விரல் தொட்ட வானம் (12)- ஏனாதி

ஏனாதி

எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும்
உடைக்கிற வேளையில்
பீலியின் வருடலாய்
மலைகளுக்கு நடுவே பயணிக்கிறான்
என் ஏனாதி.

கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்
நினைத்த நாழிகையில்
புழுதி கிளம்பாமலும்
பூமிக்கு வலிக்காமலும்
அவன் புரவியைச் செலுத்திப் போகும் வேகத்தை
உள்வாங்கும் ஒவ்வொரு முறையும்
நிழலுக்கும் தெரியாமல்.

விலங்குகளும்

நாய்
காலைத் தூக்குகிறது.
பன்றி
சாக்கடையை உதறுகிறது.
சேற்றில் புரண்ட மாடு
உரசுகிறது.

ஆடு
இடது வலதாய் உரசி
அரிப்பைப் போக்குகிறது.
சுத்தமான
சுவர்களைக் கண்டால்
விட்டு வைப்பதில்லை
விலங்குகளும்.

எழுத நினைத்தது

மூன்று முடிச்சிற்குத்
தலைகுனிந்தபின்
குதிரைக் கொம்பாகி விட்டது
பேனா பிரித்துக் காத்திருப்பது.
கிடைத்த வினாடிகளைப்
பயன்படுத்திக்
காத்திருக்கும்போதுதான்
எங்கோ போய்த்
தொலைந்து விடுகிறது.
பசித்த குழந்தைக்குப்
பால் தரும்போதோ
கட்டிலில் அவருடன்
உடன்படும்போதோ
வந்து நிற்கும் வரிசையாய் உள்ளே.

தொட்டுத் தொடரும்…

About The Author