ஒரு பூனை புலியாகிறது (2.1)

அலறிய சேரனின் உடம்பு நடுங்கியது.

அவன் மீண்டும் அலறியிருப்பான். அதற்குள், "தம்பீ" என்ற குரல் கேட்டது. சற்று முன்பு அவன் விழுந்தது பிணத்தின் மீதல்ல; உயிருள்ள ஒரு மனிதன் மீதுதான்! அவன் கைதான் சேரனின் காலைப் பிடித்தது; அவனுடைய குரல்தான் அவனை அழைத்தது.

"தம்பீ, பயப்படாதே!"

அதே குரல்!

‘இந்த இருளிலும் என் உடல் நடுங்குவதைக் கீழே விழுந்து கிடக்கும் மனிதன் கவனித்துவிட்டானோ?’
"தம்பீ, அச்சத்தை அகற்றி, நான் சொல்வதைக் கேள்."

அந்தக் குரல்தான், குறள் போல அறிவுரை கூறியது.

அச்சம் தவிர்!

ஆண்மை தவறேல்!

பாரதியாரின் புதிய ஆத்திசூடியை அவன் படித்திருக்கிறான்! அதைப் படிக்கத் தெரியும்! பயன்படுத்தத் தெரியவில்லை!

"பயப்படாதே, தம்பீ!"

சேரனின் பயம் முற்றிலும் நீங்காவிட்டாலும் படபடப்பு ஓரளவு குறைந்தது. நடுக்கமும் குறைந்தது!
அதைச் சேரனின் காலைப் பிடித்தவனால் உணர முடிந்தது. அவன் பிடியைத் தளர்த்திக் கையை விலக்கினான்.

"பயப்படாதே, தம்பீ!"

குரலில் இருந்த கனிவு அவனை ஓடாமல் நிறுத்தியது.

"தம்பீ, ஒரு உதவி செய்ய வேண்டும்! உன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் நீ இந்த உதவியைச் செய்தே ஆக வேண்டும்."

திடுக்கிட்டான் சேரன்.

"என்னைக் காத்துக் கொள்ளவா?"

சேரன் கேட்டான்.

"ஆமாம். உன்னைக் காத்துக் கொள்ளத்தான். உட்கார், சொல்கிறேன்."

மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன்போலச் சேரன் அந்த மனிதனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டான். முழங்கால் இரண்டும் நிலத்தைத் தொட, காலின் விரல்கள் நிலத்தை உந்த, கைகள் இரண்டையும் முழங்காலின் மேல் வைத்து ஊன்றிய நிலையில் அமர்ந்த சேரன் கீழே விழுந்திருந்தவனை உற்றுப் பார்த்தான்.

அதற்குள் வானத்தின் இருள் கலையுமாறு நட்சத்திரங்கள் தோன்றின. மேகங்களின் இடையே நிலா தன் முழு வடிவைக் காட்ட முடியாமல் ஒளிந்து ஊர்ந்தது. அதனால் ஓரளவு வெளிச்சம் பரவியது.
அந்த வெளிச்சத்தில் கீழே விழுந்து கிடப்பவனைப் பார்க்க முடிந்தது.

நாற்பது வயது மதிக்கக்கூடியவன் தரையில் மல்லாந்து விழுந்திருந்தான். வயிற்றுப்பகுதியில்…
"ஐயோ… ரத்தம்! ஐயா, ரத்தம் கசியுதுங்களே! கீழே விழுந்தப்போ கல்லு முள்ளு குத்திட்டதுங்களா? இப்போ உங்களைக் காத்துக் கொள்ளத்தான் உதவி வேணும். நீங்க தப்பா என்னைக் காத்துக் கொள்ள உதவி செய்யணும்னு சொல்லிட்டீங்க."

அந்த மனிதனின் முகத்தில் ஒரு குறுநகை படர்ந்தது. சேரன் கூறியதை மறுப்பது போலத் தலையை இடமும் வலமுமாக மெல்ல அசைத்தான்.

"இல்லை தம்பீ, என்னைக் காத்துக் கொள்ள உதவி கேட்கவில்லை. என்னைக் காத்துக் கொள்ள முடியாது! வயிற்றிலே துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அரை மணி நேரமாச்சு. இப்பவே ஒரு டாக்டர் வந்தாலும் என்னைக் காப்பாத்த முடியாது!"

"துப்பாக்கியா? ஐயையோ! துப்பாக்கிக் குண்டு பட்டா ரத்தம் கசியுது? முதலில் உங்களைக் காப்பாத்தணும். இருங்க நான் போய் டாக்டரைக் கூட்டியாறேன்."

எழுவதற்கு முயன்ற சேரனின் காலை மீண்டும் அவன் கை தொட்டது.

"இப்போது என்னைக் காப்பது முக்கியமல்ல. உன்னைக் காப்பது முக்கியம்."

அவன் அழுத்திச் சொன்னான்.

"என்னைக் காக்கணும்னு சொல்றீங்க. நான் ஏதாவது ஆபத்திலே சிக்கிட்டேனுங்களா?"

"தம்பீ! இந்த நாடே இப்போ ஆபத்திலே சிக்கியிருக்கு. நாட்டுக்கு அழிவுன்னா, அதிலே வாழற உனக்கும் அழிவு. உன்னைப் போலக் கோடிக்கணக்கானவங்களுக்கும் அழிவு. இந்த நாட்டைக் காக்க நீ ஒரு உதவி செய்யணும். அது உண்மையில் உன்னைக் காக்கச் செய்யற உதவி. நான் சொல்றதைக் கவனமாக் கேளு. நான் இந்திய நாட்டு ஒற்றர் படையினருள் ஒருவன். எனக்கு அளிக்கப்பட்ட பெயர் தேனீ. எங்கள் பிரிவில் நான் திறமையானவனாகக் கருதப்பட்டேன். அப்போதுதான் ஓ.பி.யு தோன்றியது."

"ஓ.பி.யு-வா? அப்படியென்றால்…?"

சேரன் கேட்டதும் அந்தத் தேனீ விளக்கம் தந்து பேச்சைத் தொடர்ந்தான்:

ஒற்றர் படை சில ரகசியச் செயல்களுக்கு, ரகசியமான பெயர்களை வழங்கும். அதிலே ஒன்று ஓ.பி.யு. இந்தியா, உலகிலுள்ள பெரிய குடியரசு நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தது. ஆனால், இந்தியா கூட்டு சேராக் கொள்கை உடைய நடுநிலை நாடு. எந்த வல்லரசின் வலையிலும் விழாத இந்தியாவைத் தம்முடைய ஆதிக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்று பெரிய நாடுகள் விரும்பும். சிறிய நாடுகளோ, எத்தனையோ சாதி மத மொழி வேற்றுமைகளுக்கு இடையே இந்தியா தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறாமையால் மனம் புழுங்கும். அதனால் இந்தியாவுக்கு அவப்பெயர் உண்டாக்க, அதற்கு அல்லல் கொடுக்க வெளிநாட்டினர் சிலர் விரும்புவார்கள்; விரும்புகிறார்கள். அவர்கள் இந்தியாவில் குழப்ப நிலையை உண்டாக்க ஒரு திட்டம் தீட்டிச் செயல்படுகிறார்கள் என்று ஒரு தகவல் ஒற்றர் படைக்கு வந்தது. அந்தத் திட்டத்தைக் கண்டுபிடித்து அழிக்கும் செய்கைக்கு ஆபரேஷன் ப்ளோ அப் (Operation Blow Up) என்று பெயரிட்டார்கள். அதன் சுருக்கமே ஓ.பி.யு.

ஓ.பி.யு-வில் பலரை ஈடுபடுத்தினார்கள். இந்தியாவின் மாநிலம் ஒவ்வொன்றிலும் தலைசிறந்த ஒற்றர்கள் செயலில் இறங்கினார்கள். அவர்கள் கண்டுபிடித்த செய்தி இரண்டு. முதலாவது: இந்தியாவில் குழப்பம் விளைவிக்க வெளிநாடுகள் முயல்வது உண்மை; இரண்டாவது: இந்திய மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர்களை ஒரே நாளில் கொலை செய்து, அப்பழியை உள்ளூர்க் கட்சிகள் மீது சுமத்திக் கலவரம் உண்டாக்குவது அவர்கள் திட்டம்.
இந்த இரண்டையும் கண்டுபிடித்த பிறகுதான், தேனீயிடம் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சதித்திட்டத்தில் பங்கு பெற்றுள்ளவர்கள் யார் யார் எனக் கண்டுபிடிக்க வேண்டியது தேனீயின் பொறுப்பானது. தமிழ்நாட்டவனான தேனீ ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளையும் அறிந்தவன். அதனால் பல மாதங்களாகப் பல மாநிலங்களில் சுற்றித் திரிந்தான். இறுதியாக பம்பாயில் சதிக் குழுவைச் சார்ந்த ஒருவனைக் கண்டுபிடித்து, அவனை நிழல்போலத் தொடர்ந்தான். இரண்டு நாட்களுக்கு முன் ஊட்டிக்கு வந்து சேர்ந்தான்.

ஊட்டியில் ஃபெர்ன்ஹில் பகுதியில் ஒரு பங்களாவில் சதித்திட்டத்தவர் கூடுகிறார்கள் என்பதை அறிந்த தேனீ அந்தக் கூட்டத்தில் நடப்பதை அறிய முயன்றான். ஒரு ஈ காக்கைகூட பங்களாவுக்குள் நுழைய முடியாதபடி காவல் மிகுதியாய் இருந்தது. தேனீயின் முயற்சிகள் பலிக்கவில்லை.
பங்களாவுக்குச் சிறிது தூரத்தில் இருந்த வானுயர வளர்ந்த பலாமரத்தில் ஏறி அமர்ந்து, சக்தி வாய்ந்த பைனாகுலர் மூலம் பங்களாவையே பார்த்தான் தேனீ. சதியாளர்கள் ஓர் அறையில் கூடுவதைப் பார்க்க முடிந்தது. பம்பாயில் தேனீ கண்டுபிடித்த மனிதன் உட்பட எட்டுப் பேர் அறையில் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் தலைவன் என்று தோன்றியது. அவனிடம் மற்றவர்கள் பணிவோடு நடப்பது தெரிந்தது. தலைவன் கைகளை ஆட்டி, மேஜையைக் குத்தி, மூக்கின் முனைக்கு வந்த கண்ணாடியைப் பின்னுக்குத் தள்ளி, பேசினான்… பேசினான்… வெகு நேரம் பேசினான். அனைத்தையும் பழங்காலத்து ஊமைப் படம்போலத் தேனீ பார்த்துக் கொண்டிருந்தான்.

தலைவன் தன் கோட்டின் உள்புறம் இருந்த பையிலிருந்து, கோகுலம் அளவுள்ள – சிவப்பு அட்டை போட்ட ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து மேஜையில் வைத்துக் கொண்டான். அதிலிருந்த பக்கங்களைப் புரட்டினான். அதிலேயே ஏதோ எழுதினான்.

தேனீ அதை வேதனையோடு பார்த்தான். சதியாளர் தனக்கு வெகு அருகிலேயே கூடி மிக முக்கியமான முடிவு எடுப்பதைப் பார்க்க முடிந்ததே தவிர அவர்கள் பேசுவதில் ஒரு சொல்லைக் கூடக் கேட்க முடியவில்லையே என்று துடித்தான்.

அவர்கள் என்ன முடிவு செய்தார்கள்?

அதை மட்டும் அறிய முடிந்தால், அதற்கு விலையாகத் தன் உயிரையும் தரச் சித்தமாக இருந்தான்.
கண்ணாடிச் சன்னலுக்குப் பின்னே தெரிந்த அறையிலிருந்த சதியாளர்களின் தலைவனைப் போலத் தோற்றமளித்தவன் எழுந்தான். மற்றவரும் எழுந்து விட்டார்கள். சில நிமிடங்களில் அந்த அறை காலியானது. தேனீ காலியான அறையையே வெகுநேரம் பார்த்தான். வெறும் அறையைப் பார்ப்பதால் என்ன பயன்?

தேனீ அப்போதும் மரத்திலிருந்து கீழே இறங்கவில்லை.

பத்து நிமிடத்தில் சிலர் அந்த பங்களாவிலிருந்து வெளியே சென்றனர். அவர்கள் அறைக்குள் இருந்தவர்கள்தாம். அவர்களில் யாரையாவது தொடர்ந்து போனால், சதியாளரின் முடிவுகளை அறிய முடியுமா?

தேனீ சிந்தித்தான். அவன் பம்பாயிலிருந்து கண்காணித்து வரும் ஆசாமி வெளியே வந்தால் அவனைப் பின்பற்றிச் செல்ல நினைத்தான். அதுவரை மரத்திலே இருப்பதற்குப் பதில் கீழே இறங்கி நிற்கலாமே!

தேனீ நினைத்துக் கொண்டிருக்கும்போதே பங்களாவிலிருந்து ஒருவன் வெளியே வந்தான். அவன் அறைக்குள் இருந்த தலைவன்- அதாவது, தலைவன் என்று தேனீயால் நினைக்கப்பட்டவன். அவன் பங்களாவிலிருந்து வெளியே வந்தான். சாலை வழியாகச் செல்லாமல், தேனீ ஏறியிருந்த மரம் இருந்த பகுதியில் நிதானமாக நடந்தான்.

அவன் எங்கே போகிறான்?

அது பிற்பகல், மணி நான்கு. அந்த நேரத்தில் அவன் சாலைகள் இல்லாத பகுதியில் செல்வது ஏன்? யாரையாவது சந்திக்கப் போகிறானா?

தேனீயின் பார்வை அவனைத் தொடர்ந்தது.

ஒரு நூறு முழம் வடக்கு நோக்கி நடந்து சென்ற அவன், அங்கிருந்து கிழக்கு நோக்கிச் சென்றான். பிறகு மேற்கு நோக்கி நடந்தான். கிழக்கும் மேற்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தபோது, ‘இவன் வாக்கிங் செய்கிறான். உடல் நலத்துக்காக நடைபோடுகிறான்’ என்பது தெரிந்தது.

தலைவன் நடந்து கொண்டிருந்த இடத்துக்கருகே ஒரு பங்களா. அதற்குள் இரண்டு சிறுவர்கள் சிவப்பு நிறமுள்ள ஒரு வட்டத்தட்டை (டிஸ்க்) வீசியெறிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் வீசியெறியும் தட்டு குட்டிச் சூரியன் போலக் கரகரவெனச் சுழன்றபடி மேல்நோக்கி ஏறி, வானவில்லின் பாதையில் வருவது போலக் கீழ்நோக்கி இறங்கியது. அடுத்த முனையில் இருக்கும் சிறுவன் அதை மிக லாகவமாகப் பாய்ந்து பற்றி, மீண்டும் வீசி எறிந்தான்.

தேனீயும் ஒரு காலத்தில் சிறுவனாக இருந்தவன்தானே! அவனையறியாமல் அவன் மனம் அந்தப் பறக்கும் தட்டில் பதிந்தது.

திடீரென்று பறக்கும் தட்டு கைநழுவித் திசைமாறி மேலெழுந்தது. வெகு உயரத்துக்குப் போனது. அந்தத் தட்டிலேயே தேனீயின் பார்வை படிந்தது.

மேலெழுந்த தட்டு கீழ்நோக்கி இறங்கும் இடத்தில் ஒரு பலா மரம். அதில் தேன்கூடு! பறக்கும் தட்டு அந்தத் தேன் கூட்டில் பட்டென்று மோதியது! உடனே அந்தத் தட்டுடன் பாதி தேன் கூடு வெட்டுண்டு கீழ்நோக்கிச் செல்வதற்கும், நடந்து கொண்டிருந்த தலைவன் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. பாதி தேன் கூடு அவன் தலையில் மோதித் தோளில் குதித்துக் கீழே விழுந்தது.
மறுவிநாடி!

"ஆ… ஓ…" என்று அலறிய தலைவன் ருத்ர தாண்டவம் ஆடினான்.

தேன் கூட்டிலிருந்த தேனீக்கள் தலைவனை முற்றுகையிட்டு, முகம், கை, கால் என்று கண்ட இடங்களில் கொட்டின! அவன் வலி பொறுக்க முடியாமல், குதித்துக் கூச்சலிட்டு ஓடினான். தேனீக்களோ அவனை விரட்டிச் சென்றன. தலைவன் ஒரு வழியாக பங்களாவுக்குள் நுழைந்து விட்டான்.

தேனீக்கு- ஒற்றன் தேனீக்கு இக்காட்சி மகிழ்ச்சி அளித்தது.

"நமது தாய்நாட்டுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும் ஒருவனை இப்படித்தான் கொட்ட வேண்டும்! எனக்கு, அவனை ஓட ஓட விரட்டிய தேனீ என்ற பெயர் மட்டும் இருக்கிறது. செயல் இல்லையே!"
தேனீ நினைத்தபடி தேன் கூடு விழுந்த இடத்தைப் பார்த்தான். தேன் கூட்டுப் பக்கத்தில் சிவப்புத் தட்டு! அதற்குச் சிறிது தூரத்தில்…? அது என்ன? இன்னொரு சிவப்புத் தட்டா? சிறுவன் எறிந்தது ஒரு தட்டுத்தானே?

–புலி வளரும்…

About The Author