விண்வெளியில்…

இரண்டு நாட்களுக்குப் பின் இப்பொழுதுதான் வீடு திரும்புகிறேன். மிகவும் முக்கியமான, சரித்திரத்தில் இடம் பெறக் கூடிய ஒரு பணியில் எங்கள் விண்வெளி ஆய்வு மையம் இறங்கி இருந்தது. ‘டெட் லைன்’ நெருங்கிக் கொண்டிருந்ததால் எங்கள் குழுவில் அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்தோம்.

‘குவஸ்ட்’ விண்வெளிக் கப்பல் உயிர்களின் நடமாட்டம் உள்ள அந்தக் கிரகத்தை முதலில் கண்டறிந்து சொல்லி ஆறு வருடங்களுக்கு மேலான நிலையில், இப்பொழுது அதனைப் பற்றிய முழு விவரம் சேகரித்துத் தருமாறு எங்கள் மையத்திற்கு உத்தரவு வந்திருக்கிறது. குறிப்பாக, அதன் சீதோஷ்ண நிலை, அதன் பிரதான இனம் (Dominant Species) மற்றும் அவர்களின் அறிவியல் மற்றும் ஆயுத பலம் பற்றிய செய்திகளை பல்வேறு உளவுக் கப்பல்கள் மூலம் ஒருவாறு சேகரித்து விட்டோம். மேலும், சில நுணுக்கமான தகவல்களுக்காக எங்கள் குழு உழைத்துக் கொண்டிருந்தது.

உணவு பரிமாறிய பின், என்றுமே என் பணி பற்றி கேட்காத என் மனைவி இன்று கேட்டாள். உற்சாகமாய் விளக்கினேன்.

"அவர்களை விட நாம் கிட்டத்தட்ட 200 மடங்கு பலம் பொருந்தியவர்கள். அவர்களின் பிரதான இனத்தை விட நாம் உருவத்திலும் மூன்று மடங்கு அதிகம். அதனைக் கைப்பற்ற நமது சிறு படையே போதுமானது"

"அந்த கிரகம் எங்கிருக்கிறது?" ஆர்வமாய்க் கேட்டாள்.

"நாம் சென்ற வருடம் சுற்றுலா சென்றோமே ‘எமி’ கிரகம், அதிலிருந்து சரியாக 5 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ‘எர்த்’ என்று அழைக்கிறார்கள். சூரிய குடும்பத்தில் மூன்றாவது கிரகம்" என்றேன்.

About The Author

1 Comment

  1. P.Balakrishnan

    சுஜாதா எழுத்தைப் போல் அறிவியல் கற்பனைக் கதை!

Comments are closed.