ஒரு பூனை புலியாகிறது (8.1)

தீ செய்த உதவி

‘அறிவே வேலை செய்’ என்று வேண்டியபடி சேரன் தான் இருந்த அறையை நன்றாகப் பார்த்தான்.

அது சின்ன அறை. ஆனால் ஒழுங்கான அறை. இரண்டு சன்னல்கள் இருந்தன. சன்னலில் அழகான திரைகள் (ஸ்கிரீன்) தொங்கின. சேரன் திரைகளை விலக்கிச் சன்னல் கதவுகளின் கொக்கிகளை நீக்கிக் கதவைத் திறக்க முயன்றான். முடியவில்லை. கதவுகளின் மறுபுறம், அவை திறக்காதபடி தடுப்புக்கட்டை இருக்கும் போலும்.

சேரன் மேலும் அறையை ஆராய்ந்தான். அறை வாசலில், கதவு முழுவதையும் மறைக்கும் திரை, இரு கூறாகப் பிரிக்கப்பட்டு, இரண்டும் கட்டப்பட்டு ஓரத்தில் திரண்டு தொங்கின. சுவரில் அவன் முன்பே பார்த்த திருமுருகன் காலண்டர். அறையின் ஒரு மூலையில் சிறிய மேசை – அறையில்லாத மேசை. அதன் எதிரே ஒற்றை நாற்காலி.

அவ்வளவுதான்!

அவ்வளவுதானே?

சேரன் கண்களைச் சுழல விட்டான்.

மேசையின் கீழே ஒரு சிவப்பு நிற பிளாஸ்டிக் கூடை.

சேரன் அந்தக் கூடையை எடுத்துப் பார்த்தான். அதில் காலியான ஒரு சிகரெட் பாக்கெட் இருந்தது. அதே போல ஒரு தீப்பெட்டி. அதுவும் காலிதான். பெட்டியில் குச்சிகள் இல்லை.

சேரன் மீண்டும் அறை முழுவதையும் நோட்டமிட்டான்.

ஒரு காலண்டர், சன்னல் திரைகள், கதவின் திரை, மேசை, நாற்காலி, பிளாஸ்டிக் குப்பைக் கூடை, அதில் காலியான சிகரெட் பாக்கெட்டும் தீப்பெட்டியும்.

இவற்றில் எதைக் கொண்டு தப்பித்துச் செல்வது?

‘அறிவே வேலை செய்.’

பிரார்த்தனை தொடர்ந்தது.

திடீரென்று அவன் அறிவு வேலை செய்தது!

‘அறையில் உள்ள திரைகளைப் போட்டு எரித்துத் தீயை உண்டாக்கி, அதன் மூலம் குழப்பம் உண்டாக்கித் தப்பித்துக் கொள்ளலாம்.’
மலர்ந்தது அவன் முகம்.

மறுநிமிடமே அது குவிந்தது.

தீ உண்டாக்கத் தீக்குச்சி வேண்டுமே! தீப்பெட்டி காலியாக அல்லவா இருக்கிறது.

சேரன் மீண்டும் சிந்தித்தான்.

தீப்பெட்டியை அவன் திறந்து பார்த்தபோது அது எளிதாகத் திறக்கவில்லை. கொஞ்சம் ஆற்றலைச் செலுத்தி அழுத்தித்தான் திறந்தான். ஏன் இந்த இறுக்கம்?

சேரன் காலித் தீப்பெட்டியைக் கையில் எடுத்தான். மெதுவாகத் திறந்தான். முன்போலவே அழுத்தித்தான் திறக்கவேண்டியது இருந்தது. பாதி திறந்துவிட்டு ஏன் அந்த இறுக்கம் என்று ஆராய்ந்தான்.

தீப்பெட்டியின் வெளிக்கூடுக்கும், உள்ளே நுழைக்கும் குச்சிகள் வைக்கப்படும் அறைக்கும் இடையில் ஒரு தீக்குச்சி இருப்பதைக் கண்டான். சில தீப்பெட்டிகளின் உள் அறை இறுக்கமாக இல்லாமல் இருந்தால், அந்த அறை முழுவதும் வெளிவந்து குச்சிகளைக் கீழே கொட்டிவிடும். அந்தப் பெட்டிக்கும் இறுக்கம் தர, அறையின் பக்கத்தில் ஒரு தீக்குச்சியை வைத்து, அப்படியே சொருகினால் இறுக்கம் வரும். அந்தக் காலிப் பெட்டியில், பக்கவாட்டில் அப்படி ஒரு தீக்குச்சி இருந்தது. தீக்குச்சியின் வெள்ளைப் பகுதி தெரிந்தது.

சேரன் பெட்டியை மெதுவாகத் திறந்து, முழுமையாகத் தள்ளினான். வெளிக்கூடும், உள் அறையும் தனித் தனியே பிரிந்தபோது இரண்டுக்கும் இடையே சிக்கியிருந்த அந்தத் தீக்குச்சி கீழே விழுந்தது.

‘கடவுளே உதவி செய்!’ என்று வேண்டியபடி கீழே விழுந்த தீக்குச்சியைப் பார்த்தான். அதன் ஒரு முனை சிவப்பு நிறத்தில் இருந்தது. உடனே சேரன் அதை ஆவலோடு எடுத்துக் கொண்டான்.

தீக்குச்சி கிடைத்துவிட்டது. அவன் அறிவு தெரிவித்தபடி அறைக்குள்ளே தீயை உண்டாக்க வேண்டும்.

சேரன் உடனே நாற்காலியைப் போட்டு அதன் மீது ஏறி, சன்னல் திரைகளையும், கதவின் பெரிய திரையையும் கழற்றினான்.
அறையின் நடுவே கதவின் பெரிய திரையை ஒரு கூம்பு போல இருக்குமாறு வைத்தான். தீப்பெட்டியையும் தீக்குச்சியையும் எடுத்துக் கொண்டான்.

ஒரே ஒரு தீக்குச்சியால் துணியைக் கொளுத்த வேண்டும். முடியுமா? கொளுத்துவதற்கு முன் தீக்குச்சி அணைந்துவிட்டால்?
சேரன் மீண்டும் சிந்தித்தான். அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டான். காலண்டரில் இருந்த திருமுருகன் குறுநகையோடு, ‘அஞ்சாதே’ என்று அபயகரம் காட்டிக் கொண்டிருந்தான்.

உடனே அவன் அறிவு மின்னலாய் வேலை செய்தது.

"முருகா, நீ இருக்கும்போது நான் அஞ்ச மாட்டேன்" என்று கூறிக்கொண்டே எழுந்து காலண்டர் அருகே சென்றான், சேரன். நவம்பர் 13 காட்டிய காலண்டரை, ஒரு நிமிடத்தில் டிசம்பர் 10 காட்டச் செய்தான்.

அவன் கிழித்த மெல்லிய தேதித் தாள்களை, கூம்பாக நின்ற திரையின் அருகே குவித்தான். பிறகு தீப்பெட்டியையும் தீக்குச்சியையும் எடுத்துக் கொண்டான்.

"முருகா!"
வாய் சொன்னது, கை தீக்குச்சியைத் தீப்பெட்டி மீது உரசியது.

‘சரக்.’

தீக்குச்சி பற்றி எரிந்தது. அதைத் தேதித் தாள்களில் பொருத்தினான். அவை எரிந்தன. அருகே இருந்த திரையும் தீக்கு இரையாக, செந்நிற ஒளி மேலோங்கி எழுந்தது.

சேரன், சன்னல் திரைகள் இரண்டையும் இரண்டு கைகளில் எடுத்துக் கொண்டான். அவற்றைத் தீயிலே பொருத்தி எரியச் செய்தான். அதன் பிறகுதான், "ஐயோ! காப்பாத்து! தீ! தீ! அறை தீப்பிடிச்சு எரியுதே!" என்று கத்தினான். கத்தியபடி நகர்ந்து அறைக்குப் பக்கத்தில் சுவரை ஒட்டி நின்று கொண்டான். அவன் கைகளில் இருந்த திரைகள் எரிந்து கொண்டிருந்தன.
வெளியேயிருந்து, ‘தீ தீ’ என்ற குரல்கேட்டு உள்ளே வந்த மாது-அதுதான் எருமை மாடு, அறைக்குள்ளே தீயைப் பார்த்ததும் பதறினான். உடனே சாவியை எடுத்தான்; பூட்டில் பொருத்தினான்; திறந்தான்; பூட்டைச் சாவியுடன் கீழே போட்டுவிட்டு அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

கதவு திறந்து, எருமை மாடு உள்ளே வந்ததும், சேரன் தன் கையில் எரிந்து கொண்டிருந்த திரைகளை மின்னல் வேகத்தில் அவன் மீது எறிந்தான். ஒன்று மேல்துண்டு போல் அவன் தோளில் விழுந்தது; மற்றொன்று அவன் தலையில் விழுந்து முகத்தை மறைத்தது. இரண்டு திரைகளின் தீயும் அவன் முடியை, உடையை, உடலைச் சுட்டன. அவன், ‘ஐயோ! அம்மா’ என்று அலறுவதற்கு முன்னர் சேரன் அறையிலிருந்து வெளியே வந்தான். கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில், அந்த அறைக் கதவை மூடித் தாளிட்டான். அவன் ஓட முயன்றபோது, எருமை மாடு கீழே போட்ட பூட்டு அவன் காலில் இடறியது.

சேரன் சாவியுடன் இருந்த அந்தப் பூட்டை எடுத்து, அறைக் கதவில் மாட்டிப் பூட்டினான். சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் வெளியே ஓடியபோதும் அவன் காதில், "ஐயோ அம்மா! உடம்பு எரியுதே!" என்று எருமை மாடு அலறுவது கேட்டுக்கொண்டே இருந்தது.

தீ செய்த உதவியால் தப்பி, வீட்டின் வாசலை அடைந்த சேரன், சட்டென்று நின்றான். வெளிவாசல் கதவை நிதானமாக மூடினான். பிறகு தெருவில் இறங்கினான்.

அவன் மனம் ஓட வேண்டும் என்று சொல்லியது. ஓட்டம் பிறர் கவனத்தைக் கவரும் என்று அறிவு எச்சரித்தது. சேரன் நடந்தான். அப்படியும் ஓட்டத்தின் பரபரப்பு அவன் நடையில் ஒட்டிக் கொண்டது.

அந்தத் தெருவில் கிழக்கு நோக்கி நடந்த சேரன், பேருந்து செல்லும் சாலையைக் கண்டு இடப்புறத்தில் திரும்பி நடந்தான். திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான். கொஞ்ச தூரத்தில் ஒரு மருந்துக்கடை இருந்தது. அதன் முன்னே தெரிந்த மேசையின் மேல் சிவப்பு நிறத்துத் தொலைபேசி பளிச்சென்று அவன் கண்ணில் பட்டது.

சேரன் நின்றான். மருந்துக் கடையின் படிகளில் ஏறினான். மேசைக்குப் பின்னே சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவரிடம், "சார்! ஒரு போன் பண்ணிக்கலாமுங்களா? கொஞ்சம் அர்ஜெண்ட்" என்றான்.

சுழல் நாற்காலிக்காரர், "பண்ணிக்கலாம், ஒரு கால் ஒரு ரூபாய். அர்ஜண்ட் ஆனாலும் சரி! ஆர்டினரி ஆனாலும் சரி" என்று ஜோக் அடித்தார்.

"சரிங்க" என்றபடி சேரன் தொலைபேசியின் ரிசீவரைக் கையில் எடுத்துக் கொண்டான். மறுகையின் சுட்டு விரலால், அவன் நினைவில் நின்ற 693641 என்னும் எண்ணைச் சுழற்றினான். மறுமுனையில் ‘டிரிங் டிரிங்’ கேட்டது.

சேரன், ‘முருகா! முருகா!’ என்று வேண்டிக் கொண்டான். ‘முருகா! ஹனிமேன் அங்கே இருக்கச் செய், முருகா’ – வேண்டுதல் தொடர்ந்தது.

–புலி வளரும்..

About The Author