விரல் தொட்ட வானம் (37)

என்னப் பெத்த அம்மா!

வசதியான இடமுன்னு
என்னெய கொண்டாந்து
தள்ளிப்புட்டிங்க
பாழுங் கிணத்துல
கரையேறலாமுன்னு
நினைக்கறப்பல்லாம்
சண்டைதான்
சச்சரவுதான்
என்னோட
சேலை முந்தானை
கண்ணீரும் சளியும்
பார்க்காத நாளே இல்ல
பொறந்த வூட்டு பெருமைய
புகுந்த வூட்டு சுவத்துகிட்ட
சொல்லியும் சுதந்திரமில்ல
நீ வளர்த்த விதத்தை
அவருகிட்ட சொல்லலாமுன்னா
எங்கேயோ பார்க்குறாரு
காது ரெண்டையும்
கழட்டி வச்சாப்ல
சொன்ன சீரு வரிசைய
அனுப்பாத வரைக்கும்
பொறந்த ஊரு மண்ணை
மிதிக்கக் கூடாதுன்னு சொல்லிப்புட்டா
மாமியாக்காரி
என் உச்சிமயிரை புடிச்சு உலுக்கி
எட்டு எழவுன்னா மட்டும் போகச் சொல்றா
சொன்ன சீரு வரிசைய
அனுப்புற வரைக்கும்
மறக்காம சொல்லி அனுப்புமா
நம்ம ஊருல யாரு செத்தாலும்
உம் முகத்தைப் பார்த்து
வருஷம் ஒண்ணாவப் போகுது.

மனிதன்

தனது கிளைகளைப் பரப்பி
ஆகாயத்தை
அணைக்கத் துடிக்கும்
படிக்காத மரம்…

நீட்டிய கைகளில்
பூமியைத் தழுவும்
படிக்காத மழை…

இரண்டையும் கொல்வான்
எட்டும் வரை கைகள் நீட்டி
படித்த மனிதன்!

–தொட்டுத் தொடரும்…

About The Author