வேறென்ன செய்ய…

நான்…
வில் போன்ற வளைந்த புருவமும்
வெட்கம் ததும்பும் கயல் விழிகளும்
நேர்த்தியாய் அமைந்த நீள் நாசியும்
வரிசையாய்ப் பல் முத்துக்கள் கொண்ட
சிப்பியெனக் கொவ்வைச் செவ்வாயும்
வாரி முடிக்கும் அடர் கூந்தலும் என
முகம் லஷ்மி கடாட்சம் பெற்றவள்தானாம்!

வாழைத் தண்டெனும் கைகளில்
வெண்டைப் பிஞ்சென மெல் விரல்களால்
செட்டாய்க் கட்டிச் செண்டாய்ப் பூ
கட்டும் கைத்திறன் கொண்டவள்தானாம்!

அளவாய் அழகாய்க் கறிகாய் நறுக்கி
அன்பெனும் ருசி கலந்து
பக்குவமாய்ச் சமைத்து
பண்போடு விருந்தினரை உபசரிக்கும்
நல்வெள்ளி உள்ளம் கொண்டவள்தானாம்!
இருந்தாலும்… பொண்ண… வீட்டுக்குப் போய்
தகவல் சொல்றோம் என நழுவி நழுவிச் செல்லும்
மாப்பிள்ளை வீட்டார்தான்
என் வீடு தேடி வருகின்றனர்!
எனக்கு வரன் அமைவதென்னவோ குதிரைக் கொம்பாய்…!
காரணம் கேட்கிறீர்களா?
உடல் நிறத்தில் நான் கறுப்பாம்!
விதியை நொந்து உள்ளுக்குள் சிரிக்கத்தான் தோன்றுகிறது!
வேறென்ன செய்ய…?!

About The Author