விமல லிங்கம்

திருச்சி சாலையில், லால்குடிக்கு ஐந்து கி.மீ தூரத்தில் ‘ஆதிகுடி’ என்கிற கிராமம் இருக்கிறது. இந்த இடம் பழங்காலத்தில் புதர்கள் நிறைந்து காணப்பட்டது. புல்வெளிகளும் நிரம்பி இருந்தன. புல்வெளியைப் பார்த்து, சில மக்கள் அந்த இடம் வசிக்க ஏற்றது என நினைத்து அங்கு வந்து குடியேறினார்கள். அப்படி மக்கள் அங்கு முதன்முதலில் குடியேறியதால் அந்த இடம் ஆதிகுடி என ஆனது.

அங்கு ஒரு இடையன் விமலன் என்ற பெயரில் வசித்து வந்தான். அவன் வயதில் சிறியவன். பிறவியிலேயே மாற்றுத்திறனாளி. ஆனால் சோம்பேறித்தனம் இல்லாமல், காலையிலிருந்து மாடு மேய்த்து விட்டு மாலை திரும்புவான். ஒருநாள் ஒரு மாடு மட்டும் கூட்டத்திலிருந்து தனியாகப் போய் ஓர் இடத்தில் நின்று பாலைச் சொரிந்தது. விமலன் உடனே அங்கு போய்த் தனது மண்வெட்டியால் அந்த இடத்தைத் தோண்ட முயன்றான். அப்போது அங்கிருந்து குருதி பீறிட்டு வந்தது. அதைப் பார்த்து விமலன் பயந்து போய் நொண்டியபடி சென்று கிராம மக்களிடம் நடந்ததைக் கூறினான். அவன் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தபோதே அவனது ஊனமான கால் சரி ஆனது. மக்கள் மிகவும் ஆச்சரியமடைந்து அந்த இடத்திற்குச் சென்றனர். அங்கே தோண்டிப் பார்த்தனர். ஒரு லிங்கம் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியுடன் அதை அங்கேயே பிரதிஷ்டை செய்தனர்.

இந்த விஷயம் சோழ மகாராஜாவுக்குத் தெரிந்து அரசர் அந்த இடத்தில் ஓர் ஆலயமும் கட்டினார். விமலன் தன் அங்குரத்தினால் தோண்டியவுடன் கிடைத்த லிங்கம் ஆனதால் அந்தச் சிவனுக்கு ‘அங்குரேஸ்வரர்’ என்ற பெயர் சூட்டினர். இந்தக் கோயில் அருகே ஒரு வாய்க்கால் ஓடுகிறது. அதன் பெயர் கமலகாசித் தீர்த்தம். சிறிது தூரத்தில் மயானமும் இருக்கிறது.

இந்தக் காசித் தீர்த்தம் அருகில்தான் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கப்படுகிறது. இங்கு ‘விமல லிங்கம்’ என்ற மிகப்பெரிய லிங்கம் ஆலயத்தின் பிராகாரத்தில் உள்ளது. ஆலயத்தினுள் நுழைந்தவுடன் எல்லோர் கண்களும் இந்த லிங்கத்தின் மேல்தான் போகின்றன. இதற்கும் ஒரு புராணக்கதை உள்ளது.

சூரியனின் மூத்த மனைவி உஷை. அவளது மகன் யமன். சூரியனின் இளைய மனைவி சாயாதேவி. அவளுக்குப் பிறந்த மகன் சனி. யமனுக்கும் சனிக்கும் எப்போதும் சண்டை வரும். சனிக்கு மறுபெயர் மந்தன். அவனது எல்லா வேலைகளும் மிகவும் தாமதமாக இருக்கும். ஒரு சமயம் வந்த சண்டையில் யமன் தனது தண்டத்தினால் மந்தனின் காலை அடிக்க அவருக்கு ஒரு கால் நடக்க முடியாமல் ஊனமாகியது. மனம் மிகவும் வருந்தி தன் தாயிடம் வந்து முறையிட்டார். “அம்மா! அண்ணன் என் காலில் அடித்து என்னை நடக்க முடியாமல் செய்துவிட்டார். என்ன அம்மா செய்வது?” என்று.

"நீ அண்ணனை ஒன்றும் சொல்லாதே! மகேசனை நினைத்துப் பூஜை செய்" என்றார் அம்மா.

"சரி அம்மா! நான் அப்படியே செய்கிறேன்" என்று சொல்லி, சனீஸ்வரன் பல இடங்களில் மகேசனைப் பூஜித்து, பின் பூலோகத்தில் ஆதிகுடிக்கு வந்தார். இங்கும் சிவனை நினைத்துப் பல காலம் தவம் இருந்து, விமலலிங்கத் திருமேனியை அமைத்துப் பிரார்த்தனை செய்ய, ஊனம் நீங்கிச் சிவ தரிசனமும் பெற்றார். அது தவிர, அவருக்கு ‘சனீஸ்வரன்’ என்ற பட்டமும் கிடைத்து, கிரக பதவியும் கிடைத்தது. இதனால் இந்த ஆலயத்தில் வந்து பிரார்த்திக்க உடல் ஊனம், மன ஊனமும் சரியாகி விடுகின்றன. சிறுவன் விமலனின் ஊனமும் இங்கு சரியாகிப் போனது.

தினமும் இங்கு இரண்டு கால பூஜை நடக்கும். தவிர, பிரதோஷம், மாத சிவராத்திரி, மஹாசிவராத்திரி, கார்த்திகை, சோமவாரங்கள், மார்கழி மாத பூஜை, தைப்பொங்கல் எனப் பல நாட்களில் சிறப்புப் பூஜை நடக்கும். இங்கிருக்கும் அம்பாளின் பெயர் பிரேமாம்பிகை. இங்கு விமல லிங்கத்தை சனி இன்றும் வழிபட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆகையால் இந்த இடம் சனி தோஷ பரிகார ஸ்தலமும் ஆகிறது.

ஆலயத்தில் நுழைந்ததும் நம்மை நந்தீஸ்வரர் வரவேற்கிறார். பின், எதிர்ப்பக்கம் அன்னையின் சன்னிதியும், இடப்பக்கம் ஈஸ்வரனின் சன்னிதியும் காணலாம். அர்த்த மண்டபத்தில் விநாயகர், முருகன், பின் பிராகாரத்தில் வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் போன்றவர்கள் இருக்க வடகிழக்கு மூலையில் நவகிரகங்களும் அருள்பாலிக்கின்றன. கோயிலின் தென் கோடியில் ஒரு மயானமும் உண்டு.

லால்குடிக்குப் போகும் அன்பர்கள் இந்த ஆதிகுடியையும் பார்த்து ஈசனின் அருளைப் பெறலாம்!

About The Author