ஒரு பூனை புலியாகிறது (11.1)

துணைக் கமிஷனர் தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டுச் சோகத்தோடு கமிஷனரைப் பார்த்தார்.

"பதினோரு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றால் சாதாரணமாக மந்திரிகள் அரை மணி, முக்கால் மணி நேரம் தாமதமாகப் புறப்படுவார்கள். இவர் காலம் தவறாத அமைச்சராக இருக்கிறாரே!” என்று கூறிய கமிஷனர் ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு, “மிஸ்டர் துணைக்கமிஷனர்! வயர்லஸ் மூலம், காவல் துறையினருடன் தொடர்பு கொள்ளுங்கள். மத்திய மந்திரியின் காருக்கு முன்னே நம் துறையினர் பாதுகாவலுக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களிடம், கொலை நடக்கலாம் என்று செய்தி வந்திருப்பதை அறிவியுங்கள். அவர்கள் அதை அமைச்சரிடம் தெரிவித்து, அவரைக் குழந்தை எழுத்தாளர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் திரும்பிப் போகுமாறு வற்புறுத்தச் சொல்லுங்கள். அமைச்சர் போகும் வழியில் அவர் காரை வழி மறித்தும் சொல்லலாம் என்றும் தெரிவியுங்கள். வயர்லஸ் மூலம் தொடர்புகொள்ள முடிந்த அனைவரிடமும் தெரிவியுங்கள். க்விக்! நாம் விதியோடு போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். காலதாமதம் சாலவும் தீது" என்று கூறினார். அவர் எழுத்தாளர் என்பதும் பேச்சில் வெளிப்பட்டது.

துணைக் கமிஷனர் அறைக்கு வெளியே ஓடினார். அறையிலிருந்த மூவரும் மயான அமைதியில் ஆழ்ந்தனர். மயான அமைதியில்… என்பது அமங்கலச் சொற்றொடரோ?

துணைக் கமிஷனரின் வயர்லஸ் செய்தி காவல் துறையினரை அடைந்தபோது, மத்திய மந்திரியின் கார் மேம்பாலத்தைக் கடந்து, வேகமாகச் சென்று கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிளில், காருக்கு முன்னே சென்ற காவல் அதிகாரி ஒருவர் செய்தியைக் கேட்டு அடைந்த அதிர்ச்சியில், அவரது வண்டி திசை தவறிச் சாலையில் குறுக்கே பாய்ந்தது. ஒரு கணத்தில் அதை உணர்ந்து வண்டியைச் சாலையின் மறு ஓரத்துக்குச் செலுத்தினார். அமைச்சரின் கார், வேகத்தைக் குறைக்காமல் விர்ரென்று சென்றது.
அதிகாரி தனது முட்டாள்தனத்தை நொந்து கொண்டார். சாலையின் குறுக்கே சென்ற மோட்டார் சைக்கிளை அப்படியே அங்கேயே நிறுத்தியிருந்தால், இந்நேரம் அமைச்சரின் கார் நின்றிருக்கும். சொல்ல வேண்டியதைச் சொல்லி, அமைச்சரைத் திருப்பி அனுப்பியிருக்கலாமே! அதிகாரி சாலையைப் பார்த்தார். அமைச்சரின் கார் ஆனந்த் தியேட்டரை நெருங்கிக் கொண்டிருந்தது. உடனே தனது மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து, வேகமாகச் செலுத்தினார். அது மின்னலைப் போலப் பாய்ந்து அமைச்சரின் காரை விரட்டியது.

குழந்தை எழுத்தாளர் சங்கக் கூட்டம் மத்திய நூலகக் கட்டடத்தில் நடைபெறுகிறது. அதன் வெளி வாயிலில் அமைச்சரின் கார் மெதுவாகத் திரும்பி நுழையும்போதே, போலீஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிள் அவர் காரைக் கடந்து முன்னே போய், அமைச்சரை வரவேற்கக் காத்து நின்ற சங்கப் பிரமுகர்களின் எதிரே நின்றது. ‘இனி அமைச்சரைக் கட்டடத்துக்குள் செல்லாமல் தடுத்துவிடலாம்’ என்ற நம்பிக்கையுடன், அதிகாரி மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கினார்.

******

துணைக் கமிஷனர் சுமார் பதினைந்து நிமிடத்தில் சோர்ந்த நடையும் தொங்கிய முகமுமாகத் திரும்பி வந்தார்.

"சாரி சார்! நமது முயற்சி முழுப்பலனைத் தரவில்லை" என்றார்.

"விளக்கமாய்ச் சொல்லுங்கள்" – கமிஷனர் கேட்டார்.

"சார்! என்னுடைய வயர்லஸ் செய்தியைப் பெற்ற அதிகாரி ஒருவர், அமைச்சரை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் நுழையும் முன் சந்தித்துத் தடுத்தார். ஆனால் அதிகாரி கூறிய காரணத்தைக் கேட்டு அந்த அமைச்சர் சிரித்தாராம்".

"என்னைக் கொலை செய்வதாகச் செய்தி வந்திருக்கிறதா? இதுபோல் எத்தனை செய்திகள் கேட்டிருக்கிறேன்! என் வீட்டுக்குள்ளேயே வெடிகுண்டு இருப்பதாய் மூன்று மாதங்களுக்கு முன் செய்தி வந்தது. வீட்டை விட்டு ஓட்டலுக்குப் போகச் சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன். அரசியலில் புகுந்துவிட்டால் இத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சக்கூடாது. நான் அஞ்ச மாட்டேன். நீர் போலீஸ்காரர். கொலை செய்பவனைப் பிடிக்கப் பாரும்! என்னைத் தடுக்கப் பார்க்காதீர்!" என்று கூறி, அதிகாரியைத் தம் கையாலேயே ஒதுக்கித் தள்ளிவிட்டு, கட்டடத்துக்குள் போய் விட்டாராம்.

"செய்தி வந்தது",துணைக் கமிஷனர் சொன்னதும், "இந்த அமைச்சருக்கு திருக்குறளின் இந்தி மொழிபெயர்ப்பு வாங்கி, அதில் அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்னும் குறளைச் சிவப்பு மையால் கோடிட்டு அனுப்ப வேண்டும்" என்றார் கமிஷனர்.

"அனுப்பலாம் சார். இன்று அவர் கொலையாகாமல் தப்பினால்" என்றார் துணைக் கமிஷனர்.

கமிஷனர் தமிழ் இலக்கியம் கற்றவர். ‘ஊழிற் பெருவலியாவுள’ என்னும் வள்ளுவர் வாக்கு அவர் மனத்தில் பளிச்சிட்டது.

அவருடைய முயற்சிகளை அமைச்சரின் விதி வென்று வருகிறதா? திடீரென்று, "விதியே, இன்று உன்னை விடப்போவதில்லை! வெல்லுவது யார்? நானா, நீயா? பார்த்து விடலாம்!" என்று உரக்கக் கூறிக்கொண்டே எழுந்தார்.

–புலி வளரும்

About The Author