வீர வாஞ்சி ரங்கநாதன்

அவன் நிஜப்பெயர் என்னவென்று திடும்மென்று கேட்டால், புருவத்தைச் சுருக்கிக் கொண்டு கொஞ்சம் யோசித்துதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. வீரவாஞ்சி என்று ரங்கநாதனுக்கு வேடிக்கையாகப் பெயர் வைக்க அந்தப் பெயரே நிலைத்து விட்டது.

அது ஏன் வீர வாஞ்சி? எப்பப் பார்த்தாலும் ஒரு இடத்திலும் ஒரு காரியத்திலும் நிலை கொள்ளாமல் "மணியாச்சி, மணியாச்சி" என்று தவித்துக் கொண்டிருப்பதால்தான்.

மாலை ஐந்து மணி ஆவதற்கு முன்னால் ஆபீசில் சீட்டுக்கு அருகில் வந்து நின்று விடுவான். "மணியாச்சி, வீட்டுக்குப் போகலாம்."

கையில் பாதியாய் இருக்கிற வேலையை முடித்து விட்டு வருகிறேன் என்றால் அதற்குள் தவியாய்த் தவித்துத் தண்ணியாய் உருகி விடுவான். அப்படிப் பறந்து பறந்து வீட்டுக்குப் போய் அங்கு செய்ய வேண்டிய அவசர ஜோலி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது. அடுத்த மணியாச்சி, மணியாச்சி பரபரப்புக்குத்தான் ஆயத்தம்!

ஆபீசில் எங்கேயாவது பிக்னிக் போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், நம்ம வீர வாஞ்சி கலந்து கொள்கிறான் என்றால் அத்தனை பேருக்கும் பதைபதைப்புத்தான்.

இன்பச்சுற்றுலா ஒன்று. அத்தனை பேரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டு, பாடிக்கொண்டு, மெய் மறந்து டான்ஸ் ஆடிக்கொண்டு வந்தார்கள். இவன் மட்டும் எதையோ பறி கொடுத்தவன் போல மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு வந்தான். "என்னடா விஷயம்?" என்று தூண்டித் துருவிக் கேட்டேன். "வீட்டில் ஏராளமான வேலை. விட்டு விட்டு வந்துவிட்டேன்" என்று புலம்புகிறான்.

அப்படி என்ன வேலை? சொன்னால் சிரிக்காதீர்கள். துணிகளைத் துவைக்க வேண்டுமாம். பேப்பர் எடுக்கிற பையன் வருவானாம். நிறுத்துப் போடுவது இந்த வாரம் நின்று விடுமாம். இதற்கு அழுவதா, சிரிப்பதா?

இதே போலத்தான் கொடைக்கானலுக்கு சுற்றுலா போயிருந்தோம். பஸ் ப்ரேக்டவுன் ஆகி விட்டது. அனைவரும் பஸ்ஸிலிருந்து இறங்கி, அங்கு வழியிலேயே கிடைத்த அற்புதக் காட்சிகளை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

தூவானமாய் வீசும் சாரல். மண் வாசமும் மலர் வாசமுமாய்க் கலந்து கொண்டு வரும் சுகந்தக்காற்று. பச்சைப் பசேல் என்ற மரங்கள். இயற்கை அன்னையின் பூரண எழில். இது நல்ல வாய்ப்பு என்று ரசிக்க மாட்டானோ? ஹோட்டலுக்கு சாப்பாட்டுக்குப் போக நேரம் ஆகி விடும் என்று தவித்துக் கொண்டிருக்கிறான்.

இதை எல்லாம் விடக் கொடுமை, அனைவரும் அவனை அடிக்காமல் விட்டது அவன் செய்த பாக்கியம். தஞ்சாவூர்ப் பக்கம் டூர் போயிருந்தோம்.

பேராசிரியர் சுவாமிநாதன் சிற்பக்கலை, வரலாறு, தமிழ் இலக்கியம், தொல்பொருள் துறை அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர். ஒவ்வொரு இடமாக அற்புதமாக விளக்கிக் கொண்டு வந்தார். சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி என்பார்களே, உள்ளபடியே அதை அனுபவித்தோம். ஒவ்வொரு இடத்திலும் வீரவாஞ்சி பொறுமை இழந்து கால் மாற்றிக் கால் வைத்துத் தவித்துக் கொண்டிருக்கிறான். "மணியாச்சி, அடுத்த இடத்துக்குப் போகணும்" ஒரே அரிப்பு.

எல்லாரும் எரிச்சல் பட்டு அவனை அடிக்க வந்தது, திருப்பழனத்தில்தான். திருவையாற்றை அடுத்த ஊர். இயற்கை எழில் சூழ்ந்த கிராமம். அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் பேரால் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்த இடம். சுற்றிலும் தென்னஞ்சோலைகள். வீணாதரர், கங்காதரர், மஹேஸ்வரி, இன்னும் அற்புதமான சிற்பக்கவிதைகளை, வரலாற்றை, விவரித்துக் கொண்டு வருகிறார் சுவாமிநாதன். ஒவ்வொரு சிற்பமும் அணு அணுவாய் ரசிக்க வேண்டிய கற்காவியம். நம்ம ஹீரோ இந்த சூழ்நிலையில் "மணியாச்சி மணியாச்சி" என்று அரித்துக் கொட்டினால், அவ்வளவு தூரம் இதற்காகவே மெனக்கெட்டு வந்துள்ள அத்தனை பேருக்கும் ஆத்திரம் வருமா, வராதா?

ஆபீஸ் வேலையிலும் அப்படித்தான். ஏராளமான சின்ன சின்னத் தவறுகள். மானேஜர் கூப்பிட்டுக் கண்டித்தால், "அவசரத்தில் அப்படியாகி விட்டது, ஹி,ஹி.." என்று அசடு வழிவான். அப்படி என்ன அவசரம்?

வேலை என்னவோ ரொம்ப அதிகமில்லை. கையில் இருக்கிற பேப்பரை உடனடியாகத் தள்ளி விட்டு, மேஜையைக் காலியாக வைத்துக்கொண்டு, அடுத்த வேலையை, "மணியாச்சி" என்று அவசரத்தில் அரைகுறையாக, தப்புத் தப்பாக செய்வதற்குக் காத்திருக்க வேண்டியதுதான்!

ஏதோ மனோ தத்துவ ரீதியிலான கேஸ்தான் இது. எனக்குத் தெரிந்த அளவில் "கவுன்ஸெலிங்" செய்ய முயன்றேன்.

"ஒரு டைப்பிஸ்ட். வேகு வேகமாக டைப் செய்வாள். தப்பு ஒன்று கூட இருக்காது. எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போய் எப்படி இது என்று அவளைக் கேட்டார்கள். அவள் சொன்னாள், ‘நான் மெதுவாக டைப் செய்வேன்’."

இதைச் சொல்லி விட்டு நான் விளக்கினேன். "எந்தக் காரியத்தையும் பதற்றமின்றி நிதானமாகச் செய்ய வேண்டும். செய்யும் போது அந்த வேலையில் நூறு சதவீதம் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். செய்து முடித்த வேலையைப் பற்றியோ, இனிமேல் செய்ய வேண்டிய வேலையைப் பற்றியோ எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது. இப்படிச் செய்தால் நிறைய வேலை செய்யலாம். பிழையில்லாமல் செய்யலாம், நேர்த்தியாகவும் செய்யலாம். வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும்." என்று கீதோபதேசம் செய்து கொண்டிருக்கிறேன்.

அவன் காதில் வாங்கிக் கொண்டால்தானே? கண்ணை மிரள மிரள உருட்டி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறான். காலைக் காலைத் தேய்த்துக் கொள்கிறான். கையைக் கையை முறுக்கிக் கொள்கிறான். "போடா, போ!" என்று விட்டு விட்டேன்.

உறுதி செய்து கொண்டேன், இது மனம் சார்ந்த பிரச்சினைதான் என்று. எந்தக் காரியம் செய்தாலும் வேறு காரியம் செய்திருக்கலாமோ என்று நினைக்கிற, channel surfing செய்கிற, சாதாரணக் கேஸ்களை விடத் தீவிரமான கேஸ்தான் இது. சில கேள்விகளைக் கேட்டதில் இது உறுதியாயிற்று.

மாதிரிக்கு ஒன்று. "பள்ளியில் நடந்தவற்றில் உனக்கு பசுமையாக ஞாபகம் இருக்கும் நிகழ்ச்சி?"

"அம்மா பரீட்சையில் முதலாவதாக வர வேண்டும் என்று சொல்லி அனுப்பினாள். நான் பரீட்சை ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே எல்லாருக்கும் முதலாக வெளியே வந்து விட்டேன்!"

இதைவிட வேடிக்கையான விஷயம் ஒன்று. அவன் குறைமாதப் பிரசவமாக எட்டாவது மாதத்திலேயே பிறந்தவனாம். இன்க்யுபேட்டரில் "மணியாச்சி, மணியாச்சி" என்று அவன் கையையும் காலையும் உதைத்துத் தவித்துக் கொண்டிருந்த காட்சியைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

நான் அடுத்துச் சொல்வதைக் கேட்டால் அதிர்ந்துதான் போவீர்கள். அன்றைக்கு பதவி விலகிச் செல்லும் ஒருவருக்குப் பாராட்டு விழா. அவரவர்கள் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்வீட் காரமெல்லாம் இருக்கையிலேயே வழங்கி விட்டார்கள். பாராட்டுரைகள் முடிவதாக இல்லை. ஸ்வீட்டை ஒரே வாயில் முழுங்கி விட்டு, சமோசாவை வாயில் திணித்துக் கொண்டு, திடும்மென்று எழுந்து நின்றான் நம் வீர வாஞ்சி. கை கால்கள் நடுங்குகின்றன. சமோசாவை வாயில் அதக்கியபடி ஏதோ சொன்னவன் அப்படியே உட்கார்ந்து விட்டான். அவ்வளவுதான். எழுந்திருக்கவேயில்லை.

மகாத்மா காந்தி கடைசியாக ‘ஹே ராம்’ என்று சொன்னாரா இல்லையா என்ற விஷயம் சர்ச்சைக்கு உள்ளாகி விட்டது. ஆனால் நம் ரங்கநாதன் இந்த பூவுலகை விட்டுப் பிரிகையில் கடைசியாகச் சொன்ன புகழ் பெற்ற வாக்கியம் என்ன என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை. "நான் போறேன்.. மணியாச்சி…"

இந்த இறுதி வாக்கியத்துடன் விடை பெற்ற போது அன்னாருக்கு வயது 42.

"அடுத்த பிறவிக்கு மணியாச்சி" என்று தவித்துக் கொண்டு அவன் தன் கல்லறையில் புரண்டு கொண்டிருப்பான் என்பது நண்பர்கள் அனைவருடைய யூகம். 

About The Author