வாரிசு

"ஊரே திமிலோகப்படும். அத்தனை பேரும் ஒத்தாசைக்கு வருவா. கறிகாய் நறுக்க மட்டும் பத்துப் பன்னிரண்டு மாமி. மூட்டைல வந்து இறங்கும் அத்தனை சாமானும். லிஸ்ட்தான் கொடுப்பார். ‘டேய் என்னால ஒவ்வொன்னையும் செக் பண்ண முடியாது. உன்னை நம்புறேன். போனது, வந்தது… சொத்தை, சொள்ளை தலையில் கட்டிடாதே’ ன்னு சிரிச்சுண்டு சொல்வார். சாமான் அனுப்பறவங்க பதறிப்போய்… ‘அப்படி எல்லாம் அனுப்ப மாட்டோம்னு சொல்லுவா…’"

தலைமுடி எண்ணெய் வைத்து, சிக்கு பிரித்து, நடுவகிடு எடுத்து இருபுறமும் இணைந்து கொண்டிருக்க பாட்டியின் பேச்சு கூடவே.

"பிறகு?"

தலை பின்னுக்கு இழுக்கப்பட்டு இறுக்கமாய் முடி பின்னப்பட, வித்யா ‘ஸ்ஸ்’ என்றாள், அவளையும் மீறி.

"ஏண்டி… வலிக்கிறதா?"

"நை… நை…"

தமிழ் சரளமாய்ப் பேச வரவில்லை. பாட்டியுடன் பேசும்போது ஹிந்தி சட்டென்று வந்துவிடும். பாட்டி விழிப்பதைப் பார்த்து மொழிபெயர்ப்பு.

"பருப்பு… அரிசி… அடேயப்பா… அந்த ஒரு நாள் வருஷத்தில் என்னிக்கு வரும்னு… நாங்க காத்திருப்போம். பெரிசா… பந்தல் போட்டு… ஆயிரம் இலை…. அதுதான் கடைசிப் பந்தி வரைக்கும் அளவு குறையாம… அப்பாவுக்கு அதிலே ரொம்பக் கண்டிப்பு. இல்லைன்னு யாரும் சொல்லிடக் கூடாது."

"உங்களுக்குப் பிதாஜின்னா…"

"உனக்குக் கொள்ளுத் தாத்தா…"

"கொள்ளு…"

"ம்…"

"கொள்ளுன்னா… கியா ஹை மம்மி…?"

"ஆங்… குதிரைக்கு வைக்கிறது."

மாலதி சிரிக்காமல் சொன்னாள். "ஏய்.. குழந்தையைக் குழப்பாதடி. கிராண்ட் ஃ பாதர் மாதிரி… அதுக்கு அடுத்தது…"

"ஒ… கிரேட் கிராண்ட் ஃ பாதரா?"

"அம்மா! உன் பழைய கதையை ஏன் அவகிட்டே சொல்லிண்டு. அவளுக்குப் புரிய வைக்கிறதுக்குள்ளே…"

பேத்தியை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

"நானும் அவளும் என்னவோ பேசிக்கிறோம். நீ எங்கேயோ கோயிலுக்குப் போகணும்னியே. கிளம்பலையா?"

"நான் அப்பவே ரெடி. பேத்திக்கு எப்ப அலங்காரம் முடிக்கப் போறியோன்னு காத்துண்டிருக்கேன்."

"போம்மா. முகத்தை அலம்பிண்டு வா…"

வித்யா எழுந்து போனாள். சீப்பில் சிக்கியிருந்த முடிகளைப் பந்து போல் சுருட்டிக் கொண்டு வாசல் பக்கம் போனாள் அன்னபூரணி.

"அம்மா… கிளம்பலையா?"

வாசலிலிருந்து குரல் கேட்டது. வித்யாவுக்கு மல்லிகைப்பூவை வைத்து விட்டவள் "இதோ… வரேன்" என்று குரல் கொடுத்தாள்.

"நைட்… சாப்பிடறதுக்கா?”

கிளறி வைத்திருந்த சேவையைப் பார்த்துக் கேட்டாள் வித்யா.

"உனக்கு வேணுமா?"

"தோடா…"

டெஸ்ட் பார்த்துவிட்டு ‘ஹை…’ என்றாள்.

"கோயிலுக்குப் போயிட்டு வந்து சாப்பிடலாம். நியூஸ் பேப்பர்… அதோ இருக்கு பாரு… எடுத்துண்டு வா…"

"அம்மா…" மாலதியின் குரல் மறுபடி கேட்டது.

"உங்க அம்மாவுக்குப் பொறுமையே இல்லை. சின்ன வயசிலேர்ந்து எப்பவும் பரபரப்பு… ஆனா… நீ என்னை மாதிரி… நிதானம்…"

"க்யா?"

"ஸ்லோ… ஸ்டெடி…"

பாட்டியின் ஆங்கில அறிவு பேத்திக்கு உபயோகப்பட்டது.

எண்ணெய்த் தூக்கு, விளக்குத் திரி, சூடம் என்று கூடை முழுதும் சாமான்கள்.

மூன்று தலைமுறைப் பெண்கள் தெருவில் இறங்கி கோயிலை நோக்கி நடந்தபோது பாட்டியை நெருங்கி வந்தாள் வித்யா.

"சொல்லு… பாட்டி"

"ஓ!… கதையா? உன்னோட கிரேட் கிரேண்ட் ஃ பாதர்… சலிக்காம அத்தனை பேருக்கும் சாப்பாடு போடுவார். நாங்கள்ளாம் கூடப் பரிமாறுவோம். சின்ன சின்னதா… கூட்டு… காய்… அப்பளம்னு… நான் எல்லாருக்கும் குடிக்கத் தண்ணி தருவேன். பாவாடை, சட்டை போட்டுண்டு… தடுக்கி விழாம இருக்க தூக்கிப் பிடிச்சுண்டு… வாட்டர் ஜக்கோட போவேனாம்… சொல்லுவா…"

பாட்டியின் கண்களில் பழைய நினைவுகள் பளபளத்தன. மாலை வெயில் மதிய வெயில் போல அடித்தது. சிலர் வீட்டு வாசல்களில் பெருக்கி, நீர் தெளிக்க முற்பட, புழுதி காற்றில் கலந்தது.

"தாத்தா வருவாரா… உங்களோட?"

"தாத்தாவா? அப்போ எனக்கு மேரேஜ் ஆகலை… ஆனா… தாத்தாவும் எங்க ஊர்தான். ஹெல்ப்லாம் பண்ண மாட்டார்" என்றாள் சிரிப்புடன்.

மாலதியை யாரோ பிடித்துக்கொண்டு விட்டார்கள். ‘எப்ப ஊர்லேர்ந்து வந்தே? உம் பொண்ணா? அப்படியே… உங்கம்மா ஜாடை’ காற்றில் மிதந்து வந்தன பேச்சுக் குரல்கள்.

"மம்மிக்கி நிறைய பிரெண்ட்ஸ்."

"அவ எப்பவும் இப்படி தெருவுலதான்… வீட்டுக்குள்ளே வரமாட்டா. சாப்பாடு நேரத்துல மட்டும்தான். உங்க தாத்தாவும் அவளை ஒண்ணும் சொல்லமாட்டார்."

"பாட்டி… பிறகு?"

“கிரேட் கிராண்ட் ஃ பாதர் வருஷம் தவறாம இதைப் பண்ணுவார். ஏன் பண்றீங்கன்னு யாரோ கேட்டா… சிரிச்சுண்டு பேசாம போயிட்டார். நான் விடலை… ஒரு நாள் நானும் கேட்டேன். ‘ச்சீ… ச்சீ… போடி’ன்னார். அப்பல்லாம் ரொம்ப மரியாதை. நீ உன் டாடி மேல விழற மாதிரி – நாங்க இல்லை. தள்ளி நிப்போம். பேசவே பயம். நான் மட்டும் கொஞ்சம் செல்லம். அந்த தைரியம்… விடாம மறுபடி கேட்டேன்…"

வித்யா பாட்டியுடன் ஒட்டிக்கொண்டு நடந்தாள். கதை கேட்கிற சுவாரசியம்.

"சாப்பிட்டுட்டு போறப்ப… அவா… முகத்தைப் பார்த்திருக்கியொன்னார்… ம்ம்… யோசிச்சேன்… லேசா ஞாபகம்… என்னப்பான்னு கேட்டேன்… எத்தனை நிறைவு… திருப்தி… அதான்… அதுக்காகத்தான்… மத்தவா சொல்ற மாதிரி… புண்ணியம்… அது… இதுன்னு கணக்குப் பார்க்கற புத்தி இல்லை. அவா வயித்தை நிரப்பினா… அவா மனசை அந்த நிமிஷம் தொட முடியறதே… அந்த சந்தோஷம்தான்…"

பாட்டியின் குரல் தணிந்து மந்திரம்போல் வித்யாவுக்கு மட்டும் கேட்கிறமாதிரி ஒலித்தது. வித்யாவின் தமிழறிவு மீறி நேரடியாய் மனதைத் தொடுகிற வார்த்தைகள். பாட்டியின் பார்வை புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தது.

சந்நிதியில் விளக்கு ஏற்றி நமஸ்காரம் செய்தார்கள். வலம் வந்தார்கள். இருளில் தீப ஒளி மட்டும் பிரகாசிக்க ஸ்வாமியும், அம்பாளும் தரிசனம். ‘கரெண்ட் இல்லை… கார்த்தால போச்சு. எப்ப வருதோ.’

பிரகாரத்தில் பூச்செடிகள். நந்தியாவட்டை, சரக்கொன்றை, செம்பருத்தி, அரளி, மந்தாரை என்று விதவிதமாய், ரகம் ரகமாய் வாசனை.

"ல்வ்லி…" என்றாள் வித்யா. கண்கள் மலர.

"இன்னும் உங்கம்மாவைக் காணோம்…பாரு."

"இங்கேயே உட்காரலாமா… பாட்டி?"

"இரு… இதோ… ஒரு நிமிஷம்…"

பூசைக் கூடையை எடுத்துக் கொண்டு பாட்டி கோயில் வாசல் பக்கம் போனதைப் பார்த்து வித்யாவும் பின்னால் ஓடினாள்.

சற்று ஒதுங்கி அமர்ந்திருந்த அந்தத் தம்பதி, வயசானவர்கள். வயது முதிர்ந்த ஒருத்தியின் அருகில் பார்வை மங்கிய முதியவர்.

பாட்டி கிளம்புமுன் கட்டிக்கொண்டு வந்திருந்த பொட்டலங்களை அவர்களிடம் தருவதைப் பார்த்தாள் வித்யா.

"என்ன பாட்டி?"

"ஸ்ஸ்… வா. உள்ளே போகலாம்."

வித்யா திரும்பிப் பார்த்தபோது அந்த வயதானவள் பொட்டலத்தைப் பிரித்து, சேவையை ஒரு பிடி எடுத்து முதியவரின் வாயில் ஊட்டி விடுவதைப் பார்த்தாள்.

பிரகார மண்டபத்தை நோக்கி பாட்டி நடந்து கொண்டிருந்தாள்.

அன்னபூரணி. வருஷத்துக்கு ஒரு தவம். ஆயிரம் பேருக்குச் சாப்பாடு.

"என்னால முடியலைடி. உங்க தாத்தாவுக்கு இதிலே இஷ்டம் இல்லை. அப்பவே கேலி பண்ணுவார். எப்பவாவது இரண்டு பொட்டலம். யாரோ இரண்டு பேருக்கு… என்னால முடிஞ்சது. எங்கப்பா ஞாபகமா. வேறொண்ணும் வேண்டுதல் இல்லை. ‘அவர் பொண்ணா நீ? அன்னதானம் வெங்கட்ராமனோட பொண்ணா நீ? அன்னதானம் வெங்கட்ராமனோட பொண்ணா?’ன்னு எல்லாரும் கேக்கர்ச்சே உடம்பு ஆடிப் போகிறது. நானும் என் பங்குக்கு அணில் மாதிரி சின்னதா."

பாட்டியின் குரல் சந்தோஷத்தில் கேவியது.

மஞ்சள் வெயில் முகத்தில் பட்டு பாட்டியின் முகம் ஜொலிக்கிறபோது வித்யாவுக்குள்ளும் என்னவோ நிகழ்ந்தது.

(நன்றி : அமுதசுரபி)

About The Author

1 Comment

  1. Dr. S. Subramanian

    Nostalgia brought to real life experience. Brings tears to the eyes. Such sentiments may not come back to life in this age.

Comments are closed.