வேண்டும்! (1)

‘வேண்டும்’ என்ற வார்த்தை மனிதனின் வாணாள் தோழன்! உலகிருக்கும் வரை இந்த வார்த்தையும் வாழ்ந்திருக்கும். முற்றும் துறந்த முனிவருக்கும் அவர் இந்த உலகில் இருக்கும் வரை எதுவும் வேண்டாத நிலை ஏற்பட வாய்ப்பில்லை! சாதாரண மனிதனுக்குச் சொல்லவும் வேண்டுமோ?

எது வேண்டும், எப்பொழுது வேண்டும், எவ்வளவு வேண்டும், எப்படி வேண்டும், ஏன் வேண்டும், யாருக்கு வேண்டும் – அப்பப்பா! இவ்வளவு கேள்விகளா ‘வேண்டும்’ என்ற வார்த்தைதனைத் தொடர்பு படுத்தி? இந்தச் சொல்லின் நிலை காலத்துக்குக் காலம், கவிஞருக்குக் கவிஞர் எப்படியெல்லாம் வேறுபட்டுள்ளது என்பதை நோக்கும் பொழுது வியப்படைகிறோம்!

திருவள்ளுவர் நாள் தொட்டு இன்றுவரை சிந்தனையாளர்களும், கவிஞர்களும் என்ன என்ன வேண்டும் என்று யார் யாரிடம், எப்படி எப்படிக் கோரியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஒவ்வொருவருக்கும் தனது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு, எது வேண்டும் எது வேண்டாம் என்பதும் மாறுகிறது என்பதை நாம் அறிவோம். எனவேதான் வேண்டுவது எல்லாம் கிடைக்கவில்லையெனில் வேதனைப் படுகிறோம்; வெகுண்டு எழுகிறோம்; வெறுப்படைகிறோம். கிடைத்து விட்டால் எகிறிக் குதிக்கிறோம். இதை உணர்ந்தே, வள்ளுவப்பெருந்தகை, விருப்பையும் வெறுப்பையும் கடந்த இறைவன் அடி பற்றுபவர்க்கு எவ்வித இடர்ப்பாடுகளும் இல்லையென்றார்.

திருவள்ளுவர் போன்ற சிந்தனையாளர்கள் எது வேண்டும்.. எது வேண்டாம் என்று வரையறுத்துக் கூறுவர்.

"வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம்" (குறள் 177 வெஃகாமை)

– பிறர் பொருளைக் கவர்வதால் வரும் செல்வத்தினை விரும்பாதிருக்க வேண்டும்.

"வேண்டற்க வென்றிடுனும் சூதினை" (குறள்931-சூது)

– வெற்றியே கிடைத்தாலும் ஒரு பொழுதும் சூதாட்டத்தினை விரும்பக்கூடாது.

"வேண்டாமை அன்ன விழுச்செல்வம்"(குறள்-363 அவா அறுத்தல்)

– ஆசை இல்லாமல் இருப்பதைவிடச் சிறந்த செல்வம் இந்த உலகில் வேறெதுவும் இல்லை.

"வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப்படும்" (குறள் 265 – தவம் )

– தவத்தினால் விரும்பிய பயன்களை விரும்பியபடியே அடையலாம்.

"வேண்டின் உண்டாகத் துறக்க" (குறள்-342 துறவு)

– துன்பம் இல்லாத நிலை வேண்டுமானால், பொருள்களின் மீதான ஆசையை, அவை மிகுதியாகக் கிடைக்கும் போதே நீக்கிவிட வேண்டும்.

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை" (குறள்-362- அவா அறுத்தல்)

ஒருவன் ஒன்றினை விரும்புவதானால், மறுபடியும்
பிறவாமல் இருப்பதைத்தான் விரும்பவேண்டும்.

– ‘எது வேண்டும்’ என்பது நிரந்தரமானது அல்ல. இந்த நிலை மாறிக்கொண்டே இருப்பது. அரசியல்வாதிக்கு ஒரு தேவை; ஆன்மீகவாதிக்கு ஒரு விதத் தேவை!

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த கருவூர் தேவர் வேண்டுவதைப் பார்ப்போம்:

அறிந்த குறி யடையாளங் காண வேண்டும்
அக்குறியிற் சொக்கி மனந் தேற வேண்டும்
அறிந்தவன் போலடங்கி மன மிறக்க வேண்டும்
அலகையது வழிபாதை அறிய வேண்டும்
மறைந்தவரை நிறைந்தவரை நீ தான் காண
மயக்கத்தைக் கண்டுனையும் மதிக்க வேண்டும்
நிறைந்தமதி குறைந்தவகை அறியவேண்டும்
நிச்சயத்தை அறிவார்க்கு முத்திதானே
………………………………………………………….
……………………………………………………..

தொண்டரடிப் பொடியாழ்வார் வேண்டாம் என்பதைப் பார்ப்போம்:

பச்சை மா மலைபோல் மேனி, பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே – ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் – இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் – அரங்கமா நகருளானே!

வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் வேண்டுவதைச் சற்றே பார்ப்போம்.
ஆளுமை வளர்ச்சிக்கு என்ன என்ன தேவையோ அதை எல்லாம் எவ்வளவு அழகாகக் கேட்கிறார் பாருங்கள்:

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
நினை மறவாதிருக்க வேண்டும், மதி வேண்டும்
நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வினில் நான் வாழ வேண்டும்
……………………………………………….
…………………………………………………..

பாட்டுக்கொரு புலவன் – பார் புகழ் பாரதி- தேசியக்கவி பாரதி – மஹாகவி பாரதி நிறையக் கேட்கிறார்; எல்லோருக்காகவும் கேட்கிறார் – அழகாகக் கேட்கிறார் – அவையெல்லாம் கிடைத்து விட்டால் இம்மானிலம் சுவர்க்கமாக மாறிவிடும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தெரிந்திடல் வேண்டும் -இந்த
ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்?

தமிழரும், தமிழ் நாடும் முன்னேற வேண்டுமெனில்,

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்!

தமிழ் மொழியின் பெருமை பொங்க,

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"

பாரதி விநாயகர் நான்மணிமாலையில் வேண்டுவார்:

எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற்சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாயே!

வேண்டுவதையும், வேண்டாததையும் இப்படிக் கேட்பார்:

நோவு வேண்டேன்; நூறாண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன்; அமைதி வேண்டினேன்
உடைமை வேண்டேன்; உன் துணை வேண்டினேன்
வேண்டாதனைத்தும் நீக்கி
வேண்டியதனைத்தும் அருள்வதுன் கடனே!

இயற்கையை முழுமையாக அனுபவிக்க

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும் அங்கு
தூணில் அழகியதாய் – நல்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் -அந்தக்
காணி நிலத்திடையே -ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் -அங்குக்
கேணியருகினிலே -தென்னைமரம்
கீற்று மிள நீரும்

பத்துப் பன்னிரண்டு – தென்னையும்
பக்கத்திலே வேணும் -நல்ல
முத்துச் சுடர்போல – நிலாவொளி
முன்பு வரவேணும்; அங்கு
கத்துங் குயிலோசை -சற்றே வந்து
காதிற் படவேணும்; – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் -அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா நின்றன்
காவலுறவு வேணும்; – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கு வல்லமையும், உள்ளம் வேன்டிய படிசெலும் உடலும், நசையறு மனமும், நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிரும், தசையினைத் தீ சுடினும் சிவசக்தியைப் பாடும் நல் அகமும், அசைவறு மதியும் வேண்டுமாம்.

வாழ்வில் வெற்றி பெற என்ன வேண்டும்? பாரதி சொல்வதை அடுத்த வாரம் பார்ப்போம்.

About The Author

6 Comments

  1. P.Balakrishnan

    இத்தகைய தமிழ்க் கட்டுரைகள் நிறைய வரவேண்டும். இளைஞர்களுக்கு இலக்கியத்தை எடுத்துக் காட்டவேண்டும். இன் தமிழ்ச்சுவையைப் பருகச் செய்யவேண்டும்.

  2. N V Subbaraman

    Wஎ fஏல் இன்ச்பிரெட் ப்ய் சுச் fஏட்பcக். Tகன்க்ச்

  3. kanmani

    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
    மற்வாமை வேண்டும் இன்னும்
    வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
    அறவா நீ ஆடும்போது உன்
    அடியுன் கீழ் இருக்க என்றார் – காரைக்கால் அம்மையார் புராண்ம்

    அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்”- வட்லூர் வள்ளலார்
    இவை போன்ற ஆன்மீக வரங்களையும் உங்கள் பகுதியில் இணைத்து மேலும் “வேண்டும்” வளர வேண்டும்

  4. N V Subbaraman

    இக்கட்டுரை குறித்து தமது கருத்துக்களைப் பரிமாற்றம் செய்த அன்பு உள்ளங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

  5. so, njaanasambanthan

    சிறந்த கட்டுரை – .எல்லாம் தொகுப்பதற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டிருக்கும் . பாராட்டுகிறேன் .

Comments are closed.