விரல் தொட்ட வானம் (6)-நேற்றை இரவிலும்

நேற்றை இரவிலும்:

அந்த அறை முழுவதும்
நிரம்பி இருக்கிறது
வாசனைகளால்.
ஆஸ்ட்ரேயில் சிகரெட் துண்டு
புகைவாசனை.
கொடியில் கிடக்கும் ஆடைகளில்
வியர்வை வாசனை.
சுத்தமாக்கும்
அடவியனுக்குப் பக்கத்தில் கிடக்கும்
செருப்புகளில்
புழுதி படிந்த அழுக்கு வாசனை.
காலி மதுப் போத்தல்களில்
பொட்டுப் பொட்டாய்
போதை வாசனை.
காகிதத் தட்டுகளில் இருக்கும்
மீதமான காரம் இனிப்புகளில்
எச்சில் வாசனை.
எல்லாம்
தன்னால் விளைந்ததென
மீசை முறுக்குகிறவனுக்குள்
வலிக்கத்தான் செய்கிறது
உருவிப்போட்ட ஆணுறையில்
தன் வாசனை இல்லாத நிலையில்.
நேற்றைய இரவிலும்.

யானை:

நான்கு வயது
மகன் கேட்டுக்கொண்டதும்
யானையாகிப் போனார்
என் கணவர்.
ஏறிஅமர்ந்த பிள்ளை
உற்சாகமானான்.
"யானை யானை
அம்பாரி யானை"
அறைக்குள் வலம் வந்தது
மகனைச் சுமந்த யானை.
என்னம்மா யானை
வீட்டுக்குள்ளேயே சுத்துது??
கேட்ட மகனுக்குச் சொன்னேன்
"நாமெல்லாம்
ஊருக்குப் போயிட்டா
அது வெளியில் சுத்தும்டா!"

–தொட்டுத் தொடரும்...’

About The Author