ரெண்டாவது படம் – இசை விமர்சனம்

‘தமிழ்ப்படம்’ எடுத்து அனைவரையும் கலாய்த்த சி.எஸ்.அமுதனின் இரண்டாவது படம் இந்த ‘ரெண்டாவது படம்’. ஏற்கெனவே முன்னோட்டக் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தில் கருத்து எதுவும் சொல்லவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார் இயக்குநர். இசை கண்ணன். பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்!

அடுத்த பருப்பு

அலப்பரையான பாடல்! தொலைக்காட்சித் தொகுப்பாளன் ஒருவனின் அளவுக்கு மீறிய ஆசைகளும், நண்பர்களின் கிண்டலும்தான் பாடல். விஜய் பிரகாஷ் குரலில் தொடக்கமே கவனிக்க வைக்கிறது. பின்னர் வேல்முருகனும், முகேஷும் சேர்ந்துகொள்ள, களைகட்டுகிறது. நா.முத்துக்குமாரின் வரிகள் சிரிக்க வைக்கின்றன.

நான் வந்து நின்னா கேமராவும் ஃபேனு ஆகும்டா!
நான் கை தொடைக்க செக்கு புக்கும் டிஷ்யூ ஆகும்டா! – சிரிக்க வைத்த வரிகளில் ஒன்று!

குப்பைத்தொட்டி

ஒரு காதல் பாடல். மதன் கார்க்கியின் எழுத்துக்களில் வழக்குத் தமிழும், நல்ல தமிழும் கலந்து புது வகையான பாடல். ஹரிஹரன் – உஜ்ஜைனி ராய் பாடியிருக்கிறார்கள். ஈர்க்கும் இசை. ஹரிஹரனின் குரலில் 90களின் சாயல். இடையில் ஆங்கில வரிகளும் வருகின்றன. இருந்தும் ஒரு நல்ல டூயட் பாடல்.

அணங்கு உற்றுழன்றேன் இணங்கிடும் பருவலில்
பிணங்கு தோற்றிழந்தேன் உனது புன்முறுவலில் – புதுமை வரிகள்!

ரோஜாப் பூ

80களில் வெளிவந்த காதல் பாடலை தற்போதைய ஒலித் துல்லியத்தோடு கேட்க வேண்டுமா? இதோ அப்படி ஒரு பாடல்! எஸ்.பி.பி – சித்ரா குரல்களில். என்னதான் பழைய சாயல் என்றாலும் நம்மைக் கட்டிப் போடுகிறது. இதுவும் கார்க்கியின் கை வண்ணமே.

மயில்தோகை கொண்டே விசிறு தோழன் ஒருவன்
மயங்கிவிட்டானே காதல் மதுவை அருந்தி.
திருக்கோவில் தீபம் எனவே தோழி கைத்தலம்
பிடிக்கவந்தாளே தீயில் ஒளியாய்ப் பொருந்தி – ரசிக்க வைக்கும் வரிகள்!

பாடல்கள் நிச்சயம் வெற்றி அடையும்! படத்தின் சுவரொட்டியைப் பார்த்தீர்களா? தனக்கே உரிய பாணியில் வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். அதில் மெனக்கெடல் தெரிகிறது.

ரெண்டாவது படம் – கலாட்டாவும், காதலும்

About The Author