விரல் தொட்ட வானம் (41)

வருகை

தானாக வளர்ந்து
வேரூன்றி
கிளை பரப்பி
பூவும் பிஞ்சுமாய்
தழைத்து நிற்கிறது
மரம்,
தூரத்தில் கேட்கிறது
பொக்லின் எந்திர ஓசை!

பேதம்

கனமழை
வெள்ளம் சூழ்ந்தது
கிராமத்தை
சமமாய்த் தெரிந்தது
அவர்கள் தெருவும்
எங்கள் தெருவும்
கை கொடுத்து எங்களை
கரையேற்றினார்கள்
பகை மறந்து
பேதம் மாறாமல்
அடைக்கல முகாமில்
ஒன்றாய் இருந்தோம்
தீண்டாமை அப்போது இல்லை.
அவர்கள் கையில்
உணவு சமைத்து
பரிமாறும்போது
மறக்காமல் அழைத்தார்கள்
எங்களை
இலை எடுக்கவும்
கடைசி பந்திக்கும்

ஒரு குளம் பல படித்துறைகள்

தெரிந்தோ
தெரியாமலோ
விழுந்துவிட்டேன்
குளத்தில்.
விழுந்தபோது
இல்லாத படித்துறைகள்
இப்போது
விதவிதமாய்
குளத்தைச் சுற்றி
எதற்கு இத்தனை…?
கரையேற நினைத்து நெருங்குகையில்
கேட்கிறது
உறுப்பினர் அட்டையும்
சங்க எண்ணும்
துறை இல்லாத இடங்களில்
தடுப்புச்சுவர்கள்
வெளியேற்றமும், நுழைவும்
நிகழாதபடி
மனிதச்சுவடுகளை
விழுந்தபின்
தேடி என்ன பயன்?
திசை தேடித் தவிக்கையில்
மேலிருந்து இறங்கியது
கழுத்திற்கான கயிறு.
இறுக்கி
மேலிழுக்கும் முன்
கேட்டது
நீ எந்த சாதி
எந்த சங்கம் என
மனித சாதி
நேய சங்கம் என்றேன்
அப்படியானால்
இங்கு உனக்கு
வேலை இல்லையென
மேலே இழுக்கும் கயிற்றை
அறுக்கும் வழிதெரிந்தும்
பார்த்துக் கொண்டிருந்தன
குளமும்
படித்துறைகளும்.

–அடுத்த இதழில் நிறைவுறும்…

About The Author