காளித்தம்பியின் கதை (6)

காளி கண்டு அதிசயப்படும்படி பழனி என்ன செய்து கொண்டிருந்தான் தெரியுமா? பஸ் ஸ்டாண்டை ஒட்டிய ஓட்டலின் முன்னே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்களைத் துடைத்துக்கொண்டிருந்தான். காளியின் முகத்தில் புன்சிரிப்பு தவழ்ந்தது. அவன் அருகே சென்றான். “பழனி” என்று அன்பும் ஆர்வமும் பொங்க அழைத்தான்.

சைக்கிள் சக்கரத்தைத் துடைத்துக் கொண்டிருந்த பழனி திரும்பிப் பார்த்தான். எதிரே காளியிருந்தான். “காளி! வேலையில்லை என்று வருத்தப்பட்டேன். உன் கதை எனக்கு உதவியது. இப்போது வேலை செய்கிறேன். இது காளி காட்டிய வழி” என்ற பழனி பையிலே கையை விட்டு இருந்த சில்லறைகளை வெளியே எடுத்தான். “இதோ பார் காளி! எனது முதல் வருமானம்” என்று காளியிடம் காட்டினான்.

அந்தக் கையில் இரண்டு ரூபாய் இருந்தது. பழனி அதை இரண்டு ரூபாயாகவா மதித்தான்? இல்லை, அது அவனுக்கு இருபது ரூபாய்; இல்லை, இருபதாயிரம் ரூபாய். இல்லை இல்லை! அதற்கும் மேலே! ஒவ்வொரு காசும் அவன் உழைப்பால் பெற்றதல்லவா?
காளி அந்தக் காசைப் பெருமையோடு பார்த்தான். பிறகு “பழனி, இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது! நீ காலையில் ஏதாவது சாப்பிட்டாயா?” என்று தாயன்போடு கேட்டான் காளி.

பழனி, “இல்லை” என்றான். அதற்குள் ஓட்டலிலிருந்து சைக்கிள்காரர் ஒருவர் வெளியே வந்தார். அதைப் பார்த்த பழனி “காளி! அப்புறம் பேசலாம். பேசிக்கொண்டே இருந்தால் வேலை என்னாவது?” என்று சொல்லிவிட்டு வருபவரின் சைக்கிளை, சைக்கிள் வரிசையிலிருந்து தனியே எடுத்துக் கொடுத்தான். சைக்கிள்காரர் கொடுத்த காசை வாங்கிக் கொண்டான்.

காளி, “முதலில் ஏதாவது சாப்பிடு! வயிறு நிறைந்தால்தான் கை உழைக்கும்” என்று சொல்லி விட்டுப் பேப்பர் கடைக்குச் சென்றான்.

பழனி அன்று ஐந்து ரூபாய் சம்பாதித்தான். அன்று முதல் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ஓட்டலின் முன்பு சைக்கிள் துடைப்பதையே தொழிலாகக் கொண்டான். தினமும் நான்கு ஐந்து ரூபாய்க்குக் குறையாமல் கிடைத்தது.

ஒருநாள் பகல்!

காளி தான் வாங்கிக்கொண்டு வந்த பழைய பத்திரிகைகளைக் கடையில் கொடுத்துவிட்டு அறைக்கு வந்தான். அறையில் பழனி இருந்தான். அவன் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். காளி வந்ததும் சாய்ந்து படுத்துக் கொண்டான். பழனி எழுதுவதிலேயே முனைந்திருந்தான். “பழனி, என்ன எழுதுகிறாய்? இப்படிப் பக்கம் பக்கமாக எழுதுகிறாயே?” என்று கேட்டான் காளி. பழனி எழுதுவதை நிறுத்திவிட்டு, “கதை” என்றான்.

“கதையா? என்ன கதை? ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பப் போகிறாயா?” காளி கேட்டான். பழனி கதையின் கடைசி வரியை எழுதி முடித்து விட்டுப் பதில் சொன்னான்.
“காளி! இது உண்மையில் நடந்ததுதான். கதையாக எழுதியிருக்கிறேன். கதையின் பெயர் என்ன தெரியுமா? பிச்சைக் காசு.”

“பிச்சைக் காசா?”

“ஆமாம். இதன் கதாநாயகன் யார் தெரியுமா? நீதான்.”

“நானா?”

“ஆமாம், நீதான். ஆனால், காளியப்பன் என்ற பெயரைச் சோலையப்பன் ஆக்கிவிட்டேன். படித்துப் பார்!” என்று பழனி எழுதிய கதையைக் காளியிடம் கொடுத்தான்.

செய்தித்தாள்களின் போஸ்டர்களைக் காளி அறையில் வைத்திருந்தான். அதில் ஒருபுறம் அச்சடித்திருந்தது. மறுபுறம் ஒன்றுமில்லை. அந்தப் போஸ்டரைக் கிழித்து அதில்தான் கதை எழுதியிருந்தான் பழனி.

காளி கதையைப் படித்தான். காளி சாக்கடையில், பிச்சை எடுப்பதில்லை என்று சபதம் செய்தானே? அதே நிகழ்ச்சிதான் அந்தக் கதை. ஆனால், மிக மிகச் சுவையாக இருந்தது. காளி “சபாஷ்” போட்டான். “பழனி! கதை நன்றாக இருக்கிறது. ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பு” என்றான்.

“மல்லிகை என்ற சிறுவர் பத்திரிகைக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன்” என்றான் பழனி.

“நல்லது. அப்படியே செய்; ஆனால், செய்ய வேண்டும் என்று நினைப்பதைவிட உடனே செய். ஒத்திப் போடாதே” என்றான் காளி.

பழனி அன்றே அந்தக் கதையை மல்லிகை இதழுக்கு அனுப்பி வைத்தான். கதை எழுதியவரின் பெயர் என்ன தெரியுமா? ‘காளித்தம்பி’. இந்தப் பெயரைத் தன் புனைபெயராகக் கொண்டான் பழனி. அது பழனிக்குப் புனைபெயராகத் தோன்றவில்லை. புனிதம் நிறைந்த பெயராகத் தோன்றியது. அன்பும் பண்பும் அரிய உழைப்பும் ஒன்று சேர்ந்த காளிக்குத் தம்பி என்றாலே அதிலே பெருமைதானே?
மே மாதம் வேகமாகச் சென்றது. அது மே மாதத்தின் மூன்றாம் வாரம். ஜுன் பிறந்தால் பள்ளிக்கூடங்கள் திறப்பார்கள். பழனி பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டாமா? அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் பழனிக்கு வேறு ஒரு வேலை கிடைத்தது. அது காளி செய்வதைப்போல மாடிவீடு ஒன்றில் தண்ணீர் பம்பு அடிப்பது. மாதம் பதினைந்து ரூபாய் சம்பளம் தருவதாகச் சொன்னார்கள். “பழனி! பம்பு அடிப்பது எளிதல்ல; உனக்கு அந்த வேலை வேண்டாம்” என்றான் காளி. பழனி அதை அப்போது கேட்கவில்லை. பம்பு அடிக்கும்போதுதான் அதை உணர்ந்தான். முதல் நாளே வேலையை அரைகுறையாக விட்டு விட மனமில்லை. பழனி கஷ்டப்பட்டு அடித்தான். அவன் கை ஓய்ந்துவிட்டது. ஒருவழியாக வேலையை முடித்துவிட்டு வந்தான்.

அவனுடைய கைகள் அறுந்து விழுந்துவிட்டனவோ என்ற ஐயம் தோன்றியது. கையைத் தூக்க முடியவில்லை. அசைக்க முடியவில்லை. அறையின் பூட்டைத் திறக்கவே சிரமப்பட்டான். திறந்ததும் அறைக்குள்ளே போய் விழுந்தான் கைவலி பொறுக்க முடியவில்லை. சைக்கிள் துடைக்கும் வேலைக்குப் போகவும் முடியவில்லை.

“இந்த வேலையைக் காளி எப்படித்தான் செய்கிறானோ?” பழனி அந்தத் துன்பத்திலும் ஆச்சரியப்பட்டான்.

அன்றெல்லாம் அந்த வலி போகவில்லை. காளி தைலம் வாங்கிக்கொண்டு வந்து கைகளில் தேய்த்தான். வெந்நீர் ஒற்றடம் கொடுத்தான். வலி ஓரளவு குறைந்தது.

“பழனி, உனக்கு இந்த வேலை வேண்டாம்! இதை விட்டுவிடு” என்றான் காளி.

“விட்டால் முடியுமா? பள்ளியில் படிக்க வேண்டுமே? புத்தகங்கள் வாங்க வேண்டுமே? இதற்கெல்லாம் பணம் வேண்டாமா? பழகினால் சரியாகிவிடும் இல்லையா?”

“பழனி! நீ தெரியாமல் பேசுகிறாய். பம்பு அடிப்பது சுலபமல்ல; அதனால் இதயம் கெடுவதாகக்கூட ஒருவர் சொன்னார். நானே இந்தத் தொழிலை விட்டுவிட நினைக்கிறேன். இது உனக்கு எதற்கு? நீ பேசாமல் இதை விட்டுவிடு. இதைக் காட்டிலும் அதிக சம்பளம் உள்ள வேலையை நான் பார்த்துத் தருகிறேன். என்னை நம்பு!” என்றான் காளி.

பழனி பம்பு அடிப்பதை விட்டுவிட்டான். எந்த வேலையும் செய்யாமல் செல்வத்தில் மிகுந்தவன் பழனி. துள்ளித் திரியும் புள்ளி மானைக் கட்டை வண்டியில் பூட்டி இழு என்றால் இழுக்குமா? பழனி அந்த மானைப் போல வாழ்ந்தவன். இன்று மாடுபோல உழைக்க முன்வந்து விட்டான். ஆனால், உடல் நிலை இடம் தரவில்லையே!

இது நடந்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் காளி, மிக மகிழ்ச்சியோடு “பழனி!… பழனி!…” என்று அழைத்துக் கொண்டே ஓடி வந்தான்.

“என்ன காளி? ஏன் இப்படி ஓடி வருகிறாய்” என்று கேட்டான் பழனி.
காளி ஓடிவந்த களைப்பு நீங்கச் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டான். பிறகு, “பழனி! உனக்கு ஒரு நல்ல வேலை பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு சந்தேகம். உனக்கு சைக்கிள் விடத் தெரியுமா?” என்று காளி கேட்டான்.

“சைக்கிள் என்ன, காரே…” என்று ஆரம்பித்த பழனி ‘சட்’டென்று வாயை மூடிக்கொண்டான். பழனிக்குக் கார் ஓட்டவும் தெரியுந்தான். அதைச் சொன்னால் அவன் பணக்காரனின் மகன் என்பதைக் காளி தெரிந்துகொள்வானே? அதனால் சொல்லவில்லை. “காளி எனக்கு நன்றாக சைக்கிள் விடத் தெரியுமே?” என்று சொன்னான்.

“அப்பாடா! இப்போதுதான் எனக்குத் திருப்தி. நல்ல வேலையைப் பார்த்த பிறகு சைக்கிள்விடத் தெரியாது என்று நீ சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பயந்தேன். நான் பார்த்திருக்கும் வேலை செய்ய சைக்கிள்விடத் தெரிந்திருக்க வேண்டும்.”

“அது என்ன வேலை?” – பழனி ஆவலோடு கேட்டான்.
“கடைகளுக்குப் பத்திரிகை விநியோகிக்கும் வேலை. சாமி ஏஜென்ஸியின் சொந்தக்காரரை எனக்குத் தெரியும். முன்பே அவர் கடைக்குப் பத்திரிகைபோடும் வேலைக்கு வருகிறாயா என்று என்னைக் கேட்டிருந்தார். எனக்கு சைக்கிள்விடத் தெரியாது. அதனால் அந்த வேலைக்குப் போகவில்லை. இன்று அவரை வழியில் பார்த்தேன். உன் நினைவு வந்தது. அவரிடம் உனக்கு ஏதாவது வேலை தருமாறு கேட்டேன். அவர் ‘பத்திரிகை போட ஆள் தேவை. அழைத்து வா’ என்றார். உனக்கு சைக்கிள்விடத் தெரியும் என்று ஏதோ குருட்டு நம்பிக்கை. அதனால்தான் மகிழ்ச்சியுடன் ஓடிவந்தேன்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?”

“எவ்வளவு?”

“மாதம் முப்பது ரூபாய். தினமும் மாலை ஐந்தரை மணிக்கு அங்கே போகவேண்டும். பத்திரிகை ஆறு மணிக்குள் வருமாம். அதை உன் பொறுப்பில் விடும் பகுதிகளில் உள்ள கடைகளில் போட வேண்டும். இரவு எட்டு எட்டரைக்குள் உன் வேலை முடிந்துவிடும். சுமார் இரண்டு மணி நேரம் சைக்கிள் சவாரி செய்ய வேண்டும். உன்னால் முடியுமா?”

“ஓ முடியுமே! சைக்கிள் விடுவதில் எனக்கு நல்ல திறமை உண்டு. இந்த வேலை கிடைத்தால் ரொம்ப நல்லது. பள்ளியில் படித்துக் கொண்டே இதைச் செய்யலாம். ஏன் காளி, சைக்கிள் அவர்கள் தருவார்களா?” என்று கேட்டான் பழனி.

“அது ஒன்றுதான் சிரமம். சைக்கிள் அவர்கள் தரமாட்டார்கள். நாம்தான் வாங்கிக்கொள்ள வேண்டும்” என்றான் காளி.

பழனி கவலையில் ஆழ்ந்தான். இப்போதுதான் கடன் வாங்காமல் ஓரளவு சாப்பிட முடிந்தது. இந்த நிலையில் சைக்கிள் வாங்கப் பணத்துக்கு எங்கே போவான்.

“வேலை கிடைத்து என்ன பலன்? என்னால் சைக்கிள் வாங்க முடியாதே!”
“கவலைப்படாதே! என்னிடம் பணம் இருக்கிறது. அதைக்கொண்டு ஒரு பழைய சைக்கிள் வாங்கிக் கொள்ளலாம்.”

“உன் பணத்திலா?”

“என் பணத்தில்தான். என் பணத்தைக் கடனாகவே வாங்கிக்கொள். மாதம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடு.”

பழனி யோசித்தான். ஓட்டல் முன்பு சைக்கிளைத் துடைத்துப் பெறும் காசு நிலையான வருவாயல்ல. ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு ரூபாய் கூடக் கிடைக்கும். ஒருநாளைக்கு ஒரு ரூபாய் கிடைப்பதுகூடச் சிரமமாகிவிடும். பேப்பர் விநியோகிக்கும் இந்த வேலையில் நிரந்தரமான சம்பளம். அதுவும் முப்பது ரூபாய் கிடைக்கும். காளி சொல்வதுபோல் அவனுடைய பணத்தில் ஒரு சைக்கிள் வாங்கிக் கொள்ளலாம். மாதம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுத்துவிடலாம்.

பழனி ஒரு முடிவுக்கு வந்தான். “சரி காளி! நீ சொன்னபடியே செய்வோம். பழைய சைக்கிள் ஒன்றை எனக்கு வாங்கிக்கொடு” என்றான் பழனி.

காளி அந்த விநாடி முதல் பழைய சைக்கிள் விலைக்குக் கிடைக்குமா என்று தேடித் திரிந்தான். தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைத்தான். இருநூறு இருநூற்றைம்பது ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்த சில சைக்கிள்களைப் பார்த்தான் காளி. பழனி அவை வேண்டாம் என்று சொல்லி விட்டான்.

“காளி, இவ்வளவு கடன்பட்டால் நான் அதை எப்போது தீர்ப்பது? குறைந்த விலையில் ஒரு சைக்கிள் பார். அது மிகப் பழைய சைக்கிளாக இருந்தாலும் பரவாயில்லை” என்றான் பழனி.

காளி, பழனியின் விருப்பப்படி தேடினான். ஐந்தாவது நாள் விலை குறைந்த சைக்கிள் ஒன்றைக் கண்டுபிடித்தான். விலை நூற்றைம்பது ரூபாய் என்றார்கள். காளி அவர்களிடம் கெஞ்சி, கூத்தாடி நூறு ரூபாய்க்கு அதை வாங்கிக் கொண்டான்.

பழனி அந்தச் சைக்கிளைப் பார்த்தான். அவன் பிறப்பதற்குப் பல ஆண்டுகள் முன்பே வாங்கப்பட்ட சைக்கிளாக இருக்க வேண்டும் என்பது தெரிந்தது. சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான். பெடலைத்தான் அவன் மிதித்தான். ஆனால், எத்தனையோ விதமான விநோத சத்தங்கள் எழுந்தன. புத்தம் புதிய சைக்கிளையே ஓட்டிப் பழகிய பழனிக்கு அந்தப் பாட்டன் காலத்து ஓட்டை சைக்கிளில் கொஞ்ச தூரம் போவதே சிரமமாக இருந்தது.

சிரமத்தைப் பார்த்தால் முடியுமா? பழனி யார்? செல்வச் சீமான் சுந்தரேசர் மகன் என்று அந்த நிலையிலும் நினைக்கலாமா? கூடாது! பழனி, காளியைப் போலச் சாதாரண ஏழை. அந்த ஏழைக்கு இந்த சைக்கிள் போதாதா?

பழனி சைக்கிள் கிடைத்த மறுநாளே சாமி ஏஜென்ஸியில் சேர்ந்து விட்டான். சூளை, புரசைவாக்கம், புளியந்தோப்பு, பட்டாளம் இத்தனை இடங்களில் உள்ள கடைகளில் பேப்பர் போடுவது அவன் பொறுப்பு. மாலை சுமார் ஆறு மணிக்கு ஒரு சின்ன மலைபோலப் பேப்பர் கட்டு தருவார்கள். அதை சைக்கிள் பின்னால் கட்டிக் கொள்வான். சைக்கிள் அந்தப் பாரத்தைத் தாங்குமா என்ற சந்தேகத்தோடு அதில் ஏறிக் கொள்வான். பாவம் பழனி! அவ்வளவு பாரத்துடன் சைக்கிளை மிதிக்கச் சிரமப்படுவான்! அதுவும் கொஞ்ச தூரமா? நகரின் ஒரு பகுதியையே அல்லவா சுற்றி வர வேண்டும்? நேரம் செல்லச் செல்ல சைக்கிள் பாரம் குறையும். இரவு எட்டு மணிக்கு யாரோ அடித்துப் போட்டதைப்போல அறையில் வந்து விழுவான். கால் வலி பொறுக்க முடியாது. அதை மெல்லப் பழக்கப்படுத்திக் கொண்டான் பழனி.

பழனி செல்ல வேண்டிய வழி – பத்திரிகை போட வேண்டிய கடைகள், பத்திரிகை போட வேண்டிய முறை முதலியவற்றை ஏஜென்ஸியில் வேலை செய்யும் ஒருவர் விளக்கியிருந்தார். பழனி அவற்றை அறிந்து கொண்டான். கடையின் முன்னால் சைக்கிளை நிறுத்திவிட்டு, கடையில் பத்திரிகை போடுவதற்குள் யாராவது சைக்கிளிலிருந்து பத்திரிகைகளை இழுத்துக் கொள்வார்கள். இப்படியெல்லாம் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதையும் தெரிந்து கொண்டான்.

பழனி தன் வேலையை நன்கு பழக்கிக்கொண்டான். தினந்தோறும் கடைகளில் வசூல் செய்யும் பணத்தை ஒரு காசு குறையாமல் ஏஜென்ஸியில் கட்டுவான். குறித்த நேரத்தில் பேப்பர் எடுக்க வருவான். பத்திரிகைக் கடைக்காரர்களிடம் சிரித்துப் பேசி, எல்லாருக்கும் நல்லவனாக மாறிவிட்டான். இவற்றையெல்லாம் அறிந்த ஏஜென்ஸி உரிமையாளர் சாமி மிக மகிழ்ச்சியடைந்தார். காளியைப் பார்த்தபோது அவனிடம் பழனியைப் பாராட்டினார்.

நாட்கள் பறந்தன. மே மாதம் மறைந்தது. ஜுன் பிறந்து விட்டது. பள்ளிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் திறந்தன. பழனி வேலை செய்தால் போதுமா? படிக்க வேண்டாமா? அதைப் பற்றி யோசித்தான்.

ஒன்பதாம் வகுப்பில் பழனி சேர வேண்டும். மாதச் சம்பளம் இல்லாவிட்டாலும், ஸ்பெஷல் பீஸ் என்று அறுபது எழுபது ரூபாய் கட்ட வேண்டுமே? புத்தகங்கள் வாங்க வேண்டுமே? அதற்கும் பணம் தேவையாயிற்றே? பழனி கவலையில் ஆழ்ந்தான். காளியிடம் கடன் வாங்குவதா? இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தச் சென்னையில் பள்ளிக் கூடத்தில் இடம் கிடைப்பது சிரமம் என்கிறார்களே, ஒன்பதாம் வகுப்பில் அவனுக்கு இடம் கிடைக்குமா?

பழனியின் மூளை யோசித்து யோசித்துச் சூடேறியது. “சரி, காளி வரட்டும். காளியுடன் சேர்ந்து யோசிக்கலாம்” என்று நினைத்துச் சிந்தனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான். பின், எழுந்து வெளியே சென்று மணி பார்த்தான். ஐந்து. பழனி முகம் அலம்பிக் கொண்டான். அறையின் கதவுகளை மூடிக் கொண்டான். தன் சைக்கிளில் ஏறிச் சென்றான். பேப்பர் கட்டைக் கொடுத்தார்கள். அதைச் சைக்கிளில் கட்டிக் கொண்டான். பிறகு தன்னுடன் வேலை செய்யும் மற்றவர்கள் செய்வதைப் போல ஒரு சிங்கள் டீ சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டான்.

அவன் வேலை தொடங்கி விட்டது. ஆனால், சிந்தனை முடிந்து விடவில்லை. எந்தப் பள்ளியில் சேருவது? எப்படிச் சேர்வது? அதற்குத் தேவையான பணத்தை எப்படிப் பெறுவது? இப்படி யோசித்துக் கொண்டே சென்றான். வேலை முடிந்து விட்டது. பட்டாளத்தில் பேப்பர் போட்டு முடிந்ததும் நேரே ஏஜென்ஸிக்குப் போனான். பணம் கட்டி விட்டான். வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். பெரிய மேட்டில் மூர்மார்க்கெட் அடுத்த சாலையில் வந்து கொண்டிருந்தான். அசோக் தியேட்டரைக் கடந்தான். மரத்தொட்டிகள் இருக்குமிடத்திற்கு வந்தான். சடாரென்று பிரேக் போட்டான். குறுக்கே ஓர் எருமை படுத்திருந்தது, அருகே வந்த பிறகுதான் தெரிந்தது.

‘சே! என்ன முட்டாள்தனம்! சைக்கிளில் வரும்போது எண்ணத்தை அலையவிட்டால் இப்படித்தான் நேரும். இந்த எருமை மீது மோதியிருந்தால் சைக்கிள் தூள் தூளாகியிருக்குமே…” என்று நினைத்தவாறு சைக்கிளைத் தள்ளிக் கொண்டே எருமையைக் கடந்தான்.

மீண்டும் சைக்கிளில் ஏறப் பெடலில் காலை வைத்தான். ஆனால், ஏறவில்லை. சைக்கிளில் இருந்த விளக்கின் மங்கிய ஒளியில் சாலையில் ஒரு தோல் பை இருப்பது தெரிந்தது.

பழனி சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். சாலையிலிருந்த தோல் பையை எடுத்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தச் சாலையில் அவனைத் தவிர யாரும் இல்லை. பழனி தோல்பையை மூடியிருந்த ஜிப்பை இழுத்தான். பையின் உள்ளே பார்த்தான். அவன் ஆச்சரியத்திற்கு ஓர் அளவே இல்லை. பையில் நோட்டுக் கத்தைகள். அவ்வளவும் ரூபாய் நோட்டுக்கள்! பழனி தன் நடுங்கும் கையால் ஒரு கட்டை எடுத்துப் பார்த்தான். அது பத்து ரூபாய்க் கட்டு. இன்னொன்றை எடுத்துப் பார்த்தான். அது நூறு ரூபாய்க் கட்டு. இப்படிப் பை நிறையப் பணம். பழனி சட்டென்று பையை மூடினான். அவன் கையும் காலும் நடுங்கின.
பள்ளியில் படிக்கப் பணம் இல்லையே என்று சற்று முன் வருத்தப்பட்டான். இப்போது அவனிடம் எவ்வளவு பணம்! அந்தப் பணத்தில் கல்லூரிப் படிப்பைக் கூட முடித்துக் கொள்ளலாமே?

அதிர்ஷ்டம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?
–தொடரும்…

About The Author