிபுரசம்ஹாரமூர்த்தி ஓவியத்தைக் கூறலாம். முகத்தின் மேல் பாதி கோபம் தெறிக்கும் கண்கள் கொண்டதாகவும், கண்களை மறைத்துக் காண்கையில், ஓர் ஏளனச் சிரிப்பு (“என் சிரிப்பு ஒன்றே போதுமே உன்னை எரிக்க” என்பது போல்) தோன்றுமாறும் உள்ள இந்த ஓவியத்தின் சிறப்பு நம் பண்டைத் தமிழ் ஓவியர்களின் திறமையை உலகுக்குப் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது!
இவை தவிர, கருவூர்த்தேவரும் ராஜராஜனும் இருப்பதாக ஓர் ஓவியமும் உண்டு! ஆனால், அது அவர்களல்ல என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

சிந்தை கொள்ளை கொள்ளும் சிற்பங்கள்

ஓவியங்களைப் போலவே சிற்பங்களும் கலை நயத்துடனும் கற்பனைப் பெருக்குடனும் செதுக்கப்பட்டு நம் சிந்தை கவர்கின்றன!

கண்ணில் முதலில் படுபவை ராஜராஜன் திருவாயிலில் காணப்படும் துவார பாலகர்கள்! இவை தவிர, மேலும் பல்வேறு வகைச் சிற்பங்கள் கம்பீரத்துடன் வாயில் மதில் சுவரில் வீற்றிருக்கின்றன. வாயில் மதில் ஓரம் பெரிய புராணக் கதைகள் சிற்ப வடிவில் இடம் பெற்றிருக்கின்றன. அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெறும் படலம் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் அர்ச்சுனன் கடும் தவம் செய்து எலும்பும் தோலுமாக இருக்கும் காட்சியும், சிவபெருமானின் கம்பீரத் தோற்றமும் மிகச் சிறப்பாக விளங்குகின்றன.

அடுத்து கண்ணப்பனார் சரிதம். கண்ணப்பர் காட்டில் ஒரு சிவபெருமான் கோவிலைக் கண்டு பரவசமடைவது, சிவபெருமானுக்கு ஆசையாய்த் தான் வேட்டையாடிய உயிரினங்களைக் காணிக்கையாக்குவது, அவர் தன் கண்களைப் பிடுங்கச் செல்லும்போது சிவபெருமான் தடுத்தாளும் காட்சி, கண்ணப்பன் அவரைத் தொழும் காட்சி என எல்லாமே திரைக்கதை போல் சிற்ப வடிவில் எழுப்பப்பட்டுள்ளன.

இவை தவிர, நர்த்தன கணபதி, நடராஜர், துர்கை, சண்டேச அனுக்ரஹ மூர்த்தி, சரஸ்வதி, லிங்கோத்பவர், ஹரிஹரசுதன் எனப் பல சிற்பங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கின்றன.

கல்லிலே காணும் இந்தக் கலை வண்ணம் நம் பண்டைத் தமிழர்களின் தொழில் நுணுக்கத்திற்கும் கலைப் பார்வைக்கும் சான்றாகத் திகழ்கின்றன.

(முற்றும்)

தகவல்கள் உதவி: பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை, வரலாற்று ஆசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரியார், நாகசாமி, சத்தியமூர்த்தி, ஸ்ரீராமன், கலைக்கோவன், குடவாயில் பாலசுப்ரமணியன், வரலாறு.காம், ரீச் பவுண்டேஷன்.

புகைப்படங்கள்: திரு.சந்திரசேகர்.

About The Author