ஸ்ராவணி

நிற்கும் என்னை ஏறிட்டுப் பார்க்காமலேயே கேட்டார் அவர், ‘ஏமி சார்? மீகு ஏங்காவாலி?’

எனக்குத் தெலுங்கு புரியும் என்றபோதும் திரும்பப் பேசும் அளவிற்குப் பழக்கமில்லை.

‘மணமகள் தேவை, விளம்பரம் தரணும்.’

இப்போது அவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஓர் ஏளனம் இருந்தது. அதை மறைத்துக் கொண்டு பேசுபவரைப் போல அவர் பேசினார்.

‘சார்! இது தெலுகு பிராமின்ஸ் அஸோசியேஷன். நாங்க நடத்துற ஜெர்னல்ல தெலுங்குக்காரா மட்டும்தான் விளம்பரம் தரமுடியும்.’

இதை அவர் சாதாரணமாகச் சொல்லியிருந்தாலும் எனக்குள் ஓர் அவமானம் படர்ந்துவிட்டதை என்னால் உணரமுடிந்தது. அவரது வாசகம் இரண்டு வகையில் என்னை அவமானப்படுத்தும் நோக்கம் கொண்டதாயிருக்கலாம் என்று பட்டது. ஒன்று, நான் தெலுங்குக்காரனாக இல்லாதிருந்தால், வாசலில் இருந்த போர்டைக்கூட வாசித்துத் தெரிந்து கொள்ளாமல் உள்ளே வருமளவுக்கு நான் படிப்பறிவில்லாதவன் என்பது. மற்றொன்று, தெலுங்குக்காரனாகவேயிருந்தால் அசோசியேஷனுக்குள் வரும்போதுகூடத் தெலுங்கில் பேசாமல் தமிழில் பேசுமளவிற்குப் பாஷாபிமானமோ அல்லது ஞானமோ கூட இல்லாதவன் என்பது. அப்படிப்பட்ட குற்றச்சாட்டை என்மீது சுமத்தினால் அதற்குத் தகுதியானவன்தான் நான் என்பதில் எனக்கு மறுப்பேதும் இல்லை. அவற்றையெல்லாம் இந்த மனிதருக்கு ஒரே மூச்சாகச் சொல்லிப் புரிய வைத்துவிடமுடியாது. அது தேவையும் அற்றது. எல்லாம் அம்மாவைச் சொல்லவேண்டும்! ஏதோ இந்த ஜெர்னலில் விளம்பரம் கொடுத்ததும் பெண்கள் வரிசை கட்டிக்கொண்டு வந்துவிடும் என்பதுபோல எண்ணம். என்னை வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்.

‘தெரியும் சார், நானும் தெலுகு பிராமின்தான். முலகநாடு, எனக்குத்தான் வரன் பார்க்கிறோம்’

‘அலாகா? சாலா சந்தோஷம்! மீ ஜாதகம், மரியு பயோடேட்டா தீசுகொச்சாரா?’

மீண்டும் ஓர் அவமானம். நீ என்ன வேண்டுமோ பேசு, நான் என் மொழியில்தான் பேசுவேன் என்னும் தொனியில் இருந்தது அவர் பேச்சு. விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு வெளியில் வரும்வரை நான் தமிழிலும் அவர் தெலுங்கிலுமாகவே உரையாடிக் கொண்டிருந்தோம். அங்கிருந்து வெளியே வந்ததும் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டேன். வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னதும் அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

‘இதுக்குதான் தெலுங்கு கத்துக்கோ, தெலுங்கு கத்துக்கோன்னு சொல்றேன். நாளைக்கே பொண்ணு வீட்டுலருந்து யாராவது வந்து பார்த்தா என்ன நினைப்பாங்க? ஆஹா, இவங்க தமிழ்க் குடும்பம்போலன்னு நினைக்கமாட்டாங்களா? எல்லா கெட்டபேரும் எனக்குத்தான் வந்து சேரும்.’

‘சரி சரி விடுச்சி பெட்டு! பென்லிக்கி தரவாத்த தெலுச்சுனேடு.’ ஐயா எனக்காகப் பரிந்து கொண்டுவந்தார். அடுத்த கணம் அம்மா அவர் வாயை அடக்கினார்.

‘சாலு லேவண்டி மீ தெலுகு! டேய்! நீ தெலுங்கே பேசலைன்னாலும் பரவாயில்லை, தயவுசெய்து இவரைப்போலப் பேசிராத!’

ஐயாவும் நன்கு தெலுங்கு பேசுபவர் இல்லை. அவர் வேலை பார்த்தது சங்கரன்கோயிலை அடுத்த குருவிகுளத்தில். அங்கு பெரும்பான்மையானவர்கள் நாயக்கர்கள். வேலை பார்த்த நிறுவனம்கூட வீரப்பநாயக்கர் என்பவரதுதான். எனவே, அவர் பேசுவது முழுக்க முழுக்க நாயக்கர்கள் பேசும் தெலுங்காகத்தான் இருக்கும். தெரிந்த உறவுக்காரர் மூலம் வந்த சம்பந்தமாக அம்மா வந்து சேர்ந்தாள். அம்மா சுத்த ஆந்திரா. திருமணத்திற்கு முன்பு, ஐயா பார்க்கப் பெரிய மீசையோடு இருப்பாராம். அம்மாவின் அப்பா, அதான் என் தாத்தா ஐயாவைப் பார்த்துவிட்டு, பாட்டிக்குக் கடிதம் எழுதும்போது ‘பையன் பெரிய மீசை வைத்திருக்கிறான். தி.மு.க-காரன்போல’ என்று முடிந்தவரை ஐயாவைப் பற்றி நம்பிக்கையில்லாமலேயே எழுதினாராம். பாட்டிதான் அரசாங்க உத்தியோகமாயிருக்கிற வரனை விடக்கூடாது என்று சொல்லி வீம்பிற்குக் கல்யாணம் செய்து வைத்தாள் என்று சொல்லி அம்மா அடிக்கடிப் புலம்புவாள். கல்யாணம் ஆன புதிதில் அம்மா, ஐயா பேசும் தெலுங்கைக் கேட்டுப் பயந்து ஓடியே விடுவாளாம்.

‘ஏவண்டி! மீரு பிராமுள்ளேகா, கொம்பதீசி நாயக்கர்லுகாதுகாதா?’ என்று கேட்பாளாம். உண்மையில், அம்மாவின் அடிமனதில் அந்தச் சந்தேகம் நீண்ட நாளைக்கு இருந்தது என்று அவ்வப்போது சொல்வாள்.

எனக்கு விவரம் தெரிந்த வயதில், நாங்கள் இருந்த ஊரைக் காலி செய்துகொண்டு பட்டணத்திற்கு வந்து குடியேறிவிட்டோம். ஐயா பலரிடமும் கடன்வாங்கி, அதற்கு வட்டி கட்டமுடியாத நிலையில் வேலையை விட்டுவிட்டு, அதில் கிடைத்த பணத்தில் கடன்களை அடைத்துவிட்டு, ஒன்றுமற்ற பரதேசிகளைப்போலப் பட்டணத்திற்கு வந்து சேர்ந்தோம். அன்றுமுதல் என்னோடு ஒட்டிக் கொண்டுவிட்டதுதான் தமிழ்.

வறுமை தாண்டவமாடும் எந்த வீட்டிற்கு உறவினர்கள் வந்து போயிருப்பார்கள்? உறவு என்று யாரும் வந்து போவதில்லை. கொஞ்சம் கொஞ்மாகச் சுற்றியிருப்பவர்கள் நட்பாகி, வாழ வழிகாட்டப் பள்ளிப் படிப்போடு நின்றுவிட்டு நானும் வேலைக்குச் செல்லத் தொடங்கினேன். இப்போது ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டோம். மானம்கெடாமல் தலைநிமிர்ந்துவிட்ட குடும்பத்தைப் பார்த்துப் போவதற்காக ஒரு சில உறவினர்கள் இப்போது வந்துபோகின்றனர். நான் யாரோடும் முகம்கொடுத்துப் பேசுவதில்லை. வருபவர்கள் ஐயாவிடமும் அம்மாவிடமும் தெலுங்கில் பேசிவிட்டு, ‘அப்போ, தம்பி வரட்டா?’ என்று சொல்லிவிட்டுச் செல்வதோடு சரி. அம்மா அவர்களை லட்சியம் செய்வதில்லை, ‘அவனுங்க கிடக்குறாங்க. நீ உன் வேலையப்பாரு’ என்பாள்.

அதெல்லாம் கடந்த இரண்டு வருடங்களாக மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் உறவினர்கள் வந்தால் அம்மா விழுந்து விழுந்து கவனிக்கிறாள். அவர்களோடு பேசும்போது என்னை அருகிலேயே இருக்கச் சொல்கிறாள். கிடைக்கும் சாக்கிலெல்லாம் ‘நாகொடுகுலாக ஒச்சா? சாலா மஞ்சி குர்ரோடு. ஏ அம்மாயிக்கி இச்சி பெட்டிந்தோ?’ என்னைப் புகழ்வதை ஒரு வழக்கமாகக் கொண்டுவிட்டாள். அவள் மனத்தில் எனக்குத் திருமணம் நடத்திப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவலும், நல்ல தெலுங்குப்பெண் தனக்கு மருமகளாக வரவேண்டும் என்கிற எண்ணமும் மிகுந்திருந்ததுதான் அதன் காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த முயற்சியின் ஒரு கட்டம்தான் விளம்பரம் தரும் படலம். தமிழ் பேசும் எந்தப் பெண்ணையாவது இழுத்துக் கொண்டு வந்துவிடுவேனோ என அம்மா பயப்பட ஆரம்பித்தாள். நான் எழுதும் கவிதைகள் சிலவற்றை அம்மாவுக்குப் படித்துக் காட்டியதால் வந்த விளைவு அது. அப்பொழுதெல்லாம் ஒரு தெலுங்குப் பெண்தான் தனக்கு மருமகளாக வரவேண்டும் என்று சொல்வாள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல். ஆனாலும் என் கனவுகளில் தமிழ்ப்பெண்களே வந்து கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் காலையில் அம்மா யாரோ ஒரு பெண்ணோடு தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தாள். நான் உள்ளிருந்தபடியே எட்டிப் பார்த்தேன். அவள் நல்ல சிவப்பு நிறத்தில், ஒல்லியாக இருந்தாள். கட்டியிருந்த சேலை மிகவும் பழையதைப் போல இருந்தது. அவள் கைகளில் அணிந்திருந்த பிளாஸ்டிக் வளையல்கள்கூட வெளிறிப் போயிருந்தன. ஒரு தேவதை தரித்திர ரூபம் கொண்டு வந்ததுபோல இருந்தாள். அம்மா ஏதோ பேசி அவளை அனுப்பிவிட்டு வந்தாள்.

‘யாரும்மா அது?’

‘நம்ம கொண்டையன் பொண்ணு.’

‘நல்லாத் தெலுங்கு பேசுறாளே!’

‘ஆமா, அவங்க தெலுங்குதானே!’

‘அவளுக்குக் கல்யாணமாயிருச்சா?’

‘ஏன் கேக்குற?’

‘அவ நல்லா அழகாத்தானிருக்கா! உனக்கோ தெலுங்கு பேசுற பொண்ணுதானே தேவ? பேசாம அவளையே நான் கல்யாணம் கட்டிக்கிட்டா? என்ன சொல்ற?’

நான் பேச்சை முடிக்கக்கூட இல்லை. அம்மா அருகிலிருந்த வெண்கல உருளியை எடுத்து என்மேல் எறிந்தாள்.

*****

ஸ்ராவணி மருமகளாக வருவது குறித்து அம்மாவுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. சிறு பெண்ணைப்போல ஓடியாடி வேலை செய்தாள். பெண் பார்க்கப் போன அன்றே அவளுக்கு ஸ்ராவணியை ரொம்பப் பிடித்துவிட்டது. காரணம், அவர்கள் குடும்பம் மிகவும் கட்டுப்பாடானதாகவும், அன்பால் பிணைக்கப்பட்டதாகவும் தெரிந்ததுதான். அதுமட்டுமில்லாமல், எல்லோரும் தங்களுக்குள் தெலுங்கிலேயே பேசிக்கொண்டார்கள் என்றால் அதற்குமேல் சொல்லவும் வேண்டுமா? அம்மா எனக்குப் பல கட்டளைகளை இட்டிருந்தாள். அதில் பிரதானமானது, முடிந்தவரை தெலுங்கில் பேசவேண்டும் என்பதுதான். எல்லோரும் கேட்ட கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி வைத்தேன். பெண்ணிடம் தனியாகப் பேச விருப்பமா என்று கேட்டபோது சரி என்று சொன்னேன். அம்மா என் கையைப் பிடித்து இழுத்து, ‘முடிந்தவரை தெலுங்கில் பேசு’ என்று சொல்லி அனுப்பினாள்.

ஸ்ராவணி மாநிறமாக இருந்தாள். இளமை அவள் மேனியைப் பொலிவு பொங்கச் செய்திருந்தது. அவள் அங்கங்களைக் காண்பதிலிருந்து கண்களை எடுக்க முடியாமல் திண்டாடினேன். சில நொடிகள், அப்படி நான் காண்பதை அனுமதிப்பவள் போலச் சும்மா இருந்தவள், பின்பு தன் குரலைச் சரிசெய்து கொள்பவள் போல என் கவனத்தைத் திருப்பினாள். அவளிடம் சொல்ல எனக்கு நிறைய இருந்தது. ஆனால், அவற்றைச் சொல்ல மொழிதான் என்னிடம் இல்லை.

‘மீக்கு நேனு நச்சானா?’

ஒரு சிறுமணியின் நா எழுந்து அடங்குவதுபோல அவள் குரல் எழுந்து அடங்கியது. இனி தாமதிப்பதில் பயனில்லை என்று முடிவு செய்து அவளோடு பேசத் தொடங்கினேன். எதையும் வரிசைப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், ஒன்று மட்டும் அவள் புரிந்து கொள்ளும்படிச் செய்தேன். எனக்கு அவள் அளவிற்குத் தெலுங்கு வராது. ஆனால், இருவரும் பரிமாறிக் கொள்ளக் காதல் என்னும் மொழியை உருவாக்கி, அதில் காலம் முழுவதும் அவளோடு பேசிக் கொண்டிருக்க முடியும் என்று உறுதியாகச் சொன்னேன். அவளுக்கு நான் பேசிய தமிழ் எவ்வளவு புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால், என்னை மணக்க அவள் சம்மதம் சொன்னாள் என்பதுதான் ஆச்சரியமாயிருந்தது! அம்மாவுக்குத் தலைகால் புரியவில்லை. திருமணநாளைக் குறிப்பதில் அவள் ஆர்வமாக இருந்தாள்.

திருமணம் தொடர்பான விசயங்கள் பேச ஆரம்பித்தபோது, எதிலும் அம்மா கடுமை காட்டவேயில்லை. அவர்கள் சொன்னதற்கெல்லாம் சரி என்றாள். திருமணச் சடங்குகளைச் செய்யப் புரோகிதரைச் சொல்லவேண்டும். அதுவும், அவர்கள் வீட்டுமுறைகளுக்கு அவர்களுடைய குடும்ப சாஸ்திரிகளைச் சொல்லி விடுவதாகவும், எங்கள் முறைக்கு எங்கள் குடும்ப சாஸ்திரிகளைச் சொல்லிவிடுங்கள் என்றும் ஸ்ராவணியின் அப்பா சொன்னபோது அம்மா உடனடியாக, ‘எங்கள் தரப்புப் புரோகிதரையும் நீங்களே சொல்லிவிடுங்கள்’ என்றாள். அவருக்கான பணத்தைத் தந்துவிடுவதாகவும் சொன்னாள். எனக்கு ராமு சாஸ்திரிகள் நினைவுக்கு வந்து போனார். அம்மா அவரை இந்தத் திருமணத்திலிருந்து விலக்கி வைக்க விரும்புகிறாள் என்பது புரிந்தது.

அம்மா இந்த விசயத்தில் கொஞ்சம் அதிகமாக நடந்துகொள்கிறாளோ என்று பட்டது. ராமு சாஸ்திரிகள்தான் இதுவரைக்கும் எங்கள் குடும்பத்தில் நடந்த பூஜைகளை எடுத்துச் செய்தவர். ஆனால், அவர் தமிழ் சாஸ்திரிகள். வறுமை தாண்டவமாடிய வீட்டிற்கு வந்து, தரும் ஐந்தையும் பத்தையும் வாங்கிக் கொண்டு பூஜைகளைச் செய்து வைத்தவர். இன்று வசதி இருக்கிறதென்று அம்மா அவரைத் தூக்கி எறிந்துவிட்டாளே! அந்த அளவிற்கு என்ன தெலுங்கு அபிமானம் வேண்டிக் கிடக்கிறது என்று கோபம் வந்தது. ஆனால், ராமு சாஸ்திரிகளோ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தனக்குத் தெலுங்குக் கல்யாணங்களை நடத்தி வைத்துப் பழக்கமில்லை என்று அவர் சொன்ன பின்புதான் மனம் கொஞ்சம் ஆறுதலானது. இவற்றைக் குறித்தெல்லாம் கவலைப்பட அம்மாவுக்கு நேரமேயில்லை. அவள் கல்யாண வேலைகளில் மூழ்கிப் போனாள். அடிக்கடி என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவள் ஒன்றுமட்டும் சொல்ல மறப்பதில்லை.

‘கொஞ்சமாவது தெலுங்கு பேசக் கத்துக்கோ! ஏதோ நான் ஒரு தல இருக்கிறவரைக்கும் பொலம்புறேன். அப்புறம் யார் என்ன சொல்லப்போறா?’ என்று கண்கலங்க நிற்பாள். அவளுக்குள் இருந்ததெல்லாம் தனக்குப்பின் தன் குடும்பத்துக்குள் தெலுங்கு அறவே வாசனையற்றுப் போய்விடுமோ என்னும் பயம்தான். ஸ்ராவணி மருமகளாவதன் மூலம், முடியப்போகும் ஒரு மொழிச்சரடில் மீண்டுமொரு நூலை நீட்டித்துவிட்ட மகிழ்ச்சி அவளுக்குள் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்தது.

*****

ஸ்ராவணி, வந்த நாளிலிருந்து அம்மாவோடு ஒட்டிக் கொண்டாள். அம்மாவும் அவளைத் தன் சொந்த மகளைப்போல் பார்த்துக் கொண்டாள். இரவில் என்னோடு தனித்திருக்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் அவள் அம்மாவோடேயிருந்தாள். என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் உதடுகள் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும். அம்மா, தனது வாழ்க்கையில் இத்தனை நாட்கள் மௌனமாக இருந்தவள் போலவும், இப்போதுதான் வரம் கிடைத்துப் பேசுபவள் போலவும் பேசிக் கொண்டேயிருந்தாள். ஸ்ராவணிக்கும் அது தேவையாய் இருந்தது. அவர்கள் வீட்டில் எல்லோரும் தெலுங்கு பேசுபவர்கள். இங்கோ அம்மா மட்டும்தான். ஐயாவுடன் தெலுங்கில் பேச அவளுக்கும் பயமிருந்தது. நான் தெலுங்கில் பேசவில்லை என்று அவள் மனத்துள் கவலை இருக்கிறதா என்று என்னால் அறிய முடியவில்லை. அவள் என்னைப் பார்த்ததும் தமிழுக்கு மாறிவிடுவாள். நான் அந்த நொடியில், என் மீதான அவள் காதலை அறிந்து மகிழ்ந்து கொள்வேன்.

*****

திருமணம் முடிந்த ஐந்தாவது மாதத்தில் ஒருநாள் காலை, அம்மா யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தூக்கத்திலேயே இறந்துபோனாள்! நான் நீண்ட நேரத்திற்கு அதை நம்பமுடியாதவனாக இருந்தேன். பின்பு, சுதாரித்துக் கொண்டு ஸ்ராவணியைப் பார்த்தேன். அவள், அம்மாவின் அருகில் அசையாத ஒரு சிலையைப்போல அமர்ந்திருந்தாள். வார்த்தைகள் வற்றிப் போய்விட்ட ஒரு வறண்ட குளமாக அவள் உதடுகள் மௌனித்திருந்தன. அவள் அருகில் ஐயாகூட எதையெதையோ சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார். ஆனால் இவளோ, நினைவுகளில்கூடச் சொற்கள் முளைக்கவில்லை என்பதுபோல விழியும் அசைவின்றி இருந்தாள். நான் அவளை அப்படிப் பார்க்க விரும்பாதவனாக வெளியே வந்தேன். உறவினர்கள் ஒருவர் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள். ஸ்ராவணியின் அப்பா வந்து சேர்ந்ததும் விசாரித்தார்.

‘மாப்ள! மத்த காரியத்துக்கு சாஸ்திரிகள் சொல்லியாச்சா?’

‘இல்ல மாமா! ராமு சாஸ்திரிகளை வேணா…’

அவர் வேகமாக மறுப்பவரைபோல ‘வேணாம் வேணாம்! தெலுங்கு சாஸ்திரிகளை நானே ஏற்பாடு பண்றேன்’ என்று சொல்லி நகர்ந்து போனார். கொஞ்ச நேரத்தில் ராமு சாஸ்திரிகள் விசாரிக்க வந்தார். அம்மாவின் உடலைப் பார்த்ததும் அவர் கண்களின் ஓரத்தில் நீர் திரண்டது. பின்பு, என் அருகில் வந்தவர்,

‘சாஸ்திரிகள் சொல்லியாச்சா?’

‘ம். மாமாதான் ஏற்பாடு பண்றார்.’

‘சரி சரி!’

அவர் மௌனமாக என்னைப் பார்த்தார். என்னால் அவரோடு பேச முடியாதபடிக்கு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அதை அவர் புரிந்து கொண்டாரோ என்னவோ, என் தோள்களைத் தொட்டார்.

‘கண்ணா! நானே இதெல்லாம் பண்ணி வைக்கலாம்தான். என்ன பண்றது, எனக்குத் தெலுங்கு சடங்குமுறைகள் தெரியாது. கல்யாணத்துலயே பார்த்தேனே, எவ்ளோ வித்தியாசம் தமிழ்க் கல்யாணத்துக்கும் தெலுங்குக் கல்யாணத்துக்கும்! அதுபோல நிச்சயம் இதுமாதிரி காரியங்கள்ளயும் வித்தியாசம் இருக்கும். இத்தனைகாலம் நான் உங்க ஆத்துல வந்து பண்ணினதெல்லாம் பக்தி சார்ந்த பூஜை, புனஸ்காரங்கள். ஆனா கல்யாணம், கருமாதி இதெல்லாம் சடங்குகள். சடங்குகள் எல்லாம் அவா அவா மொழி, இனம் சார்ந்தது. இது உன் மொழியோட அடையாளம், இன்னும் சொல்லப்போனா உன் இனத்தோட அடையாளம். அத மாத்தமுடியுமோ சொல்லு?’ என்று பேசிவிட்டு நகர்ந்து கொண்டார்.

அதற்குள்ளாக, மாமானார் சொல்லி அனுப்பியிருந்த சாஸ்திரிகள் வந்துசேர, சடங்குகளை அவர் தொடங்கிவிட்டார். அவர் எல்லாவற்றையும் தெலுங்கிலேயே சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பேசியது எனக்குச் சரியாகக் காதில் விழவில்லை அல்லது புரியவில்லை. அவர் வலது கை என்று சொன்னபோதெல்லாம் இடது கையையும், இடதுகை என்றபோதெல்லாம் வலது கையையும் தூக்கித் தவறு செய்து கொண்டிருந்தேன். ஒருநிலையில் அவர் கோபம் கொண்டவராகி, ‘சரியாகக் காதில் வாங்கிக் கொண்டு செய்! இல்லை என்றால் பாபம் வந்து சேரும்’ என்று மிரட்டினார். இப்பொழுது, அம்மா இறந்த துக்கத்தைவிட இவர் சொல்வதைச் சரியாகச் செய்துவிட வேண்டுமென்ற பதற்றம் எனக்குள் வந்து ஒட்டிக் கொண்டது. ஸ்ராவணி யாரிடமும் எதுவும் பேசவேயில்லை. எல்லாக் காரியங்களும் முடிந்து நான் வீடு வந்த பின்பும்கூட ஸ்ராவணி தனது உதடுகளைத் திறக்காமல் விம்மிக் கொண்டேயிருந்தாள்.

அடுத்த பதின்மூன்று நாட்களும் அதே சாஸ்திரிகள்தான் வந்தார். இப்பொழுதெல்லாம் அவர் பேசுவதையும், உச்சரிக்கும் மந்திரங்களையும் என்னால் கவனித்துத் திரும்பச் சொல்ல முடிந்தது. அவரும்கூடத் தனது கண்டிப்பைக் குறைத்துக்கொண்டு என்னோடு கனிவாகப் பேச ஆரம்பித்தார். பன்னிரெண்டு நாட்களிலும் யாரிடமும் பேசாத ஸ்ராவணி பதின்மூன்றாம் நாளான இன்று எல்லோரிடமும் பேசத் தொடங்கியது எனக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. ஒருவேளை இன்று சுபஸ்ரீகாரம் என்பதால் தான் சோகமாக இருக்கலாகாது என்று எண்ணிக் கொண்டாளோ என்னவோ! எப்படியோ, அவள் கொஞ்சம் சகஜமானது மகிழ்வளித்தது. நேரம் செல்லச் செல்ல அவள் செயல்பாடுகள் அதிகரித்து அவள் கலகலவெனச் சிரித்துப் பேசுபவளாகவும் ஆனாள்.

அன்றைய தினத்தின் இறுதியில் எல்லா உறவினர்களும் புறப்பட்டுவிட்டார்கள். ஸ்ராவணியின் அப்பா மற்றும் இருவர் மட்டுமே வீட்டில் இருந்தனர். கோவிலுக்குப் போய்வர வேண்டுமென்று சொல்ல, எல்லோரும் கோவிலுக்கும் போய்வந்தோம். அது மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இரவு உணவு என்று எதுவும் இல்லை. எல்லோரும் படுத்துக் கொண்டார்கள். ஸ்ராவணி எனக்கும் அவளுக்கும் எங்கள் அறையிலேயே படுக்கையை விரித்திருந்தாள். எனக்கும் அவள் அருகாமை தேவையெனப்பட்டது. ஸ்ராவணி என்னைக் கட்டியணைத்து முத்தமிட்டாள். நான் அவள் உதடுகளைப் பற்றிக் கொண்டேன். அவள் சில கணங்கள் கண்களை மூடிக்கிடந்தாள். எனக்குள்ளாக, அவளின் இந்த மாற்றம் பற்றிக் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால், எப்படிக் கேட்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் அவள் பேசினாள்.

‘இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன், ஏன்னு சொல்லுங்க?’

எனக்கு அதுதானே புரியவில்லை. ‘இல்லை’ என்பதுபோல உதடுகளைப் பிதுக்கினேன்.

‘அதுக்குக் காரணம் நீங்கதான்!’

‘என்னது நானா?’

‘ஆமா, இன்னைக்குக் காலைலயிருந்து நீங்க என்ன பண்றீங்கன்னு உங்களுக்குத் தெரியலையா?’

‘நிஜமாக எனக்குத் தெரியலை. என்ன? சொல்லு!’ என்றேன் ஆர்வமாக.

‘நீங்க காலைலயிருந்து உங்களையும் அறியாமலேயே தெலுங்குலதான் எல்லார்கிட்டயும் பேசிக்கிட்டு இருந்தீங்க’ என்றாள்.

அப்போதுதான் உறைத்தது, நான் மிகவும் சரளமாக எல்லோரிடமும் தெலுங்கு பேசியிருக்கிறேன் என்று. எப்படி இது நிகழ்ந்தது என்று எனக்குப் புரியவில்லை. இந்தப் பனிரெண்டு நாட்களாக அந்தச் சாஸ்திரிகள் மாமா படுத்திய பாட்டில் வந்திருக்கலாம் அல்லது மொழிகூடத் தொன்மம் போல நனவிலியில் இருக்கிறது என்கிறார்களே அப்படி அது வெளிப்பட்டிருக்கலாம். ஆனால், அது நடந்திருக்கிறது. அம்மா இருக்கும்போதெல்லாம் தெலுங்கில் பேசச் சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் ஆசை நிறைவேறவேயில்லை. ஸ்ராவணி என்னை நோக்கி,

‘என்னங்க நான் சொல்றது சரிதானே?’

‘சரிதான்’ என்று சொல்லி மீண்டும் அவள் உதடுகளைப் பற்றிக் கொள்ளப்போனேன். அவள் இடைமறித்தாள். அவள் கண்களில் உடையப்போகும் குமிழியைப்போல நீர் சேர்ந்திருந்தது. கலங்கலான குரலில் அவள் பேசினாள்.

‘நீங்க தெலுங்கு பேசுறது அம்மா பேசுற மாதிரியேயிருக்கு! அம்மா இறந்து போகலை, அவ உங்க வாய் வார்த்தைல வாழ்றாளோன்னு எனக்குத் தோன்றது’ என்று சொல்லிவிட்டு வெடித்து அழத் தொடங்கினாள்.

About The Author

2 Comments

  1. rishaban

    ஒரு சிறுமணியின் நா எழுந்து அடங்குவதுபோல அவள் குரல் எழுந்து அடங்கியது. aahaa!

  2. rishaban

    மிக அருமையான கதை. ரசித்து படித்தேன்.. வாழ்த்துகள்.

Comments are closed.