வழித்தடம் (2)

திடீரென்று வண்டியைச் சாலையில் நிறுத்தினான் சண்முகம்.

"என்னாச்சு சண்முகம்?"

"ஆனைக்கூட்டம் ரோடக் கிராஸ் பண்ணப்போகுதுங்க சார்" என்றான். நான் பரபரப்பாகி, "எங்கே?" என்றேன்.

"அதோ அங்க பாருங்க" என்று சொல்லி அவன் கைகாட்டிய தூரம் இருநூறு மீட்டர் தொலைவு இருக்கும். அங்கு எதுவுமில்லை.

"ஒண்ணையும் காணமே சண்முகம்?"

"பொறுங்க சார்! இப்போ போகும் பாருங்க" என்றான்.

சொல்லிவைத்தாற்போல யானைகளின் கூட்டமொன்று சாலையின் ஒரு முனைக் காட்டிலிருந்து வெளிப்பட்டது. மொத்தம் பத்துக்கும் மேலாக யானைகள் இருந்தன. அவை மெல்ல அன்ன நடைபோட்டுச் சாலையைக் கடந்து காட்டுக்குள் சென்று மறைந்தன. அவை போய்விட்டதை உறுதி செய்துகொண்டு சண்முகம் வண்டியைச் செலுத்தினான். சுசி இந்தக் காட்சியில் மிகவும் மயங்கிக்கிடந்தாள். அவள் இவ்வளவு ஆர்வமாக விலங்குகளைப் பார்ப்பாள் என்று நான் நினைக்கவேயில்லை. அவள் பிரணவின் வயதுக்கு மாறிவிட்டவளைப்போல நடந்துகொண்டாள்.

"எப்படி சண்முகம் யானைங்க வர்றதக் கண்டுபிடிச்சீங்க?" என்று கேட்டாள்.

"அதுவாக்கா? இருட்டுல மரங்க அசையறதப் பாத்துகிட்டே வருவேன். யானைங்க வந்தா அது ரொம்ப அதிகமாயிருக்கும். அதவச்சுக் கண்டுபிடிச்சிருவோம்."

"அது சரி, கண்டுபிடிக்க முடியாதபடிக்கு திடீர்னு வந்திருச்சுன்னா என்ன பண்ணுவீங்க?"

சண்முகம் சிரித்தான். "அதுவும் நடக்கும். சிலசமயம் நமக்கு முன்னால வானத்துலயிருந்து குதிச்சமாதிரி படக்குன்னு ஒத்தயானை நிக்குமுங்கோ. அப்பல்லாம் பொழைப்போமா சாவோமான்னு தெரியாது."

"இவ்ளோ ரிஸ்க் எடுக்குறீங்களே, இத விட வேற வேலைக்குப் போகக்கூடாதா?"

"இதையேதானுங்க கனியும் சொல்லுது."

"கனியா யார் அது?"

"என் சம்சாரமுங்க. சொந்த மாமா பொண்ணு. கல்யாணமாயி ஒரு வருசமாச்சு. ஒரு நாள் இப்படி வரும்போது, ஒரு ஆனை வழிமறிச்சு ரவுசு பண்ணிருச்சு. இத நா வீட்ல சொல்லக் கிடையாதுங்க. ஆனா என் ப்ரெண்டு ஒருத்தன் அம்மணிக்கிட்ட சொல்லிப்போட்டானுங்க. அன்னையிலைருந்து இந்த வேலைய விடுங்க விடுங்கன்னு பொலம்புவா."

சுசி அவன் பேச்சில் ஆர்வம் ஏற்பட்டவளானாள்.

"அவ சொல்றது சரிதானே? உனக்கு ஏதாவதுன்னா அவளுக்குதானே பாதிப்பு?"

"சரிதானுங்க! ஆனா எதுலதானுங்க ஆபத்துயில்ல? பொறந்ததென்னமோ பழனிலன்னாலும், இந்த மலையும் ஊரும் நான் சின்ன வயசிலேர்ந்து வாழ்றதுங்க. ரிசார்ட் மொதலாளிதான் என்ன வளத்தாருன்னே சொல்லலாம். எங்க மாமாவுக்குக் கர்நாடகா கவர்மெண்ட்ல வேலை கிடச்சு கனியோட ஊரவிட்டுப் போனப்போ அவளுக்கு வயசு 8 இருக்குமுங்க. அதுக்கப்புறம் போனவருசம்தான் பாத்ததே. பாத்தவ என்னத்தான் கட்டிக்குவேன்னுட்டு ஒரே பிடிவாதம். வேற வழியில்லாமக் கட்டிவச்சிட்டாரு. அவளுக்கு இந்த இடமெல்லாம் புதுசுங்க. அதான் பயப்படுது."

பேசிக்கொண்டே வண்டியைச் செலுத்தியபோது அவன் பார்வை இருபுறமும் எதையாவது பார்த்து அதைச் சுட்டிச் செல்லாமல் இருந்ததில்லை. கொஞ்ச தூரம் போய் வண்டியைத் திருப்பிக்கொண்டான். அவ்வளவுதான், ஒரு வழியாக முடிந்தது. அடுத்த அரை மணியில் ரிசார்ட் போய்விடலாம் என்ற எண்ணமே ஆறுதலாக இருந்தது. அடுத்த பத்து நிமிடத்துக்குச் சத்தமில்லாமல் வண்டி நிற்காமல் வந்தது. திடீரென்று வண்டியைச் சண்முகம் நிறுத்தினான். வண்டியின் இஞ்சின் சத்தம் மட்டும் அங்கு மெல்லமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. ஹெட்லைட்டின் வெளிச்சத்தைத் தாழப் பண்ணியிருந்தான்.

"சார், இதோ பாருங்க" என்று அவன் கைகாட்டிய இடத்தைப் பார்த்தபோது அங்கு ஒரு யானைக் கூட்டம் மேய்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொன்றும் பெரிய பெரிய யானைகள். அவற்றின் காலடியில் சின்னதாக ஒரு குட்டியானை.

"தம்பி! குட்டிஆனை தெரியுதா?" என்று கேட்டான் சண்முகம்.

"தெரியலை அங்கிள்!"

அவனுக்குத் தெரியும்படி ஹெட்லைட்டின் வெளிச்சத்தை மெல்லத் திருப்பிக் காட்டினான். இப்போது அந்தக் குட்டி யானை ஹெட்லைட்டின் வெளிச்சத்தில் பளிச்சென்று தெரிந்தது. பிரணவ் வெறிகொண்டவனாகி,

"ஐய்யா! குட்டி யானை" என்று கத்தித் தொலைத்தான்.

அதுதான் தாமதம், அத்தனை நேரம் எதுவுமறியாதவற்றைப்போலச் சாதுவாக மேய்ந்துகொண்டிருந்த யானைகள் அனைத்தும் ஒருசேர எங்களையே பார்த்தன. சண்முகம் கொஞ்சம் எச்சரிக்கை கொண்டவனாக வண்டியை மெல்ல நகர்த்தப் பார்த்தான். அதற்குள் யானைகளுள் ஒன்று மரத்தைச் சுற்றிக்கொண்டு ஜீப்பிற்கு நேராக வரத்தொடங்கிவிட்டது. அடுத்த சில நொடிகளில் அது எங்களைத் தாக்கவேண்டியதுதான் பாக்கி. நாங்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போய்விட்டோம். சண்முகத்தைப் பதற்றம் தொற்றிக்கொண்டாலும் அதை வெளிகாட்டாதவனாக இருந்தான்.

"சார், பயப்படாதீங்க! ஒண்ணுமில்ல. அக்கா, தம்பியப் பாத்துக்குங்க! அசையாதீங்க! நான் பாத்துக்கிறேன்" என்றான். பெரும் சத்தத்தோடு பிளிறிக்கொண்டு வரும் யானைக்கும் எங்கள் ஜீப்புக்குமான இடைவெளி அதிகபட்சம் முப்பது அடிகளாகக் குறைந்தபொழுது சண்முகம் ஹெட்லைட்டின் ஒளியை அதிகப்படுத்தினான். வண்டியிலிருந்த ஹாரன் சத்தத்தை எழுப்பினான். இடைவிடாது ஹாரன் ஒலியை எழுப்பினான். வேகமாக வந்த யானை இப்பொழுது தனது வேகத்தைக் குறைத்துவிட்டு ஒரு நொடியில் நின்றுவிட்டது. சண்முகம் ஹாரன் சத்தத்தை நிறுத்தவேயில்லை. திடீரென்று கிளம்பிய ஒளிக்கும் ஒலிக்கும் பயந்த யானை கொஞ்சம் பின்வாங்கியது. அது பயந்ததன் அடையாளமாக அதன் வால் தூக்கியிருந்தது. இதைக் கண்டதும் வண்டியைக் கொஞ்சம் முன்னுக்கு நகர்த்தினான் சண்முகம். யானை அதிகம் மிரண்டு காட்டுக்குள் ஓடி, கொஞ்ச தூரம் போய் நின்றுவிட்டது.

"இனி பயமில்லை சார்" என்று சொல்லி வண்டியை நகர்த்தி யானை நிற்குமிடத்தைக் கடந்துபோனான். இவன் நகர்ந்ததும், மீண்டும் துரத்தும் எண்ணத்தில் யானை கொஞ்ச தூரம் எங்களை விரட்டி வந்தது. ஆனால், சண்முகம் வண்டியை ஸ்லோ செய்யவேயில்லை. நான் சுசியைப் பார்த்தேன். அவள் இப்போது அதிகபட்ச மிரட்சியில் இருந்தாள். பிரணவ் முகத்தில் அச்சம் அகலவேயில்லை. நான் கொஞ்சம் தைரியம் வந்தவனாக ஆனேன்.

"சண்முகம்! ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம்!"

"என்ன சார் பண்றது? இதெல்லாம் இங்க சகஜம். பொழைப்பு நடந்தாகணுமே!"

சுசி ரிசார்ட் வரும்வரை எதுவும் பேசவேயில்லை. இறங்கும்போது சண்முகத்தைப் பார்த்து,

"தேங்ஸ் சண்முகம்!"

"தேங்ஸ் எல்லாம் எதுக்குக்கா? உங்களுக்கு மனசுக்குப் புடிச்சிருந்தா எனக்குச் சந்தோசம்!"

"ஏன் சண்முகம், ஒரு நாளைக்கு வந்துபோற எங்கள சந்தோசப்படுத்தணும்ன்னு நினைக்கிறியே? உன்னோடையே காலத்துக்கும் வாழப்போறவ சந்தோசத்த நினைக்கக்கூடாதா?"

"நினைக்கணும்தான்க்கா! ஆனா என்ன பண்றது? அவ இதே டிரைவர் உத்தியோகத்த பெங்களூர்ல வந்து பாருங்கன்னு சொல்றா. இந்தக் காடும் மலையும் எனக்கு அத்துப்படி. ஆனா நகரம்ன்னா அப்படியா? ஒரு தரம் போய் வந்திருக்கேனுங்க. பெரிய ஊரு, நிறைய ஜெனங்க. தடம் மாறிச் சுத்துற ஆனை மாதிரி அதைப் பாத்து நான் மிரண்டுட்டேன். எனக்கு இதுதான் ஊருக்கா."

"அது சரி, உன் வீடு எங்க இருக்கு? நாளைக்குப் புறப்படறதுக்கு முன்னாடி உன் கனிய இங்க கூட்டி வர்றியா?" என்றாள் சுசி.

"அது முடியாதுக்கா!" என்றான்.

"ஏன்?"

"நான் சொன்னேனில்லக்கா, ஒரு நாள் ஆனை ஒன்னு என்ன வழிமறிச்சதுன்னு? அன்னைக்குதான் அவ முழுகாம இருக்கேன்னுட்டுச் சொன்னா. அதான் அவகிட்ட நா அதச் சொல்லல. சங்கதியக் கேள்விப்பட்டதும் ரொம்பக் கோவிச்சிக்கிட்டா. கிளம்பி அவ அப்பன் வீட்டுக்குப் போயிட்டா. இனி பொண்டாட்டியும் புள்ளையும் வேணும்னா பெங்களூரு வான்னுட்டுப் போயிட்டா."

"அவ சொல்றது நியாயம்தானே? அதுக்காக நீ அவள விட்டுறாத" என்றாள் சுசி.

"அதெல்லாம் இல்லைங்க. இப்போ பாத்தமே ஆனை? அதுவும் அவளும் ஒண்ணுதானுங்க. தன்னோட குடும்பத்துக்கு ஒண்ணுமாயிறப்பிடாதுங்கிற நினப்புதான் அதுங்க கோவப்பட்டுத் துரத்தக் காரணம். அது இல்லைன்னு தெரிஞ்சா ரெண்டு பேரும் சமாதானம் ஆயிடுவாங்க" என்றான் சண்முகம்.

சுசி அதற்குமேல் அவனோடு பேசவில்லை. அடுத்த இரு தினங்களில் அவன் பிரணவோடும் சுசியோடும் ஒட்டிக்கொண்டான். கிளம்பும்போது அவன் செல் நம்பரை சுசி வாங்கிக்கொண்டாள்.

"சீக்கிரம் கனியோட சேர்ந்திரு" என்று மட்டும் அவனிடம் சொன்னாள்.

இந்த ஒரு வருடத்தில் ஓரிரு முறை அவனோடு பேசியிருக்கிறாள். அவன் இன்னும் கனியோடு சேரவில்லை என்று போனவாரம் கூடக் குறைபட்டுக் கொண்டாள். அவர்களுக்குப் பிறந்திருக்கும் குழந்தைதான் அவர்களை ஒன்று சேர்க்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். இந்தச் சூழ்நிலையில்தான் முதுமலைச் சரணாலயம் மூடப்பட்டு அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்த ரிசார்ட்டுகளும் அடைக்கப்பட்ட செய்தி டி.வி-யில் வெளியானது. பிழைப்பிற்கு வழியில்லாத மக்களின் போராட்டச் செய்திதான் நாங்கள் டி.வியில் பார்த்தது. சுசி செல்போனோடு என்னருகே வந்தாள்.

"சண்முகத்துக்குத்தான் லைன் போட்டுருக்கேன். என்ன வருது கேளுங்களேன்" என்றாள். செல்போனை வாங்கிக் காதில் வைத்துக் கேட்டேன்.

"நீவோ கரையுவந்தா சப்ஸ்கிரைபர் இகா ஸ்விட்சாப் மாடிதாரே. ஸ்வல்ப ஸமயானந்தரா கரேமாடி."

சுசி என்னை நோக்கிப் புன்னகைத்தாள். அவள் மனத்துள் சண்முகம் கனியோடு போய்ச் சேர்ந்துவிட்டிருக்க வேண்டும் என்று நம்பத் தொடங்கிவிட்டாள். அதன் அடையாளமாக அவள் முகம் பூரித்திருந்த்து. நானும் பதிலுக்குச் சிரித்து வைத்தேன். ஆனாலும், வழித்தடம் மாறி ஊருக்குள் நுழைந்து, கல்லெறிகளைச் சுமந்து மிரளும் யானை ஒன்றுதான் மனத்துள் நினைவுக்கு வந்தது.

About The Author