விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (27)

6.கர்ம யோகத்தின் நிறைநிலை

6.1.இலட்சிய மனிதன் யாரெனக் கேட்பின்…

கர்ம யோகத்தில் நிறைநிலை அடைந்த இந்த இலட்சிய மனிதன் எப்படி இருப்பான்? தீவிரமான செயல்பாடுகளின் இடையேயும் பாலைவனத்தின் அமைதியையும் ஏகாந்தத்தையும் காண்பான். ஆழ்ந்த அமைதியிலும் ஏகாந்தத்திலும் கூடத் தீவிரமான செயல்பாட்டைக் காண்பான்.பெரிய நகரத்தின் ஆரவாரமும் சந்தடியும் நிறைந்த வீதிகளில்நடந்து போய்க்கொண்டிருந்தாலும் எந்தச் சப்தமும் நுழையாத குகைக்குள் அமர்ந்திருப்பது போன்ற பேரமைதியில் அவன் மனம் ஆழ்ந்திருக்கும்.அதன் இடையேயும் அவன் தீவிரமான செயலிலும் ஈடுபட்டிருப்பான். மனதின் சமநிலை குன்றாமல் இருப்பான். இந்த நிலையை அடைய நமது நூல்கள் மூன்று வழிகளைச் சொல்கின்றன. தத்துவ விசாரம்(ஞான யோகம்), இறைவனிடம் அன்பு(பக்தியோகம்), கர்மயோகம் ஆகியன. அந்தக் கர்மயோகத்தைப் பற்றித்தான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்.

கர்மயோகம் என்பது இடைவிடாது செயலாற்றுவது என்று கண்டோம். அதே நேரத்தில், ஒவ்வொரு செயலும் பதிவுகளை உண்டாக்கும், அதிகரிக்கும் என்றும் கண்டோம். இதன்படி, நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நம்மை மேலும் மேலும் பந்தத்துக்குள்ளாக்கி, உலக இன்ப – துன்பச்சுழலில் சிக்கித் தவிக்க வைக்க அல்லவா செய்யும்? கர்ம யோகத்தின் மூலம் நிறைநிலை அடைய முடியும் என்பது முரண்பாடாக அல்லவா தெரிகிறது?

இதற்குக் கர்ம யோகத்தின் தீர்வு, செயல் ஆற்றியே தீர வேண்டும். ஆனால், அதன் பதிவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது எப்படி?

பற்றற்றுப் பணிபுரிந்தால் நமது செயல்கள் நம்மைப் பந்தப்படுத்த மாட்டா. இந்தக் கருத்தை சுவாமிஜி விரிவாகவே விளக்குகிறார்.

பற்றற்றுப் பணிபுரிவது என்கிற கருத்து சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சுவாமிஜியிடமும் நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள்.
பற்றற்றுப் பணிபுரிவது என்பது, ஏனோ தானோ என அசுவாரஸ்யமாக வேலை செய்வதாக ஆகாதா? சுவாமிஜி இது பற்றி நிறையவே சிந்தித்திருக்கிறார். அவர் சொல்வதன் சாரம் இதுதான்:

வேலை செய்யும்போது அதில் ஒரு தீவிரம்,வெறி, வேகம் இல்லாவிட்டால் செய்யும் பணி எப்படிச் சிறக்கும் என்கிற சந்தேகம் எழும். உண்மையில், வெறியும் வேகமும் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்குச் சிறப்பாக வேலை செய்ய முடியும்! எவ்வளவுக்கு எவ்வளவு அமைதியாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கும் நல்லது;நாம் செய்யும் காரியத்துக்கும் நல்லது. அமைதியான மனம் இருந்தால் நிறைய வேலை செய்ய முடியும்; நன்றாகவும் செய்ய முடியும்!உணர்ச்சிகளுக்கு வழி விடும்போது,நமது நரம்பு பதறுகிறது.மனது கிடந்து தவிக்கிறது. ஆற்றல் விரயமாகிறது. காரியத்துக்காகச் செலவிட வேண்டிய ஆற்றல், பதற்றத்தில் வீணாகிறது. பதறாத காரியம் சிதறாது! நமது பூரண ஆற்றலையும், செய்யும் காரியத்தில் முனைப்பாக்க வேண்டும். உலகின் மிகப் பெரிய தலைவர்களையெல்லாம் பார்த்தோமானால், அவர்கள் அசாதாரண அமைதி படைத்தவர்களாக இருப்பார்கள்.எதனாலும் அவர்கள் சமநிலை இழக்கமாட்டார்கள். கோபவசப்பட்டவன் அதிக வேலைகள் செய்யமுடியாது. சீற்றமே அடையாமல் இருப்பவர்கள் நிறைய சாதனை புரிவார்கள். அமைதியான,சமநிலை கொண்ட மனதே நிறைந்த பணி செய்ய உகந்தது!

செய்யும் தொழிலில் ஈடுபாடு என்பது வேறு; பற்று என்பது வேறு. பற்று வெறியையும் உணர்ச்சி வேகங்களையும் கொண்டு வரும். மனதின் சமநிலை என்கிற இலட்சியத்துக்குத் தடையாக நிற்கும்.

காரியத்தில் பதறாதவர்கள் பற்றிப் பாரதி சொல்வார்:

"மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்"என்று.

(Ref: CW 1-Page 34; CW 2-Pages 292-293).

(தொடரும்)

About The Author