ராஜினாமா

பொருளாதார நெருக்கடியால் எங்கள் நிறுவனத்திற்கு நெருக்கடி. நிலைகுலைந்து விட்டது நிறுவனம்.

‘அமெரிக்காவே ஆட்டம் கண்டு போச்சு. நாம எல்லாம் எந்த மூலைக்கு?’ சி.என்.என் இதுபற்றி ‘தினம் ஒரு ஸ்டாடிஸ்டிக்ஸ்’. லேமன் பிரதர்ஸ், ஜீஎம். சாகடிக்கிறான்.

ஊரிலுள்ள பொருட்களையெல்லாம் வாரிக்கொண்டுச் சென்ற சரயு நதி வெள்ளம் போல இந்த நெருக்கடி எங்கள் நிறுவன சொத்துக்களையெல்லாம் அள்ளிச் சென்றுவிட்டது. பாதி தலைகள் ‘லே ஆஃப்பில்’ உருண்டோடின. சம்பளம் சரிவர கிடையாது. ஈடுகட்ட வாரம் தொண்ணூறு மணி நேர கடும் உழைப்பு. தூங்கா நிறுவனம்! ‘பெண்டு கழண்டு போச்சு’.

எங்கள் இலக்கு அத்திட்டப்பணிக்கான பேணல் (project maintenance). சிலபல மில்லியன் ஈட்டித் தர இருக்கிறது. (பெரிய வாங்கி) (client). துவண்டு போன நிறுவனத்திற்கு, இன்னல் தீர்க்கப் போகும் அருமருந்து! இதை வைத்து நிறுவனத்தைப் புதுப்பித்து, மேன்மேலும் பல திட்டப்பணிகளை சந்தையில் அள்ள வேண்டும்.

நாங்களும், அந்த நிறுவனமும் சமர்ப்பிக்க இருக்கும் அறிக்கையின் தரத்தைப் பொறுத்து, திட்டப்பணிக்கான பேணலைத் தட்டிச் செல்வது யார் என்பது தெரியும். மூன்று மாதமாக நடந்துதுவந்த யுத்தம். மூன்று நாளில் முடிவு!

எங்களிடமே ‘இந்தா சாப்புடு’ என்று தாரை வார்த்துக் கொடுக்க வாங்கி ஒன்றும் சும்பன் இல்லையே? இரண்டு பேரையும் அலைய விட்டு, அல்லல்பட வைப்பதில் அவனுக்கு அல்ப சந்தோஷம். நம் பின்னால் லோலோ என்று அலைய வேண்டி வந்தால் அவனுக்குக் கேவலம். இதெல்லாம் வியாபார யுக்தி. ஆளுமைத் தந்திரம்.

போட்டி என்று இருந்தால்தான் எதுவுமே சுவாரஸ்யம். ஆனால், இக்கட்டான நிலைமையில் ‘முள் மேல் நடைப்பயணம்’ அபாயம். கரணம் தப்பினால் மரணம்!

‘மூணு மாசத்துல என்னல்லாம் கிழிச்ச? ரிப்போர்ட்டக் காட்டு.ப்ராஜக்ட் காஸ்ட் எவ்வளவு? பெர் ஹவர் ரேட் என்ன? எத்தன பேரு ஆன்ஸைட், எத்தன பேரு ஆஃப்ஷோர், ரேஷியோ என்ன? இந்த டெக்னாலஜில இதுக்கு முன்னாடி உங்க ஆர்கனைஸேஷனுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா? சி.எம்.எம்.ஐ ப்ராஸஸ் அது இதுன்னு டுமீல் வுட்டீங்களே, அது எங்க? ப்ராஜக்ட் மாடல் என்ன? அஜைலா? இல்ல ஐடரேடிவ்வா? இல்ல வேற ஏதாச்சும் கருமாந்தரமா?’ அப்பறம் லொட்டு லொசுக்கு என்று நொங்கு எடுப்பான். தவளையிடம் போட்டு வாங்குவது சுலபம். தவிர, காசு கொடுக்கப் போகிறவன். கால் கிலோ காரட் வாங்குவதற்குள் காய்கறிக்காரனை என்ன பாடு படுத்துகிறோம்?

"நாம எப்படியாச்சும் இந்த ப்ராஜக்ட்ட ஜெயிச்சாகணும்.அவுங்க…." என்று நிறுத்திவிட்டு, தன் கைபேசியில் எதையோ நோண்ட ஆரம்பித்தார் ரவி.

ரவி எங்கள் மேலாளர். குழையக் குழையப் பேசுவார். சரியான காரியவாதி. "அருள், அந்த வினோத்து ஒங்க ஃப்ரெண்டாமே, ஸ்வேதா சொன்னா. அவுங்க பீபீடி எப்படி வந்துருக்கு? ஏதாது தெரியுமா? அவுங்க ஆன்ஸைட் எத்தன பேரு கோட் பண்றாங்க? கேஷுவலா கேட்டுப் பாருங்க". பிடிவாதக்காரர் வேறு. "இன்னிக்கு நைட் லெவென் ஆனாலும் முடிச்சுட்டுத்தான் போறோம். ஒகே?". அப்படி ஒருவர் இருந்தும் நிறுவனத்திற்கு ஏன் இந்த கதி என்றால் விதிதான்! நானும் ஸ்வேதாவும் அவரின் பரிவாரம். கொஞ்சம் ஆங்கிலத் திறமை, கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு கலந்த கலவை நான். மற்றபடி பீற்றிக்கொள்ள ஒன்றுமில்லை. புத்து. ஸ்வேதா குதிரைவால் கொண்டை, மிகக் குறைவான தொழில்நுட்ப அறிவு, அமெரிக்க ஆங்கிலம். "மல்டை தெரெட்டிங்க், ஆப்ஃடன், கம்போனெண்ட்…" என்று வெறுப்பேற்றுவாள். ‘ஆஃபனை ஆஃப்டன்னு சொல்லி அந்துவான்ட்ட முட்டில பத்து அடி வாங்கிருக்கேன். ஜன்மத்துக்கும் அப்படில்லாம் நான் சொல்ல மாட்டேன்பா’.

ஒரு நாள் அரை மணி நேர மீட்டிங்க்கில் அவள் சொன்ன "யூ நோ" மட்டும் நூத்திபத்து. எண்ணினேன். எரிச்சலாக வரும். காரில் வரும் பொழுதும், போகும் பொழுதும் சின்ன கண்ணாடி ஒன்றில் அடிக்கடி பார்த்து டச்சப் பண்ணிக் கொண்டே இருப்பாள். பாத்ரூமுக்கு எப்போது போனாலும் கையில் ஹேண்ட்பேக் இருக்கும். மேக்கப்போடு பிறந்தவள்.அதேபோல் அந்த நிறுவனத்திலிருந்தும் மூன்று பேர். எல்லோரும் வாங்கியின் அலுவலகத்திலேயே கடந்த மூன்று மாதங்களாக டேரா.

இந்த முறை ரவி என் இருக்கைக்கு வந்து, என்னைப் பார்த்து, "அந்த பசங்க வாங்கிட்டாங்கன்னா நம்மளுக்கு ரிவிட்டு தான்.இத்தன நாள் கஷ்டப்பட்டதுக்கு அர்த்தமே இல்லாம போய்டும். அப்பறம், வனவாசம் கெளம்ப வேண்டியது தான்." என்று ஆயிரமாவது தடவை சொல்லி பயமுறுத்தினார்.

‘புளிச்சுப் போச்சுயா’

நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தி, நிலைநாட்டி, கொடியை கம்பத்தில் கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். கிருஷ்ண பரமாத்மா கோவர்த்தன மலையை சுண்டு விரலில் தூக்கி நிறுத்தியது மாதிரி.

"ரவி, ப்ரஸன்டேஷன் அல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சு.நேத்திக்கு நீங்க சொன்ன த்ரீ-டி டையக்ராமும் சேத்துட்டேன். ஐ ஆம் கான்ஃபிடன்ட்.."

"பீபீடியோட டெம்ப்லேட், பேக்கிரவுண்ட் மாத்தீட்டீங்களா?"

"யெப்."

வெற்றுக் காட்சி ஒன்றை ஓட்டி, "ஃபான்ட் ஸைஸ்?" என்றார்.

"பக்கா"

ஏக்கத்துடன், "குட்….ஆனா இது மட்டும் பத்தாது!!!…." என்றார்.

‘என்ன சொல்ல வர்றான் சொட்ட?’

"அருள்! யூ நோ வாட்.அந்த பசங்க கேரியை செவன் ஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டிகிட்டு போய் பெரிய டின்னர் கொடுத்துருக்காங்க.அது தெரியுமா?"

கேரி – அந்தத் துணைத்தலைவர் தான் எங்களுக்கு திட்டப்பணியை வாரி வழங்க வேண்டும்.

‘ம்க்கும், அதானே பார்த்தேன். குள்ள நரி’.

"இல்ல தெரியாது….", என் கண்களில் பொய்யில்லை.

‘நாங்க இப்போ இருக்கற நெலமைக்கு ஏதாச்சும் மாமி மெஸ் இருந்தா கூட்டிகிட்டு போய் அன்லிமிடெட் மீல்ஸ் வாங்கித் தரலாம். வக்கணையா!’

"லாஸ் வேகாஸ் டிக்கட் வேற…"

நான் கண்கொட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பேசிக்கொண்டே, லேப்டாப்பை ஏனோதானோ என்று அதன் பைக்குள் உள்ளடக்கி, "உஃப்ஃப்….வீட்டுக்கு கெளம்பலாமா?" என்றார்.

நான் அப்பாவித்தனமாக, "ஓகே ரவி. இன்னும் ஒன் அவர்ல ஒங்களுக்கு பீபீடி ய இமெயில் பண்ணிர்றேன். ரிவ்யூ பண்ணிட்டு சொல்லுங்க. வேண்ணா இன்னிக்கு நைட் நம்ம மூணு பேரும் ஒரு கான் கால் வச்சுக்கலாமா?".

திடீரென்று நான் சற்றும் எதிர்பாராதவிதமாக எனக்கு மிக அருகாமையில் வந்து, "வேணாம். நாளைக்கு மார்னிங்க் வச்சுக்கலாம்.ஸ்வேதாவும் கேரியும் இன்னிக்கு நைட் டின்னர் போறாங்க…" என்று சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.

‘அவுங்க மட்டுமா? அப்படின்னா, என்ன அர்த்தம்? நீதானே மேனேஜர். நீ போகாம, ஏன் ஸ்வேதா மட்டும்?’. அவர் சொன்னது எனக்கு அருவருப்பைத் தந்தது. ‘இந்த பான வயிறான் அவ வாழ்க்கேல இப்படி விளையாடிட்டானே? ஒருவேளை ஸ்வேதாவுக்கே விஷயம் முழுசா தெரியாதோ? முழுபூசணிக்காய மறச்சி, டின்னர்னு மட்டும் சொல்லி அனுப்பியிருப்பான்.லாஸ் வேகாஸ் டிக்கட் எங்க, சாதாரண டின்னர் எங்க? இதுல வேற என்னமோ கிருத்ருவம் இருக்கு. சேர்மன் பொண்டாட்டியோட ஒண்ணுவிட்ட அண்ணாவின் மாப்ளனு அடிக்கடி சொல்லிகிட்டு கம்பனிய சொந்தம் கொண்டாடுவான். என்ன வேணாலும் செய்வான். அதுவும் கம்பனி இப்போ இருக்கற நெலமைக்கு. துரியோதனா! பகடை ஆடிட்டியோ? கேரிதான் துச்சாதனனா?’

எனக்கு உடம்பு கூசியது.
‘மயில் ஆடினால் வான் கோழியும் ஆடணுமா? இது வரம்பு மீறிய செயல், அன்எதிக்கல்’

வெல்ல வேண்டும் என்ற வெறி! இந்த மாதிரி ஒரு மனிதனை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. கீழ்த்தரம்! சாக்கடை அளவு, இல்லை சாக்கடையில் இருக்கும் மலம் அளவிற்கு.

‘பிம்ப்….’

‘அவளுக்கு எங்க போச்சு அறிவு?’

என் உள்ளக்கொதிப்பு பன்மடங்காகி, ‘ஆனா…ஆனா…அது வெவரமான பொண்ணாச்சே. எல்லாருக்கும் தண்ணி காட்டிட்டுப் போய்டுவாளே. பேசாம ஸ்வேதாக்கே கால் பண்ணி விஷயத்த கேட்டறலாமா?’

‘வேணாம் வேணாம், நமக்கெதுக்கு தலையெழுத்து….’

என் தலை கிறுகிறுத்துப் போனது.

‘மனிதனுக்கும், மிருகத்திற்கும் வித்தியாசம் இல்லையா?’

வீடு திரும்பினேன். மனது நம நம என்று அரித்துக் கொண்டே இருந்தது. அதிகாலை 3.30மணி வரை தூக்கம் வரவில்லை. அதன்பிறகு என்னை அறியாமலேயே கண் அயர்ந்திருந்தேன். அடுத்த நாள் அலுவலகத்திற்குப் போகப் பிடிக்கவில்லை. உடம்பு சுகமில்லாததால் ‘வீட்டிலிருந்து வேலை’ என்றும், மதியத்திற்கு மேல் அலுவலகம் என்றும் மின்னஞ்சலொன்றைச் சொடுக்கினேன்.

‘நேத்து நைட்டு என்ன ஆயிருக்குமோ? எசகுபிசகா ஆயிருந்தா பாவம் அந்த பொண்ணு. ப்ச்…அவ அதுக்கெல்லாம் கவலப்படற ஆளில்ல டா அருளு!என்ன மனுஷங்க இவுங்க?’ இவர்களையெல்லாம் கருட புராணத்தில் சொன்ன மாதிரி எண்ணெய் சட்டியில் போட்டுதான் வறுத்தெடுக்க வேண்டும், அதுவும் பூமியிலேயே!

காலை பத்தரை மணிக்கு ரவியிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு.

"ஹே அருள்! விஷயம் தெரியுமா? அந்த வீ.பி. யைத் தூக்கிட்டாங்க."

"என்ன சொல்றீங்க?"

‘ஸ்வேதாக்கு என்ன ஆச்சு?’

இந்த மாதிரி ஆட்களையெல்லாம் தெய்வம் சும்மாவிடாது என்று நினைத்தேன்.

"ஆமாம்!"

"ஏன்?"

‘நேத்து ராத்திரி விஷயம் எங்கயாச்சும் தெரிஞ்சு போயிருக்குமோ? நமக்கு எதுக்கு இந்த அனுமானமெல்லாம்?’

"அவரு பெர்ஃபாமென்ஸ் சரியில்லனு கேள்வி. அதான்."

"என்ன பெர்ஃபாமென்ஸ்?"

‘டொய்ய்ய்ய்ன்ன்ன்’ என்று வாயில் நக்கலாக சத்தம் எழுப்பி, "ப்ராஜ்க்ட் பெர்ஃபாமென்ஸ்தான் யா." என்று சொல்லி என்னை வெறுப்பேற்றினார்.

"ஓஹோ!"

"ரொம்ப நாள் ப்ளான் போல இருக்கு. அதான் தூக்கிட்டாங்க."

பல நாள் திருடன்!

"நம்ம ப்ரஸன்டேஷன் அப்போ அம்பேல் தானா, ரவி?"

"நோ, நோ.நாளைக்கு இருக்காது, சான்ஸ் கம்மி. ஆனா, நாளானக்கி இருக்கும்." என்றார்.

ஆச்சர்யத்துடன், "எப்படி?" என்றேன்.

"யரோ ரெபேக்காவாம், புது லேடி வீ.பி. வந்துருக்காங்க. அவுங்க பாக்க போறாங்க. நான் அவுங்கள இன்னிக்கி மத்யானம் பன்னண்டு மணிக்கு மீட் பண்றேன். இதுவரைக்கும் பண்ணதெல்லாம் வேஸ்ட்டா போச்சு. ம்ம்ம், எனிவே ஆக வேண்டியத பார்க்கறேன். பை" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

கைபேசியை மடித்துவிட்டு, சட்டு புட்டென்று அவருக்கு என் ராஜினாமாவை ‘இ’னுப்பி வைத்தேன்.

About The Author