200 ஆண்டுகள் வாழ்வதெப்படி?

(ஸ்டீபன் லீகாக் அவர்களின் literary lapses என்ற நகைச்சுவைக் கட்டுரைத் தொகுப்பிலிருந்து)

எப்படியெல்லாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் (வாழக் கூடாது?) என்பதை எனது பழைய நண்பர் பஞ்சு என்ற பஞ்சாமியிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதிகாலையில் எழுந்து அப்படியே குளிரக் குளிர பச்சைத் தண்ணீரில் குளிப்பார். கேட்டால் அது உடலிலுள்ள வியர்வைத் துவாரங்களைத் திறக்கிறது என்று சொல்வார். அதற்குப் பிறகு வெந்நீரால் உடலில் ஒத்தடம் கொடுத்துக் கொள்வார். அது திறந்த துவாரங்களை மூடிக் கொள்ளச் செய்கிறதாம். இதனால் அவர் மனம் விரும்பியபடி வியர்வைத் துவாரங்களை மூடவோ திறக்கவோ முடிகிறது என்பது அவர் எண்ணம்.

அவர் டிரஸ் செய்து கொள்வதற்கு முன்னால் ஜன்னல் பக்கத்தில் நின்று ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்வார். ஒரு பக்க மூக்கால் மூச்சிழுக்கும்போது பத்து பேர் உள்ளே போய்விடலாம். பிறகு வெளியே விடும்போது அவர்கள் அப்படியே பத்திரமாக வெளியே விழுந்து விடுவார்கள். கேட்டால் அது தனது நுரையீரலை விரிவடையச் செய்கிறது என்று சொல்வார். இதற்காக அரைமணி நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. ஓடுகிற பஸ்சைப் பிடிக்க லொங்கு லொங்கென்று அதற்குப் பின்னால் ஒடினாலே போதும்! அவர் நேரம் – அவர் செலவழிக்கிறார் – எனக்கென்ன? பனியனைப் போட்டுக் கொண்ட பிறகு உடலை இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் சுழற்றிப் பயிற்சி செய்வார்.

நாள் பூரா இப்படித்தான் தன் உடலைப் பேணிப் பாதுகாப்பார். அலுவலகத்தில் இடைவேளையில் கூட மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன் வயிற்றை மட்டும் தூக்க முயற்சி செய்வார். அது அவரால் செய்ய முடிந்து விட்டால், தன்னால் செய்ய முடியாத ஒரு பயிற்சி வரும் வரை ஏதாவது செய்து கொண்டே இருப்பார். பிறகு உணவு இடைவேளை முடியும் வரை சந்தோஷமாக மல்லாக்கப் படுத்துக் கொண்டிருப்பார். மாலை வேளைகளில் இரும்பு பார், இரும்புக் குண்டுகளைத் தூக்கி மீண்டும் உடற்பயிற்சி. மூச்சைப் பிடித்து இரும்பு பார்களைத் தலைக்கு மேலே தூக்கும் காட்சியைப் பார்க்கக் கண் கோடி வேண்டும்.

இப்போது பஞ்சு உயிரோடு இல்லை. அவர் இப்படிப் பயிற்சி செய்து உடலைக் கெடுத்துக் கொண்டே ஐம்பது வயது ஆவதற்குள் உயிரை விட்டு விட்டார்! இன்றைய இளைஞர்களுக்கு பஞ்சுவின் வாழ்க்கை ஒரு பாடமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களும் பஞ்சுவைப் போலவே உடற்பயிற்சி, ஆரோக்கியம் என்று பைத்தியமாக இருக்கிறார்கள். ஒரு அரைக்கால் டிராயரைப் போட்டுக்கொண்டு காலை வேளையில் எதையோ பிடிக்கப் போவதுபோல காலை உணவிற்கு முன்னால் ஓடுகிறார்கள். அவர்கள் மாமிசம் சாப்பிட மாட்டார்கள், ஏனென்றால் அதில் அதிகமாக நைட்ரஜன் இருக்கிறதாம். பழங்கள் சாப்பிட மாட்டார்கள், ஏனென்றால் அதில் நைட்ரஜனே இல்லையாம்.

வாய்க்குப் பிடித்த உணவைச் சாப்பிடாமல் உடல் ஆரோக்கியம் என்று எந்த ருசியுமே இல்லாத உணவை அள்ளிப் போட்டுக் கொள்வார்கள். அவர்கள் குழாயிலிருந்து வரும் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள், பாட்டில் தண்ணீர்தான். பால் குடிக்க மாட்டார்கள். மதுவை ஒதுக்குவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எதைக் கண்டாலும் பயம். ஆம்! அவர்கள் சுத்தக் கோழைகள்!

இவ்வளவு ஜாக்கிரதையாக இருந்த பிறகும் அவர்கள் ரொம்ப வருஷம் உயிரோடு இருக்கிறார்களா? ஊஹூம்! ஏதாவது ஒரு சின்ன வியாதி வந்து ‘பொட்’டென்று மற்ற எல்லோரையும் போலப் போய் விடுகிறார்கள். இவர்கள் எல்லாருமே தவறான பாதையில் செல்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

உண்மையாகவே நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டுமா? நிம்மதியான, மகிழ்ச்சி பொங்கும் முதுமை வேண்டுமா? "அந்தக் காலத்தில் நான் காலேஜில படிச்சப்போ…" என்று ஆரம்பித்து மலரும் நினைவுகளைச் சொல்லி இளைய தலைமுறையை அறுக்க வேண்டுமா? அப்படியென்றால் இந்த மாதிரியான முட்டாள்தனமான காரியங்களைச் செய்வதைக் கை விடுங்கள்.

காலையில் உங்களுக்கு எப்பொழுது எழுந்தால் வசதியோ, அப்போது எழுந்திருங்கள். உங்களுக்கு ஆபீஸ் பத்து மணிக்கு என்றால் ஒன்பதரை மணிக்கு எழுந்திருக்கலாம். ஓசோனுக்காகக் கவலைப்படாதீர்கள். அது கிடைத்தால் கிடைக்கட்டும். உண்மையாக அப்படி ஒன்று கிடையவே கிடையாது. அப்படியென்று ஒன்று இருந்தால் அதை வாங்கி உங்கள் ஃபிளாஸ்கில் போட்டு வைத்துக் கொள்ளலாம். ஏழு மணிக்கே ஆபீஸ் என்றால் பத்து நிமிஷம் முன்னால் எழுந்து கொள்ளலாம். ஆனால் எனக்கு விடியற்காலையில் எழுந்து கொள்வது பிடிக்கும் என்று பீலா விடாதீர்கள். காலையில் எழுந்திருப்பதில் உள்ள கஷ்டம் எனக்குத் தெரியும், உங்களுக்கும் தெரியும்!

அடுத்து குளிர்ந்த நீரில் குளிப்பது? எதற்காக அப்படிக் குளிக்க வேண்டும்? நீங்கள் சின்னக் குழந்தையாக இருந்தபோது வெந்நீரில்தானே குளித்தீர்கள்? இப்போது மட்டும் என்ன வந்தது? நீங்கள் இதமான வெந்நீரில் சுகமாகக் குளியுங்கள் (சொல்லப் போனால் குளிக்க வேண்டும் என்பதே அனாவசியமான வேலை!) நான் இப்படிக் குளிரான தண்ணீரில் ஷவரில் குளித்தேனாக்கும் என்று மற்றவர்களிடம் கதையடிக்க வேண்டாம், ஏதோ நீங்கள் ஒருவர்தான் எப்போதும் குளிப்பவரைப் போல!

கிருமிகள், பாக்டீரியாக்கள் என்று அலட்டிக் கொள்ளாதீர்கள். அவைகள் நாம் ஓட ஓட நம்மை விரட்டும். நாம் அதை திரும்பிப் பார்த்துத் துரத்த ஆரம்பித்தால் ஓடியே போய்விடும். இதுதான் நியதி. விஷக் கிருமிகளை பார்க்க நேர்ந்தால் அவைகளை நேருக்கு நேர் சந்தியுங்கள். கையில் எது கிடைத்தாலும் அடித்துத் துரத்துங்கள். பிறகு அவை உங்களைத் திரும்பியே பார்க்காது. சொல்லப் போனால் இந்தக் கிருமிகள் அப்பாவிகள். நாமாக அதைச் சீண்டும் வரை அவை நம்மை ஒன்றும் செய்யாது. நில் என்றால் நிற்கும், உட்கார் என்றால் உட்காரும். எனக்குக் கூட இந்த மாதிரி ஒரு சமயம் விஷக் கிருமி பரவியிருக்கிறது. அந்த நேரத்தில் அது பாட்டிற்கு சாதுவாக என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும். அத்தனை பாசம் அதற்கு! ஆனால் அது பிறகு செத்துவிட்டது. அதை எவ்வளவு வருத்தத்துடன் தோட்டத்தில் புதைத்தேன் தெரியுமா?

முதலில் காலரா, டிப்தீரியா போன்ற வியாதிகள் கிருமிகளால் பரவுகின்றன என்பது பெரிய புழுகு. மருத்துவர்கள் அவர்கள் வசதிக்காகக் கட்டிய கட்டுக் கதை. காலரா அடி வயிற்றில் ஏற்படும் வலியால் வருகிறது. டிப்தீரியா தொண்டையில் ஏற்படும் வலியினால் வருகிறது போன்ற உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்!

அடுத்தபடி உணவு. இதில் வைட்டமின் இருக்கிறது, ப்ரோடின் இருக்கிறது, அதிகம் ஸ்டார்ச் இருக்கிறது என்று பார்த்துப் பார்த்து சாப்பிடுவதை விடுங்கள். இஷ்டப்படி வெட்டுங்கள். என்னவெல்லாம் ஆசைப்படுகிறீர்களோ கவலைப்படாமல் சாப்பிடுங்கள். ஒரே விஷயம் – உங்கள் பர்சை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த சத்து தேவையோ அதை மருந்துக் கடையில் வாங்கிக் கொள்ளலாம். சாப்பாட்டையும் சத்துக்களையும் ஒன்றாக இணைக்காதீர்கள்.

அடுத்தபடி உடற் பயிற்சி, காற்று வாங்குதல் – இவை இரண்டைப் பற்றியும் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ள வேண்டாம். உங்கள் அறையில் நன்றாகக் காற்று பரவியதும் ஜன்னல்களையும் கதவுகளையும் இழுத்து மூடுங்கள். உள்ளே இருக்கும் காற்று எங்கேயும் போக முடியாது. பல வருஷங்களுக்கு அங்கேயேதான் இருக்கும். பின் எதற்கு காற்று வாங்க வெளியில் செல்ல வேண்டும்? உடற்பயிற்சி உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று ஆசையா? செய்துகொள்ளுங்கள். அதற்காக சிரமப்பட வேண்டாம். பேசாமல் ஒரு கோக்கைக் கையில் வைத்து மரத்தடியில் சிகரெட்டோடு உட்கார்ந்து மற்றவர்கள் விளையாடுவதையும் பயிற்சி செய்வதையும் கண்டு களியுங்கள். இருநூறு ஆண்டுகள் வாழ இவை போதும்! வேறென்ன வேண்டும்?

About The Author

2 Comments

  1. P.பாலகிருஷ்ணன்

    கந்தையானாலும் கசக்கிக் கட்டு. கூழானாலும் குளித்துக் குடி, நொறுங்கத் தின்றால் நூறு வயது.- என்றெல்லாம் கூறுவார்கள்.

  2. Mannai Pasanthy

    சிரஞ்சீவி என்று பெயர் கொண்டவன் அல்ப ஆயுசு
    பலசாலி என்று பெயர் கொண்டவன் சீக்காளி

Comments are closed.