வத்திக்குச்சி – இசை விமர்சனம்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம். அவரது உதவி இயக்குநர் பி.கின்ஸ்லின் இயக்க, எம்.ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். கதை மீது உள்ள நம்பிக்கையில் தானே தயாரிக்கவும் செய்கிறார் முருகதாஸ். நிச்சயமாக, ஒரு தரமான படத்தை எதிர்பார்க்கலாம். இனி பாடல்களைப் பற்றிக் கேட்போம்.

அம்மா வேக் மீ அப்!

நாயகியின் அறிமுகப் பாடலாக இருக்கலாம். சாதாரணப் பேச்சுவழக்கில் ஒரு பாடல். நகரத்தின் நடுத்தரக் குடும்பத்து இளம்பெண், தோழிகளுடன் வார இறுதி நாளில் ஊர் சுற்றக் கிளம்புவதை இசையோடு சேர்த்தால் ஒரு நல்ல காமிக் செவிகளுக்குக் கிடைக்கும் இல்லையா? அதுதான் இது! படத்தின் இயக்குநரும், பா.விஜயும் ஆங்கில வார்த்தைகள் கலந்து எழுதியிருக்கிறார்கள். ஸ்ருதி, அனிதா, ஷபீர் ஆகியோர் இதைக் குதூகலத்துடன் பாடியிருக்கிறார்கள். கேட்கும்போதே நிச்சயமாக நீங்களும் நகைப்பீர்கள். இறுதியில் ஆண் நண்பர்களின் குரலாக ஒலிக்கும் வரிகள் உண்மை சொல்கின்றன.

மச்சி உன்னோட பாய் ஃப்ரண்ட வரச்சொல்லு
ஷாப்பிங் பேக்கெல்லாம் தூக்கிப் போணும் – நகைக்க வைத்த வரிகளுள் ஒன்று.

கண்ணை கண்ணை

காதல் ததும்பும் பாடல். குரலில் குறும்புடன் சுந்தர் நாராயண ராவ் அருமையாகப் பாடியிருக்கிறார். இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதுவும், வரிகளின் முடிவில் வார்த்தைகளை அவர் இழுத்து முடிக்கும் விதம் செவிஈர்ப்புத் தீர்மானம் நடத்துகிறது. காதலனின் குரலாகக் காற்றில் ஒலிக்கிறது. காதல் தாண்டியும் சொல்கின்றன அறிவுமதியின் வரிகள்.

ஒரே நொடி உனை மடி சாய்க்கப் பார்ப்பேன்
சுடும் மழை, குளிர் வெயில் தொடவே பார்ப்பேன் – அறிவுமதி முத்திரை!

குறு குறு

செல்லோ வயலினுடன் தொடங்கும் இதையும் பாடியிருக்கிறார் சுந்தர் நாராயண ராவ். முன்னதின் சாயல் துளி கூட இதில் இல்லை காதலின் மகிழ்ச்சியான நிலைதான் கருப்பொருள். காதலனின் ஆசை பாடுகிறது. வாத்தியங்களும் அளவாக ஒலித்து கவனம் பெறுகின்றன. வரிகளைச் சற்றே புதுமையாக எழுதியிருக்கிறார் நா.முத்துகுமார். சொற்கள் முன்னரும் அர்த்தம் பின்னரும் வருமாறு அமைத்திருப்பது அருமை! இசைச் சேர்ப்பும் நன்றாக இருக்கிறது.

ஒன்று இரண்டென்று கோடி வரை எண்ணி
நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல…
காலை பகலென்றும் மாலை இரவென்றும்
கோடு போட்டவனைத் தேடுகிறேன் கொல்ல – புதுமை வரிகள்.

அறி உனை

தற்கால நிலைமையைச் சொல்லும் பாடல். இசையும் பரபரப்புடன் ஒலிக்கிறது. யுகபாரதி எழுதியிருக்கும் இந்தப் பாடலைத் துடிப்புடன் பாடியிருக்கிறார் ஷபீர். வாத்தியங்களின் ஆதிக்கம் சற்றே அதிகம். இருந்தும் ரசிக்க வைக்கின்றன வரிகள்.

நம்மை நாமே நம்பும் காலம் இல்லை
சூதுக்கிங்கே எல்லைக் கோடு இல்லை

ஆயுதமும் ஒரு கேடயமே!
சூழ்நிலைகள் வெறும் காரணமே!
எதிரியின் பலம் அறிவது நன்று போர்க்களத்தில் – ரசித்ததில் சில.

இவை போக, ஒரு தீம் இசையும், அனைத்துப் பாடல்களின் கரோக்கி இசைக்கோவைகளும் உள்ளன. தீம் இசை மெதுவாக ஆரம்பித்துப் படபடப்பையும் ஏற்படுத்துகிறது. ஜிப்ரான் அழகாகத் தாளம் மாற்றி நம்மைக் கட்டிப் போடுகிறார். வாத்தியங்களின் எண்ணிக்கை அதிகம்தான். ஆனாலும் தீம் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் ரகம்.

ஜிப்ரானிடமிருந்து பல நல்ல பாடல்களை எதிர்காலத்திலும் எதிர்பார்க்கலாம்.

வத்திக்குச்சி – பற்றிக்கொள்ளும்.

About The Author