வாழ வழியில்லாத வாய்க்கால்கள்

காவேரிக்குத் துணையாறு
கோரையாத்துக்கிட்ட கோவிச்சுக்கிட்டு
ரெண்டாப் பிரியும் அரசனூர் சந்தனவாய்க்கால்.
நல்லவாய்க்கால் ஒண்ணு
கொள்ளவாய்க்கால் ஒண்ணு…

கோட்டமாரி கோயில் முன்ன
ஒய்யாரமா ஓடியாரும்
எங்க ஊரு கொள்ளவாய்க்கால்.
குதிச்சுக் குளிச்சா குத்தாலம்
அள்ளிக்குடிச்சா சிறுவாணி!

வாழைத்தண்டுல அணையக் கட்டி
வார வழி மறிப்பாரு காணிக்காரன்.
பயிருக்கெல்லாம் பாஞ்சுபுட்டு
கலங்கிப்போயி வந்து நிக்கும்…

மேலாகளம் தாண்டுனா
வாத்தியாரு வாழைத்தோப்பு.
வரப்பெல்லாம் ரொப்பிப்புட்டு
வெத்தலைப் பதியனுக்கு வேர் நனைக்கும்!

பத்தடில பள்ளக்கை
கொஞ்சம் மேலுகாலுக்குத் தண்ணிவிட்டு
தெழிஞ்சுபோயி
நெழிஞ்சுவரும்…

கோழிகூப்புடக் கோலம்போட்டு
கருக்கலுல மொத ஆளா
தொவைக்க வரும் அத்தாச்சி,
நாலு நா துணிய
ஒரேமுட்டா தொவைச்சுப்புடும்…

சூரியனுக்கு முன்னால
கொழுந்தியாள டாவடிக்க
கொழந்த மாறி வந்துநிப்பான்
பல்லிளிக்கும் பட்டாளத்தான்…

தண்ணிப் பாம்ப கையில புடிச்சு
தாவணி போட்ட தாமரைய
அண்ணாந்து பாக்க வப்பான்
பட்டதாரி ராசு அண்ணன்…

புரியாத மந்திரம் சொல்லி
பூணூல புடிச்சுக்கிட்டு
தலையோட முழுக்குபோடும்
குடுமி வச்ச ராமய்யர்…

நீச்சலடிக்கத் தெரியாம
பித்தாளைச் சொம்புல
மொந்து மொந்து குளிப்பாரு
நாக்கியரு புதுமாப்புள்ள…

இந்த சனத்தயெல்லாம்
நனைச்சுப்புட்டு
சல்லிகூட சலிச்சுக்காம
சல சலனு ஓடிப்போகும்.

வாய்க்கால மொதலாப் போட்டு
வண்ணாத்தி
காரவூடு கட்டுன கதையெல்லாம் இங்கிருக்கு…

ஆடிப்பெருக்குல ஆடிபோகும்
நாதியத்துக் கெடக்குதுப்போ!…

தேங்கி நிக்கும் தண்ணியில
சூத்து கழுவக் கூச்சப்பட்டு
வெள்ளக்காரன் விட்டுப்போன
பழக்கம் வந்து தொத்திக்கிச்சு!…

வெள்ளாமை நடந்த நிலம்
விளையாம வெடிச்சிருக்கு…

நாகரீக நாடகத்துல
நாத்தமடிச்சுக் கெடக்கு…

சேறு கலந்த தண்ணியில
கழிவுநீர் கலந்திருக்கு…

சாமியா இருந்தயிடம்
சாக்கடையா மாறிடிச்சு…

கொள்ளையழகு!!
எங்க கொள்ளவாய்க்கால்…!
கொள்ளையடிச்சுப் போனதாரு??

About The Author