வேண்டும்! (2)

வாழ்வில் வெற்றி பெற வேண்டியவற்றை பாரதி இவ்வாறு கோருகிறார்:

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்!
பண்ணிய பாவமெல்லாம்
பரிதி முன் பனியே போலே
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அம்மா!

அன்னை பராசக்திமேல் பாரதி வைத்த அளப்பற்கரிய நம்பிக்கையினால் எது வேண்டும் எனக் கட்டளையிடுகிறார்:

செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்
சிறுமைகள் என்னிடமிருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ கொடுக்கவேண்டும்
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
தொல்லை தரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்
துணையென்று நின்னருளைத் தொடரச்செய்தே
நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்!

பாரதிப் பெருந்தகை யோகசக்தியிடம் கேட்கும் வரங்களை சற்று பார்ப்போமா?

எண்ணுங் காரியங்க ளெல்லாம் – வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும்-பல
பண்ணப் பெரு நிதியம் வேண்டும் -அதிற்
பல்லோர் துணை புரிதல் வேண்டும் -சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் -மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் -பல
பண்ணிற் கோடிவகை இன்பம் – நான்
பாடத்திறனடைதல் வேண்டும்!

மதி மூடும் பொய்மையிருளெல்லாம் -எனை
முற்றும் விட்டகல வேண்டும்.

ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் -புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் -பல
பையச் சொல்லுவதிங்கென்னே -முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா – எனை
உய்யக் கொண்டருள வேண்டும்.

நல்லதொரு ஆளுமைத் திறன், வாழ்வில் வெற்றி பெறுவதற்கு மிகவும் இன்றியமையாதது அல்லவா? அதற்கு என்ன என்ன தேவைகளோ அவற்றையெல்லாம் எப்படிக் கேட்கிறார் பாரதி என்பதை இக் கவிதை வழிக் காண்போமே! அனைவருக்கும் மிகவும் பழக்கமான கவிதையே. இருப்பினும் ஒரு பார்வையில் அதை நோக்கும் பொழுது அதற்கு ஒரு புதிய பொருள் புலப்படும்.

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்;
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்;
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்படவேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.

சமூக நீதி, சமத்துவம், எல்லோருக்கும் கல்வி, சம வாய்ப்புக்கள் – இவற்றைப் பற்றி, வாதங்களும், விவாதங்களும் வளர்ந்து, நீதி மன்றங்களில் வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் மஹா கவியினுடைய கருத்துக் களை கவிதை உருவில், அவர் வேண்டுவதைக் காண்போம்:

அறிவை வளர்த்திட வேண்டும் – மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் – பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்!

வயிற்றுக்குச் சோற்றிட வேண்டும் -இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்!

சாதிக் கொடுமைகள் வேண்டாம் -அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.

தெய்வம் துணை செய்ய வேண்டும்.

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று -இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் – பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

எத்தனை பொருள் பொதிந்த அறிவுரை. இத் தமிழ் சமுதாயம் அந்த மகானுடைய அறிவுரை தனை ஏற்று நடந்தால், வையகம் சொர்க்கமாக மாறிவிடாதா?

காலத்திற்குக் காலம் மனித இனத்தின் தேவைகள் மாறி வருவதைக் காண்கிறோம். காலத்தின் தேவைகளையே அதற்கொப்ப ஒரு கவிஞன் பாடல்களும் அமைகின்றன. பாரதிக்குத் தாசனாய்த் தன்னைக் கருதிய பாரதி தாசனின் சீர்திருத்தச் சிந்தனைகளும், அவற்றை நினைவாக்க அவர் வேண்டுவதையும் சற்று பார்ப்போமே!

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

என்று களிநடனம் புரிந்தவனல்லவா புரட்சிக்கவிஞன். அவர் தமிழ் வளர்ச்சி எவ்வாறு அமைய வேண்டும் என்று கற்பனை செய்தவற்றை கவிதையிலே இவ்வாறு வடிக்கிறான்:

எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ளஎவற்றினுக்கும் பெயர்களெல்லாங்கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச்செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சல சலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.

புத்தகங்கள்தான் ஒரு மனிதனை சரிவர வழி நடத்தும் சீறிய நண்பன் என்பதை முழுமையாக உணர்ந்த பாரதிதாசன், புத்தக சாலைகளின் இன்றியமையாமையை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதைப் பார்ப்போம்:

புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்
புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.

தமிழர்க்குத் தமிழ் மொழியிற் சுவடிச் சாலை
சர்வ கலாசாலையைப் போல் எங்கும் வேண்டும்.
தமிழிலிலாப் பிற மொழிநூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்.
அமுதம் போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்,
சுமை சுமையாய்ச் சேகரித்துப் பல் கலை சேர்
துறை துறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.

நாலைந்து வீதிகளுக் கொன்றுவீதம்
நல்லது வாய் வசதியதாய் இல்லம் வேண்டும்;
நூலெல்லாம் முறையாக ஆங்கமைத்து
நொடிக்கு நொடி ஆசிரியர் உதவுகின்ற
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
குவிந்திருக்க வகை செய்து தருதல் வேண்டும்
மூலையிலோர் சிறு நூலும் புது நூலாயின்
முடி தனிலே சுமந்து வந்து தருதல் வேண்டும்.

அப்பெருந்தகை விரும்பும் தமிழகம் எப்படி அமைய வேண்டுமாம்?

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சி தனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர் நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல் போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விட வேண்டும் ……………

தமிழும் தமிழகமும் உய்ய

பிறந்துளார் தமிழறிஞர் ஆதல் வேண்டும்
வருந்தமிழர் வையத்தை ஆள வேண்டும்.

தமிழர்களின் எழுதுகோல் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக் கெடுக்க வேண்டும்!

பிறகு,

உரத்தினிலே குண்டு புகும் வேளையிலும் மக்கள்
உயிர் காக்கும் மனப்பான்மை உண்டாக்க வேண்டும்!

காதல் கிள்ளை அவருக்கு வேண்டுமாம். அப்பொழுது அவருக்கு வேறென்ன வேண்டும்? அடுத்த வாரம் காண்போம்.

About The Author